#Easychair_1
அத்யாயம் : 1
ஈஸி சேர்... என் சிறு முயற்சி..
இது ஒரு அறிமுகப் பதிவு.
முகநூலில் ஒரு கதை சாத்தியமா? சாத்தியம் என முடிவெடுத்து முயற்சியில் இறங்கி விட்டேன். என் தொடர் பதிவுகளுக்கு கிடைத்த பாராட்டுக்கள் என்னை இந்த முயற்சிக்கு வித்திட்டன.
நான் ஒரு சினிமா பைத்தியம் இள வயதில். காசு கொடுத்து கண்ணீரை வாங்கி வந்த நாட்கள் உண்டு. கதையை அசைபோட்டு நானும் ஒரு திரைக்கதை எழுத வேண்டும் என்ற உந்துதலும் உண்டு. ஆனால் நினைத்ததெல்லாம் நடப்பது இல்லையே.
அது கிடக்கட்டும். அவ்வப்போது பெருமூச்சு விட ஆரம்பித்தால், இதயம் மட்டும் அவ்வப்போது சற்று விரிவடையும். மீண்டும் யதார்த்தத்திற்கு வந்துவிடும். அதனால் சாதிக்க முடிந்தது அவ்வளவு தான்.
எனக்கு தற்போது வயது 63. அறுபதைக் கடந்த பயணம். அசைபோட அனுபவங்களா இல்லை இத்தனை வயதில். ஆனால் கற்பனைக்கு மட்டும் விதி உண்டு. கோர்வையாகவும் தொய்வில்லாமலும் வந்தால் அவை கவிதைகளும் கதைகளும். இல்லை எனில் அவை குப்பைத் தொட்டியிலும் போட முடியாத சிந்தனைகள் அவ்வளவே.
அது என்ன ஈஸி சேர்? புது மாதிரி தலைப்பு? கேட்பதில் ஞாயம் இருக்கு. என்னிடமும் ஞாயம் இருந்தால்தானே தங்களால் இந்த கதையை ஏற்க முடியும்? சுவையொடு எழுதினால்தானே என்னோடு தொடர முடியும். முடிந்த வரை முயற்சிக்க முடியும் என்ற நம்பிக்கை.
என் வயதிலிருந்து பதிமூன்று வருடங்களை கழித்துவிட்டால் ஆஃப் சென்சுரி அடித்த உணர்வு. விசாலமான உலகம், வித்யாசமான மனிதர்கள், உணர்வுகள். கொள்ளை கொண்ட சம்பவங்கள்.
இந்த ஐம்பது வருடங்களில் நான் பல துக்க நிகழ்வுகளுக்கு சென்றிருக்கிறேன். குறிப்பாக வயதில் சற்று முதிர்ந்த அம்மாக்கள், அப்பாக்கள், தாத்தாக்கள், பாட்டிகள் சடலங்கள் வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கும் சுற்றத்திடமும் நட்புக்களிடமும் இறந்தவர்களைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருப்பார்கள். வந்தவர்கள் தாங்களும் இறந்தவர்களோடு தங்கள் அனுபவ பிரஸ்தாப்பங்களை சேர்த்து சோக ஸ்ருதி சேர்ப்பார்கள். அன்று மட்டும் பெரும்பாலும் இறந்தவர்களை குறை கூறுவது ஒன்று அரிது அல்லது குறைவு. பொய்கள் மெய்மைகளை விட்டு விடுவோம், கதைக்கும் கறிக்கும உதவாதவைகள் என்ற கண்ணோட்டத்தில்.
வீட்டில் உள்ள இரு முக்கிய பொருட்களை மையப்படுத்தி அவர்கள் மரண சம்பவங்களை முன்னிருத்தியும் சில மரணங்கள் உண்டு. எப்படி?
இந்த ஊஞ்சலில்தான் தினமும் கண் அசர்வாள் எங்கள் பாட்டி, அப்படியே ஊஞ்சலிலேயே உயிர் போச்சு என்பார்கள்.
இதோ, இந்த ஈஸி சேரிலேதான தினமும் தாத்தா பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். இன்றும் அப்படியே படித்துக் கொண்டே சாஞ்சு பிராணனை விட்டு விட்டார் என்பார்கள்.
சோர்வுற்ற மனிதர்களை சற்று இளைப்பார வைத்த அந்த ஊஞ்சல் மற்றும் ஈஸி சேர், ஏனோ மூச்சு நிற்பதற்கும் சாட்சியாக இருந்து விடுகிறது.
பெண்ணாயிருந்தால் ஊஞ்சல், ஆணாயிருந்தால் ஈஸி சேர். அதாவது ஊஞ்சல் கதாநாயகி, ஈஸி சேர் கதாநாயகன்.
ஈஸி சேர் என்ற தலைப்புக்கு ஓரளவு அர்த்தம் புரிந்திருக்குமே!! அதாங்க, ஆஞ்சு ஓஞ்சு ஈஸி சேரில் இளைப்பாறி உயிர் நீத்த ஒரு பெரியவரின் கதை.
கதாபாத்திரத்தி்ன் மீது அன்பு அதிகமானால் அவன் இவன் என்று கதாசிரியன் கூறிவிடுவான். வயதிற்கேற்ற மரியாதை அங்கு குறைக்கப்படும். நான் மட்டும் விதிவிலக்கா? நானும் 70 வயது அந்த பெரியவரை அப்படித்தான் கதை முழுவதும் அவ்வப்போது கூப்பிடப் போகிறேன்.
தொடரும்.....
No comments:
Post a Comment