திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −26
தாம் ஹிதமான வார்த்தைகளை எல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்தியும், கொஞ்சமும் சமாதானமடையாமல், தனது கழிந்த காலத்திற்காக ஆதங்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற திருவல்லிக்கேணி அம்மையாரை பரிவு மேலிட நோக்கினார் பெரிய ஜீயர்...
"அம்மணி... இத்தன சோகப்பட்டு ஆகப்போறது எதுவுமில்லை!..
அதனால நீ அதெல்லாத்தையும் மறந்துட்டு, இனி வரும் காலத்துலேயாவது, ஒன்னால முடியற அளவுக்கு ப்ரீதியோட கைங்கர்யம் பண்ணு!..
மீதிய பகவான் பார்த்துப்பான்!.."
....தன்னை தயையோடு ஏறிட்டு, மாமுனிகள் சொன்ன வார்த்தைகள், திருவல்லிக்கேணி அம்மையாரின் வருத்தத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்தன!..
கசிகின்ற தனது கண்களைத் துடைத்துக் கொண்டே, அவள் ஜீயரை ஏறிட்டாள்...
"ஸ்வாமி....
அடியேனாவது?..
ப்ரீதியோட கைங்கர்யம் செய்யறதாவது?..
ஏதோ... எந்திரம் போல கடமைக்காக செய்துதான் அடியேனுக்குப் பழக்கம் ஸ்வாமி!..
அதுல "ஆத்மார்த்தம்"லாம் ஒன்னும் இருக்காது!..
அடியேன் என்ன,
துரும்பு கண்டு மோஹித்தேனோ ஆயியைப் போலே?.."
என்று வழக்கம் போல ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு, ஜீயரின் மறு வார்த்தைக்காகக் காத்திருந்தாள்..
"அம்மணி...இது என்ன வ்ருத்தாந்தம்?..
கொஞ்சம் சொல்லேன்..."
.....அவள் வாயால் கேட்பதற்கு ஆசைப்பட்டு ஜீயர் நியமிக்கவும்,
திருவல்லிக்கேணி அம்மையார் மேலே தொடர்ந்தாள்..
"முதலியாண்டான் ஸ்வாமிகளுக்குக் "கந்தாடை தோழப்பர்"னு ஒரு பேரன் இருந்தார்..
அவருக்குக் காஞ்சி வரதன் பேர்ல எல்லயே இல்லாத காதல் இருந்தது...
தனக்குப் பொறந்த ரெண்டு கொழந்தைகளுக்கும் "வரதன்"னே அவர் பேர் வெச்சார்!..
அவா ரெண்டு பேரையும், எல்லாரும்,
"பெரிய வரதாச்சார்",
"சின்ன வரதாச்சார்"னுதான் கூப்பிடுவா...
தகப்பனார் மாதிரியே, இந்த ரெண்டு கொழந்தைகளும் கூட,
வரதன் மேல அதீத ப்ரேமை வெச்சிருந்தா!..
தினமும் பெருமாளுக்குப் பாங்கா பாலக் காய்ச்சி, தக்கபடி இனிப்பு சேர்த்து,
திட்டமான உஷ்ணத்துல பெருமாளுக்குப் "பாலமுது" சமர்ப்பிக்கறது இவா ரெண்டு பேரோட வழக்கமா இருந்தது..
ஒரு நாள் சின்ன வரதர் பெருமாளுக்குப் பாலமுது கண்டருளப் பண்ணி (நைவேத்யம் பண்ணி) தன்னோட தமையனார்கிட்ட அதக் கொண்டு வந்து கொடுத்தார்..
அப்போ அந்த பால்ல ஒரு சின்ன புல் ஈர்க்கு மிதந்துண்டு இருக்கறத பார்த்த பெரிய வரதர்,
"இது பெருமாளோட தொண்டையிலே குத்தியிருக்குமே!.." னு நெனச்சு, அந்த துக்கத்தால ஸ்மரணை இல்லாம மயக்கம் அடைஞ்சு போனாராம்...
அதப் பார்த்த தம்பியாரும், "ஐயோ!.. என்ன செஞ்சுட்டேன்!.."னு தானும் தன்னோட அபசாரத்த எண்ணி, துக்கத்தால தன் நெனவு இழந்து போயிட்டாராம்!..
இதப் பார்த்த தேவப்பெருமாள்,
"நமக்குத் தாய் போல பரிகிறவர்கள் இவர்களே!.." என்று உகந்து, அவாள "ஆய்"னு அழைச்சாராம்!..
அதுலேந்து, அவாளுக்கு "பெரியாயி", "சிறியாயி" னு பேர் நெலச்சு போயிடுத்தாம்!..
இந்த மாதிரி ஒரு பரிவெல்லாம் அடியேனுக்கு பகவான் கிட்ட இல்லயே ஸ்வாமி!...
பகவான விடுங்கோ!...
என்னோட பாபத்த போக்க வந்த ஆச்சர்யனான உங்க கிட்டயும் எனக்கு அந்த ஸ்ரத்தையும் பக்தியும் இல்லயே.."
.....என்று சொல்லி திருவல்லிக்கேணி அம்மையார் மீண்டும் ஆறாத துயரில் ஆழ்ந்தாள்...
(வளரும்..)
No comments:
Post a Comment