# *அம்மன் பதக்கம் - சுஜாதா நீள் கதை*
*(முதல் பகுதி கீழே......கதையின் நீளம் கருதி, இதன் தொடர்ச்சி, நாளை (06-11-21) வெளிவரும்.)*
தம்பு செட்டி தெருவை ஒட்டிய சந்தில் மழை பெய்து ஓய்ந்து சின்ன குட்டைகளில் வானத் துணுக்குகள் மிதந்தன. போக்குவரத்து நெரிசலில் அந்த டாக்ஸி முன்னேறுவதற்கு சற்று மூச்சு திணறியது. அதன் டிரைவர் ஆரன் மேல் ஏறக்குறைய உட்கார்ந்திருக்க, சத்தத்தின் நாராசம் தாங்காமல் வஸந்த தான் புதிதாக வாங்கியிருந்த வீடியோ கேமராவின் குட்டி திரை மூலம் சன்னல் வழியாக பார்த்தான். “ பாஸ் ஒரு டாக்ஸி வருது.”
அருகே மேசையில் உட்கார்ந்திருந்த கணேஷ் தன் குறிப்புகளிலிருந்து நிமிராமல், ” நம்ம வீட்டுக்கு தான் வந்து நிற்கும். நின்னதும் கதவு திறந்து ஒரு பெண் இறங்குவாள். நம்ம கதவைத் தட்டுவாள். மிஸ்டர் கணேஷ் இங்கதானான்னு கேட்பாள். அவ பேரு…”
“பாப்பாவா.?”
“இல்லை, கங்கா”
“எப்படி இவ்வளவு விவரமா ஜோசியம் சொல்றீங்க?”
கணேஷ் தன் பேனாவை மூடிவைத்து, “ நீ வரதுக்கு முன்னாடி அந்தப் பெண் போன் செய்தாள்.”
வஸந்த் தன் காம்கார்டரை சோபாவில் வைத்தான். டாக்ஸி அவர்கள் அறை வாசலில் நிற்க, ஒரு காக்கி சீருடை டிரைவர் கதவை திறக்க, அந்த பெண் ஒயிலாக இறங்கி பணம் கொடுத்துவிட்டு தன் ஆ. கா. விரலால் அவர்கள் கதவு பட்டனை ஒத்தும் முன், வஸந்த் கதவைத் திறந்து,
“ வாங்க கங்கா , உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்," என்றான்.
"நீங்கதான் மிஸ்டர் கணேஷா?"
"இல்லை நான் வஸந்த்"
"அவரு?"
"பின்னால இருக்காரு. என்னைப் பார்த்தால் வக்கீலா தெரியலையா?" என்றான் ஏமாற்றத்துடன்.
உள்ளே நுழைந்த பெண்ணுக்கு வயது பத்தொன்பதுக்கு மேல் ஒரு செகண்ட் கூட இருக்காது என்று தோன்றியது. கரிய கூந்தல், கரிய கண்கள், உடலின் சாத்தியங்களை மறைத்திருந்த கரிய பளபளப்பு உடைகள், அதன் மார்புப்பகுதியில் எம்ப்ராய்டரி போட்டு வஸந்தின் இதயத் துடிப்பை கதிகலங்க சற்றே திறந்திருந்தது. பிரதான மூக்கில் குத்தி ஒரே ஒரு ஒரு சிறிய வைரம் பளிச்சிட்டது. தூக்கலான மூக்குக்கு தோதாக இருந்தது.
"மிஸ்டர் கணேஷ், உங்களை சந்தித்ததில் பாதிக் கவலை தீர்ந்து போச்சு. மீதி கவலை உங்ககிட்ட இதை, இதை......" சற்றே நடுங்கும் கைகளால் தன் பைக்குள் துழாவி ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தாள். "முதல்ல சும்மா யாரோ விளையாடறாங்கன்னு நினைச்சு கிழிச்சுப் போட்டுட்டேன். நாலாவது முறை வரவும் எனக்கு பயமாயிருச்சு.
"ராஜ் சார் கிட்ட கேட்டப்போ போலீஸ் கிட்ட போக வேண்டாம் கணேஷ் னு ஒருத்தர், ஃபேமஸ் லாயர், தம்பு செட்டி தெருவில் இருக்காரு அவர்கிட்ட காட்டுன்னாரு".
