தீபாவளி நினைவுகள்
நான் சேலத்தில் கல்லூரியில் பிகாம் படித்து கொண்டிருந்த நேரம். சேலத்தில் மேட்டுத்தெருவில் இருந்து குடிபெயர்ந்து நாராயண நகரில் குடியிருந்தோம்.
எங்கள் நண்பர் குழாம் சற்று பெரியது. தினகரன், சுந்தர், செந்தில், சம்பத், சுகு, குணா, பாபு, மணி என்று நிறைய நண்பர்கள். எல்லோரும் நாராயணநகர் வாசிகள். எப்போதும் ஒன்றாகவே இருப்போம். ஒன்றாகவே, எல்லா இடங்களுக்கும் போய் வருவோம்.
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், "பாலைவனச்சோலை" படத்தில் வருவது போல், பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த வசந்தவிஹார் ஹோட்டல் எதிரே, காம்பவண்டு சுவரில் தான் எங்களின் ஜாகை. நண்பர்கள் நேராக அங்கு வந்து விடுவார்கள். அரசியல் முதல் சினிமா வரை எல்லா விஷயங்களையும் அலசுவது வாடிக்கை.
தீபாவளி வந்தால் குதூகலம் தான். வழக்கமாக செட்டாக சென்று, முதல் அக்ரஹாரம் ஷான்டெக்ஸ் ஷோரூமில் துணிகள் வாங்குவது, வாடிக்கை. #லேட்டஸ்ட் பேஷன் மற்றும் டிசைன்ஸ் அலசி ஆராய்ந்து எடுப்பது வழக்கம்.
அது 1978 வருடம். வழக்கம்போல் அந்த வருடம் வந்த தீபாவளிக்கு துணி எடுக்கவேண்டும். அப்போது பெல்பாட்டம் தான் பேஷன். 38-40-42 வரை பாட்டம் வைத்து, ரவுசு விட்டநேரம். பாபி காலர் சர்ட். ஷான்டெக்ஸில் நண்பர்கள் அனைவருக்கும் பேண்ட், சர்ட் எடுத்தாகி விட்டது. பெல்பாட்டம் தைக்க வேண்டும். எப்பவும் செர்ரி ரோட்டில் இருக்கும் விஜயன் டைலர்ஸ் தான் டெய்லர். அவர் ரொம்ப பிஸியாக இருந்ததால், இந்த முறை டெய்லரை மாற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பொன்னாம்மாபேட்டை கேட்டில் இருந்த பெல்ஸ் புகழ் "லெமோ டைலர்ஸ்" எங்கள் சாய்ஸ். லெமோவிடம் ஒரு வாரம் முன்பாகவே கொடுத்தாகி விட்டது. லொமோ இளைஞன். சுறுசுறுப்பு.
"மச்சான், 38 பாட்டம் வைக்கனும். ஹை-ஹிப்ஸ். பாட்டத்துல மறக்காம ஜிப் வைக்கனும். பாபி காலர் சர்ட். நம்ம செட்டு, தீபாவளி அன்னிக்கு, நகர்ல சும்மா, பட்டய கெளப்பனும் மச்சான்" சரி.
துணிகளுக்கு அளவுகள் கொடுத்து விட்டு, நோட்டில் அளவுகள் சரியாக குறித்து இருக்கிறதா என்று பார்த்து, கன்பார்ம் பண்ணிவிட்டு வந்தோம். (பெல்பாட்டம்(38,40) அந்த பாபிகாலர்)
எல்லோர் மனசிலும் கலர் கலராக கனவுகள் வர, பாரதிராஜா ஹீரோ மாதிரி, கெத்தாக நகரை வலம் வந்தோம்.
"மச்சான் தீபாவளிக்கு நம்ம பாரதிராஜா படம் "சிகப்பு ரோஜாக்கள்" பேலஸ் தியேட்டரில் ரிலீஸ் ஆகுதாம். நம்ம நாகேஷிடம் சொல்லி, பத்து டிக்கெட்டுகள் ரிசர்வ் பண்ணிடலாம்"
நாகேஷ்க்கு எல்லா தியேட்டரிலும் செல்வாக்கு அதிகம். செய்து விடுவான்.
"மச்சான், நம்ம லெமோ டைலர்ஸ் நல்லா தைப்பானா? ஆளா பாத்தா வயசுபையன் மாதிரி இருக்கான்?" "டேய்.. ஆளப்பாத்து எடை போடதடா. அன்னிக்கு கடையில நிக்க இடம் இல்ல. பாத்தோமுல்ல"
இப்படி தினமும் எங்கள் அரட்டையும் ஆதங்கமும் தொடர்ந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு, லெமோவிடம் சென்று ஞாபகம் படுத்திவிட்டு வந்தோம்.
