எண்ணப்பறவை_39
'ஏண்டி குமுதா. நான் ஒருத்தி இருக்கேன்கறதையே மறந்துட்டியா?'
எடுத்த எடுப்பிலேயே கோபத்தோடு வந்த ஹவுஸ் ஓனர் ருக்மணி மாமி குமுதாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
'இப்பத்தான் சின்னது சொல்லித்து. ரொம்ப சந்தோஷம் குமுதா. உன்ன பிடிக்கறதுன்னு சொல்லறவன் அதிர்ஷ்டக்காரன். எல்லாம் உன் மனசு படியே ஒரு கொறையும் இல்லாம நடக்கும்.'
'எல்லாம் உங்க ஆசீர்வாதம் மாமி. நேத்திக்குதான் அப்பா திருக்காட்டுப் பள்ளி போய் பேசிட்டு கார்த்தால வந்தா.'
'அது இருக்கட்டும். இந்த சின்னூண்டு இடத்துல வெச்சுக்க வேண்டாம். எங்காத்துலேயே வெச்சுக்கலாம்.
'பரவாயில்லை மாமி' என்ற உதட்டளவு மறுப்பை அழுத்தம் ஒத்துக்கொள்ள வைத்தது.
சொஜ்ஜி பஜ்ஜி சிறிய இடத்தில். வரன் வரவேற்பு ருக்மணி மாமி ஆத்தில். எதுத்தாத்து பக்கத்தாத்து ச்சேர்கள் மாப்பிள்ளை குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே வரிசையாக உட்கார்ந்து விட்டன. பரண் மீது போட்டிருந்த ஜமக்காளம் தூசுகளை உதறிவிட்டு ஜம்மென்று விஸ்ராந்தையாக படுத்துக் கொண்டது. சந்தனப்பேலா சந்தனக் கரைசலோடும் டையமண்ட் கற்கண்டும் குங்குமச்சிமிழும் ஒரு சின்ன ட்ரேயில் அடக்கத்துடன் அமர்ந்து விட்டன.
ருக்மணி மாமி ஞாபகம் வரும்போதெல்லாம் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அமுதாவின் பரபரப்பு அவைகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தது.
'ஏண்டி, நான் வேணா பண்ணட்டுமா? கல்யாணப் பொண்ணு நீயே பண்ணும்படியா இருக்கே. ட்ரெஸ் பண்ணிக்கோ. அவாள்லாம் வந்துடப் போறா.'
'எவ்வளவு பேர் வராளாம்? ஏதாவது ஐடியா இருக்கா? இருபது பேருக்கு காணும் போல இருக்கே. இதெல்லாம் கூச்சப் படாம கேட்டிருக்கணும். அப்பறம் மீந்து போச்சுன்னா யாருக்கு தரது?'
'இல்ல மாமி, சரியா இருக்கும். தாராளமாவே இருக்கட்டும். போதாம போச்சுன்னா உறுத்தலா இருந்துண்டே இருக்கும்.'
'நீ வேணா பாரேன். ஸ்வீட்ட சாப்டோண்ண பய மயங்கி உன்ன அழச்சிண்டு இன்னிக்கே அவாத்துக்கு அழச்சிண்டு போகப் போறான் உன்ன.'
'போங்கோ மாமி. இது ரொம்ப ஓவர் கிண்டலா இருக்கு. இத அப்பா கிட்ட சொல்லிடாதீங்கோ, இப்பேலேந்தே கனவுல மிதக்க ஆரம்பிச்சுடுவார்.'
'உன் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே அமுதாக்கும் ஆயிடும் பாரு நீ வேணா.'
'மாமி, வர வர எங்கப்பாவ மிஞ்சுடுவேள் போல இருக்கு கனா காணறதுல.'
சின்னச் சின்ன கனவுகளும் நம்பிக்கைகளும் இல்லைன்னா நடுத்தரத்துக்கு என்ன சந்தோஷம் கெடச்சுடப் போறது?
'குமுதா, மெனக்கெட்டு அபிராமி அக்கா கிட்டேந்து பட்டுப் புடவை வாங்கிண்டு வந்தேன். அத கட்டிக்க மாட்டேங்கறியே?'
'எல்லாம் இந்த ஜார்ஜெட்டே போதும். நான் என்ன எக்ஸிபிஷனா என்ன? ஏதோ சித்த பளிச்சுனு இருந்தா போதும். கம்பெல் பண்ணாத. நீ போய் ருக்மணி மாமிக்கு ஹெல்ப் பண்ணு. இல்லைனா நீயும் ட்ரெஸ் பண்ணிக்க ஆரம்பி.'
'நான் சும்மா மூஞ்சிய மாத்திரம் அலம்பிக்க போறேன். ஸ்பெஷலால்லாம் எதுவும் பண்ணிக்கப் போறதில்ல.'. அர்த்தத்துடன் மனதுக்குள் ஒரு வைராக்யம் அமுதாவுக்கு.
மூன்று மணிக்கு பத்து நிமிடம் முன்னாலேயே அபிராமி ஆத்துக்காரருடன் ஆஜர். எதிராத்து சுமதி ஆத்துக்காரருடன் வந்துவிட்டாள். ருக்மணி மாமி குடும்பத்தினரோடு. அக்கம் பக்கத்திலிருந்து ஓரிவர்.
