எண்ணப்பறவை_52
அமுதாவின் ஆஃபிஸுக்கு மதியம் ஒரு ஃபோன் கால். பேசியவர் ஆனந்த விகடன் எடிட்டர் சிவராமன்.
'ஹலோ. அமுதாங்களா? நான் சிவராமன் பேசறேன். எப்படி இருக்கீங்க? கதையெல்லாம் எப்படி போயிண்டிருக்கு.'
'எனக்கு பெரிய ஸர்ப்ரைஸ் சார் உங்க கிட்டேந்து கால் வந்தது. ஐ ஆம் ஃபைன் சார். நான் எழுதிண்டு வர கதை கிட்டத்தட்ட ஃபனல் ஸ்டேஜுல இருக்கு சார். நீங்க தீபாவளிய ஒட்டித்தானே கொடுக்க சொன்னீங்க? ஏதாவது ஸ்லாட் கிடச்சிருக்கா?'
'இல்லம்மா. ஒரு தொடர் கதை காம்பெடிஷன் எங்க ஸ்டாஃபுக்கு ஆஃபர் பண்றோம். ஸ்டாஃபோ அல்லது அவங்களோட ரிலேடிவ்ஸ் ஆர் ஃப்ரெண்ட்ஸ் தான் கலந்துக்க முடியும். நீங்க விருப்பப் பட்டா நீங்க கலந்துக்கலாம். நான் உங்க பேரை என்னோட ஃப்ரெண்டுன்னு சொல்லி சேர்த்துடறேன். இன்னொண்ணு, இந்த காம்ப்பெடிஷன்ல முதல் ப்ரைஸ் ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாவது ப்ரைஸ் இரண்டாயிரத்து ஐநூறு. மூணாவது ப்ரைஸ் ஆயிரம் கேஷ் அவார்டு தரலாம்னு தீர்மானிச்சிருக்கோம்.'
'கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். நான் கலந்துக்கிறேன் கண்டிப்பாக. நான் எழுதிண்டு வர கதையையே கொஞ்சம் மத்திய எழுதி சீக்கிரமே ஸப்மிட் பண்றேன்.'
'அதுக்குன்னு ரொம்ப அவசரப்பட்டு எழுதி ஸ்வாரஸ்யத்த கொறச்சுட வேண்டாம். அடுத்த மாச கடைசிக்குள்ள கொடுத்தா போதும். இதுல இளம் எழுத்தாளர்கள் மாத்திரம்தான் பங்கேற்க முடியும். பெரிய அளவுல காம்பெடிஷன் இருக்காதுன்னு நெனைக்கிறேன். அதனால உங்களுக்கு பரிசு வாய்ப்பு அதிகம்னுதான் தோண்றது.'
'பரிசைப் பத்தி கவலைப் படல சார். எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து ஃபோன் பண்ணினதே எனக்கு பெருமையா இருக்கு.'
'ஆனந்த விகடன் பேனலைப் பத்தி உங்க கிட்ட சொன்னேன் இல்லையா? அவாதான் ஜட்ஜஸ். ஸ்டாஃபுக்குள்ள போட்டிங்கறதால எங்க பத்திரிக்கைல விளம்பரம் வராது. எங்க ஆஃபீஸ் ஸர்குலர் தான். நீங்க ஒரு ஃபாம்ல கையெழுத்து போட நாளைக்கு எங்க ஆஃபீஸ் வரும்படியா இருக்கும். சிரமம் இல்லையே?'
'கண்டிப்பா வரேன் சார். ரொம்ப நன்றி சார் எனக்கு ஒரு சந்தர்பம் கொடுத்ததுக்கு.'
ரிஸீவரை வைத்ததிலிருந்து அமுதாவின் மனம் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்து விட்டது.
'நாம பார்டிஸிப்பேட் பண்றோம். ஜெயிக்கறோம். அய்யாயிரம் ரூபாய அப்பாகிட்ட கொடுக்கறோம்.'
'நல்ல நேரத்துல தான் வந்திருக்கு இது. ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கெடச்சுதுன்னா கல்யாண செலவுக்கு உபயோகமா இருக்கும்.'
இரவு சுமார் ஏழு மணிக்கு அபிராமியைப் பார்த்து சிவராமன் பேசியதை சொல்கிறாள்.
'ஓ. க்ரேட். நீ வேணா பார். உன் கதைக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்.'
'எல்லாம் நீங்க போட்ட பிள்ளையார் சுழிதான் அக்கா.'
'சரி, எப்படி போயிண்டிருக்கு கல்யாண ஏற்பாடெல்லாம்?'
'அப்பா திருச்சி போயிருக்கா பண ஏற்பாட்டுக்கு. வந்தாதான் தெரியும்.'
'நீ வேலைய விடப்போறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. 12G அழும் என் கிட்ட'
'அவர் கொஞ்சம் புது வேலைய ஒத்துக்காம இருந்தா எல்லாமே நன்னா இருக்கும். நான் அவாத்துல ரொம்ப க்ளியரா சொல்லிட்டேன். ஒரு வருஷம் வேலைய விட மாட்டேன்னு.'
'ஒரு வேளை ஒத்துக்கலைனா... அவசரப் பட்டுட்டியோன்னு தோணறது எனக்கு.'
'ஒத்துக்காட்டி பரவாயில்ல. ஆரம்பத்துல அவர என்னோட சேத்து வையின்னுதான் வேண்டிண்டிருந்தேன். இல்லைனு சொல்லல. ஆனா என்னோட அப்பாவும் குமுதாவும் என் மேல வெச்சிருக்கிற அன்ப பார்க்கறச்சே, எனக்கு அத விட வேற ஒண்ணும் பெரிசா படல.'
