தமிழ்செல்வன்
○# சிறுகதை
அவளும், மாமியாரும், ஃபேஸ்புக்கில் பார்த்திராத நண்பியும்.. .....
காலை ஆறுமணிக்குக் கதவைத் திறந்து, பால் பேக்கட்டை சும்மா கிழி கிழின்னு கழிச்சு ஸ்டவ்வைப் பற்ற வைத்து பாத்திரத்தில் பாலுடன் கலப்படம் பண்ணி..... கணவனுக்கும் பையனுக்கும் சாப்பாட்டு பாக்ஸ்களில் அடைத்து அனுப்பிக் கதவை மூடும் வரை அவளுக்கு நிதானமாக மூச்சை உள் வாங்கி வெளி விட முடியவில்லை ....இனி அவள்இஷ்டம். நிதானமாக இருக்கலாம்.. .உபதேவதை வீட்டையும் பாத்திரத்தையும் சுத்தம் பண்ணுவாள். துணியை வாஷிங் மெஷினில் போட்டு, எடுத்துக் காயப் போட்டு மடித்து வைப்பதே மீதமுள்ள பெரிய வேலை. மீதி எல்லாம் சின்ன சின்ன வேலைகள்தாம்.
பூரியை அனுபவித்து சாப்பிட்டுவிட்டு கையில் குமுதத்தை எடுக்கும்போது உள்ளறையிலிருந்து மாமியார் மெல்லிதாகக் கூப்பிட்டது காதில் விழுந்தது....
ஒரு நிமிஷம் நம்மை உக்கார விட மாட்டேங்களேன்னு உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டு, "என்ன" என கடுகடுத்தாள்.
" காலு கையெல்லாம் வலிக்குது, காய்ச்சல் மாதிரி இருக்குது. ...கொஞ்சம் பாரு"
டெம்பரேச்சரை பார்த்து 101தானேன்னு ஒரு மாத்திரையை முழுங்கச் சொல்லிட்டு, " ராத்ரி அவர் டாக்டரிடம் கூட்டிட்டுப் போவாரு.... அதுவரைக்கும் இந்த மாத்திரை போதும்... மத்யானத்துக்குக் கஞ்சி வச்சுத் தரேன்.. ..நல்லாத் தூங்குங்க"
அறைக்கு வெளியே வந்து கணவனுக்குக் கைப்பேசியில்,
" சாயந்திரம் சீக்கிரமா வாங்க... . உங்கம்மாக்கு 101டிகிரி டெம்பரேச்சர்.... டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போங்க.. .. இப்போதைக்கு மாத்திரை கொடுத்துட்டேன்.... மதியம் சூடா கஞ்சும் கொடுத்திடறேன்" அவன் வேறு ஏதும் பேசமுன்னால் கைப்பேசியின் சிவப்பு அமுக்கப்பட்டது.
குமுதத்தை முடித்துவிட்டு, ஃபேஸ் புக்கில் தனக்கு வந்த நோடிஃபிகேஷன்ஸை ஒவ்வொன்றாக படித்து சிலவற்றுக்குப் பதிலும் போட்டாள். நிறைய லைக்ஸ் வாரி வழங்கினாள்.....பாதி படித்தும் படிக்காமலும்... .ஒரு பார்த்திராத பெண்மணி ... இவளை மாதிரியே செல்லப்பெயரில் ப்ரொஃபைல்ல சாமிப் படம் போட்டவர் ( தனது 20000க்கு மேல் உறுப்பினர்கள் பெண்களாக இருக்கும் குழுவில்) , தனக்கு உடம்பு சரியில்லை.. .. காய்ச்சல் வேறு.. . கூட்டிட்டுப் போக யாருமில்லை.... ராத்ரி மகன் வந்து கூட்டிட்டுப் போனால்தான் உண்டு..... என புலம்பியிருக்க.....
" நாங்க இருக்கோம் அம்மா.... உதவி வேணும்னா சொல்லுங்க " என முப்பது நாற்பது பெண்டிர் அன்புடன் கேட்டனர்... நம்ம கதாநாயகியும் அன்புடன் விசாரித்து உதவி பண்ணுகிறேன்... மெசஞ்சரிலே விலாசத்தைக் கொடுங்கன்னாள்.
அட்ரஸை மெசஞ்சரில் போட்டார் அந்தப் பெண்மணி.
நம்ம கதாநாயகி தனது கைப்பேசியில் மெசஞ்சர் சத்தம் கேட்டவுடன் அவசரமாக ஒற்றினாள்......
" என்ன இது.... அந்தம்மா அவங்க விலாசத்தைக் கொடுக்காம நம்ம வீட்டு விலாசத்தைக் கொடுத்திருக்காங்க...." தலையிலடித்துக் கொண்டாள்...ஓ... நான் ஒரு கிறுக்கி.... நம்ம மாமியார்தானா..... தலை கிறுகிறு என ரீங்காரமிட கால்கள் செடியைப்போல துவள அப்படியே சோபாவில் சரிந்தாள் நம்ம கதாநாயகி.
No comments:
Post a Comment