#Easychair_2
அத்யாயம் : 2 (ஈஸி சேர் கதை துவக்கம்)
வைத்யநாத ஐயர். பெயர் என்னவோ இதுதான். ஆனால் வைத்தா வாத்யார் என்பதே ப்ரபலம்.
பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு, விபூதியை உடம்பு முழுவதும் இட்டுக் கொண்டு காலால் சற்று நடந்து கோவிலுக்கு சென்று ஆத்தில் உள்ள ஈஸி சேரில் சற்று இளைப்பார உட்ககாருகிறார். சிறிது நேரத்திலேயே மனம் எங்கெங்கோ செல்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
விருட்டனெ எழுந்து எட்டு வீடு கேட்கும் அளவுக்கு கத்துகிறார்.
"பகவானே, ஏண்டா இப்படி பண்ணிட்ட. நான் ஒனக்கு என்னடா பண்ணினேன்?"
அதற்கு மேல் முடியவில்லை அவரால். கண்ணீர், கண்ணீர். கைகள் வெட வெட. நெஞ்சு பட பட. நாடி நரம்பெல்லாம் நலிந்து போன உணர்வு.
ஒட்டு மொத்த சந்தோஷம் அவரிடமிருந்து வெகு தூரம் போய் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஐந்து வருடங்களாக இதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அனுதினமும்.
சற்று சுதாரித்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு அருகில் வருகிறார்.
பக்கத்து வீட்டு மலர் யாருடனோ சம்பாஷித்துக் கொண்டிருக்கிறாள். பாரு தினமும் ஒருநாளாவது மலரைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டாள்.
பாரு பாரு என்று இவர் வாயார கூப்பிட்ட பர்வதவர்த்தினி, அவர் பாரியாள். இன்று இல்லை, அவள் நினைவுகள் மட்டும் இவரை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.
'அக்கா, யாருக்கா இப்பபடி சத்தம் போட்டுகிட்டுருக்கா?' மலருக்கு தெரிஞ்சவாளா இருக்கும்.
'பக்கத்து வீட்டு பெரியவர்தான். சம்சாரம் போனதுலிருந்து இப்படித்தான் அடிக்கடி கத்தறார். பாவமா இருக்கு'.
'பைத்தியம் புடுச்சுடுச்சோ?'
'அப்படியெல்லாம் சொல்லாதே. ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. பாவம், இவருதான் கொடுத்து வைக்கல. மாமி போய் அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு, இன்னும் இவரு துக்கம் தீரல'.
'எனன ஆச்சுக்கா மாமிக்கு?'
'ஏதோ கோவிலுக்கெல்லாம் போக டூர் கிளம்பினாங்க. பஸ் ஆக்ஸிடெண்டுல மாமி செத்துட்டாங்க.'
'அடப் பாவமே'
'மங்கை, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. அப்புறம் வா, என்ன நடந்துதுன்னு பிறகு சொல்றேன்'.
எவ்வளவு சர்வ சாதாரணமா பாரு செத்த கதைய சொல்லிட்டா பக்கத்தாத்து மலர், என்று வருத்தத்துடன் அவர்கள் சம்பாஷனையை கேட்டு விட்டு உள்ளே வந்தார்.
இன்னும் உடல் நடுக்கம் முழுமையாக நிற்கவில்லை அவருக்கு.
கடவுளிடம் உள்ள கோபம் அடங்கவில்லை அவருக்கு. எப்படி அடங்கும். சுற்றி சுற்றி வந்தாலும் பாரு, பாருதான். அவளை இவரிடமிருந்து பிரிக்க வேண்டும் என்றால் இவர் மரணிக்க வேண்டும்.
மொத்த கர்மாவையும் இந்த ஜன்மத்திலேயே இவர் சோகத்தாலேயே கழிக்க வேண்டும் என்பது கடவுள் தீர்மானித்து விட்டாரோ என்னவோ, யார் கண்டது?
தொடரும்...
No comments:
Post a Comment