"மச்சான்! ஒன்னும் கவலை படாதீங்க. உங்களது தான் போயிட்டு இருக்கு. தீபாவளி முதல்நாளே வாங்கிக்கலாம்"
தினமும் யாராவது ஒருத்தர் லெமோ கடைக்கு சென்று சொல்லிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதோ. அந்த நாளும் வந்து விட்டது. நாளை தீபாவளி.
"மச்சான் சிவப்பு ரோஜாக்கள் டிக்கட் ரெடி. நாளைக்கு நூன் ஷோ போயிடலாம்."
"சரி. ஸ்வீட்ஸ் எல்லாம், அவங்கவிங்க வீட்டிலிருந்து கொண்டு வந்துடனும்."
"சரி. லெமோக்கு சாயங்காலம் போகனும். ஸ்டிச்சிங் சார்ஜஸ் மறக்காம கொண்டு வந்துருங்கடா" - உற்சாகம்.
6 மணிக்கு லெமோவிற்கு போனோம்.கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது.
"மச்சான் காஜா எடுக்கனும். துணி நிறைய இருக்கு. 9 மணிக்கு வாங்கிக்கலாம்" சரி. அப்படியே கடைவீதி ஒரு சுற்றிவிட்டு, வீட்டிற்கு போய் டின்னர் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்
9மணிக்கு லெமோ கடைக்கு ஆஜர்.
"பாதி தான் முடிஞ்சிருக்கு. ஒரு மணி நேரம் வேல இருக்கு. வாங்கிக்கலாம்"
சரி. என்ன பண்ணலாம்? பக்கத்தில் உள்ள ரயில்வே லைனில் வரிசையாக உட்கார்ந்தோம். அரட்டை ஆரம்பம்.
"மச்சான் அடுத்த பாலசந்தர் படம் என்ன? தப்பு தாளங்கள்-னு ரஜினி தான் ஹீரோ." "பாலசந்தர் படம்-னால ஏதாவது சர்ச்சை தான்" "ஆமாடா. சமூக பிரச்சனையை போல்டா சொன்னா, உங்களுக்கு புடிக்காதே. பார்முலா படம் பார்த்து பார்த்து பழகிட்டீங்க. பாலசந்தர் படத்தை ரசிக்க, ஒரு கிளாஸ் வேணுண்டா".
சரி. நம்ம சண்டைய அப்புறம் போடலாம். டிரஸ்ஸ வாங்கற வழிய பாருங்கடா.
மணி 11. "மச்சான் கொஞ்சம் டைம் ஆகும். பசங்க இப்பதான் சாப்பிட்டு வந்தாங்க. 12 மணிக்கு வாங்கிக்கலாம்". 12 மணியா? சரி. இது சரி வராது. கண்ணனும், தினகரனும் மட்டும் இங்க இருந்து வாங்கிட்டு வரட்டும். மத்தவங்க வீட்டுக்கு போகலாம். நேரமாகுது.
எங்களை ரயில்வே லைனில் உட்கார வைத்து விட்டு, மற்றவர்கள் போய் விட்டார்கள். இங்கிருந்து லெமோ கடை தெரிந்தது. கடையில் வேலை மும்முரமாக இருந்தது. "மச்சான்! ஏண்டா இவன் இவ்வளவு லேட் பண்றான்?" "வேலை அதிகம். கொடுத்துடுவாண்டா"
கூட்ஸ் ரயில் ஒன்று உற்சாகமாக அதிக சப்தத்துடன், எங்களை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு, வேகமாக கடந்து போனது.
அதற்கு தெரியாது நாங்கள் எதற்கு இங்கு உட்கார்ந்து இருக்கிறோம் என்று.
நானும், தினகரனும் பல கதைகள் பேசினோம். மணி 2-ந்தை தாண்டியது.
கடைக்கு போனோம். "மச்சான்! கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. 4 மணிக்கு எல்லாத்தையும் வாங்கிக்கலாம்."
4 மணிக்கா? கோபம் வந்து விட்டது.
இது கோபப்பட வேண்டிய நேரம் அல்ல.
டிரஸ் வாங்க வேண்டும். சரி.
"நாங்க ரயில்வேலைனில் உட்காந்திருக்கோம். முடிஞ்சதும் கூப்பிடு. வாங்கிட்டு போயிடறோம். சரி.
திரும்பவும் ரயில்வே லைன். நேரம் போய் கொண்டு இருந்தது. 4 மணி. அதோ திருப்பாபுலியூர் பாஸஞ்சர் வந்து விட்டது.
நானும் தினகரனும், கடந்து போகும் கம்பார்ட்மெண்ட்களை வேகமாக எண்ணினோம். பத்தோ! பதினொன்றோ!
