அப்பா என்னும் பெரிய குழந்தை...
என் நான்கு வயதில் தாயார் இறந்து போனார். என்னையும், என் ஒரு வயதுத் தம்பியையும் வளர்க்க மறுமணம் செய்து கொண்டார் எங்கள் அப்பா.
இளைய தாயார் பராமரிப்பில் உருப்படியாக வளர்ந்து நல்லபடியாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம்.
என் அப்பா, இளைய தாயார் இருவருமே பயங்கர இன்டிபென்டண்ட் இயல்பு கொண்டவர்கள். இதனாலேயே, எங்களோடு சில காலம் தங்குவது, பின் சில காரணங்களைக் காட்டி தனியாக வசிப்பது என்று உள்ளே வெளியே கேம் ஆடினார்கள். எனக்கும் என் பணி நிமித்தமாக அடிக்கடி இட மாறுதல் நிகழ்ந்ததால் அதைக் காரணம் காட்டி எங்களோடு சேர்ந்து வாழ்வதைத் தவிர்த்தார்கள். இது குறித்து, நான், என் அருமையான மனைவி இருவரும் ஆழ்ந்து வருந்தியிருக்கிறோம் பல காலம். எங்கள் மகனோ, "be practical. Why bother about something which is not in your hold or reach?" என்பான்.
சென்ற வருடம் இளைய தாயார் இறந்து விட்டார். அப்பா, தம்பி குடும்பத்தின் கவனிப்பில் இருந்தவர், இரண்டு மாதங்கள் முன்பு சட்டென்று முடிவு செய்து எங்களோடு ஸெட்டில் ஆகப் போவதாக அறிவித்தார். எங்கள் மகனும் வெளிநாட்டில் இப்போது வசிக்கும் நிலையில், நானும், என் மனைவியும் அவரை அழைத்து வந்து எங்களோடு சேர்த்துக் கொண்டோம்.
தொண்ணூற்றிரண்டு வயதானாலும் அபார ஞாபக சக்தி, கூர்மையான புத்தி மற்றும் பேச்சு கொண்ட என் அப்பா அடிக்கும் லூட்டி!!!!!
வரும்போதே பிரகடனம் செய்து விட்டார் " I am very old and have little time left with. You have to put up with me" என்று.
தினமலர் வாங்கு எனக்காக என்றார். ஆனால், ஒரு நாளும் முழுமையாகப் படிக்கவில்லை. "என்ன, உன் ஊரில் தினமலர் சப்புன்னு இருக்கே" என்கிறார். சென்னையில் தினமலரில் தினமும் மசாலாவும் உப்பும் தடவித் தந்தார்களோ என்னவோ!!
வந்த இரண்டாம் நாள், காவிரியில் குளிக்கணும் என்றார். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சிறிய பக்கெட்டும், மக்கும் கையோடு எடுத்துப் போனது நல்லதாயிற்று. நதியைப் பார்த்ததும், என்னடா இவ்வளவு ஜலம் என்று முட்டியளவு ஜலத்தைப் பீதியோடு பார்த்தவர், பக்கெட்டில் ஜலம் வாங்கி, படியில் உட்கார்ந்து மக்கால் மொண்டு மொண்டு குளித்து விட்டு "காவிரி ஸ்நானம் ஆச்சு" என்று அறிவித்த கையோடு " இவ்வளவு ஜலம் ஓடும்போது நீ அதில் குளிக்கவே கூடாது" என்று என் நதிக் குளியலுக்கு தடையும் போட்டு விட்டார்.
மன்னா மல்டிக்ரெய்ன் கஞ்சி மாவு, ஆவின் பாதாம் மிக்ஸ், என்ஸுர், ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கி வை, நான் குடிப்பேன் என்று அவற்றை வாங்கி வைத்த பின் காபியும், டீயும் மட்டுமே வேண்டும் என்று கேட்டு வாங்கிக் குடிக்கிறார். நானோ, சிறு குழந்தை போல் கஞ்சி மாவில் நெய், சர்க்கரை சேர்த்தும், மற்றவற்றை நேரடியாக அவ்வப்போது சாப்பிட்டும் திருப்தி கொள்கிறேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லைட்டாக ஏதாவது கொடுத்துக் கொண்டே இரு என்று சொல்லி விட்டு ஒரு ரவுண்டு ஆனதுமே தூக்கம். தூங்கினால் எழுப்பாதே என்றும் சொல்லியிருப்பதால் எழுப்பி ஏதாவது கொடுப்பதா, இல்லை அப்படியே தூங்க விட்டு விடலாமா என்று நானும் என் மனைவியும் சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் நேரங்கள் பல. அவரே நன்றாகத் தூங்கி எழுந்து வந்த பின் " வயிற்றைப் பிடித்து இழுக்கிறது. கொஞ்சம் ஹெவியாக சாப்பிடக் கொடு" என்று கூக்லி போடுவார்.
