Saturday, March 5, 2022

எண்ணப்பறவை_36

எண்ணப்பறவை_36

அப்பா கிளம்பிய மறுநாளுக்கும் மறுநாள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த குமுதாவுக்கு அப்பாவைப் பார்த்தவுடன் ஆச்சர்யம்.

'என்னப்பா, அதுக்குள்ள?'

'சந்தோஷமான சமாச்சாரம் டி.  உள்ள வா.  பேசலாம்.  அவ எழுந்துட்டாளா?'

'அப்பா, அவ கூட பேசிட்டேன்.  அப்புறம் சொல்றேன்.  அவள ஒண்ணும் சொல்லாதீங்கோ.  வாங்கோ உள்ள'.

உள்ளே வந்தவர் பேச ஆரம்பித்தார்.

'இங்கேந்து போனேனா.  கார்த்தாலையே விசு மாமாவ பார்த்தேன்.  சித்த நாழிலேயே ரெண்டு பேரும் கார ஒண்ணு வாடகைக்கு எடுத்துண்டு திருக்காட்டுப்பள்ளி போய் பையனோட அப்பா அம்மாகிட்ட பேசினோம்.  வரன் பிரமாதமா இருக்கு.  அமஞ்சுதுன்னா நாம கொடுத்து வெச்சவா.'

'அவாளுக்கு அங்க தோப்பு தொரவெல்லாம் இருக்கு.  பரம்பரையா வீடு இருக்கு.  மாமியும் மாமாவும் அவ்வளவு தங்கமா பேசறா.  ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொண்ணு கல்யாணம் பண்ணியிருக்கா.  மெட்ராஸுல நம்மாத்துக்கு பக்கத்துல தான் அஷோக் நகர் பக்கத்துல இருக்காளாம் ஜாகை.'

'பையனுக்கு முப்பத்தோரு வயசாகறது.  பேர் ராமச்சந்திரன்.  செல்லமா ராமன்னு கூப்படறா.  பாடில இருக்கற டி.வி.எஸ். கம்பெனியில அஸிஸ்டன்ட் இஞ்சினியரா இருக்கான்.  ஷிஃப்ட் ட்யூட்டியாம்.  நல்ல சம்பளமாம்.'

பேசிக் கொண்டு இருக்கும்போதே அமுதா தூங்கி எழுந்து வந்து அப்பாவின் பேச்சுக்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

'அமுது குட்டி, பல்லு கில்லு தேச்சிட்டு வா.  எல்லாருக்கும் காஃபி போடறேன்.'

'பரவாயில்ல குமுதா.  லேட்டாவே சாப்பிடுவோம்.'

கணபதி சுந்தரமோ பேச்சை தொடருவதிலேயே கவனமாக இருந்தார்.

'எதுல உட்டேன்..  எஸ்.  ஷிஃப்ட் ட்யூட்டியாம் பையனுக்கு.  பாடியில் ஃபேக்டரிக்கு பக்கத்திலேயே தனியா ஒரு தனி ரூம் எடுத்துண்டிருக்கானாம்.'

'திருச்சி ஆத்துலேந்து கிளம்பும்போதே நீயும் அம்மாவும் எடுத்துண்ட ஃபோட்டோவ எடுத்துண்டு போனேன்.  மாமிக்கு பரம சந்தோஷம்.  நன்னா இருக்கா பாந்தமா பதிவிசா இருக்கா லக்ஷணமா இருக்கான்னு சொல்லிண்டே இருந்தா.  அவனுக்கு பிடிச்சி போச்சுன்னா இவ தான் எங்காத்துப் பொண்ணுன்னு சொன்னா.  கண்ணுல எனக்கு ஜலமே வந்துடுத்து.  அப்புறம் அம்மாவப் பத்தி சொன்னேன்.  வருத்தப்பட்டா ரொம்ப.'

சந்தோஷத்தில் பட பட வென்று எல்லாவற்றையும் ஒண்ணு விடாமல் சொல்ல நினைக்கிறார்.

'இருப்பா, காஃபி போட்டுட்டு வரேன்.'

'குமுதா இப்ப சமையல்கட்டா முக்கியம்.  காஃபியெல்லாம் மெள்ள போட்டுக்கலாம்.'

அவருடைய செல்லக் கோபம் சிரிப்பைத் தருகிறது குமுதாவிற்கு.  'அப்பாவுக்கு எப்படி இப்படி ஒரு சந்தோஷம்?  ஏதோ கல்யாணமே நடந்துட்ட மாதிரி.'

'வர ஞாயித்துக் கிழமை பொண் பார்க்க வரலாமான்னு கேட்டா.  நானும் சரின்னுட்டேன்.  அவா பையனை அவா பொண்ணாத்துக்கு வர சொல்லிடறாளாம்.  அப்புறம் எல்லாரும் சேர்ந்து மத்யானம் மூணு மணிக்கு நம்மாத்துக்கு வரேன்னு சொன்னா.'

'ஏம்ப்பா, அவா கூட்டமா வந்தா இந்த இத்துணூண்டு எடம் போதுமா?  நீங்க பாட்டுக்கு சரின்னு சொல்லிட்டேளே.'

'நான் சொல்லாம இருப்பேனா குமுதா.  அதெல்லாம் பரவாயில்லைனு சொல்லிட்டா.'

