#Easychair_6
அத்யாயம் : 6 ... ஈஸி சேர்
ஊஞ்சலில் அம்மாவின் கால்மாட்டில் உட்கார்ந்து ஒரு காலில் எத்திக் கொண்டிருந்தான். அசைவில் உடனே நாராயணி எழுந்திருந்தாலும் வேண்டுமென்றே இவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் சற்று.
சோகமும் சிந்தனையும் குடிகொண்டிரிந்த அவன் முகத்தை பார்க்க பொறுக்காமல்....
'வைத்தா, வந்துட்டியா. முதல்ல சாப்பிடு. சமைச்சது எல்லாம் ஜன்னி கண்டுண்டு இருக்கு பார்' என்றாள்.
'அதே விஜாரமா இருக்காதே' என்று அம்மா தொடரும்போதே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது சம்மந்தமா சம்பாஷணை நடந்திருக்குன்னு யூகித்தான்.
'எனக்கு ஒம்மேல கோபம் வைத்தா. கார்த்தாலயே அப்பா கழனிக்கு போயிருக்கும்போது இது பத்தி என் கிட்ட பேசணும்னு நோக்கு தோணித்தோ? எப்போதும் நீ அப்பா கோண்டுதான். அதுக்காக அம்மாட்ட சொல்லக் கூடாதுன்னு இருக்கா என்ன? எல்லா ஆம்பிள்ளைக்கும் பொண்ணுன்னா அசமஞ்சம், ஒண்ணும் தெரியாது இதுக்கு அப்படின்னு நெனப்பு. எனக்கு தெரிஞ்சுருந்தா, பக்குவமா அப்பாகிட்ட சொல்லியிருப்பேனேனோ? இப்ப பாரு, மனுஷன் வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறார்.'
அம்மா சொல்வதில் இருந்த ஞாயம் புரிந்தது.
'அது இல்லம்மா. நீ ஏதாவது வருத்தப் படுவியோன்னுதான்.'
பிறகு அவனுக்கு சாதம் போட்டுக் கொண்டே நடராஜ மாமாவாத்து விஷயங்களை நாராயணி கேட்டறிந்தாள்.
வெளியே சென்ற அப்பாவும் வந்தார்.
கோபம் அடங்கியது போல தெரியவில்லை.
அம்மா ஆரம்பித்தாள் மெல்ல.
'அன்னா, வைத்தாக்கு ஒங்க மேல உயிர். அவன் என்ன சொல்லிட்டான் இப்ப. அந்த பொண்ண புடிச்சுருக்குங்கறான். நாமளே நேர போய் பொண்ண பார்த்துட்டு நம்ம மனசுக்கு தோது படறதான்னு பார்த்தா போச்சு. தோது படாதுன்னு தோணிச்சுன்னா, வைத்தா கிட்ட சொல்லிடுவோம்.'
'பொண்ணாத்துக்காரா முதல்ல பேசறது போக நாம பேசணும்கற. என்னவோ பண்ணுங்கோ. மொத்தத்தில இதெல்லாம் நன்னாவா இருக்கு?' என்று நாராயணிகிட்ட சொல்லி விட்டு வைத்தா பக்கம் திரும்பினார்.
'வைத்தா, ரெண்டு நாள் இங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. அப்புறம் கிளம்பலாமோல்யோ?'
தலையசைத்தான் வைத்தா.
சொன்ன படியே பெண் பார்க்க கிளம்பி சென்னை வந்தார்கள்.
சற்று உற்சாகக் களை வைத்தா முகத்தில்.
சென்னை வந்து சிறிது வைத்தாவின் மைலாப்பூர் ஒண்டிக் குடுத்தனத்தில் ஓய்வெடுத்து விட்டு நங்க நல்லூருக்கு ஆட்டோவில் வந்தனர்.
தொடரும்......
No comments:
Post a Comment