Sunday, March 6, 2022

எண்ணப்பறவை_37

எண்ணப்பறவை_37

'எத்தனை மணி நேரம் கண்ணாடியையே பார்த்துண்டிருப்ப.  இப்பவே மணி ஏழாகப்போறது.  எப்ப திரும்பி வரது இப்படி லேட் பண்ணிண்டிருந்தா?'

குமுதாவின் அதட்டலுக்கு 'எஸ் கமிங்' என்பதே அமுதாவின் குரலாக இருந்தது.

'அப்பா, பசிச்சுதுன்னா எங்களுக்காக வெயிட் பண்ணாதீங்கோ.  நீங்க எடுத்துப் போட்டுண்டு சாப்புடுங்கோ.'

கிளம்பி வாசலில் குமுதா நின்று கொண்டிருந்த போது ஒரு இளம் தம்பதியினர் கைக் குழந்தையோடு வந்தனர்.

'கணபதி சுந்தரம் மாமா இருக்காரா?'

'இருக்கார்.  உள்ள வாங்கோ.'

உள்ளே நுழைந்ததும், 'சார் என் பேர் அனந்த கிருஷ்ணன்.  இவ என் ஆத்துக்காரி பவானி.  நேத்திக்கு திருக்காட்டுப் பள்ளியில இருக்கர எங்க மாமனாராத்துக்கு போனேள் இல்லையா?'

'வாங்கோ வாங்கோ...  நீங்கதான் அவாத்து மாப்பிள்ளையா?  குமுதா, நான் சொல்லல அந்த மாமாக்கு ஒரு பொண் அஷோக் நகர் பக்கத்தில  ஜாகை இருக்கான்னு சொல்லல. அவாதான் இவா.'

'குமுதா!!!  நீங்கதானா அது.  உங்க தங்கை அமுதா எங்க?'

'உள்ள இருக்கா. அவள எப்படி .... உங்களுக்கு.'

'அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.  முதல்ல வந்த விஷயத்த பேசுவோம்.'

அமுதா வந்தாள் அங்கு.  குமுதா வந்தவர்களை தெரியுமா என்பது போல ஜாடை காட்ட அவள் உதட்டைப் பிதுக்க...

'எனக்கு அமுதாவ தெரியும்.  ஆனா அவளுக்கு என்ன தெரியாது.  போதுமா?  நான்தான் சொன்னேனே இதப் பத்தி அப்புறம் சொல்றேன்னு.'

'சாரி மேடம்.  ஒரு க்யூரியாஸிடி எங்க அக்காவுக்கு..'

'அது என்ன மேடம்?  என்னை பவானின்னே கூப்பிடலாம்.  ரொம்ப பயமா இருந்தா அக்கான்னு கூப்புடு அமுதா.'

அனந்த கிருஷ்ணன் கையில் இருந்த குழந்தை கையையும் காலையும் ஆட்டி ஒரு தாவல் குமுதாவை நோக்கி.  வாங்கிக் கொண்டாள்.

என்னமோ தெரியவில்லை.  அவள் கையில் விடாமல் குதித்துக் கொண்டு பெரிதாக சிரிப்பு.

'இப்பவே மாமி கிட்ட ஒட்டிண்டுட்டாண்டி பவானி.'

'சித்த பேசாம இருக்கேளா?  குமுதா இப்படியெல்லாம் பேசினா வெக்கப்பட்டுண்டு அப்புறம் ஃப்ரீயா பேச மாட்டா.'

வெட்கம் சூழ்ந்து கொண்டது குமுதாவை.  குழந்தையை சுமந்து கொண்டு சமையல் அறை சென்று விட்டாள்.

'மாமா, எங்க அப்பா அம்மா நாளைக்கு கார்த்தால எங்காத்துக்கு வரா.  அப்பாதான் உங்க ஆம் சின்னதா இருக்கும்னு நீங்க சொன்னதா சொன்னா.  வேணும்னா நீங்க உங்க மனுஷாள அழச்சிண்டு எங்காத்துக்கு வந்துடுங்கோளேன்.  நம்மாம் பெரிசா இருக்கும்.'

