எண்ணப்பறவை_38
பவானி வந்துவிட்டு சென்றவுடன் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
'அப்பா, குமுதாவுக்கு நல்ல பொருத்தமான ஜாதகமாத்தான் தேடிக் கொண்டுவந்திருக்கேள்.'
யதார்த்தமான அமுதாவின் கேள்விக்கு கொஞ்சம் வித்தியாசமான பதில் வந்தது கணபதி சுந்தரத்திடமிருந்து.
'எல்லா அப்பா அம்மாவும் நூறு ஜாதகம் தேடி பத்து ஜாதகத்தை ஸெலக்ட் பண்ணி மூணுக்கு ப்ரையாரிடி கொடுத்து குழந்தைகளோட டிஸ்கஸ் பண்ணும்போது நன்னாத்தானே இருக்கும்? குழந்தைகளும் நம்பிக்கை வைக்கணும் பெத்தவா மேல. அத உட்டுட்டு தனக்கு எல்லாம் தெரியும்னு அதுகளே தீர்மானிச்சா நன்னாவா இருக்கு?'
நிலைமை வேறு மாதிரி போவதற்குள், 'அமுது செல்லம். நீ போய் ரவா உப்மாக்கு ஏற்பாடு பண்ணு. சாதம் பத்தாதுன்னு நெனைக்கறேன்.'
'அப்பா, அது ஏதோ தான் மனசுல பட்டது சொல்லறது. ஏம்ப்பா இப்படி இருக்க. இப்படியெல்லாம் பேசி அவ தனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லணும்னு எதிர்பார்க்கறேளா. நான் இனிமேல உங்க வாயால இந்த மாதிரி இப்படி பேசறத கேட்டுண்டு இருக்க முடியாது. அப்படித்தான் பேசுவேன்னு முரண்டு பிடிச்சா எனக்கும் கல்யாணம் கார்த்தி வேண்டாம். எப்போதும் போலவே நாம சந்தோஷமா இருப்போம்.'
'நான் ஒண்ணும் தப்பா....'
'போதும்ப்பா. புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு உங்க பொண்கள முட்டாளா நீங்க வளர்க்கல.'
கோபத்தோடு சொல்லிவிட்டு சமையல் அறை சென்றாள். அங்கு ரவை இலுப்ப சட்டியில் வறுபட்டுக் கொண்டிருந்தது.
'உனக்கும் சொல்லிட்டேன் அமுதா. அப்பா ஏதாவது பேசினா எதுத்து பேசப்படாது. அவரா புரிஞ்சிப்பார் உன்னை. அது வரைக்கும் எப்போதும் போல சிரிச்சு பேசிண்டிருக்கணும், என்ன?'
'சரி குமுதா. நம்மாத்துக்கு வந்தாளே அந்த பவானிக்கு என்ன எப்படி தெரியுமாம். கேட்டியா?'
'கேட்க வாயெடுத்தேன் டி குட்டி. அதுக்குள்ள டாப்பிக் மாறிடுச்சு. எங்க போயிடப் போறா? கேட்டுக்கலாம்.'
'குமுதா, நீ ரொம்ப கொடுத்து வெச்சவ. நல்ல மனுஷாளா தான் தெரியறது.'
'ம்ம்ம்... ஆனா என்ன, பிடிச்சிருக்குன்னு அவா எல்லாம் சொன்னதுக்கப்பறம் டௌரி அது இதுன்னு லௌகீகம் பேசும்போது தெரிஞ்சுடும் அவாள்லாம் எந்த மாதிரின்னு.'
'குமுதா, நீ ஏன் எப்போதும் பெஸிமிஸ்டாவே பேசற.'
'பெஸிமிஸ்டா? நானா? டிஸப்பாயிண்ட்மெண்ட்ட தாங்கணும்னா எதிர்பார்ப்புகளையும் ஓவரா ஆசைகளையும் மனசுக்குள்ள போட்டுக்க கூடாது. எல்லாத்தையும் ஓரளவு யோசிச்சு நமக்குள்ளேயே ஒரு தைரியத்தை முன்னாடியே வரவழிச்சிண்டுட்டோம்னா, அட்லீஸ்ட் கவலையையாவது அவாய்ட் பண்ணலாம்.'
