திருவெள்ளியங்குடி ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில் கருடாழ்வார் : --
ஸ்ரீ மன் நாராயணனிடம் இரண்டே திருக்கரங்கள் கொண்டு அவற்றில் வில்லும் அம்பும் தரித்துக் கோலவில்லி ராமனாக தனக்குக் காட்சி தர வேண்டும் என்று வேண்டினான் அசுர குல சிற்பியான மயன். பக்தனது வேண்டு கோளுக்கு இணங்கி, தன் மேற்கரங்களில் இருந்த சங்கு, சக்கரம் ஆகிய ஆயுதங்களை அருகில் இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, மயன் விரும்பிய கோலத்திலேயே அவனுக்குக் காட்சி தந்தாராம் பெருமாள். இதில் பெரிதும் மகிழ்ந்த மயன் அழகிய மதில்கள், சுற்றுப் பிராகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள் என்று இந்த ஆலயத்தை அழகுற அமைத்ததாகத் தல புராணம் கூறுகிறது.
மயனுக்குக் கோலவில்லி ராமனாகக் காட்சி தருவதற்காகத் தன் கைகளில் இருந்த சங்கு மற்றும் சக்கரத்தைக் கருடாழ்வாரிடம் கொடுத்தார் அல்லவா? அப்போது கருடாழ்வார் அதை எப்படிப் பெற்றுக் கொண்டார் தெரியுமா? அமர்ந்த நிலையிலும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் எழுகின்ற நிலையில், பெருமாளிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றுக் கொண்டாராம்!
எனவே, திருவெள்ளியங்குடியில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே அருள் பாலிக்கும் கருடாழ்வாருக்கு நான்கு திருக்கரங்கள். ''இப்படியொரு கோலத்தில் அருள் பாலிக்கும் கருடாழ்வாரை வேறு எங்கும் தரிசிப்பது அபூர்வம். இந்த கருடாழ்வாரை வழிபடுவோர்க்கு சகல நலன்களும் கிடைக்கும். வாகனங்களில் செல்பவர்கள் இவரை வேண்டி வழிபட்டால், விபத்துகள் ஏதும் நிகழாது'' என்பது ஐதீகம். 17.3.22.

No comments:
Post a Comment