Tuesday, March 15, 2022

ராகு - கேது தோஷம்

 சர்ப்ப தோஷம் ! 

ராகு - கேது தோஷம் என்றாலும், கால சர்ப்ப தோஷம் என்றாலும் ஒன்றே ஆகும்.

ராகு - கேது தோஷம் ஏற்படுவது ஏன்?

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷம் ஏற்படுகிறது. 

இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது.

கோவில் இடங்களை ஆக்கிரமித்து கடவுளின் கோபத்திற்கு ஆளானால் இந்த தோஷம் ஏற்படலாம். 

தம்பதிகளை ஏதேனும் பகையால் பிரித்தால் அவர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு இந்த தோஷம் ஏற்படலாம்.

மூதாதையர்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ, அக்குழந்தைகளின் கண்ணீர் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷமாக விஸ்வபரூபம் எடுக்கும்.

குடும்பங்களை பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கியதினால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டத்தில் கேதுவுமாக இருந்து மூன்றாவது தலைமுறையினரது இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் இந்த இராகு கேது கெடுக்கும்.

சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலோ அல்லது அவர்களை ஏமாற்றியதாலோ அவர்கள் இட்ட சாபம் ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமாக 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள். 

 நம்பிய நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தால் முன் ஜென்மத்தில் செய்தமைக்காக தற்போது ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருக்கலாம்.

வேலை செய்தபோது கூலி கொடுக்காமல் ஏமாற்றினாலோ அல்லது மற்றவர்கள் வேலையை பறித்த பாவமும் சேர்ந்து ராகு-கேதுவாக மாறி ஜீவனஸ்தானத்தில் அமர்ந்து தொழிலில் முன்னுக்கு வர முடியாமல் ராகு 4-ல் அல்லது 10ல், கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து தடுக்கின்றது.

சொத்துகளை ஏமாற்றிப் பறித்து பெற்ற தாயின் சாபத்தையும் முன் ஜென்மத்தில் அந்த அன்னை இட்ட கண்ணீர் ராகு கேது தோஷத்தை ஏற்படுத்துகிறது.

 பரிகாரம் என்ன? 

ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது. 

ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

நாகத் துவாஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹே 
தந்நோ ராகு ப்ரசோதயாத் 

இந்த மந்திரத்தைத் தினசரி 9 முறை கூறி வந்தால் ராகுவினால் ஏற்படும் அசுப பலன்கள் குறையும்.

ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரம், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகசிலைக்குப் பால்விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க்கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக் கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.

ராகு பகவானுக்கு உளுந்து பிரதான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்குப் பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகலதோஷங்களும் தீரும்.

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் படித்து வர வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சினையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லிவர வேண்டும். 

கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.

வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள்தான் உண்டாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

நாகர் தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

கேதுவுக்கு உரிய அதிதேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்து வர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காகவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்.

சர்ப்ப தோஷ பரிகாரம் என்பது சமீபகாலத்தில் உருவானது. 5 ம் இட தோஷ விபரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்

5ல் ராகு தோஷமா?... அளவற்ற ஆண் குழந்தைகள் பிறக்கும்.

5ல் கேது... குழந்தை உண்டு. ஆனால் ஆரோக்கியப் பாதிப்பு உள்ள குழந்தை அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெற்றோரைப் பிரிந்து தனிமையை ஏற்படுத்தும் குழந்தை என்கிற நிலை உண்டாகும்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் போது அங்கே ராகு கேது பரிகாரம் என்று பெரிய அளவில் நடந்து பார்த்ததேயில்லை. தற்போது பெரிய அளவில், ஒரே நாளில், ஒரே சமயத்தில் சுமார் 100 முதல் 200 பேர் அமர்ந்து பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. எந்த பரிகாரம் செய்தாலும் தோஷம் விலகாது. தோஷம் தோஷம்தான்..! அதை அனுபவித்தே தீரவேண்டும்

அப்படியெனில்.. தோஷம் பாதிக்குமா? என்ற கேள்விக்கு என்னுடைய பதில்... ஆமாம், பாதிக்கும். அதை அனுபவித்துதான் தீரவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம்,

அதெல்லாம் நாம் நினைப்பதுபோல் ஒரு நிகழ்வு என்றே கடந்துவிடுகிறோம். உண்மையில் அனைத்தும் கிரகங்களின் ஆளுமையே என்பதை மனதில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சந்திக்கும் விஷயங்கள், பிரச்சினைகள் என அனைத்தும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

யோசித்து பாருங்கள்... பாக்கெட் நிறைய பணம் இருந்தும், பசியில் இருந்திருப்பீர்கள். வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றாலும் உண்ண முடியாத நிலையும் வந்திருக்கும். இவை அனைத்தும் கிரகங்களின் வேலைகளே!

எனவே தோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். செழிப்பாக்கும்!

தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.

மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

இரண்டே இரண்டு விஷயங்கள். இதுவே பரிகாரங்கள். முதலாவது, தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒரு பத்து நிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும்.🌷🌷

No comments:

Post a Comment