'ஆனாலும் நீ சரியான முனிவர் குமுதா. உன்ன மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாதுப்பா.'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல. லவ்வுல மாத்திரம் யோசனைகள் இல்லையா என்ன? ஈர்ப்போ மோகமோ வரணும், நம்பிக்கை கிடைக்கணும், பயம் போகணும், பரஸ்பரம் ஒர்க் அவுட் ஆகணும், சுத்தி இருக்கற தேவதைகள இம்ப்ரெஸ் பண்ணனும்.... இதெல்லாத்தையும் ட்ராவல் பண்றதுக்குள்ள, நீ சொன்னியே, பெஸிமிஸ்ட் சிந்தனைகள், எத்தனை வந்து போகும் தெரியுமா?'
'குமுதா, இப்படியெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுக்காம செல்லமாவே வளர்த்துட்டியே.'
'நானா வளர்த்தேன் உன்ன? ஒருத்தருக்கொருத்தர் பார்த்துண்டோம்னு சொல்றது தான் சரி. அது போகட்டும், அப்பா உப்மா சாப்பிடட்டும். நாம மோருஞ்சாதமா சாப்டுவோம். உப்மாக்கு அப்பா சாம்பாரோ சர்க்கரையோ தொட்டுக்கட்டும், என்ன?'
அப்பா சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் அசதியில் சீக்கிரமே தூங்கி விட்டார். அவர்களின் அரட்டைகள் தொடர்ந்தன.
'சரி, உன் கதையெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?'
'ஓரளவு எழுதிட்டேன். எப்படி முடிக்கறதுங்கறத நெனச்சு நெனச்சு பைத்தியமே புடிச்சிடும் போல இருக்கு. சரி, உன்ன பொண் பார்த்துட்டு போனதுக்கப்பறம் திங்க கெழமேலேந்து ஏதாவது யோசிக்கணும்.'
'ஏண்டி என்ன பொண் பார்க்கறதுக்கும் நீ கதை எழுதறதுக்கும் என்ன சம்மந்தமிருக்கு. நீ பாட்டுக்கும் எழுதலாமே?'
'அது வந்து அது வந்து.... அப்புறம் சொல்றேன்.'
சொல்லிக் கொண்டே குமுதாவின் மடி மீது தலையை வைத்து படுத்துக் கொள்கிறாள். திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.
'ஏய் அசடு. ஏன் அழற? சொல்லிட்டு அழு. நானும் சேர்ந்து அழறேன்.'
'ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல. நத்திங்.'
'நான் ரொம்ப பாவி குமுதா. அப்பா கூட என்ன புரிஞ்சிக்காத பாவியாயிட்டேன்.'
'பாவியாகறதுக்கு நீ் ஒரு தப்பும் பண்ணலியே. அந்த பையனோட அங்க சுத்தி இங்க சுத்தி நாலு பேர் பாத்து... அப்படியெல்லாம் நடக்கலையே. அப்பா தன்னோட ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடியாத நிலைமை. அந்த எரிச்சலையும் கோபத்தையும் உன் கிட்ட காட்டறார். அவ்வளவுதான். என்ன பொண்ணு பார்க்க வரப்போறவன் சரின்னு சொல்லிட்டா பழைய படி ஆயிடுவார். நீ வேணா பாரேன்.'
'அப்பா ஒவ்வொரு தடவையும் என்ன ஒரு மாதிரி பார்க்கறது கூட மனச ரொம்ப வதைக்கறது. நான் வேணா, அரவிந்த நான் பண்ணிக்க போறதுல்லன்னு சொல்லிடட்டுமா?'
