வைட்டமின் டி பற்றாகுறையின் விளைவுகள், தீர்வுகள்...
ஏறத்தாழ 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின்-டி தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சியிலும் இந்த வைட்டமின் மிக முக்கியப் பங்காற்றுகிறது. சராசரியாக உடலில் வைட்டமின்-டி 30 நானோகிராம் அளவுக்கு இருக்க வேண்டும். 30 நானோகிராமுக்குக் குறைவாக இருந்தால், போதிய அளவு வைட்டமின்-டி இல்லை என்று பொருள். 20 முதல் 29 நானோகிராம் வரை இருப்பவர்களுக்கு சிகிச்சையோ, மருந்துகளோ தேவையில்லை. வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே `வைட்டமின்-டி குறைபாடு' என்கிறோம். இத்தகைய சூழலில்தான் சிகிச்சை தேவைப்படும்.
ஒரு நாளைய வைட்டமின் டி தேவை : (இன்டர்நேஷனல் யூனிட்களில் - இ.யூ)
• பிறந்த குழந்தைகளுக்கு 400 இ.யூ
• வளரும் குழந்தைகளுக்கு 800 இ.யூ
• இளம் வயதினருக்கு 1000 இ.யூ
• முதியவர்கள், பருமனாக இருப்பவர்கள், மற்றும் அடர் தோல் நிறம் கொண்டவர்களுக்கு 2000 இ.யூ
√ சூரிய ஒளிதான் வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப் பெரிய ஆதாரம்.
√ வைட்டமின் டி மட்டுமே தோலில் இருந்து உற்பத்தியாகும் ஒரே வைட்டமின். மற்ற வைட்டமின்கள் எல்லாம் உணவின் மூலமே நமக்கு கிடைக்கின்றன.
* தோலில் இருந்து பெறப்பட்ட வைட்டமின் டி, ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மூளை, நரம்பு, தசை என உடலில் ஒவ்வொரு திசுவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
√கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும் போது கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை குறைந்து எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இதனால் புற்றுநோய், ஆஸ்டியோபெராசிஸ் போன்ற பிரச்னை வருவதற்கு காரணமாகிவிடுகிறது.
வைட்டமின் டி நன்மைகள்...
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும். தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது.
வைட்டமின் டி குறைபாடு ஏற்படக் காரணங்கள்
உடலில் வைட்டமின்-டி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உடலில் சூரிய ஒளிபடாமலே இருப்பதுதான் மிக முக்கியமான காரணம்.
* அதிகம் சூரிய ஒளி படாமல் இருப்பது. அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில், எப்போதும் மூடிய கதவுகள், ஸ்கிரீன் போட்ட ஜன்னல்கள் என்று நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பது.
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்யும் சூழ்நிலை.
* ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலிப்பு நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளால், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாவும் வரலாம்.
குறைபாட்டால் வரும் நோய்கள்...
வைட்டமின் டி குறைபாட்டை எளிய இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். வைட்டமின் டி குறைபாடு என்பது தசை பிடிப்பு அல்லது வலி, நரம்பு மண்டலத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது.
√ உங்களுக்கு நீண்ட நாட்களாக காரணமே தெரியாமல் உடலில் வலி இருந்தால் அதற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம்.
* குழந்தைகளிடம் வைட்டமின் டி குறைந்தால், ரிக்கட்ஸ் (என்புருக்கி நோய்) என்னும் நோய் வரும்.
* பெரியவர்களிடம் வைட்டமின் டி குறைந்தால், உடல்வலி, மூட்டுவலி, எலும்பு வலி, தண்டுவட வலி, குதிகால் வலி, சிறுமூட்டுகள் பாதிப்பு, உடல் சோர்வு எலும்புத் தேய்வு நோய் (Osteo Arthritis) போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
* இவைதவிர, உடல்பருமன், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தை உண்டாக்கும்.
* சரியான நேரத்தில் வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்யாவிட்டால் சர்க்கரைநோய், எலும்பு அழற்சி, புற்றுநோய், இதயநோய், எலும்புப் புரை, தசை வலுவிழப்பு, தசைவலி, எலும்பு சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுப்பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள், முடக்குவாதம், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம்.
வைட்டமின் டி பற்றாக்குறை தவிர்க்கும் வழிகள்...
X துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடுவது, முக்காடு போடுவது, சன் ஸ்கிரீன் அடர்த்தியாகப் போட்டுக் கொள்வது, எல்லாநேரமும் கதவைச் சார்த்திக்கொண்டு ஏ.சி அறையில் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
√ ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர், மருத்துவரை அணுகி, எத்தனை நாட்களுக்கு கால்சியம், வைட்டமின் டி சத்து மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று ஆலோசனை கேட்டு, எடுத்துக் கொள்ளலாம்.
√ தினமும் இளம் வெயில் உடலில் படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
வைட்டமின் டி பற்றாக்குறைக்கு சிகிச்சை...
சூரிய ஒளி நம் மீது படுமாறு சில நிமிடங்கள் இருக்கலாம் அல்லது நடக்கலாம். நம் தோல் அதை வைத்து வைட்டமினை டி யை தயாரித்துக் கொள்ளும்.
* வைட்டமின்-டி சத்தை சூரிய ஒளியின் மூலம் பெறமுடியும். காலை 10.30 முதல் 12 மணி வரையிலான வெயிலில் வைட்டமின்-டி அதிகமாகக் கிடைக்கும். அதிகக் குறைபாடு இருப்பவர்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் முழுமையாகப்படும் படி நிற்க வேண்டும்.
* சன்ஸ்கிரீன் லோஷன், க்ரீம் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் தேவையான அளவு சூரிய ஒளியை உடல் கிரகித்துக்கொள்ளாது. எனவே, வைட்டமின்-டி குறைபாடு இருப்பவர்கள், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* பால் பொருட்கள், சிக்கன், மீன், முட்டை, மீன் எண்ணெய், காளான், ஆரஞ்சுப் பழச்சாறு, சோயா பால், மாட்டின் கல்லீரல் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவு மூலமாக மிகக்குறைவான அளவே வைட்டமின்-டி கிடைக்கும். அதனால் தவிர்க்காமல் தினசரி உணவில் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
* சிலர் பால்கனியில் நின்றுகொண்டு வெயிலில் காய்வார்கள். இது, போதுமான சத்தை உடலுக்குத் தராது. முடிந்தவரை திறந்தவெளியில் நிற்பது நல்லது.
வைட்டமின் டி மாத்திரை...
வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு அதைச் சரிசெய்ய, இப்போது மாத்திரைகள், ஊசிகள் ஏராளமாக வந்துவிட்டன. வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். இரத்தப் பரிசோதனை செய்து, வைட்டமின் டி அளவைப் பரிசோதித்த பின்னரே, சிகிச்சை எடுக்க வேண்டும்.
பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே மாத்திரையின் அளவு பரிந்துரைக்கப்படும். தொடர் சிகிச்சையின் மூலம் வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்து விட்டாலும் அதன் அளவைத் சீராக வைத்துக் கொள்ளத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையின் அளவு நபருக்கு நபர் வேறுபடும்.
ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி க்கும் இடையே வேறுபாடு உள்ளது.
√ வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின், மாத்திரையாக எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். இல்லையென்றால் ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் டில் இப்பிரச்சனை இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைத்தவுடன் உடல் தானாக வைட்டமினை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும்.
√ வயது ஆக ஆகத் தோலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுவதால், சூரிய ஒளியை உள்வாங்கி வைட்டமின் டியை உற்பத்தி செய்யும் சக்தி தோலுக்குக் குறைந்துவிடும். எனவே, வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
√ மாத்திரை ஊசி மூலமாக எடுப்பது தற்காலிகமான தீர்வு தான். நிரந்தரமான தீர்வு, இயற்கையான முறையில் வைட்டமின் டி யைப் பெறுவதுதான்.
√ வைட்டமின் டி குறைபாட்டை பொறுத்தவரை, மற்றவர்களைவிட முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உலகிலேயே ஒரு ரூபாய் கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான். தண்ணீர், காற்றுகூட விற்பனைக்கு வந்துவிட்ட இந்தக் காலத்திலும், செலவில்லாமல் கிடைக்கும். இது மறுக்க முடியாத உண்மை. `உடலில் வெயில்பட்டால் போதும், நம் உடல் வைட்டமின் டி யை உருவாக்க ஆரம்பித்துவிடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று நாள்கள், 20 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாகப்படும் படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது.
#Général
No comments:
Post a Comment