எண்ணப்பறவை_51
'என்னடா GS? உனக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சுடுத்தா? இப்பதான் ஆஃபீஸ் விட்டு கிளம்பும்போது பூமாரி சொன்னான். வேலைய ராஜினாமா பண்ணப் போறதா சொன்னியாமே?'
'ஒரே குழப்பமா இருந்துண்டே இருக்குடா பொண்கள் கல்யாணத்த எப்படி நடத்தப் போறேன்னு. பணத்துக்கு எங்க போவேன் சொல்லு. கடன உடன வாங்கி கஷ்டப் படறதுக்கு ஒரேடியா வேலைய விட்டா வர க்ராஜுவிடி, பிஎஃப்ல கல்யாணத்த முடிச்சுடலாமேன்னு யோசனையா இருக்கு.'
'பேஷ் பேஷ்... நன்னா இருக்குடா நீ சொல்றது. சரி, கல்யாணத்த முடிச்சிட்டு ரோடுக்கு வந்துடுவியாக்கும். இதோ பார், ஊர்ல உலகத்துல கையில சல்லி காசு இல்லாம கல்யாணம் நடத்தினவாளும் இருக்கா. வீணா மனச போட்டு குழப்பிக்காம இரு. பட்ஜட்ட போடுவோம் ரெண்டு கல்யாணத்துக்கும் சேர்த்து. சரிப்பட்டு வரலியா. குமுதா கல்யாணத்த மாத்திரம் இப்ப பண்ணிட்டு கொஞ்ச நாள் கழிச்சு அமுதா கல்யாணத்த பத்தி யோசிப்போம்.'
'அமுதா குட்டி கல்யாணத்தையும் தள்ளி போட முடியாதுடா விசு. அந்த பையனுக்கு குஜராத்துல வேல கெடச்சிருக்காம். உடனே பண்ணனும்னு காலுல கஞ்சிய ஊத்திண்டு நிக்கறா. கௌரவத்தோட ரெண்டு கல்யாணத்தையும் பண்ணனும்னு கவலை வந்துடுத்து.'
'எப்படி பேசினாலும் இப்படித்தான் நீ பேசிட்டு இருப்ப. ஒண்ணும் கவலப் படாத. முதல்ல பட்ஜட்ட போடுவோம். எங்காத்து மாமி இப்ப வரேன்னு சொல்லியிருக்கா. பரண்லேந்து என் பையன் எல்லாத்தையும் இறக்கி கொடுத்துட்டான் இல்லையோ? செல்லம் வரட்டும். பாத்திரம் பண்டத்த பார்த்துட்டு மேற்கொண்டு பேசலாம்.
'இதோ வந்துட்டா பார். என்னோட செல்லம் வந்துட்டாலே செல்வம் வந்துடும். நீ வேணா பாரு.'
'ஏன்னா என் தலைய உருட்டறேள். எங்க வந்தாலும் உங்க அசட்டுத் தனம் மாத்திரம் போகவே போகாதே?'
'அது இல்லடி, GS பேயறஞ்ச மாதிரி பேசிண்டிருந்தான். அதான் உனக்கு எங்காத்து செல்லம்தான் லாயக்குன்னு சொல்லிண்டிருந்தேன். இன்னிக்கு என்ன பண்ணியிருக்கான் தெரியுமா. வேலைய ராஜினாமா பண்ணப்போறதா ஆஃபீஸ்ல சொல்லிட்டு வந்திருக்கான்.'
'அட ராமா. எல்லாம் நல்ல படியா நடக்கும் மாமா. அவசரப் பட்டு எதுவும் செஞ்சிடாதீங்கோ.'
'இல்ல மாமி. அதெல்லாம் பண்ண மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் தான் இருக்கேளே. எனக்கு என்ன கவலை.'
இறக்கி வைத்த பாத்திர மூட்டைகளையும், ட்ரங்க் பெட்டிகளையும், கார்ட்டன் பாக்ஸுகளையும் ஒவ்வொன்றாக பிரிக்கிறார்கள். பாத்திரங்கள் ஒவ்வொன்றாக எடுக்க எடுக்க வாலாம்பாளின் நினைவுகள் விஸ்வரூபம் எடுக்கிறது.
ஒரு கட்டத்தில் குலுங்க குலுங்க அழுகிறார் கணபதி சுந்தரம்.
