Monday, March 14, 2022

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −28

 (திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −27

"என்ன சொன்னால் இந்த அம்மையாருக்கு மனம் சமாதானம் அடையும்!.." என்று பரிவோடு திருவல்லிக்கேணி அம்மையாரை ஏறிட்டார் பெரிய ஜீயர்..

அவருடைய எண்ணம் அறிந்தவளாய், அவ்வம்மையாரே வாய் திறந்தாள்...

"ஸ்வாமி... உம்முடைய எண்ணம் அடியேனுக்குப் புரியறது..

ஆசார்யன் இட்ட வழக்காக அடியேன் இருந்துட்டா, இந்த விசனமெல்லாம் காணாம போயிடும்னு அன்னிக்கொருநாள் தேவரீர் சாதித்தீர்!..

ஆனா, அடியேன் என்ன,

#காலலம்பி வந்தேனோ ஆண்டானைப் போல?.."

என்று வழக்கம்போல் ஒரு கேள்வியோடு, தன் பேச்சை சட்டென்று நிறுத்திக் கொண்டாள் அம்மையார்..

"அது என்ன வ்ருத்தாந்தம்?.." என்பதுபோல் ஜீயர் ஏறிடவும்,  திருவல்லிக்கேணி பெண்மணி மேலே தொடர்ந்தாள்..

"சோழ அரசன் கொடுத்த தொந்தரவால, உடையவர் சிலகாலம் முதலியாண்டானோடு மேலநாட்டில் (திருநாரராயணபுரம்) வாழும்படி ஆச்சு..

முதலியாண்டான் உடையவரோட பரம க்ருபைக்குப் பாத்திரமானவர்னு நமக்கெல்லாம் தெரியும்..

அப்படி ஒரு "குணபூர்த்தி" முதலியாண்டான் கிட்ட இருந்தது!.

அவர் தன்னை உடையவரோட "பாதுகை"யாவே நெனச்சு வாழ்ந்துண்டு இருந்தார்!..

அதனாலதானே, இன்னிக்கும் உடையவர் சந்நிதியிலே, அவரோட திருவடி நிலைகளை (ஶ்ரீசடாரி) "முதலியாண்டான்"னு நாமெல்லாம் கொண்டாடறோம்!..

அந்த மாதிரி கொண்டாடற அளவுக்கு, ஆத்ம குணங்களால நெறஞ்சு இருந்தவர்தானே அந்த முதலியாண்டான்!..

ஒருசமயம் மேல நாட்டுக்கு அருகில இருக்கற "ஜலக்ராமம்"கற ஊருக்கு உடையவர் போன போது, சமணர்களால நெறஞ்சு இருந்த அந்த ஊர் மொத்தமும், ஸ்வாமிக்கு எதிரா இருந்தது!..

ஆனா ஸ்வாமி, அவாளத் தன்னோட எதிரியா நெனக்காம,  தன்னோட ஸ்வபாவமான கருணையால, அவா எல்லாரையும் திருத்திப் பணி கொள்ளணும்னு ஸங்கல்பிச்சார்..

அதனால, அவர் முதலியாண்டன அழைச்சு, "இந்த ஊர் ஜனங்கள் தீர்த்தம் எடுக்கற துறையில, ஒம்மோட பாதங்கள் நெனையும்படி கொஞ்ச நாழி இருந்துட்டு வாரும்!.."னு நியமிச்சார்..

ஆண்டானும், ஸ்வாமியோட நியமனத்தை, என்ன ஏதுனு விசாரிக்காம, அப்படியே தலமேல ஏற்று, அவர் சொன்னபடியே செஞ்சார்..

அன்னிக்கு, முதலியாண்டானோட திருவடி நெனஞ்ச "ஶ்ரீபாத தீர்த்த"த்த சமணர்கள் எல்லாரும் ஸ்வீகரிச்சா.. (உட்கொண்டனர்).. 

அந்த க்ஷணமே அவாளோட மனசுல உடையவர் மேல இருந்த த்வேஷம் எல்லாம் மறஞ்சு போய், அவா அத்தன பேரும் ஸ்வாமிக்கு அனுகூலரா மாறிப் போயிட்டா!...

இன்னிக்கும் முதலியாண்டான் தம்மோட திருவடிய நெனச்ச அந்த எடத்துல ஜலத்த தேக்கி வெச்சு, அத பக்தர்கள்லாம் "ஶ்ரீபாத தீர்த்தம்"னு கொண்டாடறது வழக்கமா இருக்கு!..

.....அப்படி எந்த விதமான கேள்வியும் கேக்காம,  

"இதோட பலன் என்னவா இருக்கும்?.."னு ஆராய்ச்சி பண்ணாம,

.....ஆசார்யன் நியமனத்த அனுசரிச்ச முதலியாண்டான் மாதிரி,  அடியேன் இதுவரைக்கும் என்னிக்குமே இருந்ததில்லயே ஸ்வாமி!..

எனக்கேது விமோசனம்?.."

.....என்று கேட்டுக்கொண்டே, நீர் கசியும் தனது கண்களைப் புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டாள் அம்மையார்...

(வளரும்..)

No comments:

Post a Comment