Wednesday, February 24, 2021

ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் பகுதி 8

 🌺🌺🌸🌸🌹🌹🌸🌸🌺🌺ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம்

பகுதி 8

(By Venkatesan Varadharajan 6381369319)

சிம்மாசலத்து நரசிம்ம தரிசனம் முடிந்து பஸ் பூரி நோக்கி கிளம்புகிறது. வழியில் இராமதீர்த்தம் என்ற இடத்தில் இராமரை தரிசிக்கிறோம் தொடர்ந்து பயணித்து அரசவல்லி சூரிய  நாராயணர் கோயிலை அடைகிறோம். 

அரசவல்லி சூரியன் கோயில்(Arasavalli Sun Temple), கி பி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரியன்கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசமாநிலத்தின் வடகிழக்கில், ஒடிசாமாநிலத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்த ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசவல்லி கிராமத்தில் அமைந்துள்ளது. [இக்கோயில் கலிங்க மன்னர்தேவேந்திரவர்மனால் கி பி 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் சிதிலமடைந்த இக்கோயில், கி பி 17 – 18-ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணி செய்யப்பட்டது.

சாயா, உஷா பத்மினி சமேத ஸ்ரீ சூரிய நாராயண சுவாமி தேவாலயம். பத்ம புராணத்தின்படி மக்களின் நலத்திற்காக காஸ்யப மகரிஷி இந்த ஆலயத்தில் விக்ரஹ பிரதிஷ்டை செய்தார் .

இச்சூரியக் கோயில் வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். கோயில் மூலவரான சூரிய தேவனின் கருவறையின் நான்கு மூலைகளில் சிறிய கோயில்கள் அமைந்துள்ளது. மேலும் கோயில் விமானத்திற்கும், மகா மண்டத்திற்கு இடையே அந்தராளம்எனும் முற்ற வெளி அமைத்துக் கட்டப்பட்டுள்ளது.

சகல பக்தர்களுக்கும் பாதுகாப்பையும் ஆயுள் ஆரோக்யத்தையும் அருளும் ஸ்ரீசூர்ய நாராயணர் ஆறு கரங்களோடும் அபய முத்திரையுடனும் காட்சி அளிக்கிறார்.

தினமும் பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த ஆலயத்திற்கு ரதசப்தமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

அரசவல்லியிலிருந்து பேருந்து கிளம்பி ஶ்ரீகூர்மத்தை அடைகிறது. 

 ஆபத்து வருங்காலத்தில் ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, ‘ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து..’ என்கிறார் வள்ளுவர்.

இந்த அரிய தத்துவத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே ‘கூர்மம்.’ 

கோயிலை அடையும் முன் இராமானுஜர் காலத்திற்கு செல்வோமா?

அலைகள் என்னும் மாலைகளால் கடல் கூர்ம பூமியை வழிபட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் கூர்மத்தில் ராமானுஜர் ...

பூரி என்ற புருஷோத்தமத்திலிருந்து ராமானுஜரைக் காணாது தவித்த சீடர்கள் கூர்மத்தில் அவரைக் கண்டனர். முகம் மலர்ந்தனர். சிஷ்யர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதை விட பல மடங்கு மகிழ்ச்சி ராமானுஜருக்கு. ஏனென்றால் அவருக்கு சிஷ்யர்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை. அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ என்பதுபோல் ராமானுஜருக்கு அடியார்கள்தான் முக்கியம்., தன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடியார்களுடனான அவரது தொடர்பு மேம்பட்டுதான் வந்திருக்கிறதே தவிர, ராமானுஜர் தனியர் அல்லர்.

இந்த வகையில் கூர்மத்தில் இருந்து தன்னிடம் வந்து சேர்ந்த தனது அடியார்களை எல்லாம் அழைத்துக் கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீ கூர்மநாதன் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். எந்தத் தலமாக இருந்தாலும் ராமானுஜர் தனித்துச் சென்று வழிபடுவதை விரும்பியதே இல்லை. தன்னோடு அடியார்கள் புடை சூழ பிரபந்தப் பாசுரங்கள் கோலாகலமாக ஒலிக்க வழிபடுவதே ராமானுஜரின் வழக்கம். அப்போதுதான் பெருமாளுக்கே ஒரு திருப்தி உண்டாகும் என்று கருதக் கூடியவர் அவர். இது வெறும் ராமானுஜருடைய ஆத்ம திருப்தி தொடர்பானது மட்டுமல்ல, ராமானுஜரின் சமூக உளவியலும் கூட. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று இன்று சொல்கிறார்களே... அனைவரையும் உள்ளடக்கிய வைணவத்தை அன்றே கண்டவர் ராமானுஜர்.

அனைவரையும் அழைத்துக் கொண்டு கூர்மநாத சுவாமி சந்நிதிக்கு சென்றார். இதுவரை தான் தனியனாய் வந்து தரிசித்ததை விட தற்போதே அதிக ஆனந்தமாய் உணர்ந்தார். அடியார்களுக்கு கூர்ம மூர்த்தியின் சிறப்புகளையும், இந்தத் தலத்துக்கு தான் வந்தது பற்றியும், சம்பிரதாயங்களை மாற்றியது பற்றியும் எடுத்துரைத்தார். அதன் பின் கூர்மநாத பெருமாள் குளிரும்படியாக, ‘அடலாமையான திருமால் நமக்கோர் அரணே’ என்ற பெரிய திருமொழி பாசுரத்தை அனைவரோடும் சேர்ந்து அனுசந்தித்து கூர்ம தலத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார் ராமானுஜர்.

அரசவல்லி சூரிய நாராயணர்


ஶ்ரீகூர்ம நாதர்

No comments:

Post a Comment