எண்ணப்பறவை_42
எழுதியது பாஸ்கர் சத்யா
வாங்கிண்டு வந்த அவாவாவாத்து ச்சேர்களை கொடுப்பது. சாப்பாட்டு இலைகளையும் அங்குமிங்கும் இருந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்வது மற்றும் வாங்கிய இரவல் பாத்திரங்களை தேய்ப்பது என்று அமுதா பிஸியாக இருந்தாள்.
'ஒன் மொகத்துல தெரிஞ்ச வெக்கத்த பார்க்க பார்க்க என்ன சந்தோஷம் தெரியுமா எனக்கு. புடிச்சாலும் புடிச்சா உங்க அப்பா, புளியங் கொம்பான்னா புடிச்சிருக்கார்? சட்டு புட்டுன்னஅவா கிட்ட நாளைக்கே பேசிட்டு வரச்சொல்லு. புள்ளையாண்டான் நன்னா களையாவும் இருக்கான், குணத்தோடையும் இருக்கான். மனுஷாளும் தங்கமா தெரியறா.'
'அத விடுங்கோ மாமி. உங்களோட ஒத்தாசைய நாங்க ஜன்மத்துக்கு மறக்க மாட்டோம். ஊர் வுட்டு ஊர் வந்த எங்களுக்கு இப்படி ஒரு உறவ கொடுத்தவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.'
'அடி போடி நீ ஒண்ணு. நீயும் குடுத்தனக்காரி மாதிரியா பழகற? எங்காத்துல நான் அடிக்கடி சொல்லிண்டிருப்பேன். அடுத்த ஜன்மத்துல எனக்கு குமுதாதான் பொண்ணா பொறக்கணும்னு.'
'நாங்க ரொம்ப கொடுத்து வெச்சவா மாமி. எல்லாம் உங்க ஆசீர்வாதம்.'
'உங்க அப்பாவத்தான் நெனச்சுப்பேன். எப்பேர்பட்ட இழப்பு உங்க அம்மா இழப்பு. அத்தன சோகத்திலேயும் பெத்த கடன மறக்காம வாரம் தவறாம பொண்கள வந்து பார்த்துண்டு அவாளுக்கு ஆறுதல் சொல்லிண்டு அவளாக்கு என்ன செய்யணுமோ அதையும் மனசுல வெச்சிண்டு உங்கள சுத்தியே பொறுப்போட.....'
'ஆமாம் மாமி. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி. எங்கம்மா போனோண்ண எங்களுக்கு நேரா சோகத்த காமிச்சுக்க மாட்டார். ஒரு ஓரத்துல போய் குலுங்கி குலுங்கி அழுதுட்டு வருவார். நாங்க என்னவோ சீக்கிரமா தைரியத்த வரவழிச்சிண்டோம். ஆனா அவர் பாவம் திருச்சிலே வேற தனியா என்ன பாடு படறாரோ இன்னும்?'
'எல்லாம் சரியாயிடும் குமுதா. உன் தங்கைக்கும் நல்ல வரனா அமஞ்சுடுத்துன்னா போதும். அவர் ரிடையர் ஆகறதுக்குள்ள நீ ரெண்டு அவ ரெண்டு பெத்துப் போட்டுட்டா அதுகளோட விளையாடிண்டே சந்தோஷமா பொழுத ஓட்டிடுவார்.'
'மாமி, உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. ஒரு நல்ல வரன் அமுதாவுக்கும் வந்திருக்கு. முடிக்கலாம் ஒண்ணான்னா, பணத் தட்டுப்பாடா இருக்குமோன்னு அப்பா யோசிக்கிறார்.'
'அட்ரா சக்கைனணா. பையன் என்ன பண்றான்?'
சொல்கிறாள் அரவிந்தைப் பற்றி. அவன் அம்மா வந்ததைப் பற்றி.
'இரு இரு இரு. நீ சொல்றவா தாம்பரத்துல தான இருக்கா அவாத்துல கூட ரெண்டு வருஷம் முன்னாடி அந்த பையனோட தங்கையும் அப்பாவும் தவறிப் போனா தானே?'
'ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும் இதெல்லாம்?'
'அவாள்லாம் எங்க தூரத்து உறவு. விஷயம் கேள்விப் பட்டு போனோம். அதுக்கப்பறம் ஒரு தடவை பார்த்துட்டு வரணும் வரணும்னு நெனச்சிண்டே இருக்கோம். ஆனா வேள வரல. அவளா வந்தா நம்மாத்துக்கு. அடடா, எனக்கு தெரியாம போச்சே இப்படி.'
'அந்த மாமிக்கு நீங்க இங்க இருக்கறது தெரியாதா மாமி.'
'தெரிய வாய்ப்பில்ல. நாங்க இந்த வீட்ட வாடகைக்கு விட்டுட்டு கோடம்பாக்கம் ரெங்கராஜபுரத்துல இருந்தோம். அப்புறம்தான் குடுத்தனக்காரா காலி பண்ணோன்ன இங்க நாங்களே வந்துட்டோம். நாங்க துக்கத்துக்கு போனபோது இதெல்லாம் பேச முடியல.'
'ரொம்ப சந்தோஷம் மாமி. தேவப்பட்டா உங்க கிட்ட அந்த வரன் விஷயமா உதவி கேட்டு வருவேன். ஹெல்ப் பண்ணனும்.'
'என்ன ஹெல்ப் அது இதுன்னு. ஒரு உத்தரவு போடு. சுந்தரி காத திருகி இங்க அழச்சிண்டு வந்து தட்ட மாத்திக்க சொல்றேன். அந்த கல்யாணமும் முடிஞ்சிதுன்னே வெச்சிக்கோ.'
