Wednesday, February 24, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 80 வைகுண்ட நாதர் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 80 🌹🌹🌹


தன் பக்தனுக்காக திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்ற பெருமாளாம் இந்த "கள்ளபிரான்" பெருமாள் அருள்புரிந்து ஆசி வழங்கும் அற்புதத் திவ்யதேசம்.

நவதிருப்பதி என்றழைக்கப்படும் நவக்கிரகங்களுடன் தொடர்புடைய திருத்தலங்களில் இன்று நாம் முதலாவதாக பார்க்கப்போவது சூரியனுக்குரிய தலம்.

அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோவில் :-

திரு ஸ்ரீவைகுண்டம்
மூலவர்: ஸ்ரீ வைகுண்ட நாதன், கள்ளப்பிரான்
தாயார்: வைகுந்தவல்லி, பூதேவி
உற்சவர்: கள்ளப்பிரான்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி ஆறு, கலச தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப்பிரான் ஸ்வாமிநே நமஹ
ஊர்: ஸ்ரீவைகுண்டம்

🌺🌺 தலவரலாறு:-

வைகுண்ட வாசனான இறைவன் நாராயணன் திருவருள் பேர் வேண்டிய பிரம்மாவிற்கு அத்தகைய வைகுண்ட காட்சியையே பூமியில் தந்து அருளிய அற்புதத் தலம் இதுவாகும்.

ஒருமுறை பிரம்மா குடிகொண்டுள்ள சத்யலோகம் முதல் பூவுலகம் வரை அனைத்திலும் பிரளய வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்த படைப்புத் தொழில் செய்வதற்குத் தேவைப்படும், சிருஷ்டி ரகசிய கிரந்தங்கள் அடங்கியுள்ள ஏடுகளை பலவந்தமாகப் பறித்துச் சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது.

மனம் வருந்திய பிரம்மா, இறைவன் நாராயணரை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி கொடுத்த இறைவன், அசுரனை அழித்து கிரந்தங்களை மீட்டுத் தந்தார்.

பிரம்மாவின் வேண்டுதலுக்காக வைகுண்ட வாசனே இங்கு எழுந்தருளியதால் இத்தல இறைவன், "வைகுண்ட நாதர்" என்ற திருநாமம் பெற்றார். இத்தலமும் திருவைகுண்டம் என்று பெயர் பெற்றது.

🌺🌺 கள்ளபிரான் பெயர்க்காரணம்:-

அது என்ன பெருமாளின் திருநாமம் இங்கு கள்ளபிரான்? ஏன் அந்த பெயர் பெருமாளுக்கு வந்தது என்று நாம் காரணம் அறிய வேண்டாமோ இல்லையா? பெயர்க்காரணம் அறிந்திடலாம் இதோ தொடர்ந்து படியுங்கள்.

இத்தல இறைவன் ஸ்ரீவைகுண்ட நாதர் பக்தனான காலதூசகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான்.

ஒருசமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்ற போது, காலதூசகனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதனால் அரண்மனை சேவகர்கள் காலதூசகனைத் தேடி வந்த வேளையில், இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார்.

மன்னன் முன் நின்ற "பக்தர்களின் மனதைக் கவரும் கள்வன், மணிவண்ணன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனான இறைவன்", தனக்கு பணப்பற்றாக்குறை இருப்பதால் திருடுவதாகக் கூறினார்.

ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்று அர்த்தம். தன்னிடம் பொருள் இல்லாததால் தான் திருடியதாகக் கூறி அறநெறிகளை அரசனுக்கு உபதேசம் செய்தார்.

இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படித் தைரியமாகப் பேசமுடியாது எனப் புரிந்து கொண்டு, இங்கே வந்திருக்கும் தாங்கள் யார்? என்று கேட்டார்.

பிரம்மானுக்குத் தன் திருக்கோலத்தைக் காட்டிய இந்த வைகுண்ட வாசன், மன்னருக்குத் தன் சுயரூபம் காட்டி அருளினார்.

எம்பெருமான் கள்ளனாக வந்து அறநெறிகளை உபதேசித்ததால் இத்தல இறைவனுக்கு "கள்ளபிரான்" என்று மற்றொரு திருநாமமும் உண்டானது.

🌺🌺 நவதிருப்பதிகள்:-

108 திவ்யதேசங்களில் 9 திவ்யதேசங்கள் "நவதிருப்பதிகள்" என்றும், இத்தல பெருமாள் நவக்கிரகங்களுடன் தொடர்புடையதாக கருதியும், வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் ஸ்ரீவைகுண்டம் திருத்தலம் "சூரியனுக்குரிய தலமாக" வழிபடப்படுகிறது.

சூரியன் - ஸ்ரீவைகுண்டம்
சந்திரன் - திருவரகுணமங்கை (நத்தம்)
அங்காரகன் - திருக்கோளூர்
புதன் - திருப்புளியங்குடி
குரு - திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
சுக்கிரன் - தென்திருப்போரை
சனி - திருக்குளந்தை (பெருங்குளம்)
ராகு - திருத்தலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)
கேது - திருத்தலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்தல பெருமாளை நம்மாழ்வார் 2 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

"புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து
வைகுந்தத்துள் நின்று தெளிந்த
என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய்
எனக்கருளி நளிர்ந்த சீருலகம்
மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம்
போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே!!!"

- நம்மாழ்வார்.

விளக்கம் :-

நம்மாழ்வார் தனது பாசுரத்தில், "புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

"பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரையில், படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும் போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். அவர் பக்தியில் உயர்நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும், (படுத்த கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்" என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப் பெருமாள், நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

🌺🌺 வழித்தடம் :-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தின் அருகாமையிலேயே இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலியிருந்து 31 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

அருள்மிகு வைகுண்டநாதர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு வைகுண்டவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் - திருவரகுணமங்கை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment