பகிர்வு
மாவடு வந்தாச்…
போன வாரத்ல ஒருநாள்..
“ அட ராமா..!. என்னத்துக்கு இப்டி வாங்கின்டு வந்திருக்கேள் , மாவடுக்கள ?.”.
“ ஏம்மா..இதுக் என்ன கொறச்சல்..?.”.
“ இத்தன பெர்சான காம்புங்களோட இருக்கறதயா வாங்குவேள்..?.”.
“ கடைக்காராதாம்மா சொன்னா..’ காம்புங்களோட இருந்தாத்தான் மாவடுங்க கெடாம வருஷக்கணக்கா இருக்கும் ‘ னு..!.”.
“ ம்க்கும்..அது வாஸ்த்தவம்தான். ஆனா , அதுக்குனு இத்தன பெர்சு பெர்சான காம்புங்களோட விக்கறது அவாளோட சாமர்த்யம் – அது தெர்லயா உங்களுக்கு..? “.
“ இதுல என்னமா சாமர்த்யம்..? “.
“ காம்புங்க பெர்சா இருந்தா எடை ஜாஸ்த்தியா காட்டி நமக்கு மாவடுங்க கொறையும்ல..?.”.
“ அட டா..!.ஆமால்ல..இது தெர்யாம போச்சே..! “.
“ சர்ரி , இத எவ்ளோக்கு உங்க தலைல கட்னா..?.”.
“ ம்க்கும் , என் தலைல கட்ட இதென்ன துண்டான்ன..? “.
“ ஜோக்காக்கும்..எனக் சிரிப் வர்ல..கேட்டதுக்கு பதில சொல்ங்கோ..? “.
“ 250 கொடுத்து ஒரு கிலோ வாங்கினேன்…!.”.
“ வாங்கறதுதான் வாங்கினேள்..எடுக்கறச்ச இன்னும் கொஞ்சம் சின்ன சைஸ் மாவடுக்களா எடுத்துக்கறதுதான..பார்ங்க ..இதுல பலது பெர்ய சைஸ்லனா இருக்கு..?.”.
“ கரெக்ட்டு..எனக்கும் அப்டித்தாம்மா தோணித்து. அதான் அங்க சின்ன சைஸ் மாவடுங்களா பொறுக்க ஆரம்ப்ச்சேன். ஆனா , அந்த கட ( ங் ) க்கார மஹானுபாவன் ‘ சாமி !.பொறுக்கலாம் கூடாது..பொறுக்கி எடுத்தா கிலோ 300 ‘ ன்னான். அதான் அப்டியே வாங்கின்டு வந்தேன்.”.
“ சமத்துதான்..!.இத மொதல்ல அந்த சின்ன பக்கெட் தண்ணில கொட்டுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து நல்ல வெள்ள துணில போட்டு ஈரம் போக துடைங்க. அதுக்கப்றமா ஒவ்வொரு மாவடுவா எடுத்து அதோட காம்புங்கள கொஞ்சமா விட்டுட்டு மீதிய கட் பண்ணுங்க..!.”.
“ அச்சச்சோ..அப்ப அந்த கட் பண்ற காம்புங்கள்லாம் வேஸ்ட்டா..?.”.
“ ஏன் , வேணும்னா அந்தக் காம்புங்கள கல்ல மாவுல கரைச்சு பஜ்ஜி போட்டு தர்றேன்..சாப்டறேளா..? “.
“ அட !. சூப்பர் ஐடியாவாச்சே..நன்னாருக்மா..? “.
“ சகிக்காது..உங்கள கிண்டல் பண்றது கூட தெர்லயா உங்களுக்கு..?.அப்டி என்ன கல்லமாவு மசக்க உங்களுக்கு..?.”.
“ சர்ரி..என்னைய கிண்டல் பண்றத விடும்மா..நீ சொன்னபடி இத தண்ணில கொட்டி ஈரம் போக தொடச்சுட்டு காம்புங்கள கட் பண்ணி வெச்சுடறேன். அப்றம் என்ன பண்ணனும் , சொல்லேன்…?.”.
“ அதோட ஒங்க வேல முடிஞ்சுது. நீங்க வழக்கம்போல FB ய கட்டின்டு நேரத்த ஓட்டுங்க..! மத்தத நான் செஞ்சுப்பேன்.! “.
“ நோ..இன்னிக்கு இந்த FB பார்க்கறத சித்த நேரம் நிறுத்தி வெச்சுட்டு நீ இந்த மாவடு ஊறுகா போடப்போறதா கவனிக்லாம்னு இருக்கேன் ..!.”.
“ தெர்யுமே..என்ன ஒங்க அடுத்த FB போஸ்ட் மாவடு ஊறுகாவாக்கும்..? “.
“ அய்ய்யோ..கற்பூரம்மா நீ..ஆனாலும் நீ ரொம்பத்தான் ஷார்ப்பு ..!.”.
•மாவடுக்கள தண்ணில ஊறவெச்சு அதுக்கப்றமா அத வெளில எடுத்து துணில கொட்டி பரத்தி தொடச்சு ஒவ்வொன்னா எடுத்து அதோட காம்புங்கள நறுக்கிட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பால போட்டு வெச்சேன்.
•வூட்டம்மா அந்த மாவடுங்க இருந்த டப்பால நாலு கரண்டி நல்லெண்ணய்ய விட்டாங்க. ரெண்டு கப்பு வறுத்த கல் உப்ப கொட்னாங்க. அதுக்கப்றமா அத மூடி வெச்ட்டாங்க.
“ இத பார்ங்க…நாளைலேர்ந்து நாலு நாளைக்கு தெனமும் கார்த்தால குளிச்ட்டு இந்த மாவடு இருக்கற டப்பாவ நன்னா நாலஞ்சு தரம் குலுக்கி வெக்கறது ஒங்க டியூட்டி. ஆனா மூடிய தொறந்து பார்க்கப்படாது..!. அதே மாதிரி சாயந்தரத்லயும் மறக்காம பண்ணுங்க..!.”.
“ சாயந்தரமும் குளிக்கனுமாம்மா..?.”.
“ வேணாம். சாயந்தரத்ல குலுக்கினா மட்டும் போறும் ..! “.
•வூட்டம்மா சொன்னபடியே நாலு நாளும் ரெண்டு வேள மாவடு இருந்த டப்பாவ சிலுக்..ச்சை , குலுக்கியாச்..!.
நேத்து அஞ்சாவது நாள்.
வூட்டம்மா அந்த மாவடு இருந்த டப்பாவோட மூடிய தொறந்…
ஆஹா..!.லாக்டவுன் சமயத்ல கோயில்ங்க தொறக்காததால கடவுள பார்க்காம பக்தர்ங்க சோகமாகி , அதுக்கப்றமா லாக்டவுன் முடிஞ்சு கோயில்ங்க தொறக்கறச்ச கூட்டத்ல நின்னு ரொம்ப நாளா பார்க்காம இருந்து கடவுள தரிசிச்சு சந்தோஷப்படற பத்தாள் மாதிரி அந்த மாவடு இருந்த டப்பாவ நான் எட்டிப் பார்த்தேன்..!.
பார்த்த சந்தோஷத்ல நன்னா கணீர்னு ( ! ) ..
“ பச்சை மாமலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்..” னு பெருமாள பார்த்த ஆழ்வார் கணக்கா நான் பாட ஆரம்பிக்க…
“ அட டா !. என்னதிது..இந்த செமி ஃபினிஷிஷ் மாவடுவ பார்த்ததுக்கே பாட்டுலாம் பலமா வர்றது..? ".
ஒரு வாணலிய எடுத்து அடுப்ல வெச்சாங்க.கடுகுங்கள எடுத்து கொட்னாங்க. அடுப்ப பத்த வெச்சாங்க. 20 குண்டு மிளகாய்ங்கள எடுத்து அதுல போட்டுட்டு கூடவே கொஞ்சம் பெருங்காய தூளையும் கொட்டு வதக்கினாங்க. கொஞ்சமா மஞ்சப் பொடியயும் கொட்னாங்க.
வதக்கினத கொஞ்ச நேரம் ஆற வெச்சுட்டு அத அப்டியே மிக்ஸில போட்டு அரச்சாங்க.
செக்கச்செவேல்னு நெடியோட மொளகாத்தூள் ரெடி.
மூடியிருந்த மாவடு டப்பாவ தொறந்தாங்க.நல்லெண்ண கலந்த மாவடு வாசம் சூப்பர்தான் !.
ரெடி பண்ணின மொளகாத்தூள டப்பால இருந்த மாவடுங்க மேல கொட்னாங்க.
சர்ரி நாமளும் ஹெல்ப் பண்லாமேனு பக்கத்ல இருந்த ஒரு ஸ்பூன எடுத்து “ இதால கலக்கிவிடும்மா..” ன்னேன்.
“ ம்ஹூம்..மாவடுக்கு மெட்டல் ஸ்பூன்லாம் ஒத்துக்காத்..அதோ அந்த மர ஸ்பூன எடுங்க ..அதாலதான் கெளறிவிடனும் “ னு சொல்ட்டு , நான் எடுத்து கொடுத்த மர ஸ்பூனால கெளறி விட்டாங்க.
அப்டி கெளறச்ச வாசன இன்னும் தூக்கலா அடிச்சுது !.
அந்த டப்பால இன்னும் கொஞ்சம் நல்லெண்ணெய விட்டாங்க.
கிட்டக்க போய் பார்த்தேன், மாவடுங்க இருந்த டப்பாவ.
ஆஹா.. !. கண்கொள்ளாக்காட்சி. நல்லெண்ணெய்க்கீரீடைல மிதக்கற அந்த மாவடுங்க ‘ என்னைய இப்பவே எடுத்து ஒரு கடி கடியேன்..’ னு ஏங்கறாப்ல இருந்துச்சு !.
“ மாப்பிள்ளையில் கிழவனும் , மாவடுவில் அழுகலும் கிடையாதுன்னு எங்கம்மா சொல்வா..”.
“ ஆமால்ல..சாப்டறச்ச என் தட்ல விழுந்த மாவடுவ பார்த்து நா மொகம் சுழிச்சதும் ‘ மாவடு அழுகலா இருந்தாலும் டேஸ்டுதான்..நீ வேணா வேற போட்டுக்க..எனக்கு உன் தட்ல இருக்கற மாவடுவ போட்டுடு..வேஸ்ட் பண்ணப்படாத் ‘ னு சொல்லி கேட்டு வாங்கி சாப்டுவா..!.”.
“ லா.ச.ரா கூட ஒரு கதைல எழுதிருப்பார்.
‘ மாவிலைகள் மறைக்க அவைகள் நடுவில் தொங்கும் மாவடு போல..’ னு ஒரு வர்ணன வரும்..”.
“ ஒரு சினிமா பாட்டு கூட இருக்கே , மாவடுவ பத்தி..”.
“ அப்டியா..என்ன பாட்டு..? “.
“ நெஞ்சில் ஓர் ஆலயம் படத்ல கண்ணதாசன் எழுதயிருப்பாரே , ஞாபகத்துக்கு வரலயா ?.”.
“ தெர்லயேமா..நீயே சொல்லிடேன்..? “.
“ மாவடு கண்ணல்லவோ..மைனாவின் மொழியல்லவோன்னு ‘ முத்தான முத்தல்லவோ..’ பாட்ல வருமே..? “.
“ அட..ஆமா..சூப்பர் பாட்டாச்சே..!. தமிழ்ல கூட சிலசமயங்கள்ல விளையாட்டா சொல்வாங்களே..இடமிருந்து படிச்சாலும் வலமிருந்து படிச்சாலும் ஒர்ரே மாதிரியான சொற்கள்னு..”.
“ ம் , தெர்யுமே..விகடகவி , துவளுவது , தேருவருதே…”.
“ எனக்குக் கூட தெர்யுமே..மோரு போறுமோ..”.
“ அதான பார்த்…அதுலகூட சாப்டற வஸ்த்துவாத்தான் ஞாபகத்ல இருக்கு உங்களுக்கு..?.”.
“ கிண்டல் பண்ணாதமா..கணையாழில ரைட்டர் சுஜாதா இந்த மாதிரி நெறய சொற்கள எழுதினத படிச்ச ஞாபகம் இருக்கு.
மாவடு போடுவமா , தாத்தா , மாமா , மாயமா , காக்கா , கற்க..!.”.
•மத்யானம் சாப்ட உட்கார்ந்தேன். வெண்டக்கா பருப்புசிலி , மொளகு ரசம் , வடாத்த முடிச்ட்டு மோர் சாதத்துக்கு வர்றச்ச…
“ ஏம்மா..அந்த டப்பாலேர்ந்து ஒரு மாவடுவ எடுத்து போடேன்..? “.
போட்டாங்க.
நல்லா எண்ணெல ஊறி மினு மினுப்பா வெடுக்னுதான் இருந்துச்சு , கடிக்றச்ச.உப்பு , காரம்லாம் செமயா பிடிச்சு சூப்பர் டேஸ்ட்ல மாவடு ஊறுகா !.
--மடிப்பாக்கம் வெங்கட்.
No comments:
Post a Comment