'வாலு. எனக்கு சாமர்த்தியம் பத்தாதுன்னு இத்தனை பாத்திரங்கள சேர்த்து வெச்சிருக்கியேடி. அதுவும் எல்லாத்துலேயும் ரெண்டு செட்டா. ஆசை ஆசையா சேர்த்து வெச்சிருக்கியே. குழந்தைகள் கல்யாணத்த பார்க்காம போயிட்டியேடி. எந்த மாதிரி நான் பாவம் செஞ்சிருந்தா இந்த மாதிரி கொடுமைய பகவான் கொடுத்திருக்கான்.'
வாய்விட்டே புலம்புகிறார் கணபதி சுந்தரம்.
'என்னா, அவர சித்த பாருங்கோ. ஆறுதல் சொல்லுங்கோ.'
'ஏய் GS. என்ன ஆச்சு இப்போ. எல்லாம் நல்லபடியா வாலாம்பா மாமி நடத்திக் குடுப்பா. உங்க ஆத்துக்காரி முன்னிலையிலதான உங்க ரெண்டு பொண்கள் கல்யாணமும் நடக்கப் போறது. இப்படி அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டா உடம்புதான் உருகும்.'
ச்சேரிலே அமர்ந்திருந்த GS ஐ பின்புறத்திலிருந்து வந்து அவர் புஜங்களை தட்டிக் கொடுக்கிறார்.
'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ. கணக்கெல்லாம் எடுத்துட்டு ஒன்ன கூப்படறோம் என்ன.'
'அன்னா, பேப்பர் பேனாவ எடுத்துக்கோங்கோ. ஒரு பிள்ளையார் சுழிய போட்டுட்டு நான் சொல்றதையெல்லாம் எழுதிண்டு வாங்கோ... முதல்ல புதுசு பண்ண வேண்டிய பாத்திரங்கள்... என்ன?'
செல்லம் சொல்ல சொல்ல எழுதிக் கொண்டே வருகிறார் பாலு.
'ரெண்டு கல்யாணத்துக்கு யதேஷ்டம். ஒண்ணு கூட புதுசா வாங்க வேண்டாம். மிஞ்சிப் போனா இட்லி தட்டுகள் ஒருத்திக்கு மாத்திரம் வாங்கும் படியா இருக்கும்.'
'செல்லம்.. அங்க ஒரு சின்ன ட்ரங்க் பொட்டி இருக்கே. அத நீ கவனிக்கவே இல்லையா?'
'எடுங்கோ அத. பூட்டிருக்காப்பல இருக்கே. சாவி மாமா கிட்ட கேளுங்கோ. அதையும்தான் பார்த்துடுவோமே.'
'ஏண்டா GS. இதோட சாவி எங்க இருக்குன்னு தெரியுமா?'
ஏதோ ஒரு ட்டின்னை எடுத்து வருகிறார். உபயோகப் படுத்தாமல் துரு ஏறியிருந்த சாவிகள் அதில் ஐப்பதுக்கு மேல் இருந்தன. ஒன்று கூட அந்த ட்ரங்க் பொட்டியை திறக்க உபயோகப் படவில்லை.
கடைசியில் சுத்தியல் வைத்தியம் உதவியது.
திறந்தவுடன் அவர்கள் கண்களில் பட்டது ஒரு ஸீலிட்ட கவர்.
'ஏதோ லெட்டர் மாதிரி இருக்கே. கொஞ்சம் பிரிச்சு என்னன்னு பாருடா GS. மாமிதான் ஏதோ எழுதியிருப்பான்னு நெனைக்கிறேன்.'
உதடுகளில் நடுக்கம். நெஞ்சில் பட படப்பு. கண்களில் கலக்கம். மனம் முழுவதும் வாலுவின் வியாபிப்பு. கணபதி சுந்தரத்தின் கைகள் அவரையும் அறியாமல் நடுங்குகின்றன.
பிரித்துத் தானே ஆகவேண்டும். பிரிக்கிறார்.
'அன்புள்ள குமுதாவுக்கு....'
'கடுதாசி கூட எனக்கில்லையா வாலு. எப்போதுமே பொறுப்பில்லாதவன்னு என்ன நெனச்சுட்டியா?'
மனதுக்குள் சிறு வருத்தம்.
படிக்கிறார்.
தொடரும்....
No comments:
Post a Comment