Tuesday, March 8, 2022

எண்ணப்பறவை_40

எண்ணப்பறவை_40

'இங்க வந்து உட்காரதுக்கு முன்னாடி ஸ்வாமி படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு வரச்சொல்லு பவானி.'

பவானி அம்மா யோகாம்பாள் சொல்லியாச்சு.  பெரிய ஸைஸில் கலர் லைட்டுகளோடு தம்பதி சகிதம் இருந்த வெங்கடேஸப் பெருமாள் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டார்.

மெல்ல மெல்ல... கனவுடன், சிலிர்ப்புடன், நாணத்துடன், பயத்துடன்.. அடியெடுத்து வைத்து வருகிறாள்.  தலையை குனிந்து கொண்டு.  பவானி ஒருபுறம்.  அமுதா மறுபுறம்.

இரண்டு மூன்று நிமிட அமைதி அங்கு.  அனைவர் பார்வையும் அவள் மீது.

'எல்லோருக்கும் பொதுவா ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு இந்த ஜமக்காளத்துல உட்கார்ந்துக்கோம்மா'

செய்கிறாள்.  ருக்மணி மாமியின் பக்கத்தில் அமர்கிறாள் குனிந்த தலையுடன்.

'ரொம்ப நன்னா பாடுவேன்னு உங்க அப்பா சொன்னாரே.  ஏதாவது ஒரு பாட்டு பாடேன்.  எல்லோரும் கேட்கறோம்.'

யாராவது ஒருவர் இப்படி கேட்பார்கள் என்று எதிர்பார்த்தது தானே?  யோகாம்பாள் இப்படி கேட்டவுடன் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டுதானே ஆரம்பிக்க முடியும்.

பவானியின் ஸிக்னல் வேறு.

'எல்லாரும் இருக்கான்னு கூச்சமா இருந்தா, சும்மா ரெண்டு வரி பாடு, போதும்.'

ருக்மணி மாமியின் சின்ன உந்துதல்.

'ராமா, நீ சொன்னாதான் ஒருவேளை கேட்பாளோ?'

அனந்த கிருஷ்ணனின் கிண்டல்.  ராமனின் நெளியல். குமுதாவின் அடக்கமான சிரிப்பு.

'கொழந்த, எல்லாரும் ஆசையா கேட்கறா பாரு.  தெரிஞ்ச பாட்டா பாடு.'

அப்பா கணபதி சுந்தரம் தன் தரப்பிலிருந்து அப்ளிகேஷன் போட்டாச்சு.

'காக்கை சிறகினிலே நந்தலாலா.  நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...'

பாடி முடித்ததும் கைதட்டல்கள்.

'எப்படியோ சந்தடி சாக்குல ராமன் கருப்பா இருக்கான்னு சொல்லியாச்சு.'

அனந்த கிருஷ்ணன் இப்படி சொல்ல எல்லோரிடத்திடமிருந்தும் ஒரே சிரிப்பு.  குமுதா மாத்திரம் குனிந்த சிரிப்பை உதிர்த்தாள்.

'நான் அவ்வளவு தூரம் சொல்லிட்டுப் போனேன்.  அந்த பாட்ட பாடல பார்த்தேளா?'

'இது எப்ப பவானி.  நீ சொல்லியே கேட்கலையா?  அதையும் பாடிடுங்கோ.  எங்க ஆளு அப்பறம் சும்மா விடமாட்டா உங்கள.'

'பாடு குமுதா அந்த பாட்டையும்.'

விடாமல் குரல்கள்.

'ராமன் ... எத்தனை ராமனடி...'

எல்லோரும் அவள் பாடிக் கொண்டிருக்கும்போது இடையிடையே ராமனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

'எங்க குமுதாகிட்ட ரெண்டு பாட்டு கேட்டு வாங்கிண்டாச்சு.  இப்ப மாப்பிள்ள பாடியே ஆகணும்.'

ருக்மணி மாமி விடுவதாக இல்லை.  அனந்த கிருஷ்ணனோ, 'இப்ப நீ பாடலைனா நான் பாடிடுவேன்.  அப்பறம் இந்த ஹால்ல ஈ காக்கா இருக்காது பார்த்துக்கோ.'