"தாராளமா காட்டுங்க" என்றான் வஸந்த்
கணேஷ்-வஸந்த்தை முறைத்து பார்த்து விட்டு அந்தக் கடிதத்தை வாங்கி கொண்டான்.
"உட்காரலாமா ?"
படித்து விட்டு நிமிர்ந்தான்.
"நீங்க யாரு சொல்லுங்க"
"என் பெயர் கங்கா. கலைத்துறையில் இருக்கேன்"
"புரியலை கலைத்துறை?"
"என்னை நீங்க டிவில பார்த்திருக்கலாம். விளம்பர படங்கள் வருவேன். தலைவலி தைலம். சோப்பு. வாட்டர் ஹீட்டர். இரண்டாவது சேனல்ல வாழ்வின் வசந்தம் ஒரு சீரியல் கூட வந்து இருக்கேன்"
"வாட்டர் ஹீட்டர் ஞாபகம் வருது. நீங்க பாத்ரூம் டவலை சுத்திகிட்டு வந்து இருக்கீங்க ஞாபகம் இருக்கிறது"
"அது ஜனனி ஒரு மதுரை பொண்ணு. நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். குடும்பப் பொண்ணா, நல்ல மருமகள், நல்ல மனைவியா, கணவனுக்கு காபி ஆத்தி கொடுக்கிற பெண்ணாகத் தான் வருவேன். இது எனக்கு பொழுதுபோக்கு. நாடகத்திலே, சினிமாவிலே நடிக்கத்தான் ஆசை. இன்ஸ்டியூட்டில் இரண்டு வருஷம் கோர்ஸ் பண்ணிட்டு நிறுத்திட்டேன். ராஜு சார் கூட கல்யாணம் ஆயிடுச்சு. நிறுத்திட்டேன்”
"உங்களைப் பார்த்தால் கல்யாணம் ஆன மாதிரியே தெரியலை. அவ்வளவு அழகா இருக்கீங்க. இப்ப ஞாபகம் வந்துச்சு குருவிக் குட்டின்னு ஒரு சொட்டு நீலத்தில் பக்கெட்லருந்து, வெள்ளை வெளேர்னு சட்டையைச் சொட்டச் சொட்ட உருவுவீங்க, நீங்கதானே?'
"இருக்கலாம். ஞாபகமில்லை. ஆனால், எக்ஸ் ஆர்னு பேனா விளம்பரத்தில கணவருக்குக் கடுதாசி எழுதற விளம்பரத்தை எல்லாரும் நினைவு வைச்சிருக்காங்க. அதெல்லாம் கிடக்கட்டுங்க. இப்ப இந்த லெட்டருக்கு என்ன செய்ய? பயமா இருக்குது. அவர் வேற ஊர்ல இல்லை."
'ஸ்மோக் பண்ணலாங்களா?
வஸந்த் அவளை உற்சாகமாகப் பார்த்து, 'தாராளமாக. நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா!"
'நான் எப்பவாவதுதான். இந்த மாதிரி டென்ஷனா இருக்கறப்ப. இன்ஸ்டிடியூட்ல ஒரு படத்தில் நடிக்கறதுக்கு கத்துக்கிட்டதுங்க!'
அவள் தன் கைப்பையிலிருந்து எம்.எஸ். என்ற சிகரெட்டை எடுத்து, தீப்பெட்டி எடுத்து, இடக்கையால் குச்சி உரசிப் பற்ற வைத்துப் புகையை விடுவித்தாள்.
'இடக்கைப் பழக்கம் உள்ளவங்க பெரும்பாலும் நல்லா பேசுவாங்க. சித்திரம், கைவேலை இதெல்லாம் நல்லா செய்வாங்க!'
'எனக்கு அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நடிப்பேன் அவ்வளவுதான்!'
'உலகத்தில் பதினைந்து சதம் இடது கைப்பழக்கம் உள்ளவங்க இல்லையா, பாஸ்!'
கணேஷ் அந்தக் காகிதத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
வஸந்த், "உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா உங்க கூட ஒரு வீடியோ எடுத்துக்கலாமா?'
'எதுக்கு?''
