Sunday, March 6, 2022

ரெங்கநாயகி_தாயார்

 ரெங்கநாயகி_தாயார்

திருவரங்கத்தில்  வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த வையாபுரி என்பவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால்,  

திருவரங்கநாதன் கோயில் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார். இவ்வாறே வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் காய்கறிகளை வாங்கிக் கொண்டார். வடக்கு வாசலை நெருங்கும் சமயம் இடப் புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார். அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை, வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும் தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தமது கைகளைக் கூப்பி ஒரே ஒரு முறை ரங்கநாயகித் தாயாரை வணங்கினார். உள்ளிருக்கும் ரங்கநாயகியோ இவரது வணக்கத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தாள். உடனே தனது கணவனான அரங்கனிடம், “என்னை நோக்கி நம் குழந்தை கைகூப்பி விட்டானே! இவனுக்கு என்ன கொடுக்கலாம்” என்று கேட்டாள். அரங்கனோ, “ரங்கநாயகி! நீ தான் செல்வங்களுக்கு எல்லாம் தலைவி! இவனுக்கு நல்ல செல்வத்தை அருளலாமே!” என்றார். ரங்கநாயகித் தாயாரும் அவ்வாறே உயர்ந்த செல்வங்களை அந்த நபருக்கு வழங்கி விட்டாள். அதன்பின் சற்றே சிந்தித்தாள் ரங்கநாயகி. “சுவாமி! அவன் கைகூப்பி வணங்கி அஞ்ஜலி முத்திரையை என்னை நோக்கிக் காட்டி விட்டானே! அதற்கு நான் கொடுத்த செல்வம் என்பது ஈடாகாது! அதைவிடப் பெரிதாக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று அரங்கனைப் பார்த்துச் சொன்னாள். “ஆம்! ஆம்! இந்தச் செல்வம் போதாது! அழியாத செல்வமான ஆத்ம அநுபவத்தை அவனுக்குக் கொடுத்து விடு!” என்றார் அரங்கன். அவ்வாறே ரங்கநாயகித் தாயாரும் ஆத்மா தன்னைத்தானே அநுபவிக்கும் நிலையான கைவல்ய நிலையை வையாபுரிக்கு அருளினாள். அதன் பின் சிந்தித்த ரங்கநாயகி, மீண்டும் அரங்கனைப் பார்த்து, “அவன் அஞ்ஜலி முத்திரை அல்லவோ காட்டியிருக்கிறான், அந்தக் குழந்தை காட்டிய அஞ்ஜலி முத்திரைக்கு நாம் அவனுக்குத் தந்த செல்வம், ஆத்மாநுபவம், முக்தி ஆகிய எதுவுமே ஈடாகாது. ஆனால் முக்திக்கு மேல் கொடுப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லையே! அதனால் தான் எனக்கு வெட்கமாக உள்ளது!” என்று பதிலளித்த ரங்கநாயகித் தாயார் வெட்கத்தால் தலைகுனிந்து கொண்டாளாம். என பாடுகிறார் பராசர பட்டர்  

“ஐச்வர்யம் அக்ஷரகதிம் பரமம் பதம் வாகஸ்மைசித் அஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய  
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இத்யதாம்பத்வம் லஜ்ஜஸே கதய கோயம் உதாரபாவ:”  

பொருள்: ஏதோ போகிற போக்கில் கைகூப்பிய அந்த நபருக்கு  மிக உயர்ந்த முக்தி உட்பட அனைத்தையும் தந்து விட்டு இனி கொடுக்க ஒன்றுமில்லையே என வெட்கம் கொண்டு இன்றளவும் ரங்கநாயகித் தாயார் தலை குனிந்து கொண்டே கோயில் கொண்டிருப்பதாக இந்த ஸ்லோகத்திலே அநுபவிக்கிறார் பராசர பட்டர். என்ன அற்புதமான கற்பனை பராசர பட்டருக்கு! எத்தனை அன்பு தாயாரின் மேல்! எத்தனை அசைக்க முடியாத நம்பிக்கை தாயாரின் வாத்சல்யத்தின் பேரில்! நாமும் கோவிலை கடந்து செல்லும் போது அஞ்சலி முத்திரை செய்து வணங்கி செல்வோம்

இறை அருளைப் பெறுவோம்....🙏🙏🙏



No comments:

Post a Comment