Friday, March 4, 2022

எண்ணப்பறவை_34

எண்ணப்பறவை_34

வந்தவள் அபிராமி.  கையில் ஏதோ ஒரு ப்ளாஸ்டிக் கேரி bபேக் வைத்திருந்தாள்.

'அப்பா, இந்த மேடம்தான் அபிராமி.  பக்கத்து தெருவுல இருக்கா.  அன்னிக்கு அமுதா இவாத்துக்குதான் போயிட்டு வந்தா.'

லேசாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, 'குமுதா,  நீ பேசிண்டிரு.  அதுக்குள்ள அப்பா ரெடியாகறேன்.  சாப்டுட்டு இப்பவே கிளம்பினாத்தானே கூட்டத்துல அடிபடாம ட்ரெயினையோ பஸ்ஸையோ புடிக்க முடியும்?'

அவரை தடுக்கவில்லை குமுதா.  அப்பா கிளம்பினால் மனம் விட்டு அமுதாவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் என்றே நம்பினாள்.

'நான் தப்பான நேரத்தில வந்துட்டேனா?  நா வேணா...:

'அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்.  அப்பா திருச்சி கிளம்பிண்டிருக்கா.  சித்த நாழியில அமுதா வந்துடுவா.  வெயிட் பண்ணுங்கோ.'

'இல்ல ஸிஸ்டர்.  நா கிளம்பணும்.  நிறைய வேல இருக்கு ஆத்துல.  அமுதாவ இன்னிக்கு பஸ்ஸுல பார்க்க முடியல.  அவ கிட்ட இத கொடுத்துடறேளா?'

'கொஞ்சம் இருங்கோ.  காஃபி போட்டுத் தரேன்.'

'சிரம படவேண்டாம்.  இன்னொரு நாள் வரேன் சாவகாசமா.'

வாங்கிக் கொண்ட bபேக்கில் ஏதோ ஒரு புத்தகம் இருப்பது போல உணர்ந்தாள்.  வாங்கி கைக்கெட்டிய தூரத்தில் வைத்து விட்டு வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தாள் அபிராமியை சிறிது பேசிவிட்டு.

வந்தவள் அந்த kகேரி bபேக்கை குமுதா அவள் பொருட்களை எப்போதும் வைக்கும் ஷெல்ஃபில் வைக்கும்போது தவறி அதனுள் இருந்த டைரி கீழே விழுகிறது.

அவள் டைரியை படிப்பது அநாகரீகம் என்று தெரிந்தும் ஒரு க்யூரியாஸிடி உந்துதல்.

'இந்த டைரியே அந்த அபிராமிகிட்டேந்து தானே வந்தது.  அவள் படித்திருக்க மாட்டாளா என்ன?  அவளே படிக்கலாம், நான் படிக்க கூடாதா?'

மனம் நியாயப் படுத்துகிறது.

முதல் பக்கம்.

'எண்ணப் பறவை' என்ற வாசகம் ஒரு ஹார்ட் ஸிம்பலுக்குள்.

'அது என்ன எண்ணப்பறவை?'

'கதை எழுதிண்டிருந்ததே.  அதுவா இருக்குமோ?'

'கள்ளி, நம்ம கிட்ட என்ன கதைனு சொல்லாம, ஊர் அம்புட்டு பேருக்கும் காமிக்கறாளா?'

'பாவம், கை வலிக்க எவ்வளவு பக்கம் எழுதிண்டு வந்திருக்கு'.

'அவ வரதுக்குள்ள ஒரு க்ளான்ஸ் பார்த்துடுவோமா.  அப்பா ரெடியாகறதுக்கு பத்து பதினைந்து நிமிஷம் ஆகுமே.  அதுக்குள்ள...'

மேலோட்டமாக படிக்கிறாள்.  அவசரமும் கலந்தே.  ஐந்தாறு  பக்கங்களை கடக்கும்போதே நெஞ்சுக்குள் ஒரு பட படா.

'ஒரு வேளை நம்மாத்துக்கு வந்தவன வெச்சா....'

மேலும் மேலும் ஆர்வமும் படபடப்பும்.