"இப்ப நீங்க சொட்டு நீலம் பக்கெட்டுன்னு வர்றீங்க. எதிர்காலத் தில் திடீர்னு ஏதாவது ஒரு படத்தில வந்து, அது சக்ஸஸ் ஆகி, ஜூபிளி படமாயி, பெரிய ஸ்டாராப் போயிட்டா இந்தப் படத்தைக் காட்டி கங்கா நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னு என் பேரப் பிள்ளைங்களுக்கு காட்டலாமில்லையா"
கணேஷ், 'அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. புதுசா ஒரு வீடியோ கேமரா வாங்கியிருக்கான். அதை வச்சுக்கிட்டு நோண்டிக்கிட்டு இருக்கான்".
வஸந்த் தன் வீடியோ கேமராவை இயக்கி 'சிரிங்க என்று சொல்ல, கணேஷ் அந்தக் கடிதத்தை மறுபடி படித்தான். அதில் நடுவில் இவ்வாறு எழுதியிருந்தது.
பதக்கம் வியாழன் கிடைக்காமல் போனால் மிதக்கும்உனதுடல் அன்று
'இந்த மாதிரி மூணு லெட்டர் வந்திச்சு. இது நாலாவது. மற்றதெல்லாம் எங்கோ கிழிச்சுப்போட்டுட்டேங்க முதல்ல இவரு சீரியஸா எடுத்துக்கலை. இந்த நாலாவது வந்தப்புறமாத்தான்.. கொஞ்சம் பயமாயிருச்சு.
'இவருன்னா?'
'வீட்டுக்காரரு. பேரு பத்மநாபராஜு. டப்பிங் சினி வசனம், பாடல் எழுதுவாரு. கெட்டிக்காரரு.'
"மற்ற லெட்டர்ங்கள்ல என்ன எழுதியிருந்தது?'
"இதே மாதிரிதான். ஆனால், அதிகம் மிரட்டலை. பதக்கத்தைத் திருப்பித் தராட்டா அம்பாள் சபிச்சுடுவாங்க....... இப்படி"
"ஆமா, அது என்ன பதக்கம்?' என்றான் வஸந்த்.
"அதை ஏன் கேக்கறீங்க? எனக்குக் கொஞ்சம் கோயில்கள், பழைய நகைங்கன்னா ஆசை. போன மாசம் ஒரு ஆள் வந்து ரகசியமா ஒரு அழகான பதக்கம் காட்டினாரு. மரகதக் கல் பதக்கம் வச்சு, சுற்றிவர முத்து, வைரம் எல்லாம் பதிச்சு, ட்ரெல்லிஸ் டிசைனும் பார்க்க ரொம்ப அழகான பதக்கம். ஜூவல்லர்ஸ்ட்ட காட்டி, தோஷம் பார்த்து, மதிப்பு போட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிட்டேன். அப்ப புடிச்சுது, ஏழரை நாட்டு சனிம்பாங்களே அது ஏதோ கோயில்ல திருடின பதக்கம் போல இருக்கு. இந்த மாதிரி . மொட்டைக் கடுதாசிங்க வர ஆரம்பிச்சுட்டது."
"அது இப்ப எங்க இருக்கு?"
'லாக்கர்ல, எனக்கு என்னமோ பயமா இருக்குதுங்க. திருப்பி கொடுத்து தொலைச்சுரலாம்னா யார்கிட்ட கொடுக்கிறது? இப்படி வந்த மொட்டைக் கடுதாசிக்கு எப்படி பதில் போடறது? இவரானா 'பயப்படாதே! ஒண்ணும் ஆகாது'ங்கறாரு!"
"குறிப்பா இதில நாங்க என்ன செய்யணும்?
வஸந்த், கணேஷைப் பார்க்க, கணேஷ் 'சிம்பிள்/ போலீசுக்கு கடிதத்தைக் காட்டி பாதுகாப்பு கேளுங்க, அவ்வளவுதான்!'
"அதில்தாங்க சிக்கல்! என் வீட்டுக்காரரு கூடாதுங்கறாரு. போலீஸ்காரங்க பதக்கம் எப்படி வந்திச்சுன்னு நிச்சயம் விசாரிப்பாங்க"
"திருட்டு நகையா இருந்தா நம்மையே கைது பண்ணிவாங்கங்கறாரு!"
"அப்படி ஆகாம பார்த்துக்கலாம். நாளைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வர்றோம். அட்ரஸ் கொடுத்துட்டுப் போங்க இல்லை, உங்க வீட்டுக்காரரையும் கூட்டிட்டு வாங்க. போலீஸ், அனாவசியமா உங்களுக்கு எதுவும் தொந்தரவு தரமாட்டாங்க..... எதுக்கும் நாங்களும் கூடவர்றோம், உங்க உரிமைகளை யாதுகாக்க..'