'அது நன்னா இருக்காதேம்மா.  எங்காத்துல நாங்க மூணு பேர்.  அப்புறம் குழந்தைகளுக்கு இங்கே தெரிஞ்சவா.  இடம் சின்னதா இருக்கறதால அங்கங்க இருக்கற எங்க சொந்தக்காரா கிட்ட சொல்லல.  நிச்சயதார்த்தத்துல சொல்லலாம்னு இருக்கேன்.  சமாளிச்சுடலாம் இந்த எடத்துலேயேன்னு குழந்தைகள் சொல்றா.'

'சரி மாமா.  ஃபார்மாலிடியெல்லாம் பார்க்க வேண்டாம்.  எங்காத்துலேயே வெச்சுக்கலாம்.  இன்னொரு தடவையும் சொல்றோம்.'

'தேவைனா கண்டிப்பா சொல்றோம்.'

'நம்மாத்து அட்ரெஸ குறிச்சிக்கோங்கோ மாமா.'

பிறகு அனந்த கிருஷ்ணனும் கணபதி சுந்தரமும் பேச ஆரம்பிக்க பவானி சமையலறைக்கு செல்கிறாள்.

அங்கே அவள் குழந்தை குமுதா தோளில் அமுதாவின் விளையாட்டுக்கு துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்.

'ஆச்சர்யமா இருக்கு குமுதா.  வெளி மனுஷாள பார்த்தா கத்தி தீத்துடுவான்.  உன் கிட்ட வஜ்ரமா ஒட்டிண்டிருக்கானே.'

'குமுதா எப்போதுமே எல்லா குழந்தைகளுக்குமே அம்மா.  என்னையும் சேர்த்தே சொல்றேன்.'

வந்த வெட்கம் புன்முறுவலில் சமாளிக்கிறது.

'நீங்க வரது தெரியாது.  குழந்தைக்கு ஏதாவது வாங்கிண்டு வரேன்.  அதுவரைக்கும் குமுதாவோடு பேசிண்டிருக்கேளா?'

'எதுக்கு அதெல்லாம்.'

'இல்ல இல்ல.  நீங்க பேசிண்டிருங்கோ.  நான் இதோ வந்துடறேன்.'

'சரி அமுதா.  நானும் உங்காத்துக்கு வரும்போது ஏதோ நெனப்புல பெப்பரப்பேன்னு வெறும் கையோட வந்துட்டேன்.  இந்தா பணம்.  ஒரு டஸன் வாழப்பழமும் பூவும் வாங்கிண்டு வந்துடறையா?'

'பணமெல்லாம் வேணாம்.  நான் வாங்கிண்டு வரேங்க்கா.'

'அக்கா?  தட்ஸ் பெட்டர்'

'பாவம் நீங்க ரெண்டு பேரும் ட்ரெஸ் பண்ணிண்டு கிளம்பிண்டிருக்கற மாதிரி தெரியறது.  நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?'

'அதெல்லாம் ஒண்ணுமில்லை அக்கா.  ஷாப்பிங்தான்.  நாளைக்கு போயிக்கறோம்'

அமுதா கடைக்கு சென்றவுடன் குமுதா அவளை அழைத்துக் கொண்டு படுக்கும் அறைக்கு அழைத்துச் சென்று இருவரும் அமர்ந்து கொள்ள பாயை விரித்தாள்.  குழந்தையையும் இடுப்பிலிருந்து இறக்கி வைத்தாள்.

இறக்கி வைத்த அடுத்த நொடி சூடான வெந்நீர் பாய் முழுவதும். அவன் உபயம்.

அவளிடமிருந்து அவனை வாங்கிக் கொண்டாள் குமுதா அந்த இடத்தை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக.

'வேணும்னா வேற பாய்..?'