'ஏண்டி ஒரு சின்ன விஷயத்த கூட பொறுத்துக்காம விளையாட்டுக் கொழந்தையா இருக்கியே. அன்னிக்கு அந்த பையன், அதான் உன் ஆளு, நம்மாத்துக்கு வந்துட்டு போனோண்ண பையன் பிரமாதம் அப்படி இப்படின்னு பேசலையா? இப்ப மட்டும் புடிக்காம போச்சாக்கும் நாலஞ்சு நாளுலேயே. அப்பாவுக்கு உனக்கும் எல்லாம் தோதா வந்தா அரவிந்துக்கு பண்ணி வைக்கணும்னு தான் மனசுல இருக்கு. நல்ல வரன் கைய விட்டு போக கூடாதுன்னும் இருக்கு. ஆனா பணம் பத்தாம இருக்கு போல இருக்கு. எனக்கு என்னவோ அப்படித்தான் தோணறது. பார்க்கலாம்.'
'இல்ல குமுதா. அரவிந்துக்கு ஹெல்ப் பண்ணினதோட நின்னுருக்கணும். வீணா அவனை நெனச்சு கதை எழுதப் போய், அவனையே நெனச்சுண்டு....'. சொல்லிவிட்டு முகத்தில் தன் இரு கைகளாலும் அடித்துக் கொள்கிறாள்.
'அமுதாஆஆஆஆஆ. என்ன இது? பைத்தியமா நீ'
'ஆமாம். பைத்தியம்தான். சுயநலமா இருக்கற பைத்தியம்தான். எல்லாருக்கும் பிரச்சனையா இருக்கற பைத்தியம்தான்.'
'சத்தம் போடாத. மெள்ள மெள்ள. அப்பா நல்லவேள அசந்து தூங்கறா. முழிச்சிண்டு வரப்போறா. கன்ட்ரோல் யுவர்ஸெல்ஃப். கண்ண தொடச்சுக்கோ சொல்றேன்.'
சொல்லிக் கொண்டே அவளை அணைத்துக் கொள்கிறாள் குமுதா. அவள் கண்களை தன் புடவைத் தலைப்பால் தானே துடைத்து விடுகிறாள், அமுதாவின் திமிறல்களையும் மீறி.
'சரி, நீ இப்படியெல்லாம் நெனச்சிண்டு அழுதுண்டிருந்தா எனக்கு கல்யாணம் எதுவும் வேண்டாம். நான் நாளைக்கு அப்பாகிட்ட சொல்லிடறேன்.'
'வேணாம் குமுதா. நல்ல வரனா இருக்கு. நான் இனிமே உன்ன குழப்பமாட்டேன்.'
'அமுதா செல்லம். நீதாண்டி எனக்கு எல்லாம். நான்தான் உன் கிட்ட சொன்னேனோண்ணோ? நான் பார்த்துக்கறேன்னு. கொஞ்சம் அமைதியா இருடா. நீ ஒரு தப்பும் பண்ணல. இந்த வயசுல ஒரு ஈர்ப்பு வரது சகஜம். பேசிப் பார்ப்போம். கவலப் படாதே. எல்லாம் நல்ல படியா நடக்கும். அமைதியா தூங்கு இப்பொ.'
அரைத் தூக்கத்தில் அமுதாவின் விசும்பலில் முழித்துக் கொண்ட கணபதி சுந்தரம் காதுகளில் விழும் இவர்களது பேச்சுக்களை கேட்டுக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டுதான் படுத்துக் கொண்டிருந்தார்.
'சின்னவா கிட்ட இருக்கற பொறுப்பு கூட என் கிட்ட இல்லாம போச்சே! நாம எவ்வளவு தப்பு பண்ணிண்டு இருக்கோம்? ரெண்டு குழந்தைகளுக்கும் வீடு தேடி வரன்கள் வரும்போது அத முடிக்க முடியாம கையாலாகதவனா வெச்சுட்டியே இப்படி? நல்ல கொழந்தைகளா கொடுத்த எனக்கு அதுங்களுக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வைக்க யோக்யத இல்லாம பண்ணிட்டியே இப்படி.'
அவர்கள் உறங்கி விட்டார்கள். இவர் உறங்க முடியாமல் புரண்டு புரண்டு....
தொடரும்....
No comments:
Post a Comment