வெள்ளை வெளேர் வேட்டி, காதி ஜிப்பா, மேல் துண்டு, நெற்றியில் குழத்துப் போட்ட விபூதி சகிதம் பளிச்சென்று கணபதி சுந்தரம் வந்தவர்களிடம் வரனைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
மணி மூணு... மூணு பத்து.... மூணு பதினைந்து.... கொஞ்சம் டென்ஷன்.
'வருவா மாமா. கவலைப் படாதீங்கோ. இங்க தானே போஸ்டல் காலனி. லேட்டாச்சுன்னா நான் ஸ்கூட்டர ஒரு மிதி மிதிச்சு பார்த்துண்டு வரேன். கொஞ்சம் அமைதியா இருங்கோ.'
'ஞாயித்துக் கிழமையோண்ணோ. ஆட்டோ லேசுல கெடைக்காது. அதான் அவாளுக்கு லேட்டாகறதுன்னு நெனைக்கிறேன். பத்து நிமிஷம் பார்த்துட்டு யோசிக்கலாம் என்ன பண்றதுன்னு.'
'ராகு காலத்துக்குள்ள வந்தா கூட போதும். டென்ஷனாகாதீங்கோ.'
வந்திருந்தவர்களின் ஆறுதல்கள் அவரை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தன.
மூணு மணி முப்பத்தைந்து நிமிடம். கைக் குழந்தையோடு ஆட்டோவில் வந்திறங்கினான் அனந்த கிருஷ்ணன். கூடவே அவனுடைய அம்மா அப்பா.
'ஸாரி மாமா. ஒவ்வொருத்தரா ரெடி ஆகறதுக்குள்ள கொஞ்சம் லேட்டாயிடுத்து. இவா என்னோட அப்பா அம்மா. பவானி அவாள அழச்சிண்டு ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ள வந்துடுவா.'
ஆட்டோ ட்ரைவருக்கு காசு கொடுக்க கணபதி சுந்தரம் முன்வர தடுத்து விட்டான் அனந்த கிருஷ்ணன்.
'எல்லோரும் தயாரா இருக்கேள் போல இருக்கு. நாங்கதான் சோம்பேறிகள் போல இருக்கு..'
அனந்த கிருஷ்ணனின் ஜோக்கிற்கு சிரித்தார்கள்.
மூணே முக்கால் மணி.
இரண்டு ஆட்டோக்களில் மற்றவர்கள், ராமன், ராமனின் பெற்றோர்கள், பவானி, ராமனின் அத்தை, அத்திம்பேர், பவானியின் பக்கத்தாத்தில் இருக்கும் நட்புகள் இரண்டு.
'வாங்கோ வாங்கோ...'. ஜெய்சங்கர் தெரு வரவேற்பு.
எல்லோரும் இருக்கையில். சில பெண்கள் ஜமக்காளத்தில். அனந்த கிருஷ்ணன் அங்கு ஓரத்தில் இருந்த மேஜையின் மேல்.
வந்த பெண்கள் அனைவருக்கும் முதலில் பூச்சரங்கள். சந்தனம் குங்குமம் எல்லோருக்கும். பவானி கொண்டுவந்த பழவகைகளும் பூக்களும் இவர்களிடத்தில் கைமாறிக் கொள்கின்றன.
'ஏய், ராமா. வெட்கப் படாத டா'
வெட்கப் படாதவனையும் வெட்கப் பட வைக்க வேண்டாமா? கல கலப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சி நடுத்தர வர்க்க குடும்பங்களில் நடந்திருக்கிறது.
'சார் என்ன பண்றார்?'
'திருக்காட்டுப் பள்ளியில ஒரு சிவன் கோவில் உண்டே! எப்படி இருக்கு இப்போ?'. சிவபெருமானைக் கூட வம்புக்கு இழுக்க வேண்டாமா?
'எங்க பூர்வீகம் திருவையாறு பக்கம். ஜம்புநாதய்யர் எங்க முப்பாட்டனார். பல வருஷத்துக்கு முந்தியே பத்து மா நிலத்த வித்துட்டு இந்த பக்கம் வந்துட்டோம்.'. மண் வாசனை பேச்சுக்கள்.
ஒருவருக்கொருவர் டாப்பிக் கிடைக்காமல் கிடைத்த அமைதியை அனந்த கிருஷ்ணன் சாமர்த்தியமாக திசை திருப்புகிறான்.
'வந்த்துலேந்து பேசிண்டே இருக்கோமே? ராகுகாலத்துக்கு முன்னாடி ராமன் பொண்ண பார்த்துட்டுமே. அப்புறம் கோச்சிண்டு வெளி நடப்பு செஞ்சுடப் போறான்.'
கலகலப்போடு நேரத்தையும் எல்லோருக்கும் உணர்த்தியது அனந்த கிருஷ்ணனின் அந்தக் குரல்.
'நான் போய் அழச்சிண்டு வரேன்' பவானி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்.
தொடரும்.....
No comments:
Post a Comment