'பரவாயில்லை.  இதிலேயே ஒக்காந்துக்கலாம்.  அதான் தொடச்சுட்டேளே.'

'யூ லுக் க்ரேட் குமுதா.  எங்க அண்ணாக்கு உன்ன ரொம்ப பிடிச்சிடும்.  டேக் மை வோர்ட்.'

கேட்டுக் கொண்டாள்.  புன்சிரிப்பு மிகவும் லேசாக.

'என் அண்ணா வெரி ஹோம்லி.  ரொம்ப ஃப்ரெண்ட்ஸெல்லாம் வெச்சுக்க மாட்டான்.  நோ வைஸஸ்.  என்னோட ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் படி பார்த்தா நீங்க கூட மோர் ஆர் லெஸ் ரிஸர்வ்ட் தான்னு நெனைக்கிறேன்.'

மீண்டும் மௌனம்.  பதில் இல்லை.  ஆனாலும் வெட்கப் புன்னகை அவளிடமிருந்து அவளுக்கு உணர்த்திக் கொண்டேதான் இருந்தது பதிலாக.

'ஆனா நான் அப்படியில்ல.  மழை பெஞ்சிண்டே இருக்கற மாதிரி பேசிண்டே இருப்பேன்.  கிட்டத்தட்ட உன் தங்கை மாதிரின்னு வெச்சுக்கோங்களேன்.'

குமுதாவிற்கு பவானியிடத்தில் கேட்க வேண்டும் என்று உறுத்திக் கொண்டிருந்த கேள்வி, 'எப்படி அமுதாவை தெரியும்?'.  

'கொஞ்சம் வெயிட் பண்ணலாம் அவளாக சொல்கிறாளா என்று.  சொல்லலைனா நாமே கேட்டுட்டா போச்சு.'

'சரி, நீங்க ரொம்ப நன்னா பாடுவேளாமே.  அப்பா சொன்னா.  ஞாயித்துக் கிழமை ஒரு கச்சேரி இருக்குன்னு சொல்லுங்கோ.  ராமனுக்கும் சினிமா பாட்டுன்னா உசுரு.  அவனுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு என்ன தெரியுமோன்னோ?  சுசீலா பாடின ராமன் எத்தனை ராமனடி தான்.  அவன் பாடினாலே நாங்க காதை பொத்திண்டிடுவோம்.  அவ்வளவு தடவை அவன் பாடி கேட்டாச்சு.  அதையே எடுத்து விடுங்கோ.  ராமன் க்ளீன் ஸரண்டர்.  ஆனா ஒண்ணு, கல்யாணத்துக்கு அப்புறமும் டெய்லி ஒரு தடவை பாடச் சொல்லுவான்.'

குனிந்து கொண்டு சிரிக்கிறாள் லேஸாக.

'எவ்வளவு பெரிசா ஜோக் அடிக்கறேன்.  இப்ப கூட வாய் விட்டு சிரிக்க மாட்டேளா?  ம்ம்ஹூம்.. நீங்க எனக்கு சரிப்பட்டு வரமாட்டேள்.'

'காஃபி சாப்பிடறேளா?  வந்ததுலேந்து ஒண்ணுமே உங்கள கேட்கல.  சாரி.'

'அப்ப்ப்பா..  பரவாயில்லையே.  பேசியாச்சே.'

'எங்காத்துக்காரர் காஃபி பைத்தியம்.  எனக்கு பால்.  சடர்னா வந்திருக்கோம்.  அதனால, இஃப் யூ ஆர் கம்ஃபொர்ட்டபிள், ஆட்சேபணை இல்ல.'

'என்னடி கிளம்பலாமா ஆத்துக்கு.  பாவம்டி மாமாவோட பொண்ணு.'

'உங்களுக்கு காஃபி போடறாளாம்.  வேண்டாம்னு சொல்லிட்டுமா.'

'சரி சரி.  காஃபி குடிச்சோண்ண கிளம்பிடணும் என்ன?'