ருசியில் மட்டுமல்ல, ரெஸிபியிலும் மன்னர் என் தந்தை. பல உணவுப் பதார்த்தங்கள், துவையல், சட்னி ரகங்கள் என்று வெகு நுணுக்கமாக ரெஸிபியை விவரிப்பார். அவர் சொல்லும்படி, அவர் கேட்கும் உணவைத் தயாரித்து வைத்தால், ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு " நன்றாக இருக்கிறது. ஆனால், போதும். கொஞ்சம் மோர் சாதம் கரைத்துக் கொடு" என்று ட்விஸ்ட் வைக்க, மனைவியை ஸமாதானம் செய்து கொண்டே அவளுக்குக் கொஞ்சம் போக, மீதி முழுவதையும் நானே உண்கிறேன்.
செவ்வாழை, ரஸ்தாளி வேண்டும் என்பார். தேடிப்பிடித்து வாங்கி வந்தால் ஒன்றிரண்டு சாப்பிட்டு விட்டு நேந்திரம் கிடைக்குமா என்பார். இல்லாவிட்டால், பேயன் கிடைச்சா ஸூப்பர் என்பார்.
"வெந்நீர் போடு, குளிக்க" என்பார். கீஸரில் வெந்நீர் போட்டு பக்கெட்டில் நிரப்பி வைத்தால், அவரோ கைத்தடியும் செருப்புமாய் அண்டை வீடுகளில் ஏதோ ஒன்றில் புகுந்து மறைந்து கொள்வார், அவர்களோடு பேசணும் என்று. ஞாபகமாக ஸெல்ஃபோனை வீட்டிலேயே வைத்து விட்டுப் போவதால்,கொஞ்ச நேரம் கழித்து வீடு வீடாகப் புகுந்து தேடி அவரைக் கூட்டி வருகிறேன். " பையன் வந்துட்டான், இல்லேன்னா இன்னுங்கூட பேசலாம்" என்று அங்கே சொல்லி விட்டு இங்கே வந்ததும், "வெந்நீர் ஆறிப் போச்சே, நாளைக்காவது சூடாக வை" என்பார்.
"ஆட்டோ கூப்பிடு, அந்த கோவிலுக்குப் போகணும்" என்பார். கூட்டிச் சென்றால், " பெரிய கோவிலா, நடக்க முடியாது" என்று முதல் ஸன்னதியிலேயே உட்கார்ந்து கொள்வார். நாங்கள் இருவரும் அவசரம் அவசரமாக மற்ற சன்னதிகளில் ஆஜராகி விட்டு அவரிடம் திரும்புவோம்.
உடம்பில் வெளி உறுப்பு, உள் உறுப்பு ஒன்று விடாமல் எல்லாவற்றுக்கும் தலா இரண்டு மூன்று அலோபதி மாத்திரைகள் வாங்கி ஒரு ஸ்டெயின்லெஸ் பெட்டியில் நிரப்பி வைத்திருக்கிறார்.
" இதெல்லாம் மோசமான ஸைட் எஃபெக்ட் தர்றது. நல்ல ஆயுர்வேத டாக்டரைப் பார்க்கணும்" என்பார். தேடிப் பிடித்து ஒரு நல்ல ஆயுர்வேத டாக்டரைக் கூட்டி வந்து செக் செய்து மருந்துகள் வாங்கித் தந்தால் " இந்த அரிஷ்டம் மஹா கஷ்டம், அந்த கஷாயம் கடு விஷம்" என்று குறை சொல்லி சாப்பிடாமல் டபாய்ப்பார். டாக்டரிடம், இரண்டு நாளைக்கு உங்கள் மருந்து, மூன்றாம் நாள் அலோபதி மருந்து சாப்பிடுகிறேனே என்று நெகோஷியேட் செய்வார்.
ஆக மொத்தத்தில், இப்போது என் வாழ்க்கையின் ஒவ்வொரு தினமும் கவிழ்த்து விட்ட கூடையிலிருந்து கன்னாபின்னாவென்று சிதறி விழுந்து கிடக்கும் விளையாட்டுச் சாமான்கள் போலாகி விட்டது. நேரத்திற்கு காரியங்கள், ஒழுங்கு என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை , ஷணச் சித்தம், ஷணப் பித்தமாய் மாறியுள்ளது.
ஷட்டில் காக், புத்தகம், தியானம் எல்லாம் மூட்டை கட்டியாகி விட்டது.
ஆயினும், ஏனோ தெரியவில்லை, சலிப்போ, திகைப்போ, எரிச்சலோ ஏற்படவில்லை.
மீதியிருக்கும் காலம் எவ்வளவோ, அவர் விருப்பப்படி, இயல்புப்படி இருக்கட்டுமே என்கிறது என் இதயம்.
அவர் வயதில் நாம் இருப்போமோ, இருந்தால் எப்படியிருப்போமோ என்று மலைக்கிறாள் என் மனைவி.
என்னை விட வயதான ஒரு பெரிய குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பே எங்களுக்கிருப்பதாய் உணர்கிறது என் மனம்.
உன் சிறு வயதில் நீ என்னென்ன பாடு படுத்தினாயோ, வட்டியோடு சேர்த்துத் திருப்பித் தரும் நேரம் இது என்கிறது என் புத்தி.
எது எப்படியோ, ஏதோ இனம்புரியாத நிறைவில் தோய்ந்து நெகிழ்ந்திருப்பதாய் உணர்கிறேன்.
TKS to swaminathan Lakshmi Narayan
No comments:
Post a Comment