"ராத்திரில் ஏதாவது ஆயிருமோன்னு பயமா இருக்குதுங்க..."
"வேணும்னா இங்க படுத்துக்கங்க!" என்றான் வஸந்த்.
"இல்லைங்க நீங்க வீட்டுக்குப் போங்க. லெட்டர்லயே வியாழக்கிழமை வரை டயம் கொடுத்திருக்கில்லை? என்று கேட்டான் கணேஷ்.
"இன்னிக்குத்தாங்க வியாழக்கிழமை".
"வீட்டுல காவலுக்கு ஆள் இருக்குதில்ல?"
"ஒரு கூர்க்கா உண்டு. வீட்டில நான், அவரு. நாயி இவ்வளவு தான். இவரு பம்பாய் போயிருக்காரு. நாளைதான் வருவாரு. உறவுக்காரங்க ரெண்டு பேரை ராத்திரி வரச்சொல்லி இருக்கேன். நகை வாக்கர்ல இருக்குது. அதுக்கு எதும் ஆபத்து இல்லை. ஆளுக்குத்தான் ஆபத்து. அதுவும் தலையும் இல்லாம, வாலும் இல்லாம இந்தக் கடிதம்!"
அவள் தன் சட்டையின் பகுதியால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
"அழாதீங்க டீ சாப்பிடுங்க! இது ஏதும் தீவிரமா எடுத்துக்கற மாதிரி இல்ல. பாஸ்! நான் வேணா ஒரு நடை கூடப்போய் ஆசுவாசப்படுத்திட்டு வரட்டுமா?'
"அவங்க போலீசு பாதுகாப்புக் கேட்கிறாங்க. நீங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க. நான் ராஜேந்திரன்கிட்ட பேசி தகுந்த ஏற்பாடு செய்யறேன்' என்றான் கணேஷ்.
சட்டென்று மௌனமாகிவிட்டாள். முகம் சுருங்கிவிட்டது.
அந்தப் பெண் சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்றாள்.
அவள் திசையைப் பார்த்துக்கொண்டு, 'உம்.. சில பேருக்கு -நமக்கு வர்ற கேசெல்லாம் கல்யாணமான கேசா இருக்கு! பத்மனாபராஜு..நீ அதிர்ஷ்டக்காரண்டா!"
"பத்மநாபன் யாரு?"
"புருஷன்! பாஸ்! அந்த பொண்ணோட மூக்கில இருந்த வைரம், கன்னத்தில் கண்ணாடி மாதிரி ஒரு பிரதிபலிப்பு செஞ்சுதே.... கவனிச்சிங்களா? என்ன நிறம்! கடவுள் பிறக்கறதுக்கு முன்னாடி ஸ்பெஷலா பாலிஷ் போட்டு அனுப்பிச்சிருக்கார்!"
"கவனிக்கலை".
"பின்னே என்ன கவனிச்சீங்க?'
"நிறைய...."
கணேஷ் அந்த லெட்டரைப் பார்த்தான். 'இரண்டு வரி வெண்பா! இதை எழுதிய ஆளு தமிழ்ப்பண்டிதர் அல்லது தமிழாசிரியரா இருக்கணும்"
"ஒவ்வொரு விரலுக்கும் ஒரு நிறத்தில க்யூடெக்ஸ் போட்டிருந்தா கவனிச்சீங்களோ!!"
'நான் கால்விரலைப் பார்த்தேன் ... வசந்த்! சமீபத்தில் கோயில் நகைங்க திருட்டுப்போனதா செய்தி ஏதாவது வந்ததா?'
"கோயில் திருட்டு, பஞ்சாப் படுகொலை, இவை இரண்டும் தினப் படிதான் வருது!"
"அதில் எத்தனை அம்மன் கோயில்?"
"நீங்க எந்த ரூட்ல போறீங்க?'
"எந்த ரூட்டும் இல்லை. சும்மா கேட்டேன். இது போலீஸ் கேஸ்! நம்மகிட்ட தப்பா வந்திருக்கா."
'தப்போ, ரைட்டோ வந்தாச்சு. வந்தவர்களை அரவணைச்சு, ஆதரிச்சு,மார்ல பயம்போக தடவிக்கொடுத்து, ஆசுவாசப் படுத்தி, ஒரு லிம்கா கொடுத்து.........'