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே சிரிக்கிறாள் குமுதா.

குழந்தையை ஆத்துக்காரர் கையில் கொடுத்து விட்டு சமையல் அறைக்கு செல்கிறாள் பவானி.

'நீங்க இதுவரைக்கும் கேட்கவே இல்லையே எனக்கு அமுதாவை எப்படித் தெரியும்னு?'

இரண்டு புருவங்களும் சற்று தூக்கல் இப்போது.  ஆர்வத்தின் வெளிப்பாடு குமுதாவின் முகத்தில் பட்டவர்த்தனம்.

'எனக்கு இன்னொரு உடன் பொறக்காத சகோதரன் இருக்கான்.  உங்களுக்கும் தெரியும் அவனை.  அதான், அரவிந்த்.  எங்க ஆத்துக்காரரோட வேல பார்க்கரான்.  நல்ல பையன்.'

இப்படி ஆரம்பித்தவள் அன்று அரவிந்த் அம்மா அவள் அகத்துக்கு வந்து விட்டு போனதைப் பற்றி சொல்கிறாள்.

'கடவுள் பார்த்தேளா, எவ்வளவு நெருக்கமா நம்ம எல்லாரையும் இணைச்சிருக்கார்.  நாம எல்லாம் சேர்ந்து அரவிந்த் அமுதா கல்யாணத்த நடத்தி வைக்கணும். என்னடா, பட்டுன்னு எல்லாத்தையும் போட்டு உடைக்கிறாளேன்னு நெனைக்கப் படாது.  நான் உள்ள ஒண்ணு வெச்சிண்டு வெளிய ஒண்ணு பேசரவ கிடையாது.'

'நல்ல வேளை என் கிட்ட மாத்திரம் சொன்னேள்.  அப்பாகிட்ட நான் இதப் பத்தி தனியா பேசணும்.  அவரோட வசதியையும் பார்க்கணும் இல்லையா?  நிச்சயம் தேவைப் படும் சமயத்துல உங்கள கூப்டுக்கறேன்.'

'நான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேனா?'

'எப்படி இருந்தாலும் நாளைக்கு ப்ரியா மூலம் அமுதாவுக்கு தெரியத்தான் போறது திங்க கிழம ஆஃபீஸ் போறச்ச.  இருந்தாலும் இப்ப இதப்பத்தி அப்பாக்கு முன்னாடி பேசவேண்டாம்னு பார்க்கறேன்.  தப்பா நெனைக்காதீங்கோ.'

காஃபி ஸ்டூலில் அனந்த கிருஷ்ணன் முன்னால் வைக்கப் படுகிறது.

'மன்னி, யூ ஆர் க்ரேட்.  என்ன அழகா யோசிக்கறேள்.  இன் ஃபேக்ட் நானும் அவரும் முடிஞ்சா இன்னிக்கே அரவிந்த் விஷயமா பேசலாம்னு வழி நெடுக பேசிட்டு வந்தோம்.'

'என்ன, மன்னின்னு இப்பவே கூப்டுட்டேன்னு பார்க்கறேளா.  எனக்கும் இன்னொரு தாயா நீங்கதான் எங்காத்துக்கு வரணும்.  நான் உங்கள இது வரைக்கும் பேர் சொல்லி கூப்பிட்டதே தப்பு.'

கண் அயர்ந்து அனந்த கிருஷ்ணன் மடியில் இருந்த கண்ணனை தூக்கிக் கொள்கிறாள் பவானி.

கடைக்கு சென்று திரும்பிய அமுதாவின் கைகளில் இருந்த சாக்லேட் பிஸ்கெட்டுகளை வாங்கிக் கொள்கிறாள்.  பழங்களையும் பூச்சரங்களையும் குமுதாவின், சாரி, மன்னியின் கைகளில் கொடுக்கிறாள்.

வாசல் வரை அனைவரும் வந்து அவர்களை வழி அனுப்புகின்றனர்.

தொடரும்....

No comments:

Post a Comment