பவானி உடனே, 'எல்லோரையும் ஈ காக்கா என்று சொன்னதை நான் ஆட்சேபிக்கிறேன்.'

'சரி ராமா, ரெண்டு வரி பாடுடா.  நீதான் நன்னா பாடுவியே.  நானும் ஒன்னோட பாட்ட கேட்டு நாளாச்சு.' யோகாம்பாளே கேட்டு விட்டாள்.

'ஓ.  ஒன்லி ஃப்யூ லைன்ஸ்.' என்று சொல்லிவிட்டு...

'காலங்களில் அவள் வஸந்தம்...'

கைத்தட்டுகள் பிரமாதமாக கிடைத்தன.

'சரி, விஷயத்திற்கு வருவோம்.  சுத்தி வளச்சு பேச விரும்பல.  எனக்கும் எங்க ஆத்துக்காரிக்கும் குமுதாவ புடிச்சுடுத்து.  என் பையன் இப்பவே காலங்களில் அவள் வசந்தம்னு சொல்லிட்டான்.  அதனால அவனுக்கும் விருப்பம்னு தான் நெனைக்கிறேன்.  நான் இன்னும் ரெண்டு மூணுநாள் எங்க மாப்பிள்ளையாத்துல தங்குவேன்.  மேற்கொண்டு பேசறதுக்கு எப்போ வேணா வரலாம்.'

சதாசிவ ஐயர் சட்டுனு மனசுல பட்டத வெளிப்படுத்தி விட்டார்.

'அப்பா, பொண்ணு கிட்டேயும் கேளுங்கோப்பா.'

'பவானி, எப்போ ஒரு பாட்டுக்கு ரெண்டு பாட்டா பாடினாளோ அப்பவே தெரியலையா புடிச்சிருக்குன்னு.  சரி, இருந்தாலும் கேட்கறேன்.  குமுதா, நோக்கு என் புள்ளையாண்டான புடிச்சிருக்கோன்னோ?'

சிரசால் ஒரு ஒப்புதல் குனிந்த சிரிப்போடு.

'அப்பா, நீங்க எல்லாரும் மன்னிக்கணும்.  பொண்ணோட நான் தனியா ரெண்டு வார்த்தை பேசணும்.  பயப்படாதீங்கோ.  எனக்கும் பார்த்த மாத்திரத்திலேயே புடிச்சுடுத்து.  அதுல சந்தேகம் வேண்டாம்.  இருந்தாலும் ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசணும்.  பெரியவாள்லாம் அதுக்கு சம்மதிக்கணும்.  ப்ளீஸ்.'

என்னடா இது புது வழக்கம்.  எல்லாரும் தப்பா நெனச்சுக்க மாட்டா.  இதெல்லாம் முன்னாடியே சொல்லியிருக்கணும்.  நீ இந்த மாதிரி கேட்கறது நன்னாவே இல்ல.  பொண்ணோட அப்பா நம்மளப் பத்தி என்ன நெனப்பார்?'

கொஞ்சம் நிஸப்தம்.  பிறகு ஒருவருக்கொருவர் க்ஷீண குரல்களில் வாத பிரதிவாதங்கள்.

'மாமா, பொண்ணு சம்மதப் பட்டா யாருக்கும் ஆக்ஷேபணை இருக்காதுன்னு நெனைக்கிறேன்.'

அனந்த கிருஷ்ணன் பந்தை குமுதா பக்கம் திருப்புகிறான்.

கொஞ்சம் நெளிவு இருந்தாலும் 'என்னதான் பேசுகிறார், பார்ப்போமே' என்பதே மேலோங்கியது.

'இப்பவே மணி அஞ்சாகப் போறது.  டிஃபன் சாப்பிடலாமே எல்லோரும்.  ஏற்கனவே இத்தனை நேரம் ஆறி அவலாப் போயிருக்கும்.'

ருக்மணி மாமி சொன்னவுடன் அபிராமி, அபிராமி ஆத்துக்காரர் மற்றும் அமுதா அதற்கான ஏற்பாடுகளுக்கு தயாராகிறார்கள்.

பந்தி போடப்பட்டு டிஃபன் பரிமாறப் படுகிறது.

குமுதாவும் ராமனும் தனிப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்காக ஸைடில் இருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.

தொடரும்....

No comments:

Post a Comment