கட்டு, கட்டு கதறிடக்கட்டு......
சிறுகதை == ராம் ஸ்ரீதர் ==
சிறுகதை == ராம் ஸ்ரீதர் ==
மும்பை சென்று சேர்ந்த இரவு, டின்னர் சாப்பிட மிகவும் தாமதமாகிவிட்டது. வஸந்துக்குப் பசி போய்விட்டது என்றே சொல்லலாம். அந்த லீகல் செமினாரில் பேசிப், பேசியே அறுத்து, முடியும் போது இரவு மணி எட்டாகிவிட்டது.
வஸந்த் கூட யதேச்சையாக சேர்ந்துகொண்ட சத்ரப் சிங் இல்லையென்றால், வஸந்த் ஏதாவது பொய் சொல்லிவிட்டு தீரும்பியிருப்பான். வஸந்துக்கு மறுநாளை நினைத்துக் கவலையாகிவிட்டது. நாளையும் இப்படித்தான் இருக்குமா? யோசித்தபோது, அருகிலிருந்த சத்ரப் கிசுகிசுத்தான்..
"நாளை லஞ்ச் நல்ல மெனு வஸந்த், இப்போதுதான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அசிஸ்டன்ட் ஷெஃப் ம்ருணாளினி எனக்குத் தெரிந்த பெண். என் நேடிவிலிருந்து 10 கிமீ தான் அவள் ஊர்" என்றான்.
வஸந்த் புன்னகைத்தான்.
இரண்டாம் நாள் லஞ்ச் சத்ரப் சொன்னது போல நன்றாகவே இருந்தது. நல்ல வேளையாக அவ்வளவாக மேற்கொண்டு அறுக்காமல், மாலை நான்கு மணிக்கே முடித்துவிட்டார்கள்.
மாலை கொலாபா சென்று கணேஷ் சொன்ன விஷாலி மாத்தூர் என்ற அகலமான, உதட்டுக்கு மேல் பெரிய மீசை இருந்த, தாட்டியான 40 வயதுப் பெண்மணியைப் பார்த்து, அவரிடமிருந்து கணேஷ் சொன்ன புத்தகத்தை வாங்கிக் கொண்டு, ஹோட்டலுக்குத் திரும்பியபோது, ரூம் கதவு வெறுமனே சாத்தியிருந்தது.
உள்ளே, சத்ரப் கையில் ஒரு ஜெபமாலை சகிதம், தரையில் அமர்ந்து, எதையோ முணுமுணுத்துக் கொண்டு, அந்த மாலையிலிருந்த மணிகளை மெதுவே உருட்டிக்கொண்டிருந்தான்.
வஸந்துக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மெதுவே நுழைந்து, சத்ரப் அருகே இருந்த கறுப்பு சோஃபாவில் அமர்ந்து கையிலிருந்த "The Spirit of the Laws" என்ற புத்தகத்தைப் புரட்டினான்.
புத்தகம் வெளிவந்த ஆண்டு 1748 என்று பார்த்தபோது, "ரொம்ப லேட்டஸ்ட்" என்று முணுமுணுத்தான்
மெதுவாகக் கண்களைத் திறந்த சத்ரப் "கெமிஸ்ட்ரி" என்றான்.
வஸந்த்துக்குப் புரியாமல் "ஸாரி ?" என்றான்.
"நீ அணிந்திருக்கும் பெர்ஃப்யூம்" என்றான் புன்னகைத்தவாறே.
"ஓ, கரெக்ட். ஸாரி ஏதோ நினைப்பிலிருந்தேன்" என்ற வஸந்த்,
"அது என்ன சத்ரப், ஜெபமாலை எல்லாம் வைத்துக் கொண்டு மெடிடேட் செய்கிறாயே ?" என்றான்.
"வஸந்த், அது நேபாளத்திலிருந்து என் மாமா வாங்கிவந்த அபூர்வ ருத்ராக்ஷம். மன அமைதி வேண்டுமென்றால், மனதை ஒருநிலைப் படுத்த அதை உருட்டி ஜபம் செய்வேன். நீ?" என்றான்.
