Saturday, November 6, 2021

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோவில்

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோவில் ||

நான்கு நிலைகளில் உள்ள பெருமாளைத் தரிசிக்க ஏற்ற திருநீர்மலை பெருமாள் கோயில்

இந்த ஸ்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. 

மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.

மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன. 

அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். 

தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். 

மலைமேல் சாந்த ஸ்ரீநரஸிம்ஹர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்ரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்..

திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவிலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். 

இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரஸிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். 

இனி ஆலயத்தின் தல வரலாறு பார்ப்போம். 

 ஸ்ரீராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரஸிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். 

ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார். 

 முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர்.

ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் ஹனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். 

தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரஸிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்.

நீர்' பெருமாள் ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார்.

 பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். 

அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். 

ஸ்வாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். 

நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப் பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது.

நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு. 

ஸ்ரீராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது.  இவரது சன்னதியில், ஸ்வாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.

 ஒரே ஸ்தலத்தில் நான்கு பெருமாள்

இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. 

அவரால் நீரைக் கடந்து சென்று ஸ்வாமியை தரிசிக்க முடியவில்லை. 

ஆனாலும், அவர் காத்திருந்து ஸ்வாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். 

கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். 

நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. 

ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, ஸ்வாமியை தரிசிக்கச் சென்றார்.

தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரஸிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். 

இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். 

நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரஸிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

 குழந்தை நரஸிம்மர்: நரஸிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். 

அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். 

ஹிரண்யனை சம்ஹாரம் செய்ய நரஸிம்ஹ அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். 

இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தார்.

எனவே, ஸ்வாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். 

 இவரை "பால நரஸிம்மர்' என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. 

இவருக்கு பின்புறம் நரஸிம்ஹர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். 

இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். 

இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரஸிம்மரை தரிசிக்கலாம்.

 கோபுரம் ஸ்ரீராமருக்கு கொடிமரம் நீர்வண்ணருக்கு கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். 

ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. 

வால்மீகிக்காக ஸ்ரீராமராகவும், நீர்வண்ணப் பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். 

எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ஸ்ரீராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். 

பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம்.

 இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

 இரட்டை திருவிழா

மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. 

 குளம் ஒன்று  தீர்த்தம் நான்கு: 

கும்பகோணத்திலுள்ள மஹாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன.

 நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், 

நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

 நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை - நின்ற திருக்கோலம்.

சாந்த நரஸிம்மர் - வீற்று இருந்த திருக்கோலம்.

ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி - கிடந்த திருக்கோலம்.

உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) - நடந்த திருக்கோலம்.

தொண்டை நாட்டு திவ்ய தேஸங்களான  திருநீர்மலைக்கும், திருவல்லிக் கேணிக்கும் பல விஷயங்கள் ஒன்றாகவே உள்ளன. 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில் எப்படி ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் அருளப்பட்ட ஐந்து எம்பெருமான்கள் எழுந்தருளியிருக்கிறார்களோ அது போல் திருநீர்மலையில் ஆழ்வாரால் மங்களாஸாஸனம் செய்யப்பெற்ற நான்கு எம்பெருமான்கள் எழுந்தருளியிருக்கின்றனர். 

திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலின் முதல் ஸ்தலப் பெருமாள் ஸ்ரீதெள்ளியஸிங்கரைப் போல, திருநீர்மலை ஸ்ரீரங்கநாதர் ஸ்வாமி திருக்கோயில் என்றாலும் அத் திருக்கோயில் ஸ்தலப் பெருமாள் நீர்வண்ணப் பெருமாள் ஆவார். 

திருவல்லிக்கேணியில் எப்படி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமிக்கும் , ஸ்ரீதெள்ளியஸிங்கருக்கும் நடக்கும் ப்ரம்மோற்வம் நடைபெருகிறதோ அதுபோலவே திருநீர்மலையிலும் ஸ்ரீரங்கநாதருக்கும், ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளுக்கும் ப்ரம்மோற்சவங்கள் நடைபெருகின்றன. 

திருவல்லிக்கேணியில் எப்படி மற்ற திவ்ய தேஸங்களில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீரங்கநாதார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஇராமர், ஸ்ரீவரதர் ஆகிய எம்பெருமான்களை அங்கெல்லாம் சென்று ஸேவிக்க இயலாவிடினும் திருவல்லிக்கேணியிலேயே ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.  