'என்னடி இப்படி பேசற? பைத்தியம் மாதிரி பேசாத. வெண்ண திரண்டு வரும்போது தாழிய உடைக்கற கதையாட்டும் ஏதாவது பேசித் தொலைக்காத.'
'இல்ல அக்கா. எங்க அப்பா நிலைலேந்து யோசிச்சு பார்த்தா என்னோட அசட்டுத்தனமான அவசரம் புரியறது. நான் ஒரு ஸெல்ஃபிஷா இருந்து அப்பாவ கஷ்டப் படுத்தி கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பமில்ல. எல்லாம் ஒத்து வந்து ஏத்துக்கறதுன்னா ஏத்துக்கட்டும். இல்லாட்டி பகவான் விட்ட வழியில போயிண்டே இருக்க வேண்டியது தான்.'
'என்னடி இப்படி விரக்தியா பேசற?'
'விரக்தி இல்லக்கா. ஆரம்பத்துலேந்தே குமுதா கல்யாணம் முடிஞ்சோண்ணதான் என் கல்யாணத்தப் பத்தி அப்பாகிட்ட பேசணும்னு நெனச்சிண்டிருந்தேன். என்னவோ தெரியல அடுத்தடுத்து வந்த சந்தர்பங்கள் ரெண்டு கல்யாணத்தப் பத்தி யோசிக்க வெச்சு அப்பாவுக்கு ஒரு பர்டன கொடுத்துடுத்து. பெத்தவாள்லாம் சரியாத் தான் போயிண்டிருக்கா. நாம தான் அங்கேயும் இங்கேயும் மனச அல பாய விட்டுண்டு எல்லாத்தையும் போட்டு குழப்பிண்டு அவாளுக்கும் சிரமங்கள கொடுக்கறோம்.'
'ஏண்டி திடும்முனு அறுபது வயசு கிழவியாட்டம் பேசற. எல்லாம் நல்ல படியா நடக்கும் பாரு. நீ நம்பிக்கையோட தான அந்த பையன விரும்பின. பகவானே தான உங்க ரெண்டு பேராத்தையும் இது பத்தி பேச வெச்சிண்டிருக்கார். அப்புறம் என்ன, மீதியையும் அவரே பார்த்துண்டு நல்லபடியா உங்க கல்யாணத்த நடத்தி வைப்பார்,நீ வேணா பாரு.'
'பார்க்கலாம் அக்கா.'
விரக்தி என்று வரும்போது கண்ணீருக்கு அங்கு வேலையில்லை. எல்லோருமே குழப்பமான சந்தர்பங்களில் ஒன்று நம்பிக்கையை வரவழிச்சிண்டு பயணிம் செய்கிறோம். இல்லையென்றால் விரக்தியில் நடப்பது அவன் செயல் என்று மனதை தேற்றிக் கொள்கிறோம்.
'சரி சரி. வேற டாப்பிக்கு போவோம். விகடன் போட்டிக்கு அதே கதையையா கொடுக்கப் போற? எனக்கென்னவோ வேற புதுசா எழுதலாமேன்னு தோணறது.'
'நானும் முதல்ல அப்படித்தான் நெனச்சேன். ஆனா ஆத்துல நடந்திண்டிருக்கற கல்யாண பேச்சுக்கள்ல புதுக் கதைல மனசு போகுமான்னு தெரியல. ஆச்சு இன்னும் ஒரு பத்து பதினஞ்சு பக்கத்துக்கு பழைய கதைய யோசிச்சு எழுதினா கம்ப்ளீட் ஆயிடும்.'
'அது இல்ல அமுதா. உன்னோட காதல் கதைய மையமா வெச்சு எழுதற. நீயா ஒரு முடிவை நெனச்சு முடிக்க கூடாதுல்லையோ. அதுவும் நீ இப்ப இருக்கற ஸிச்சுவேஷன்ல.'
சிரிக்கிறாள் அமுதா.
'கவலப் படாதீங்கோ அக்கா. கதையில கண்டிப்பா என்னோட காதல் கல்யாணத்துல தான் முடியும். கதை எழுதற அமுதா என்னிக்குமே ஆப்டிமிஸ்டிக் தான்.'
'எப்போதுமே என் ஃப்ரெண்ட் அமுதா போல்ட் அண்ட் ஆப்டிமிஸ்டிக் தான். அதுல எனக்கு சந்தேகமே இல்ல. கதையிலயும் ஜெயிச்சு வாழ்க்கைலயும் ஜெயுச்சு வருவ பாரு.'
பெரிதாக சிரிக்கிறாள் அமுதா இப்போது.
'இன்னும் ரெண்டு மூணு நாளுல முழுசா முடிச்சிட்டு கொண்டு வந்து காமிக்கறேன்க்கா.'
'சரி அமுதா. உன்னோட கல்யாண விஷயத்துலேயும் பெரியவா முடிவு பண்ணுவா. உன்னோட அபிப்ராயத்த சொன்னதோட நிறுத்திக்கோ. அதையே இன்ஸிஸ்ட் பண்ணிண்டே இருக்காதே. காம்ப்ரொமைஸஸ் இல்லாம எந்த கல்யாணமும் நடக்கறதில்ல.'
'சரி அக்கா. பார்க்கலாம். மேல இருக்கறவன் என்ன தீர்மானிச்சிருக்கானோ யார் கண்டா?'
'உன்ன சீக்கிரம் மணமேடைல பார்க்கணும் போல இருக்கு. ஆல் தி பெஸ்ட்.'
தொடரும்....
No comments:
Post a Comment