சரி. டிரஸ் வாங்க வேண்டும். போகலாம்.
லெமோ கடைக்கு போனோம்.
"மச்சான், நீங்க கொடுத்த டிரஸ் கலர்ஸ் கொஞ்சம் சொல்றீங்களா"
"கலர்ஸா? ஏன் யாராவது மாத்தி வாங்கிட்டு போயிட்டாங்களா?"
"இல்ல! கொஞ்சம் பாத்து சொல்றீங்களா?
ரேக்கை காண்பித்தான்.
"தைச்சாச்சா இல்லையா?" "தைச்சுட்டேன்னு நினைச்சேன். குழப்பமாயிடுச்சு. அதான்"
"எட்டு பேண்ட். எட்டு சர்ட். ஷான்டெக்ஸ் பேக்." என்னது? ஷான்டெக்ஸா? இரு பத்து நிமிஷத்துல வரேன். எங்கோ சைக்கிள எடுத்து கொண்டு கிளம்பினான். சரி. இஸ்திரி போட கொடுத்திருப்பான். வாங்க போயிருக்கிறான் என்று காத்திருந்தோம். போன வேகத்தில் திரும்பி வந்தான். அப்பாடா! வந்து விட்டான்!
"அப்பாடா கிடைச்சுருச்சு. அன்னிக்கு வெட்டி கொண்டு வந்து விடலாம்னு வீட்டிற்கு, கொண்டு போனேன். அங்கயே வச்சுட்டு மறந்து போயிட்டேன். இங்க இரண்டு நாளா தேடிக்கிட்டு இருந்தேன். இதோ. இப்பவே வெட்டி, சாயங்காலம் எல்லாத்தையும் கொடுத்துடறேன். தப்பு நடந்து போச்சு. கோவிச்சுக்காதீங்க!"
எங்களுக்கு தலை சுற்றியது.
"மச்சான். காணலேண்ணா அப்பவே சொல்லி இருக்கலாமே. தேடி கண்டு பிடிச்சு கொடுத்து இருப்போம்ல. இப்ப அவனுக வேற வந்துருவாங்க. இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?"
பயந்து போய், காலில் விழுந்து விட்டான்.
"சாயங்காலம் கொடுத்துடறேன் மச்சான்"
சரி. அங்கிருந்து கிளம்பினோம். நண்பர்கள் வீட்டுக்கு போய் விஷயத்தை பக்குவமாக சொல்லிவிட்டு, எப்பவும் சந்திக்கும் இடத்திற்கு வரச்சொல்லி விட்டு வந்து விட்டோம்.
தீபாவளி காலை 6மணி. ஒவ்வொருவராக நண்பர்கள் வந்தார்கள். எல்லோரும் தீபாவளி டிரஸ்ஸில் தான் வந்ந்தார்கள். போனவருடம் தைத்த தீபாவளி டிரஸ். ஆச்சரியம். யாரும் டைலர் மேல் கோபப்படவே இல்லை.🌹
"மச்சான். இந்த தீபாவளிக்கு நம்ம ரயில்வே லைன்-ல அரட்டை கச்சேரி அமர்களமாக இருந்தது. அந்த லெமோ டைலருக்கு தான் நன்றி சொல்லனும்"
அன்று மாலை லெமோ டைலரிடம் துணி வாங்க நாங்கள் யாரும் போகவில்லை.
எங்களுக்கு தெரியும். தீபாவளிக்கு டைலர்கள் ஓய்வில்லாமல் வேலை செய்து இருக்கிறார்கள். அவர்களும் தீபாவளியை தங்கள் குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் அல்லவா.
அவர்களும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடட்டும்.தேவையான ஓய்வு எடுக்கட்டும். அவசரம் வேண்டாம்.
நாம் அடுத்த வாரம் வாங்கி கொள்ளலாம். நாம்தான் தீபாவளி ஒரு வாரம் கொண்டாடுவோமே!
அடுத்தவாரம் எல்லோரும் சேர்ந்து ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி கொண்டு, லெமோவை பார்த்து கொடுத்தோம்.
"மச்சான் தைச்சுட்டியா? இல்லை, இன்னிக்கு நைட்டு ரயில்வே லைனா?"
லெமோ சிரித்துக்கொண்டே சொன்னான். "மச்சான் இன்னிக்குதான் உங்க எல்லாருக்கும் நிஜமான தீபாவளி"
1978 தீபாவளி இரவு முழுவதும், பொன்னம்மா பேட்டை ரயில்வே லைனில் இருந்ததை, இப்பவும், நண்பர்கள் எல்லோரும் சிலாகித்து சொல்வார்கள்.
படித்ததற்கு நன்றி
நட்புடன் கண்ணன்
No comments:
Post a Comment