'பகவானே, இவ்வளவு நல்ல ஆத்மாக்களையெல்லாம் எங்கள சுத்தி கொடுத்திருக்க. நாலு காச சேர்த்து கொடுத்திருக்க கூடாதா?'
கண்ணீர் சிந்துகிறாள் குமுதா.
'அழாதடி கொழந்த. ஆறு வாரம் தொடர்ந்து மாங்காடு காமாக்ஷிய தரிசனம் பண்ணிட்டு வெளக்கேத்திட்டு வாங்கோ ரெண்டு பேரும் ஒண்ணா போய். எல்லா கஷ்டங்களையும் அவ போக்கறாளா இல்லையா பாரு. ஏதோ ஆறுதலுக்காக சொல்றேன்னு நெனைக்காத. அவ சக்தி ரொம்ப அலாதி. முடிச்சு போடணும்னு அவ தீர்மானிச்சுட்டா சத்ரத்த அவளே ஃபிக்ஸ் பண்ணி கையில கொடுத்துடுவா.'
'சரி மாமி. கண்டிப்பா அமுதாவ அழச்சிண்டு போறேன். அப்ப நான் வரட்டுமா?'
நமஸ்கரித்து விட்டு ஜாக்கட் பிட்டோடு தாம்பூலம் பெற்றுக் கொண்டு அவர்கள் போர்ஷனுக்கு வருகிறாள்.
'ஏண்டி செல்லம். நான் வரமாட்டேனா. அதுக்குள்ள அத்தன பாத்திரத்தையும் தேச்சுட்டையே.'
'அப்பா, நீங்க டிஃபன் நன்னா சாப்டேளா?'
'சாப்டேன் குமுதா. முடிஞ்சா ஒரு காஃபி மாத்திரம் தரயா?'
'குமுதா, நான் போடறேன். நீ அப்பாவோட பேசிண்டிரு.'
அவளுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அப்பா பக்கத்தில் அமர்ந்தாள்.
'திருப்பியும் கேட்கறேன்னு நெனக்காத. மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா? உனக்கு பிடிக்கலைனா வேண்டாம்.'
'பிடிச்சிருக்குப்பா. எனக்கு பிடிக்கலைனா வேண்டாம்னு சொல்ற நீங்க, அமுதாவுக்கு பிடிக்கிற பையன பேசி முடிக்க மாட்டேங்கறேளே?'
'எல்லாம் உன் கல்யாணம் நல்ல படியா முடியட்டும்.'
கேட்டுக் கொண்டே காஃபியை எடுத்து வந்து வாசலுக்கு போக முற்பட்ட அமுதாவை அப்பாவே தடுத்து தன்னுடைய பக்கத்தில் உட்கார சொல்கிறார்.
'அமுதா, அப்பா மேல கோபம் இல்லையே. உங்க ரெண்டு பேர்கிட்டேயும் கொஞ்சம் பேசணும்.'
'உங்க அம்மாவோட நகையும் வாங்கி வெச்சதும் மொத்தமாவே பைஞ்சு பதினாறு பவுன்தான் தேறும். கையிருப்புன்னு பார்த்தா ஒரு அம்பது அறுபதுதான் இருக்கும். கடன் வாங்காம நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னா குமுதா கல்யாணத்துக்கு மாத்திரம் தான் சரியா இருக்கும். அதுவே டவுட் தான். குமுதாக்கு வந்திருக்கற இடம் பெரிய இடமா இருக்கு. நாம எந்த குறையும் இல்லாம கல்யாணம் பண்ண வேண்டாமா?'
'எனக்கு மாத்திரம் ரெண்டு பொண்களுக்கும் நல்ல வரன்கள் வந்தா முடிக்கணும்னு ஆசை இருக்காதா? உன் கல்யாணத்த முடிச்சுட்டு அமுதா சம்பளத்தையும் என் சம்பளத்தையும் வெச்சிண்டு எப்படியோ சேமிச்சு ரெண்டு வருஷத்துல போட்டடிச்சு அவளுக்கும் பண்ணிடலாம்னு யோசிச்சிண்டிருந்தேன். கடன்காரங்க ஆத்து வாசல்ல நிக்காம கௌரவமா காலத்த ஓட்டிண்டிருக்கோம். மொதல்ல அமுதா கல்யாணத்தையும் சேர்த்து பண்றதுக்கு அவ்வளவு பணம் புரட்ட முடியுமான்னு தெரியல. அப்படியே நாலா பக்கமும் வாங்கிட்டு நாளைக்கு யார் அவஸ்த படறது சொல்லு.'
'இப்படியெல்லாம் யோசிச்சதாலதான் அமுதா விஷயத்துல நான் ஒண்ணும் சொல்ல முடியாம கோச்சிண்டிருந்தேன். உங்களுக்கும் புரிஞ்சிருக்கும். ஆனா என்ன பண்றது? பணக்கார அப்பாவுக்கு பொறக்கலையே நீங்க.'
'எனக்கு குமுதாவுக்கு கல்யாணத்த முடிக்காம சின்னதுக்கு பண்றதுல இஷ்டமில்ல. ஏதோ ஆண்டவன் க்ருபையால இந்த திருக்காட்டுப் பள்ளி ஜாதகம் நல்லபடியா போயிண்டிருக்கு.'
'என்னோட நிலைமையை சொல்லிட்டேன். நீங்க இப்ப சொல்லுங்கோ நான் என்ன பண்ணனும்னு. அதுபடி கேட்கறேன்.'
பொறுமையா கேட்டுக் கொண்டிருந்த அமுதா முதலில் பேச்சை ஆரம்பிக்கிறாள்.
தொடரும்.....
No comments:
Post a Comment