எண்ணப்பறவை_35
இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வாசல் படியில் சற்று உட்கார்ந்தாள் அமுதா. தனியாக உட்கார்ந்தாலே சிந்தனை பற்றிக் கொள்ளுமே!
'அப்பா பார்த்துண்டிருக்கற இடம் மாத்திரம் குமுதாவுக்கு ஆண்டவன் புண்ணியத்துல அமஞ்சுடுத்துன்னா..?'
நினைக்கும்போதே ஒரு சந்தோஷம்.
'மெள்ள நம்ம மேட்டர ஆரம்பிக்கணும் குமுதாவுக்கு நிச்சயம் ஆன உடனே.'
நினைக்கும்போதே இதழோர சிரிப்பு.
'ஏண்டி தூங்கப் போகலையா? கார்த்தாலேந்து வேல பார்த்துருக்க. டயர்டா இருக்குன்னு அப்பவே சொன்னியே டி.'
உள்ளே வந்து குமுதாவின் கன்னத்திலே அழுத்தி ஒரு கிள்ளு. 'ஏய் ஏய்.. கன்னம் கையோட வந்துடப் போறது. வலிக்கறது டி.'
'அத்திம்பேர் கிள்ளறதா நெனச்சுக்கோ வலிக்காது.'
'போதும் போதும் அசடு. உள்ள வா. ரெண்டு போடறேன்.'
'மாப்பிள்ள பையன் விவரம் ஏதாவது சொன்னாரா அப்பா?'
'இப்பவே ரொம்ப கற்பனைய வளர்த்துக்காத. இந்த விஷயத்த கேள்விப் பட்டதிலேந்தே ஒரு மாதிரியாத்தான் இருக்க நீ. என்ன லைன் க்ளியராகதேன்னு சந்தோஷமாக்கும்.'
'இருக்காதா பின்னே?'
'சரிதான். ரெடியா மாப்பிள்ளையோட இருக்கற மாதிரி இருக்கே?'.
'அதெல்லாம் ஒண்ணுமில்லையே? ஏன் இப்படி கேட்கற?'
அமுதா இப்படி சொல்லும்போதே ஒரு பதட்டம். மனதில் சிரித்துக் கொண்டு சற்று சீண்டிப் பார்க்க நினைக்கிறாள்.
'எனக்கென்னவோ ஞாயித்துக் கிழமை வந்தானே ஒருத்தன். அவன் நம்மாத்துக்கு மாப்பிள்ளையா வந்தா நன்னா இருக்குமோன்னு தோணறது. அப்பாவுக்கும் அவன புடிச்ச மாதிரி தெரியறது. எனக்கும் அவன புடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற?'
அவள் தலை சற்று குனிவதைப் பார்த்து சிரிக்கிறாள். அவள் தாவாங்கட்டையை அவள் கழுத்து தாங்கிப் பிடிக்கிறது.
'ஏய்... என்ன இது?'
இப்படிக் குமுதா கேட்டதுதான் தாமதம், அமுதாவின் கண்கள் கலங்கியது.
அவள் முகத்தை தூக்கிப் பிடித்து குமுதா அவள் இடது தோளில் தன் கையைப் பிடித்து அணைத்துக் கொள்கிறாள்.
இப்போது அவள் கலக்கம் விசும்பலை நோக்கி செல்கிறது.
'எனக்கு எல்லாம் தெரியும் டி செல்லம். அழாத. கண்ண தொடச்சிக்கோ. கட்டில்ல உட்கார்ந்து பேசலாம் வா.'
'எனக்கு எல்லாம் தெரியும்!! எப்படி தெரிந்திருக்கும்? ஒருவேளை அபிராமி அக்கா போட்டு ஒடச்சிட்டாளா? ச்சான்ஸ் இல்லையே. என்னையே அக்கா சொன்னாளே ஆத்துல இதப் பத்தியெல்லாம் உளறிண்டு இருக்காதேன்னு! புரியலையே.'
மனதிற்குள் பல கேள்விகள். சிந்தனைகள். போராட்டங்கள்.
அவள் தோளை இணைத்துக் கொண்டே கட்டிலில் அமர்த்துகிறாள் குமுதா.
'ஒளிவு மறைவு இல்லாம நீ பேசினா ஏதாவது செய்யலாம். எப்படித் தெரியும் அரவிந்தை உனக்கு?'
வார்த்தைகள் வரவில்லை.
'சும்மா சொல்லு. நான் யாரு உனக்கு? கூடப் பொறந்த அக்கா தான! என்ன தயக்கம் என்கிட்ட?'
விசும்பல் நின்று தற்காலிக ஜலதோஷத்தில் இருந்தது அவள் மூக்கு.
'நீ நெனைக்கற மாதிரியெல்லாம் இல்ல குமுதா. அரவிந்த பிடிச்சிருக்கு, அவ்வளவுதான்.'
'புரியறது அமுதா. நான் ஒண்ணும் நெனைக்கலையே? பயத்தையும் தயக்கத்தையும் விடு். உண்மையா அவன பிடிச்சிருந்தா அப்பாகிட்ட சொல்லி நான்கு பண்ணிவைக்கிறேன் உன் கல்யாணத்த. துளிக் கூட கவலைப் படாதே.'