அது போலவே, திருநீர்மலையில், திருநறையூரில்  நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள நம்பி பெருமாளை ஸேவிப்பதை இங்கு மூலவர் ஸ்ரீநீலமுகில்வண்ணனையும், உற்சவர் ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளையும் நின்ற திருக்கோலத்திலும், திருவாலியிலே வீற்றிருந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅழகியஸிங்கர் பெருமாளை இங்கு ஸ்ரீசாந்த நரசிம்மப் பெருமாளாக வீற்றிருந்த திருக்கோலத்திலும், திருக்குடந்தையில் சயன திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளை இங்கே ஸ்ரீரங்கநாதராகக்  கிடந்த ( சயன ) திருக்கோலத்திலும் , உலகளந்த திருக்கோலத்திலே திருக்கோவலூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ.திருவிக்கிரமப் பெருமாளை, இங்கு ஸ்ரீ.திருவிக்கிரமப் பெருமாளாக நடந்த திருக்கோலத்திலும் ஸேவிக்கலாம். 

மேற்சொன்ன திவ்ய தேஸங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களை,  அங்கெல்லாம் சென்று ஸேவிக்க இயலாவிடினும் திருநீர்மலையிலேயே ஸேவிக்கலாம்.   

திருநீர்மலை திவ்யதேஸம் பற்றி ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் 19 பாசுரங்களும், ஸ்ரீபூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியின் 46 ஆம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளனர்.  

இப்படி திருநீர்மலையில் ஸேவிக்கும் பாக்கியத்தை ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் இத் திவ்ய தேஸத்தைப் பற்றி உரைத்துள்ள பெரிய திருமொழியின் இரண்டாம் பத்தின் நான்காம் திருமொழியின் முதல் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக மேற்படி திவ்ய தேஸங்களுக்கு செல்ல இயலாதவர்கள் சற்றும் கவலைப்படாமல் திருநீர்மலைக்கு சென்று இங்குள்ள எம்பெருமான்களை ஸேவித்தாலே  மேற்குறிப்பிட்டுள்ள திவ்ய தேஸ எம்பெருமான்களை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும்.  

ஸ்ரீரங்கத்திற்கு சென்று ஸ்ரீ.ரங்கநாதரை ஸேவிக்க இயலாமல் இருப்பவர்கள் திருநீர்மலையின் ப்ரதான எம்பெருமானாக காட்சி கொடுக்கும் ஸ்ரீரங்கநாதரை ஸேவிக்கலாம்.  

இது பற்றி ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் அவர் அருளிச் செய்த திருநெடுந்தாண்டகத்தின் 18 ஆம் பாசுரத்தில் , ஒரு தலைவனைப் பிரிந்த தலைவியின் தாய் கூறும் வண்ணம் அந்த வரிகள் :- 

 "எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும், நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் “ என்று ஸ்ரீரங்கம் எப்படி போவது என்று அந்த தாய்க்குத் தெரியாத நிலை இருந்தாலும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ.ரங்கநாதனை நீர்மலைக்கே சென்று ஸேவிக்கப் போவதாக அருளியுள்ளார்,  

திருநீர்மலையின் ஒரு மூலவர் ஸ்ரீநீலமுகில் வண்ணப் பெருமாளையும், உற்சவர் ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளையும், ஸ்ரீஅணிமாமலர் மங்கை தாயாரையும், திருநீர்மலையில் மலையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் ஸ்ரீரங்கநாதரின் உற்சவ மூர்த்தி ஸ்ரீரங்கநாதராகிய ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாளையும் திருநீர்மலையில் மலைக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயிலில் தரிசனம் செய்து புண்ணியம் பெறலாம்.

ஸ்ரீஅணிமாமலர் மங்கை தாயாரைப் பற்றியும் ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். 

திருநீர்மலையின் மலைமேல் சென்று மூலவர் ஸ்ரீரங்கநாதனையும், மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீரங்கநாயகித் தாயாரையும், ஸ்ரீசாந்த நரசிம்மரையும், அவருக்கு பின் புறத்தில் நரசிம்மராக அவதரித்த நரசிம்மர் திருக்கோலத்திலும்,  ஸ்ரீதிருவிக்ரமப் பெருமாளையும்,   திருநீர்மலையின் கீழ் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதனாகிய உற்சவர் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள், வருடத்தில் மூன்று முறை மட்டும் திருநீர்மலையின் மலைக்குச் சென்று அங்கு ஸ்ரீரங்கநாயகித் தாயாருடன் ஸேவை ஸாதிக்கின்றாராம். 

