ஶ்ரீராமநாம கதைகள்-7
திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்...
★ஶ்ரீராமர், ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட பின்னர், ஶ்ரீ ராமருடன் அங்கு இருந்த அனைவரும் ராவணனுடைய புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்திக்கு கிளம்பினார்கள். செல்லும் வழியில் பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அதற்கிணங்கி அவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கி இருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரதர், யுத்தத்தில் வெற்றி பெற்ற ஶ்ரீ ராமருக்கு தனது வாழ்த்துக்களை சொல்லி அவரிடன் பேச ஆரம்பித்தார்.
★ராவணன் அழிந்த பின்னரும் ராட்சசர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து மற்றும் ரக்தராக்ஷகன் என்ற இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் இருவரும் தற்சமயம் கடலுக்கு அடியில் கடுந் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவமானது நன்கு நிறைவடையுமானால், அசுரன் ராவணனை போல வரங்கள் நிறையப் பெற்று இந்த உலகை அழித்துவிடுவர்கள்.
★ஆகையால், உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு ஶ்ரீராமர் தாங்கள் சொன்னபடி அந்த ராட்சசர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும்.தம்பி லட்சுமணனும் என்னை பிரிந்து அங்கு செல்ல மாட்டான். எனவே அந்த கொடிய ராட்சதர்களை அழிக்கும் மகா ஆற்றலுடைய மாவீரன் வாயு புத்திரன் சிரஞ்சீவி அனுமனை அனுப்புகிறேன் என்றார்.
★ராமரின் கட்டளையை மிகப் பணிவுடன் அனுமன் ஏற்றுக் கொண்டார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அஷ்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான ராட்சதர்களை வெல்ல இது போதாது. எனவே திருமால் தன்னுடைய சங்கு சக்கரத்தையும், நான்முகனான பிரம்மா அவர்கள் தனது பிரம்ம கபாலத்தையும், ஶ்ரீருத்ரன் தனது மழுவையும் அனுமனுக்கு அளித்து ஆசிர்வதித்தார்கள்.
ஶ்ரீ ராமர் தனது வில்லையும் அம்பையும் வழங்கினார். அனைவரும் வழங்கிய எல்லா ஆயுதங்களையும் தாங்கிய அனுமன், பத்து கரங்களுடன் காட்சியளித்தார்.
★அதன்பின் வந்த கருடாழ்வார் தனது சிறகுகளை அளித்தார். சிவபெருமான், பத்து கரங்களில் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்து வியந்து தன்னுடைய சிறப்புக்குரிய மூன்றாவது நெற்றிக் கண்ணை அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்ட வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
★கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது அசுரப் படையினரையும் அழித்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செய்து முடித்துவிட்டு மிகுந்த ஆனந்தத்துடன் ராமனை சந்திக்கப் புறப்பட்டார். அனுமன் வரும் வழியில் இருந்த அழகிய கடற்கரை ஓரத்தில், இயற்கை அழகு நிரம்பிய ஒரு இடத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அவர் தங்கிய இடம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது.
★தற்போது பேச்சு வழக்கில் இப்போது அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனுமனுக்கு கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியே கோவிலின் முகப்பைப் பார்த்து சதுர்புஜத்துடன் ஒரு கையில் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால ஸ்வாமியின் சாட்டையையும் ஏந்தி காட்சி அளிக்கிறார். திருக்கடவூர், தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் என்கிற இந்த ஊர் அமைந்துள்ளது. அங்கு சென்று திரிநேத்ர தசபுஜ வீர ஶ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்பவர்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைக்கும்.
ஜெய் ஶ்ரீஆஞ்சநேயா!
No comments:
Post a Comment