மனம் லேசாகிக் கொண்டிருந்தது குமுதாவின் ஒவ்வொரு வார்த்தையும்.
'எத்தனை நாளா தெரியும் அவன. எதையும் மறைக்காம சொல்லு.'
bபேங்கில் அவனைப் பார்த்ததிலிருந்து அவன் வீட்டுக்கு வந்தது வரை சொல்கிறாள்.
'அவன் கிட்டேயும் சொல்லாம எங்க கிட்டேயும் இதப் பத்தி பேசாம இருந்தா தானே கல்யாணத்துல முடிஞ்சுடுக்குமாக்கும்.'
'இல்ல குமுதா. உன் கல்யாணம் முடிஞ்சோண்ண அப்பாகிட்டேயும் உன் கிட்டேயும் பேசலாம்ணு இருந்தேன்.'
'ஏண்டி, அது வரைக்கும் அவாத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டான்னு எப்படி நெனைக்கற? கொஞ்சம் அசட்டுத்தனமா இல்ல உன் நெனப்பு?'
இதற்கு பதில் இல்லை அமுதாவிடம்.
'சரி, ஒன்னோட நெனப்பு எங்க கொண்டு வந்திருக்கு தெரியுமா?'
ப்ரியாவும் அரவிந்த் அம்மாவும் வீட்டிற்கு வந்த்து முதல் அப்பாவுக்கும் அவளுக்கும் நடந்த பேச்சுக்கள் வரை அமுதாவிடம் சொல்கிறாள்.
'நீயே சொல்லு. திடும்னு ஒருத்தர் வந்து உன்ன பொண்ணு கேட்டா அப்பாவுக்கு என்னவெல்லாம் சந்தேகம் தோணும். சரி, ஞாயித்துக் கிழமை அவன் வந்துட்டு போனப்பறமாவது எங்க கிட்ட பேசியிருக்கலாமோன்னோ?'
'தப்புதான் குமுதா. நான் இப்படியெல்லாம் நடக்கும்னு நெனைக்கல. அவாள நான் வந்து பேச சொல்லல.'
'நான் அப்படி ஒன்ன சொல்லலையே. உன்னோட நல்ல எண்ணம் புரியறது. அதாவது என் கல்யாணம் வரைக்கும் பேச வேண்டாம்னு நெனச்சது. ஸப்போஸ் அவனுக்கு அதுக்குள்ள கல்யாணமாகிட்டா நீ பைத்தியம் புடிச்சு பாய சுரண்டுவியா அவன நெனச்சுண்டு.'
'மொதல்ல உன்னோடத காதல்னே என்னால ஏத்துக்க முடியல. ஏதோ அந்த பையன் பார்த்தா நல்லவனா தெரியறான். அதனால பிரச்சனை இல்ல. ஏதோ போட்டடிச்சு பேசிப் பார்க்கலாம். உன் பிரச்சனை என் கிட்ட வந்துடுத்து. நான் என்னால ஆனத முயற்சிக்கிறேன். அப்புறம் பகவான் விட்ட வழி.'
'அப்பாக்கு என் மேல கோபமா?'
'இருக்காதா பின்ன? அவர் பாவம் திருச்சிலே வேல பார்த்துண்டு நம்ம மேல நம்பிக்கை வெச்சி மெட்ராஸுல குடுத்தனம் வெச்சு இந்த மாதிரி குழப்பங்கள்லாம் கேள்விப் பட்டா கோபம் வராதா? அப்பாவ கன்வின்ஸ் பண்றதுக்குள்ள நான் ரொம்ப கஷ்டப் பட்டு போயிட்டேன்.'
'சாரி குமுதா. எனக்காக நீ...'
'அதெல்லாம் வேண்டாம். இனி நடக்க வேண்டியத பார்ப்போம். அப்பா வந்து ஏதாவது கோச்சிண்டா அவரோட சண்ட போடாத. நான் எடுத்து புரியும் படியா சொல்றேன் என்ன?'
'அப்புறம் இன்னோண்ணு. ஒருவேளை என் கல்யாணம் தாமதமாயிடுத்துன்னா அடம்பிடிக்காம நீ பண்ணிக்கோ முதல்ல.'
'இல்ல குமுதா. இது மாத்திரம் என்னால முடியாது.'
'இதோ பார். அந்த பையன் வேற ஊரில் வேலைக்கு போகப் போறான். அவனோட அம்மா அவன் கிளம்பரதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு குறியா இருக்கா. அவன்தான் வேணும்னா, அநாவசியமா அவா கிட்ட கண்டிஷன்லாம் போட்டு கெடுத்துக்காத.'
'அப்ப உன்னோட கல்யாணம்?'
'பரவாயில்ல. லேட்டாத்தான் ஆகட்டுமே. என்ன குடி முழுகிடப் போகறது?
மனம் விட்டு பேசித் தீர்த்தார்கள் இருவரும். தூக்கங்கள் தாமதமானாலும் அமைதியானதாகவே கிடைத்தன இருவருக்கும்.
தொடரும்...
No comments:
Post a Comment