Saturday, February 6, 2021

அழகிய மணவாள பெருமாள் கோவில்

 பொங்கல் அன்று நண்பர்கள் சிலர் காஞ்சி அருகில் ஐய்யன்பேட்டையில் அழகிய மணவாள பெருமாள் கோவில் என்று உள்ளதாகவும், அங்கு செல்ல வேண்டும் என்று கூறினர். நாங்கள் யாரும் அந்த கோவிலை பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதும் இல்லை. எங்களுக்குள் பல விவாதங்கள். ஒருவர் அப்படி ஒரு கோவில் நிச்சயம் இல்லை என்றார். Facebookயில் இதை பற்றி ஒரு postம் பார்த்தேன். ஐய்யன்பேட்டை அருகில் ஏரிவாய் கிராமத்தில் பாழடைந்த கோவில் இருப்பதாக படித்தேன், புகைப்படமும் கண்டேன். அங்கு செல்லவேண்டும் என்று தீர்மானித்தேன். நண்பர்கள் சிலரும் உடன்பட்டனர்.

காலையில் cycle எடுத்து ஐய்யன்பேட்டை நோக்கி செலுத்தினேன். ஏரிவாய் கிராமத்தில் அம்மன் கோவிலினையும் மற்றும் சிவன் கோவிலினையும் கண்ட பின்பு, பெருமாள் கோவிலை தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பெருமாள் கோவில் பற்றி விஜாரித்தேன், அவர்கள் வழிகாட்டினர். சனிக்கிழமை என்பதால் கோவில் ஒலிபெருக்கியில் பெருமாள் பாடல்கள் இசைத்துக்கொண்டு இருந்தன. வயல்கேனிகள் சூழ பாழடைந்த பெருமாள் கோவிலினை அடையாளம் கண்டேன். 

கதவுகள் இல்லாத பாழடைந்த கருங்கல் நுழைவாயில். நுழைவாயிலின் இடப்புறத்தில் ஒரு மீன் சின்னம். கோவிலுள் பக்தர்கள் பலர் தாயாருடன் நின்றிருக்கும் பெருமாளை வழிபட வந்திருந்தனர். அவர்களை பார்த்த பொழுது அடிக்கடி அக்கோவிலிற்கு வருபவர்கள் போல் தோன்றியது. கோவிலுக்குள் ஒரே ஒரு சன்னதி. மூலவர் மட்டுமே இருந்தார். உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவிலில் இருப்பது போன்று, உபயநாச்சிமார் இல்லாத பெருமாள் மற்றும் தாயார் மூலவர் விக்ரகங்கள் அருள் பாலித்தவண்ணம் உள்ளன. அந்த ஊர் மக்கள் தான் நித்யபூஜை செய்து வருகின்றனர். மூலவர் விக்ரஹங்கள் நன்கு அலங்காரம் செய்யப்பட்டு பூமாலைகள் பல சூடி காட்சியளித்தனர். மனம் மிகவும் மகிழ்வுற்றிருந்தது. Social media மூலம் கிடைத்த அதே பெருமாளின் புகைப்படத்தை இணைத்துள்ளேன். நீங்களே கண்டு இரசியிங்கள்.

கோவிலின் கர்பக்ரஹம் நல்ல கருங்கல்லால் கட்டப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு இருந்த மண்டபம் கருங்கல் தூண்களால் கட்டப்பட்டு இருந்தது. சமீப சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட செங்கல் சுவர் அந்த மண்டபத்துக்கு அரணாக சூழப்பட்டு இருந்தது. தூண்களில் உள்ள சிற்பங்களை கவனிக்க தொடங்கினேன். நரசிம்மர் மற்றும் வீரஆஞ்சநேயர் சிற்பங்கள் விஜயநகரம் மற்றும் நாயக்கர்கள் styleஐ நினைவூட்டியது. அதே ஸ்டைலில் கர்பக்ரஹம் முன்பு இருந்த எதிர் எதிர் தூண்களில் ஒரு ஆண் மற்றும் பெண் சிலைகள். அநேகமாக மண்டபம் கட்டிய தம்பதியர் சிலையாக இருக்கலாம். மண்டபத்தை சுற்றி நன்கு வேரூன்றி இருந்த மரங்கள், பல ஆண்டுகள் கோவில் கவனிப்பார் இன்றி இருந்ததை எடுத்துரைத்தது. கோவிலில் திருமஞ்சனம் செய்தால் நீர் வெளியேறும் outlet உள்ள சுவரின் மீது மஹாலக்ஷ்மி உருவம் செதுக்கப்பட்டிருந்தது.

கோவிலில் உள்ளவர்களிடம் பேச்சு கொடுக்க துவங்கினேன். கோவில் பல ஆண்டுகள் கவனிப்பார் இன்றி காடுபோல் மரங்கள் சூழ இருந்துள்ளது. சுமார் 5 ஆண்டுகள் முன்பு கோவிலில் இறைவன் சிலைகள் ஏதும் இல்லை என்றும், திடீரென கோவில் முன்பு பெருமாள் மற்றும் தாயாரின் கற்சிலைகள் போடப்பட்டு இருந்ததாகவும், மக்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து பெருமாள் மற்றும் தாயார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறினர். அதன் பிறகு அரசாங்கம் இந்த கோவிலை திரும்பி பார்த்ததாக தெரியவில்லை. ஆனால் மக்கள் கோவிலை கவனித்துவருகின்றனர். பெருமாள் வந்த பிறகு இந்த இடமும் வளர தொடங்கியதாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். கோவிலின் பெயரில் சுமார் 4 அல்லது 5 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறினர். சுமார் 75 வயது முதியவர் மிக ஆர்வமுடன் பல தகவல்களை கூறினார். கோவில் முன்பு இருந்த நாற்றுநடப்பட்ட நிலம் ஒரு குளம் என்று கூறினார். தான் குளத்தில் குளித்ததாகவும், படிகள் இருந்ததாகவுன் கூறினார். சுந்தரம் என்ற நடுத்தர வயது நபரும் இதையே கூறினார். குளம் காலப்போக்கில் மூடப்பட்டதாக அறிந்த போது, சற்று அதிர்ச்சியாக இருந்தது. கோவிலை சுற்றி பயங்கரமாக வேரூன்றி இருந்த மரங்களை, தாங்கள் தன்னால் ஈன்ற அளவு களைந்ததாக கூறினார்.