அந்த நாள்கள் சித்திரை ப்ரம்மோற்சவத்தின் த்வாஜரோஹனத்தன்றும், த்வஜாஅவரோஹனத்தன்றும் மற்றும் பங்குனி மாதம் உத்தரம் நக்ஷத்திரத்தன்று திருக்கல்யாண உற்சவத்தன்றும் ஆக இந்த மூன்று நாள்கள் தாயாருடன் ஸேவை ஸாதித்து பத்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். 

மேலும் மேற் சொன்ன நான்கு எம்பெருமான்களைத் தவிர ஸ்ரீ,.ராமரும் இங்கு எழுந்தருளியுள்ளார். இங்கு ஸ்ரீ.ராமர் அவதாரம் செய்துள்ளது ஸ்ரீ.வால்மீகி முனிவருக்கு காட்சி கொடுப்பதற்காகவாம்.

ஸ்ரீவால்மீகி முனிவர் இங்கு ஸ்ரீராமரை ஸேவித்த போது, தனக்கு காட்சியளித்த ஸ்ரீராமரை தொடர்ந்து அங்கேயே எழுந்தருளியிருந்து , பிற்காலத்தில் வரும் பல பத்தர்களுக்கும் தொடர்ந்து காட்சி கொடுத்து, அருளாசி அருள ப்ரார்த்திதனால், அவர் ப்ரார்த்தனைக்கு இணங்க, ஸ்ரீ.ராமர் அவர் குடும்பத்தோடு இங்கே எழுந்தருளியிருக்கிறாராம் ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளும் ஸ்ரீவால்மீகி முனிவருக்கு அருள் காட்சி கொடுக்கவே இங்கு எழுந்தருளி, தொடர்ந்து இத் திருக்கோயிலுக்கு வரும் பத்தர்களுக்கு அருள் கடாக்ஷம் அருளிக் கொண்டிருக்கிறார்..   

ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் பல காலம் பெருமாளை ஸேவிப்பதற்காக தங்கியிருந்த திவ்ய தேஸம் திருநீர்மலை ஆகும். 

இப்பொழுது கூட திருநீர்மலையின் மலைப்பகுதிக்கு எதிர்பகுதியில் ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் எழுந்தருளியிருந்த ஸ்தலத்தினை ஸேவிக்கலாம்.  

ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ள பெரிய திருமொழியின் இரண்டாம் பத்தின் நான்காம் திருமொழியில், திருநீர்மலை திவ்யதேஸத்தினை குறித்து  பத்து பாசுரங்களை அருளிச் செய்துள்ளார்.

 1.“அன்றாயர் குலக் கொடியோடு  அணிமாமலர் மங்கையோடு அன்பளவி * அவுணர்க்கு எந்தானும் இரக்கமிலாதவனுக்கு உறையும் இடமாவது இரும் பொழில் சூழ்  நன்றாய புணல் நறையூர் திருவாலி குடந்தை  தடம் திகழ் கோவல் நகர்  நின்றான், இருந்தான் , கிடந்தான், நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்மலையே  “ 

2 “ காண்டாவனம் என்பதோர் காடு  அமரர்க்கரை அன்னது கண்டவன் நிற்க முனே மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும்  அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான்  அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம்  மாமலையாவது நீர்மலையே ”  

3 “ அலமன்னு மடல் சுரி சங்கம் எடுத்து  அடல் ஆழியினால் அணியார் உருவின் புல மன்னு வடம் புனை கொங்கையினாள்  பொறை தீர முனாள் அடுவாளமரில்  பல மன்னர் படச் சுடர் ஆழியினை பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர் நில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம்  மாமலையாவது நீர்மலையே:”  

4 “தாங்காததொர் ஆளரியாய்  அவுணன் தனை வீடமுனிந்து அவனாலமரும் பூங்கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்து அதுவன்றியும் வென்றி கொள் வாளமரில் பாங்காக முன் ஐவரொடு அன்பவளவிப் 

 பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் பட  நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மாமலையாவது நீர்மலையே”