'அப்பா, நீங்க கவலப் படாதீங்கோ.   நான் எல்லாத்தையும் கவனிச்சிக்கறேன்.'

அமுதா இப்படி சொன்னதும், 'குமுதா, நீ வேலை பார்க்கறியான்னு அவா கேட்டா.  நான் சொற்ப சம்பளத்துக்கு பொழுது போகறதுக்காகத்தான் பக்கத்துலேயே வேலைக்கு போயிண்டிருக்கறதா சொன்னேன்.'

அவர் சொன்னது அமுதாவிற்கு சுருக்கென்றது.  'ஒரு வேளை என் உத்யோகம் குமுதாவிற்கு தடையாக....?' அப்பா சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

'நான் சொன்னதுக்கு பதில் சொல்லாம அப்பா ஏன் குமுதாகிட்ட டாபிக் மாத்தி பேசணும்?'

கண்ணில் தெரியும் வருத்தத்தை குமுதா பார்ப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்து பாத்ரூம் பக்கம் செல்கிறாள்.

'ஏம்ப்பா, வேலை பார்க்கற பொண்ணுதான் வேணுமா அவாளுக்கு?'

'பார்த்தாலும் ஓகே பார்க்கலைனாலும் சரிங்கறா.  வேலை பார்த்து ஒண்ணுமாகப் போறதில்ல.  ஆத்துப் பொண்ணா இருந்தா போதும்னு சொல்றா.'

'இவ்வளவு சொல்றேன்.  உனக்கு இந்த வரன் பிடிச்சிருக்கோன்னோ?'

'நீங்க கடுமையா முயற்சி செய்யறேள்.  பார்க்கலாம்ப்பா.'

'அப்பா நீங்க காலை நீட்டி கட்டில்ல படுத்துக்கோங்கோ.  அசதி கொஞ்சம் போகட்டும்.  காஃபி ரெடியாணோண்ன எடுத்துண்டு வரேன்.'

'சரி குமுதா.  பையில கொஞ்சம் திருநெல்வேலி அல்வா வெச்சிருக்கேன்.  எடுத்துக்கோ.'

அடுப்பில் பாலை வைத்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த அமுதாவிடம், 'அப்பா உன்ன சரியா புரிஞ்சுக்கல.  இன்னும் கோபத்திலேயே இருக்கா.  நீ வருத்தப் படாத.  எல்லாம் சரியாயிடும்'.

'இல்ல குமுதா.  உன்ன பொண் பார்க்க அவா வரும்போது நான் இங்க இருக்கறது நன்னா இருக்காதுன்னு நெனைக்கறேன்.  அப்புறம் என்னால ஒரு தடை வந்துடக் கூடாது.'

'போடி பைத்தியமே.  நீயே ஏதேதோ கற்பனை பண்ணிண்டு.  இன்னொரு பொண்ணு எங்கேன்னு அவா கேட்டா இல்ல இல்ல எங்க உங்க பையனுக்கு அவளையும் அவ உத்யோகத்தையும் புடிச்சிடுமோன்னு நாங்க தான் அவள அனுப்பிட்டோம்னு சொல்லச் சொல்றையா?  அந்த மாதிரி ஒரு வேளை வரவன் சொன்னான்னா அவன் இந்த குடும்பத்துக்கே மாப்பிள்ளையாகறத நான் விரும்ப மாட்டேன்.  வீணா வருத்தப் பட்டுண்டு மூஞ்சிய தொங்கப் போட்டுண்டு அலையாத.'

குமுதா அப்படிச் சொன்னதும் தாரை தாரையாக வந்த கண்ணீரும் விசும்பலும் அமுதாவை கட்டுப் படுத்த முடியவில்லை.

'அமுதா, கொஞ்சம் அமைதியா இரு.  எல்லாம் சரியாயிடும்.  வருத்தப் படாத.  ஏதோ சரியா புரிஞ்சிக்காம அப்பா சஞ்சலப் பட்டுண்டு இருக்கா.  பையனாத்துல என்ன பொண் பார்த்துட்டு போகட்டும்.  அதுக்கப்பறம் அப்பாவோட ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கலாம்.'

'நான் ஒரு தப்பும் பண்ணலையே குமுதா.  அப்பா ஏன் சரியா பேச மாட்டேங்கறா?'

'எனக்கு தெரியும் உன் மேல எந்த தப்பும் இல்ல.   ஆனா அப்பா சரியா புரிஞ்சுக்கல.  எல்லாம் சரியாயிடும்.  அழக்கூடாது.  நீ ஆஃபீஸுக்கு கிளம்புற வழிய பாரு முதல்ல.  எதையும் மனசுல வெச்சுக்காத.  என்ன நம்பு.  நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும்.'

'என் மேல தப்பு எதுவும் இல்லேங்கறத நீ புரிஞ்சிண்டிருக்கியே.  அது போதும் எனக்கு.'

'சரி.  விடு.  சாயந்திரம் சீக்கிரம் வா.  நாம ரெங்கநாதன் தெருவுக்குப் போய் ஏதாவது நாலு கவரிங் நகை வாங்கிண்டு வரலாம்.  அப்பாவோட நீ சாதாரணமா பேசிண்டிரு.  அழக்கூடாது.  ஏதோ கிரகக் கோளாறு.  அவ்வளவுதான்.  எல்லாம் சரியாயிடும்.'

தொடரும்....

No comments:

Post a Comment