கோவிலில் மடப்பள்ளி எதுவும் இல்லை. நுழைவாயிலின் இடப்புறத்தில் இருந்திருக்கலாம் என்று அங்கிருந்தோர் கூறினர். புதரடைந்த அந்த இடத்தில் இரு கல் தூண்கள் தென்பட்டன. 

கோவிலிற்குள் ஒரு கிணறு இருந்தாகவும், அதில் கிடைத்த சில நாகர் சிலைகள் கோவிலிற்கு பின்புறம் போடப்பட்டு இருப்பதாகவும் கூறினர். ஆனால் அந்த கிணறும் அடையாளம் தெரியாத வண்ணம் புதர் சூழப்பட்டு இருந்தது. சிதைந்து போன பெருமாள் மற்றும் உபய நாச்சிமார் கல் சிலைகளும் இருந்தன. அச்சிலைகளும் அந்த கிணற்றில் கிடைத்ததாக கூறினர். 

கோவிலில் ஏதேனும் கல்வெட்டுகள் அல்லது குறிப்புகள் உள்ளதா என்று கேட்டபோது, கர்பக்ரஹத்தில் உள்ள ஒரு பல்லி சிற்பத்தையும், மண்டபத்தில் உள்ள இரு நாக சிற்பத்தையும் காட்டினர். அர்த்த மண்டபத்தில் ஒரு ஆமை சின்னத்தை கவனித்தேன். குறிப்புகள் பற்றி கேட்டதும், அங்கு உள்ளவர்கள் உற்சாகத்தில் கோவில் சுற்றி தேடத்துவங்கினர். சில எழுத்துக்கள் தென்பட்டன. ஆனால் வரிகள் கால போக்கில் அழிந்துள்ளது தெளிவாக தெரிந்தது. பெருமாளிற்கு பின்புற சுவரில் யானை சிற்பம் உள்ளதாக அங்கு உள்ளனர் கூறினர்.

கோவில் அருகில் ஒரு வீடு கட்டும் போது அங்கு சில சிலைகள் கிடைத்ததாகவும் அரசாங்கம் அவற்றை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர்.

கோவில் உள்ள இடத்தையும் விவரங்களையும் நண்பர்களுக்கு தெரிவித்தேன். உற்சாகத்துடன் வந்தனர். அங்கு உள்ளவர்களிடம் ஸ்லோகங்கள் சொல்லலாமா என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். கீழே அமர ஒரு ஜமக்காளம் கூட விரித்தனர். வேண்டாம் என்று கூறிவிட்டு, வைணவ கோவில்களில் 4000 திவ்ய ப்ரபந்தம் பாடும் க்ரமப்படி திருப்பல்லாண்டும் திருப்பாவையும் சேவிக்க துவங்கினேன். நண்பர்களும் உடன் கூடினர். பெருமாளுக்கு திருப்பாவை சாற்றுமுறையுடன் வைணவ முறைப்படி எங்கள் கைங்கர்யத்தை முடித்துக்கொண்டோம்.

சரி நிர்வாக விடயத்துக்கு வருவோம். இக்கோவில் நிர்வாகம் யாரிடம் உள்ளது என்று கேட்டோம். இந்து அறநிலைய துறை என்ற பதில் வந்தது. பெருமாளுக்கு பிரசாதத்திற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். தாங்கள் தான் ஏதேனும் வாங்கி வந்து பெருமாளுக்கு கண்டருளுவதாக கூறினார்கள். கோவிலில் மடப்பள்ளி இல்லை  என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

கோவிலின் முக்கிய நுழைவாயிலுக்கு கதவுகள் இல்லை. பெருமாள் உள்ள மண்டபத்திற்கு மக்கள் சில கம்பிகள் மூலம் கதவு செய்து ஏதோ தன்னால் ஈன்ற பாதுகாப்பு செய்துள்ளனர். கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ள சில தெருக்கள் அக்ரஹாரமாக இருந்ததாக மக்கள் கூறினர். 

கோவிலின் கட்டமைப்பை பார்க்கும் போது, இதன் காலம் எப்படியும் 500 ஆண்டுகள் பழமையானது என்று தோன்றுகிறது. வருமானம் ஏதும் இல்லை என்றாலும், மக்கள் கோவிலினை தூய்மையாகவும் பக்தியுடனும் கவனித்து கொள்ளும் விதம், இந்த நாட்டின் ஆன்மீக சிந்தனையின் ஊற்றினை எடுத்துரைக்கிறது. அந்த மக்களிற்கு நல்ல வளமான, ஆரோக்கியமான வாழ்க்கை தர பெருமாளினையும் ஆசாரியனையும் பிரார்த்திகிறேன்.

No comments:

Post a Comment