'ஒண்ணும் வேண்டாம்! மேலும் அவ வீடு எங்கன்னு தெரியாது. அந்தப் பெண் கோவிச்சுக்கிட்டு போய்ட்டா, கவனிச்சியோ?"
"ஆமாம், பின்னே? மெட்ராஸ்லயே ஃபேமஸ் லாயர்ட்ட வந்திருக்கா. போலீஸ்கிட்ட போன்னு அடுத்தாத்து அம்பி மாதிரி.............அட்வைஸ் பண்ணீங்க! பாஸ் எனக்கு என்னவோ அவ கண்ல ஒரு பயம் தெரிஞ்சுது!*
"பொய். நீ கண்ணையே பார்க்கலை. மத்த விஷயங்களை பார்த்துகிட்டு இருந்தே!'
"கொஞ்சம் கொஞ்சம் அசப்பில பார்த்தா குஷ்பு மாதிரியும், சில நேரம் பானுப்பிரியா மாதிரியும், சில நேரம் கௌதமி மாதிரியும்......."
"இவங்கள்லாம் யாரு.....?"
"'நாசமாப் போச்சு! எந்த உலகத்தில் இருக்கீங்க!"
'நட்வர்லால் வர்சஸ் தி ஸ்டேட் ஆஃப் பீகார்ல ஒரு கேஸ் ஏ ஐ லருந்து எடுத்துத் தந்திட்டு வீட்டுக்குப்போ, நீ!' 'கங்கா வீட்டுக்கா?'
"அவ வீட்டு அட்ரஸ் கொடுக்கலை. போன் நம்பர் கொடுக்களை எப்படிப் போவ?
'அதானே! ஏன்?'
'கோபம்.'
நல்ல ஒரு சான்ஸ், மிஸ் பண்ணிட்டேன்.
'எதுக்கு?
ஒரு அபலையை காப்பாத்தறதுக்கு.'
'காப்பாத்தறதோட நிக்கமாட்டே நீ!
'மத்ததெல்லாம் இலவச இணைப்பு, பாஸ்/'
*நீ உருப்படமாட்டே!"
வஸந்த், அந்தக் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு, 9:30-க்கு புறப்பட்டு, 'காஸினோல 'காலேஜ் கர்ள்ஸ்'னு புதுசா ஒரு ஆர்ட் பிலிம் வந்திருக்கு பார்க்கலாம் என்றான்.
'இங்கிலீஷ் படமா?"
'இல்லை. மலையாளப்படம்
கணேஷ் புன்னகையால் அதட்ட, வஸந்த் தன் கவஸாக்கியை உசுப்பி, அந்த சந்தே திடுதிடுக்க புறப்பட்டுச் சென்றதும், கணேஷ் தன் கேஸ் குறிப்பு களில் ஆழ்ந்தான். ஏதோ அவனுக்கு மனதில் உறுத்தியது. ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு உடனே உதவியிருக்க வேண்டுமோ என்று யோசித்தான். அவள் விட்டுப்போயிருந்த அந்தக் குறைக்கடிதத்தை மறுபடி மறுபடி பார்த்தான்.
பதக்கம் வியாழன் கிடைக்காமல் போனால்
மிதக்கும் உனதுடல் அன்று.
-நிச்சயம் தமிழ் தெரிந்த ஆசாமி! சிலவேளை வார்த்தைகள் கவிதை இலக்கணப்படி தற்செயலாக அமையும். ஆனால் இதில் ஏழு சீர்களும் பொருந்தியிருக்கின்றன.
மிதக்கும் உனதுடல்!
கணேஷுக்கு திடீர் என்று வியர்த்தது. அந்தப் பெண்ணை மறுபடி பார்க்கப் போகிறோமா என்ற சந்தேகம் வந்தது.
ஏன் போய்விட்டாள்? டெலிபோன் நம்பர் கேட்டேனே,
கோபமா? கோபம்தான்.
டெலிபோன் டைரக்டரியை எடுத்து கங்கா என்ற பெயரில் தேடினான்.
கங்கா புக் டிப்போ, கங்கா காவேரி டிராவல்ஸ், கங்கா டிராவல், கங்காராம்.. ஊகூம்.
கணவன் பெயர் என்ன சொன்னாள்?
