Friday, November 5, 2021

கற்கடேஸ்வரர் திருக்கோவில் திருத்தேவன்குடி

 கமலா கிருஷ்ணமூரத்தி

🌺🌹🌺🌹

#ஆன்மீகம்

கற்கடேஸ்வரர் திருக்கோவில் திருத்தேவன்குடி.   

இது  திருவிசநல்லூரில் இருந்து மூன்று கி.மீ பக்கத்துல இருக்கு ஆட்டோவில் போய் வரும் தூரம் தான்.  

இந்த கோவில் உருவாகும் முன்பு  ஒரு சமயம் ஒரு கந்தர்வன் வான் வழியே வந்து கொண்டிருக்கும்போது  கீழே இந்த கோவில் அருகே ஒரூ பெரிய மண்மூடிய குன்று அருகே  துருவாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை பார்த்து கீழே வருகிறான்.

பிறகு அவரிடம் ஏதோபேச அவரின் யோகத்தை கலைத்து விடுகிறான்.  அவர் துர்வாச முனிவர் இல்லையா அதனால கோபப்பட்டு அவனை நீ நண்டாக (கர்காடனாக) பிறக்கக் கடவது என்று சாபம் கொடுக்கிறார்.   இவன்  எப்போ எனக்கு  சாபவிமோசனம் கிடைக்கும் என்று மனம் வருந்தி  திருப்பி  துருவாச முனிவரிடம்   கேட்கும்போது அவர் பரிகாரம் சொல்கிறார்.

 அருகில் இருக்கிற திருதேவன்குடி எனும் சிவன்கோவில் அகழியில் நீ  நண்டு உருவில் வசித்து வரணும்.  மேலும் அருகே உள்ள தாமரை குளத்தில் உள்ள தாமரை பூவைக்கொண்டு தினம் தினம் சிவனை பூஜிக்கவேண்டும்.  அப்படி பூஜிக்கும் போது என்று நீ இந்திரனை காண்கிறாயோ அன்றே சாபவிமோசனம் கிடைக்கும் என அருளுகிறார்.

பக்கத்தில் உண்மையிலேயே பெரிய்ய பெரிய்ய தாமரை மலர்களோடு தடாகம் இப்பவும் இருக்கு.  இந்த நண்டு தினம் தினம் தாமரைப் பூவைக் கொண்டு சிவனை பூஜை செய்யும் பொழுது ஒரு நாள் இந்திரன் தனது இந்திரப்பதவியை காப்பாற்றிக்கொள்ள 1008 தாமரை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வருகிறார்.

அப்போது இந்த நண்டு தாமரை மலர்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பதை  பார்க்கும் போது இந்திரனுக்கு கோபம் வருகிறது.

ஒரு நண்டு நமக்கு முன் சிவபூஜை செய்கிறதே என்று கோபப்பட்டு அதை அடிக்க போகும்போது சிவபெருமானே தனது தலையில் ஒரு துவாரத்தை உருவாக்கி அந்த நண்டை தனது தலையில் தாங்கிக்கொள்கிறார்.

இப்பவும் இங்கே பால் அபிஷேகம் செய்யும் நாட்களில் சிவனின் தலையில் உள்ள துவாரத்தை நாம் காண முடியும். 

மேலும் ஒரு சமயம் சோழ மகாராஜாவிற்கு கைகால்கள் சோர்வடைந்து  மிகவும் அசைப்பதற்கு கஷ்டப்பட்ட பொழுது இறைவனும் இறைவியும் மருத்துவர்கள் வடிவெடுத்து வந்து அந்த மகாராஜாவை குணப்படுத்தி விட்டு   சென்றார்கள்.

அதன்பிறகு சோழ மகாராஜா துர்வாச முனிவர் தவம் செய்த இடத்திலிருந்து மண்மேட்டை  சுத்தம் செய்த பொழுது அதிலிருந்து சிவபெருமான் தோன்றுகிறார். 

அப்படி சுயம்புவாக தோன்றிய சிவபெருமான் மகாராஜாவின் வியாதியை குணப்படுத்தியதால்  இவருக்கு அருமருந்துடையார்   என்று பெயரிட்டு அரசன் அழைக்கிறார்.  

மேலும் சிவபெருமான் மட்டுமே கிடைத்ததால் ஒரு பிராட்டி வேண்டி தனியாக ஒரு 

 அம்பாள் சிலை செய்கிறார்கள் அந்த அம்பாளுக்கு அருமருந்தம்மை என்று புதிதாக பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்யப் படுகிறாள்.

அதன்பின் கொஞ்ச நாள் கழித்து கோவிலுக்கு பின்புறம் உள்ள நிலத்தை உழும்போது ஒரு அம்மன் சிலை கிடைக்கிறது அபூர்வமாகக் இந்த சிலை கிடைத்ததால் அவளுக்கு அபூர்வ நாயகி என்று பெயர் சூட்டப்படுகிறது.

எனவே இங்கே உள்ள இறைவனுக்கு இரண்டு நாயகிகள்.  ஒன்று அரசனே உருவாக்கியது அருமருந்தம்மை மற்றது தானாக கிடைத்தது அபூர்வநாயகி.

இங்கே அம்பாளுக்கும் ஈசனுக்கும் எண்ணெய் காப்பும் அபிஷேகமும் செய்த எண்ணெய் கிடைக்கிறது அதை வாங்கி வைத்துக் கொண்டு நாம் உபயோகித்தால் வாதநோய் குணமாகிறது.

இந்தக் கோவிலின் ஸ்தல விருட்சம் சிறியாநங்கை பெரியாநங்கை மற்றும் விபூதி பச்சிலை ஆகும் இது ஒரு அரிய வகை மூலிகை ஆகும்.அதோடு இது பல பல வியாதிகளை குணமாக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகை செடியாகும்.

எல்லா கோவிலிலேயும்  சந்திரன் நின்ற நிலையில் இருப்பார் இந்த கோவிலில் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பார் அதுவும் யோகத்தில் அமர்ந்து இருப்பார் எனவே புனர்பூசம் பூசம் ஆயில்யம் ஆகிய நட்சத்திர காரர்கள் இங்கே வந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

நாளை சிவயோகிநாதர் கோவில் பற்றி சொல்கிறேன்.

"தன்னைக் காயப்படுத்தியவரை விட்டு மௌனமாக விலகிச் செல்பவர்களே உண்மையான பக்குவநிலையை அடைந்தவர் ஆகிறார்"

"கிடைக்கும்போதே பயன்படுத்து  இருக்கும்போதே அனுபவி....

நினைத்தவுடன் செய்துமுடி..தள்ளிப்போடாதே...

உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு உன்னை இழந்துவிடாதே.....

ஏனென்றால் வாழ்க்கை  ஒரே ஒரு முறை தான்...."

அன்புடன்

கமலா.



No comments:

Post a Comment