Sunday, March 20, 2022

ஈஸி சேர் - 5

 #Easychair_5

அத்யாயம் : 5 ...  ஈஸி சேர்.

இருபது நிமிட நடையில் அகம் வந்தான்.  அப்போதுதான் அம்மா சாணி தெளித்து கோலம் போட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும்.  ரெட்ட வடம் சங்கிலி போல இழைகள்.

கதவை தட்டினான்.  அம்மா திறந்தாள்.  

என்னடா வைத்தா, திடுதிப்புனு.  வா, வா.

அண்ணா, யார் வந்திருக்கான்னு பாருங்கோ இங்க செத்த வந்து.

சாஞ்சு சாஞ்சு அதே நடை.  தன் உடல் நலம் பாரமல் எல்லா பாரத்தையும் சுமக்கும் எந்த ஒரு வயதான பெண்ணுக்கும் ஆண்டவன் கொடுக்கும் சாபம், சாஞ்ச நடை.

அப்பா சந்தி பண்றார் போல இருக்கு, நீ உள்ள வா.  ஒடம்பெல்லாம் சௌரியமா இருக்கேல்யோ?

இருக்கேம்மா.

பார்த்தா அப்படி தெரியலையே.  முகமெல்லாம் வாடி இருக்கே.

ட்ரெயின்ல சரியா தூங்கல.  அதான்.

(இப்போது படிக்கும் நாம் மட்டும் சிரிக்கிறோம்).

சந்தியாவந்தனம் முடித்து அப்பா எழுந்தார்.  வாடா வைத்தா, நன்னாரிக்கியா.

நன்னாரிக்கேம்பா.

நீ குளிச்சு கிளிச்சி சந்தி கிந்தி பண்ணிட்டு ரெடியா இரு.  நான் சித்த கழணி வரைக்கும் போயிட்டு வரேன்.  குத்தக காரன் டிமிக்கி கொடுத்துண்டிருக்கான்.  அவன என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன்.  காலங்கார்த்தால இவாள புடிச்சா உண்டு.  நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.

சரிப்பா.  எங்கெயும் போகல.

ஒவ்வொன்றாக முடிந்தது.  இடையிடையே அம்மாவோட தமாஷ், பேச்சு, எல்லாம்.  பிறகு ஊஞ்சலில் அம்மாவும், பிள்ளையும்.  அடக்கி வைத்திருந்த எல்லா கதைகளும்.  பேசிண்டே இருந்தாள், கேட்டுட்டுண்டே இருந்தான்.

அப்பா பெருமூச்சோடு உள்ளே வந்தார்.  மணி பத்து.  அம்மா அடுப்பை பார்க்க சென்றுவிட்டாள்.  எனக்காக பண்ணின ரவா உப்மாவை அப்பாவிடமும் கொடுத்தாள் அம்மா.  பிறகு மீண்டும் சமையல் உள்.

மெட்றாஸெல்லாம் எப்படியிருக்கு.  நடராஜ மாமாவோடத்தானே வைதீகம்?

ஆமாம்பா.  நல்ல மாதிரியா இருக்கார்.  அவாத்திலேயும் எல்லாரும் எம்மேல உயிரா இருக்காப்பா.

போறது.  இனிமே ஒன் விஜாரம் நாங்க படவேண்டாம்.

என்ன இருந்தாலும் பெத்தவா மாதிரி வருமாப்பா.  நீங்க ரெண்டு பேரும் அங்கேயே வந்துருங்களேன்.  இந்த ஊரில் என்ன இருக்கு?

நானும் இதையேத்தான் யோஜன பண்ணிண்டு இருக்கேன்.  ஒருமுறை பட்டாமணியார் கிட்ட கூட பேசினேன்.  அவர்தான் என்ன உடவே மாட்டேங்கறார்.  சொந்த மண்ணு அது இதுங்கறார்.  அவா தயவுல தானே நெலமும் வீடும்.  அதான் என்ன பண்றதுன்னு முழிச்சிண்டு இருக்கேன்.

பிறகு வேதம், சாஸ்திரம்னு கொஞ்ச நாழிக்கு பேச்சு ட்ராவல் ஆச்சு.  அதன்பிறகு....

வைத்தா, சொல்ல மறந்துட்டேனே.  வடுவூர்ல இருக்கானே கிட்டா, அவன் ஒரு வாரம் முன்னாடி வந்தான்.  அவன் பொண்ணு பெரியவளாயிட்டாளாம், சொல்லிட்டு அவ ஜாதகத்தை கொடுத்துட்டு உன் ஜாதகத்தை வாங்கிண்டு போனான்.  நான் உன்ன கேக்காம முடிவெடுக்க மாட்டேன்னும் சொல்லிட்டேன்.

அவனுக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியல.  கொஞ்சம் தைரியத்தை வர வழித்துக் கொண்டு.

அப்பா, நடராஜ மாமாக்கு ஒரு பொண்ணு இருக்காப்பா.  நம்மாத்துக்கு பொருத்தமா இருப்பாப்பா.....

பொறுமையா கேட்டுவிட்டு, கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.

இதுதான் நீ மெட்றாஸுல வேலை பார்க்கிர லக்ஷணமோ?  இதுக்குத் தான் காலேஜ் வேலைய உட்டுயோ?  மெட்றாஸோன்னோ, நல்லவாள கூட விட்டு வைக்காது.  நீ பாட்டுக்கும சொல்லிட்ட.  ஜாதகம் பார்க்க வேண்டாமா?  தோஷம் பார்க்க வேண்டாமா?  நீ இப்படி செய்வேன்னு எதிர் பார்க்கல.

அம்மா அடுப்படி காரியத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள்.

என்னண்ணா ஆச்சு, என்ன கோபம் வைத்தா மேல.

நீ போ உள்ள..புள்ளைய பெத்து வெச்சுருக்காளாம்.

கொஞ்சம் அமைதி.  யாரும் பேசவில்லை.  அவரவர்கள் அவரவர் சிந்தனையோடு இருந்தார்கள்.

இதற்கு மேல் அங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்து, அம்மா நான் கோபாலாத்துக்கு கொஞ்சம் போயிட்டு வரேம்மா.  அப்பா தடுக்கவில்லை.

அம்மா மாத்திரம் இன்னும் கொஞ்ச நாழில சமையல் ஆயிடும், சாப்புட்டு போடா, என்றாள்.  வந்து சாப்பிடறேன்மா.

கிளம்பிவிட்டான் அவன் பால்ய நண்பன் கோபாலாத்துற்கு.  கொஞ்ச நேரம் அரட்டை.

திரும்பி வந்தான்.  அப்பா இல்லை.  அம்மா மட்டும் ஊஞ்சலில் படுத்துக் கொண்டிருந்தாள்.

தானும் இருந்த சிறு இடத்தில் ஊஞ்சலில் அமர்ந்தான்.

தொடரும்....

No comments:

Post a Comment