  5. “ மாலும் கடலார மலைக்குவடிட்டு அணை கட்டி  வரம்புருவ மதி சேர் கோல மதிளாய இலங்கை கெடப் படை தொட்டு ஒரு கால் அமரில் அதிர காலம் இதுவென்று அயன் வாளியினால்  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்  நீலமுகில் வண்ணர் எமக்கு இறைவர்கு இடம்  மாமலையாவது நீர்மலையே” 

 6.” பாரார் உலகும் பனிமால் வரையும்  கடலும் சுடரும் இவை உண்டும்  எனக்கு ஆராதென நின்றவன் எம்பெருமான்  அலை நீர் உலகுக்கு அரசாகிய  அப்  பேரானை முனிந்த முனிக்கரையன்  பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்  நீரார் பேரான் நெடுமால் அவனுக்கு இடம்  மாமலையாவது நீர்மலையே ”  

7.” புகரார் உருவாகி முனிந்தவனைப்  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து அதுவன்றியும் வென்றிகொள் வாள் அவுணன் பகராதவன் ஆயிர நாமம்  அடிப் பணியாதவனைப் பணியாமல் அமரில்  நிகராயவன் நெஞ்சிடந்தான் அவனுக்கு இடம் மாமலையாவது நீர்மலையே”  

8. “ பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்  பிணந்தின் மடவார் அவர் போல்  அச்சமிலர் நாணிலரா தன்மையால்  அவர் செய்கை வெறுத்து அணிமாமலர்  தூய் நச்சி நமனார் அடையாமை  நமக்கு அருள் செய் என உள் குழைந்து ஆர்வமொடு  நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யும் அவர்க்கு இடம்  மாமலையாவது நீர்மலையே ” 

 9.” பேசும் அளவன்று இது வம்மின் நமர்  பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்  நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல் வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல்வார் மதியில் நீசரவர் சென்று அடையாதவனுக்கு இடம்  மாமலையாவது நீர்மலையே ”  

10.” நெடுமால் அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன்  அமரில் கடமா களியானை வல்லான்  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே விடுமால் வினை  வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடும் அன்றி இலங்கொலி சேர்  கொடுமா கடல் வையகம் ஆண்டு மதிக் குடை மன்னவராய் அடி கூடுவரே”

 மேலும் ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் திருநீர்மலை திவ்ய தேஸம் பற்றி அருளிச் செய்துள்ள 

பாசுரங்கள் 

இரண்டாம் பத்தின் ஏழாம் திருமொழியின் எட்டாம் பாசுரத்திலும்,  

ஆறாம் பத்தின் எட்டாம் திருமொழியின் நான்காம் பாசுரத்திலும், 

ஏழாம் பத்தின் முதல் திருமொழியின் ஏழாம் பாசுரத்திலும், 

எட்டாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் மூன்றாம் பாசுரத்திலும், 

ஒன்பதாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் எட்டாம் பாசுரத்திலும், 

பத்தாம் பத்தின் முதல் திருமொழியின் முதல் பாசுரத்திலும்  அருளிச் செய்துள்ளார். 

 மேலும் சிறிய திருமடலில் ஒரு வரியில் “ ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை “ என்று அருளிச் செய்துள்ளார். 

பெரிய திருமடலிலும் ஒரு வரியில் “ மன்னும் மாலையரையன் பொற்பாவை” என்று அருளிச் செய்துள்ளார்.  

ஸ்ரீபூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியின் 46 ஆம் பாசுரத்தில் .

 “பயின்றது அரங்கம் திருக்கோட்டி  பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் பயின்றது அணிதிகழும் சோலை அணி நீர்மலையே  மணி திகழும் வண் தடக்கை மால் “ 

ஸ்ரீநீர்வண்ணம் பெருமாளின் ப்ரம்மோற்சவம் பங்குனி மாதமும், ஸ்ரீரங்கநாதரின் ப்ரம்மோற்சவம் சித்திரை மாதமும் நடைபெரும்.  

இது தவிர பல உற்சவங்களும் திருநீர்மலையில் நடைபெருகிறது.  

திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. 

சென்னை பல்லாவரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

நடை திறக்கும் நேரம்

காலை 6 30 மணி முதல் 12:00 மணி வரை மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஜெய் ஸ்ரீராம்

சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து



No comments:

Post a Comment