பத்மனாபராஜு...........
எ.பத்மனாபராஜு என்ற பெயரில் ஒரு மைலாப்பூர் நம்பர்சிஐடி. அலனியில் இருந்தது. அதை டெலிபோனில் சுழற்றினாள். அடித்துக்கொண்டே இருந்தது.
கணேஷ், இரவு இரண்டு மணிக்குத் தன் ஆபீசு அறைக்கு அடுத்த படுக்கை அறையில் 'ஒலிம்பிக்ஸ்' பார்த்து முடித்துவிட்டுத் தூங்கப்போனான்,
===========================
அதிகாலையில் மழை பெய்தது. பச்சை வாழைப்பழம் கோலமாவு விற்பவர்கள் குரலும், ஆட்டோ ரிக்ஷா கமறல் களும், சைக்கிள் பால்மணிகளும், அவ்வப்போது மெயின் ரோடில் அலறும் பல்லவன் பஸ்களும் கலந்த குரலில் நகரம் அவனை எழுப்பியது.
கணேஷ் எழுந்து பல் தேய்த்து, முகம் கழுவி, பையன் கொண்டு வந்திருந்த காப்பியை ஒரு கையில் வாங்கிக்கொண்டு அன்றைய செய்தித்தாளைப் புரட்டினான்.
அயோத்தியும் பஞ்சாபும் காஷ்மீரும் பார்சிலோனாவும் ஆக்கிர மித்த முதல் பக்கத்தின் ஓரத்தில் சின்னதாக பாக்ஸ் மேட்டர் பகுதியில் புறநகரில் கொள்ளை, சைக்கிள் திருட்டு, விபசாரம் போன்ற சின்னச் சின்ன பாவச்செய்திகளின் இடையில்,
*நடிகை கொலை*
'விளம்பரப் படங்களில் நடிக்கும் கங்கா என்ற நடிகை நேற்று இரவு மைலாப்பூர் சி.ஐ.டி.நகர் வீட்டில் கொலை செய்யப்பட்டாள். கங்கா 'வாழ்வும் வசந்தமும்' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். மைலாப்பூர் போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.'
கணேஷ் 'மைகாட் தப்பு பண்ணிட்டேன்' என்றான்.
அப்போது. டெலிபோன் ஒலிக்க அதை எடுத்து, 'வஸந்த், அந்த கங்கா போயிட்டா!' என்றான்.
'யார் கணேசா பேசுவது?’ என்று ஒரு அதிகாரக்குரல்.
'எஸ்' சார் நான். என் ஜூனியர் வஸந்த்துன்னு..
"நான் இன்ஸ்பெக்டர் மணவாளன். மைலாப்பூர் போலீஸ் நிலையத்திலிருந்து பேசறேன் கங்காங்கற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?"
"ஆமாம்.'
'அந்த பொண்ணு கொலை செய்யப்பட்டுட்டா.'
'பேப்பர்ல பார்த்தேன்!'
"போட்டுட்டாங்களா, அதுக்குள்ள! இந்த 'தந்தி'க்காரங்க போலீஸ்காரங்களுக்கு முந்தியே வந்துர்றாங்கய்யா. கணேஷ், நீங்க ஆபீஸ்லதானே இருப்பீங்க? உங்களை நான் பத்து மணிக்கு வந்து பார்க்கலாமா?
'வாங்க இருக்கேன்.'
டெலிபோனை வைத்தபோது வஸந்த் உள்ளே நுழைந்தான்.
'பாஸ்! கங்கா காலி!'
"தெரியும். இப்பத்தான் இன்ஸ்பெக்டர் போன் செய்தார்.
'அவருக்கு எப்படித் தெரியும்? அந்தப் பெண் இங்க வந்தான்னு!"
"அவரு வந்தாத் தெரியும்' என்றான் கணேஷ்
வஸந்தை நேராகப் பார்க்கத் தயங்கினான்.
"வெறுப்பேத்தறேன்னு நினைச்சுக்காதீங்க. அந்தப் பொண்ணு கூப்பிட்டப்ப நாம் மரியாதையா போயிருக்கலாமா இல்லையா ‘
"தவறு’ என்றான் கணேஷ்' 'சாதாரணமா மொட்டைக் கடுதாசிங்களை யாரும் தீவிரமா எடுத்துக்கமாட்டாங்க.
"இருக்கலாம். ஆனா, இது அம்மன் நகை சம்பந்தப்பட்ட மொட்டை. அதனால் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்திருக்கணும்".
நம்ம நாட்டில பாதி கொலைங்களுக்கு காரணம் மதம்! மீதி பொம்பளை/ இதில ரெண்டுமே உண்டு! கங்கா! போய்ட்டியே! வலது பக்கம் பார்த்தா குஷ்பு மாதிரி இருந்தியே ! அவள் வைச்சிருந்த அம்மன் பதக்கத்துக்காகக் கொன்னிருக்காங்களா?'
'இன்ஸ்பெக்டர் வந்தால் விவரம் தெரியும்!'
இன்ஸ்பெக்டர் மணவாளன் மாருதி ஜிப்ஸியில் வந்தபோது சரியாகப் பத்து மணி என்பதை கவனித்தான் கணேஷ். சொன்ன வாக்கைக் கடைப்பிடிப்பவர் போல இருந்தார். கண்களிலும் பற்களிலும் பிரகாசமிருந்தது. சீருடையிலும் நடையிலும் விறைப்பு இருந்தது.
கணேஷ் அவரை கைகுலுக்கி வரவேற்று, 'என்ன சாப்பிடறீங்க? என்றான்.
"டீ" என்றார். "இவர்தான் உங்க பிரபல அசிஸ்டெண்டா?
"அப்பாடா!' என்றான் வஸந்த். 'சார், எப்படி உங்களுக்குத் தெரியும், அந்தப் பொண்ணு இங்க வந்தது?"
"எங்க போலீசுக்கும் கொஞ்சம் மூளை உண்டுங்க! டெலிபோன் டைரக்டரி திறந்திருந்தது. அதில் சீட்டு வச்சிருந்தது. உங்க நம்பர் எழுதியிருந்தது. எதுக்கும் ஒருகால் போட்டுப் பார்க்கலாம்னு டயல் பண்ணினேன்"..
"பலே"
கணேஷ், 'அந்தப் பெண் எங்களை நேற்று மாலை வந்து பார்த்தாள்" .
இன்ஸ்பெக்டர்தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்து, 'எத்தனை மணி இருக்கும்"
"சுமார் ஆறு மணி, சாயங்காலம்".
'எதுக்கு வந்தாங்க?
கணேஷ் அந்தக் காகிதத்தை அவரிடம் காட்டி, 'இந்த மிரட்டல் கடிதம் வந்ததாம். என்ன செய்வது என்று கேட்டாள்.
அவர் அதைப் படித்துவிட்டு, 'பதக்கம்.. என்ன பதக்கம்?' என்று கேட்டார்.
'ஏதோ ஒரு அம்மன் கோயில் நகையின் பதக்கம் ஒன்று அவகிட்ட இருக்கிறதா சொன்னாங்க! ஒரு மாசம் முன்னாடி லட்ச ரூபாய்க்கு வாங்கினாளாம்.
"அப்படியா சேதி! இதை விசாரிச்சுடலாமே! நன்றிங்க. இது முக்கியமான திருப்பம்!'
'எப்படி செத்துப் போனாங்க?' என்றான் வஸந்த்.
"பாத்டப்ல தண்ணி ரொப்பி, பாடியை வைச்சு அழுத்திருக்காங்க! மூச்சு நிக்கறவரைக்கும்! நான் போறப்பப் பிணம் ஊதிப்போய் மிதந்துகிட்டு இருந்தது!"
'உங்களுக்கு சேதி சொன்னது யாரு?!
"யாரோ 'பி.சி.ஓ'லருந்து போன் பண்ணிருக்கான். பேர் சொல்லலை. 'இந்த மாதிரி இடத்தில் கொலை நடந்திருக்கு, போய்ப் பாருங்க'ன்னு! நான் பீட் கான்ஸ்டபிளுக்கு ரேடியோ மூலம் சேதி சொல்லிப் பார்க்கச் சொன்னேன்." அந்தக் கடிதத்தை மறுபடி படித்தார்.
"இதில் கூட 'மிதக்கும் உனதுடல் இன்று" ன்னு சரியாகத்தான் போட்டிருக்கு. இதை லேபுக்கு அனுப்பறேன்."
"பாடி எங்க இருக்குது?"
=====*அடுத்த பகுதி நாளை (06-11) வெளிவரும்* =====
No comments:
Post a Comment