'எப்படியாவது அவள் வரதுக்குள்ள படிச்சுடணும்.'

கதையில் இப்போது கண்கள் அந்த ஹீரோ வீட்டில் நடந்த விபத்தை உள் வாங்கி மூளைக்கு அனுப்புகிறது.

உறுதிப்படுத்திக் கொண்டாள்.  சந்தேகமே இல்லை.  'அமுதா அந்த அரவிந்த் பையனை நேசிக்கிறாள்.  இனி அந்த கழுதை என் கிட்ட ஏமாத்த முடியாது.  வரட்டும்.  கவனிச்சுக்கறேன்.'

'பாரேன், எவ்வளவு அமுக்கமா இருந்திருக்கு?  என் கிட்ட கூட சொல்லாம..'

ஓரளவு மனதில் உறுதிப் படுத்திக் கொண்டவுடன் கடைசி பக்கங்களுக்கு செல்கிறாள்.  'அட , ரெண்டு நாள் முன்னாடி அந்த பையன் நம்மாத்துக்கு வந்து போன ஸீனாட்டமே இருக்கே..'

'தனக்கு வந்த லவ் உணர்வை வெச்சே கதை எழுதிண்டு வராளா?  இருக்கட்டும் இருக்கட்டும்.'

'என் கணிப்பு மட்டும் சரியா இருந்ததுன்னா, இவளுக்கு அவன் மேல ஒரு க்ரஷ்.  ஆனா இது வரைக்கும் அவன் கிட்ட சொல்லாத மாதிரிதான் தெரியறது.  அங்கேயும் இங்கேயும் அவா சுத்தின மாதிரியும் தெரியல.'

அவளுடைய கற்பனை வரிகளை நிஜத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறாள்.

'ஸோ, அந்த பையன் தன் அம்மா கிட்ட நம்மாத்துக்கு வந்ததை பத்தி பேசியிருக்கான்.  அமுதாவ பிடிச்சிருக்குன்னு கூட சொல்லியிருக்கலாம்.  அதனால அவ அம்மா நம்மாத்துக்கு வந்துருக்கா.  சரிதான்.  இப்ப நன்னாவே புரிஞ்சு போச்சு.'

சிரித்துக் கொண்டே டைரியை kகேரி bபேகில் போட்டு ஷெல்ஃபில் வைத்து விடுகிறாள்.

'தட்ட வெச்சிண்டு உட்காருங்கோப்பா.  ரசத்த சுட வெச்சுடறேன்.  அப்பளத்த பொரிக்கட்டுமா, சுடட்டுமா?'

'குமுதா.  வயத்தெல்லாம் என்னவோ பண்றது கொழப்பத்தால.  வேண்ட்ருக்கவே இல்ல.  சாப்பாடு கூட வேணும்னு தோணல.  வேணும்னா போற வழியில நாலு வாழப்பழத்த சாப்பிட்டுக்கிறேனே.'

'அப்பா, வயத்த காயப் போடாதீங்கோ.  வேணும்னா மோருஞ்சாதமா ரெண்டு புடி சாப்டுட்டு போங்கோப்பா.  அவ அதுக்குள்ள வந்துடுவா.  அவ கிட்டேயும் சொல்லிட்டு கிளம்பலாமே.'

'இல்ல குமுதா.  அவ வரதுக்குள்ள கிளம்பணும்னு கூட பார்க்கறேன்.  எனக்கிருக்கிற ஆத்திரத்துல நான் ஏதாவது பேசிடுவேன்.  அப்புறம் சண்டையாயிடுத்துன்னா நீ கஷ்டப் படுவ.'

'சரி.  அப்படின்னா இப்பவே சாப்பிட உட்காருங்கோ.  மோருஞ்சாதமா சாப்பிடலாம்.'

சாப்பிட்டு விட்டு சாஷ்டாங்கமாக ஸ்வாமி படத்திற்கு முன் ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டு கிளம்பினார்.

'அது கிட்ட சொல்லிடு.  பகவான்தான்டி உனக்கு துணை நிக்கணும்.  போற வேலை நல்ல படியா முடிஞ்சா மலக்கோட்ட பிள்ளயாருக்கு செதர்க்கா ஒடைக்கணும்.'

கண்கள் கலங்கிய நிலையில் இருந்த அப்பாவை தேற்றுகிறாள்.

'அப்பா ஏம்ப்பா இப்படி மனசு ஒடஞ்சு போறேள்.  இப்ப என்ன நடந்துடுத்துன்னு இப்படி கண் கலங்கறேள்?  என் கல்யாணம் நல்ல படியா நடக்கும்.  போதுமா?'

'அதுக்கில்லடி.  ஜாதக பரிவர்த்தனை முடிஞ்சு ஒவ்வருத்தரும் உன் ஜாதகம் பொருத்தமில்லைனு சொல்லும்போதெல்லாம் மனசு ரொம்ப வலிக்கும்.  ப்ரார்த்தன பண்ணாத தெய்வமே இல்ல.  நல்ல பையனா இருக்கானே, இவனாவது ஒனக்கு தோது பட மாட்டானான்னு நெனைச்சிண்டிருக்கும் போது நம்மாத்துக் கொழந்தையே....'

முடிக்க முடியவில்லை அவரால் வார்த்தைகளை.

'கிளம்புங்கோப்பா.  அவ கிட்ட நான் ஏதாவது சொல்லிக்கறேன்.  நீங்க இருந்தா தேவையில்லாம அவள தப்பா நெனச்சிண்டு உங்களையும் போட்டு குழப்பிண்டிருப்பேள்.'

அவர் சென்ற ஒரு பத்து நிமிடத்தில் அமுதா வந்தாள்.

'வா அமுதா கண்ணு.  ரொம்ப லேட்டாயிடுத்தே.  யூ லுக் ஸோ டயர்ட்.  உள்ள போய் ஃப்ரெஷ் ஆகிக்கோ.  ஒண்ணா சாப்பிடலாம்.'

'அப்பா இல்ல?'

'அத ஏன் கேட்கற?  விசு மாமா எனக்கு மத்யானம் ஃபோன் பண்ணியிருந்தா.  என் ஜாதகம் பொருந்தியிருக்குன்னு.  அதுலேந்து அப்பாவ கையிலேயே பிடிக்க முடியல.  இப்பவே போய் பையனாத்துல பேசிட்டு வரேன்னு தையா தக்கான்னு குதிச்சிண்டிருந்தா.  எவ்வளவோ சொன்னேன் நாளைக்கு போகலாமேன்னு.  கேழ்க்கல.'

'கங்க்ராட்ஸ் அமுதா.  சீக்கிரம் விவாஹ ப்ராப்தி ரஸ்து!'

'நீ வேற.  அலையன்ஸுனா சும்மாவா?  இன்னும் எவ்வளவோ இருக்கு.  முக்கியமா டௌரி சமாச்சாரம்.  சரி சரி.  நீ ரெடியாகு.  ஏற்கனவே லேட்டு.  எனக்கும் பசிக்கறது.'

உள்ளே போனாள் அமுதா.  அங்கே அபிராமியிடம் கொடுத்திருந்த அவள் டைரி போட்ட பை இருந்தது.

'குமுதா, அபிராமி அக்கா வந்தாளா?'

'ஆமாண்டி.  ஏதோ ஒரு கவர் கொடுத்தா.  அங்க உன் ஷெல்ஃப்ல வெச்சிருக்கேன் பாரு.'

'எப்ப வந்தா?'

இந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலை வைத்து குமுதா கதையை படித்தாளா என்று யூகிக்கலாமே என்று நினைத்தே கேட்டாள்.

'இப்பத்தான் அப்பா கிளம்பிண்டிருக்கிற சமயத்துல வந்தா.  சரியா கூட அவளோட பேச முடியல.'

குமுதாவின் யதார்த்தமான பேச்சில் சந்தேகம் தீர்ந்த மாதிரியே இருந்தது அமுதாவுக்கு.

'பருவம் எனது பாடல்.  பாடல் எனது ஆடல்...'. பாட்டின் வரிகளை ஹம்மிக் கொண்டே பாத்ரூமை நோக்கி அமுதா.

தொடரும்....

No comments:

Post a Comment