வஸந்த் சிரித்துவிட்டு, "வெரி நைஸ். மன அமைதிக்கு ஜெபமாலை . எனக்கு அமைதி தேவையென்றால் ரெண்டு லார்ஜ் ஜாக் டேனியல்ஸ் விஸ்கி சாப்பிடுவேன்" என்றான் சிரித்தவாறே.
சத்ரப் புன்னகைத்தான்.
=======================================
மறுநாள் காலை 6.30 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் வஸந்த் ஏறி, 12-C என்ற எண்ணிட்ட ஸீட்டில் அமர்ந்தான்.
விமானத்தின் காக்பிட்டில் ஜெரால்டு செல்வராஜ் என்ற பைலட் அமர்ந்து,
கிரௌண்ட் கண்ட்ரோலுடன் அளவளாவி, அந்த 136 பயணிகள் + 6 பணியாளர்கள் (அவன் உட்பட) கொண்ட விமானத்தை, மெதுவாக மும்பை நகரத்தின் மேல் பறக்கவிட்டபோது, வெளியே வானம் க்யுமுலஸ் மேகங்களுடன் - ஆங்காங்கே பஞ்சுத் தீற்றலாக மேகங்கள் - தெளிவாக இருந்தது.
அந்த விமானத்தின் எண் PNA - 04.
விமானம் ஃபீனிக்ஸ் நியோ ஏர்வேஸ் (Phoenix Neo Airways) என்ற நிறுவனத்தைச் சேர்ந்தது. அது ஏர்பஸ் A 320 வகை விமானம்.
விமானம் பறக்க ஆரம்பித்து 20 நிமிடங்களில், காக்பிட்டினுள் அத்துமீறி நுழைந்தவன், இளைஞன். தன்னைப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் பெயர் அப்துல் அஜீஸ் என்று சொன்னான்.
அவனுடைய கோரிக்கை.....ஏன் கட்டளை என்று கூட சொல்லலாம்....அந்த விமானத்தில் பயணிக்கும் அனைவரும்...அந்தத் தீவிரவாதி இளைஞன் உட்பட.....சாகவேண்டும்....சாக வேண்டும் என்றால் விமானம் தரையில் மோதி சுக்குநூறாக உடைந்து, எதுவும் மிஞ்சக்கூடாது.
அப்படிச் செய்தால், சென்னையில் அவன் கூட்டாளிகள் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருக்கும் ஜெரால்டு செல்வராஜின் குடும்பத்தினர் (அப்பா, அம்மா, தங்கை மற்றும் தம்பி) விடுவிக்கப்படுவர்.
பைலட் ஒருவேளை முரண்டு செய்தால், அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
மும்பை - சென்னை விமானப் பயண நேரம் கிட்டத்தட்ட 2 மணி நேரம்.
அந்த PNA - 04 விமானம் ஒரு நான்-ஸ்டாப் விமானம். வழியில் எங்கும் நிற்காது.
=======================
சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் கண் விழித்த கணேஷ், பலதேய்த்துவிட்டு வந்து, காஃபியை சீப்ப ஆரம்பித்தபோது, மொபைல் அழைத்தது.
"நமஸ்காரம், செட்டியார். இன்னைக்கு உங்க கேஸ் ஹியரிங் வருது. பிச்சுப்பிடலாம். வஸந்த்? அவன் இப்போ கோர்ட்டுக்கு நேரா வந்திடுவான். இப்போதான் மும்பையிலிருந்து கிளம்பின PNA - 04 ஃபிளைட்ல வரான். வந்துடுவான்....."
========================
விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே, வஸந்துக்கு அருகிலிருந்தவர் மிகவும் சன்னமான குரலின், "காக்பிட்டில் மூன்றாவதாக ஒரு ஆள் நுழைந்தான். பார்த்தீர்களா?" என்றார்.
கையிலிருந்த செய்தித் தாளிலிருந்து நிமிர்ந்த வஸந்த், "யாராவது டெக்னிகல் ஆசாமியாக இருக்கலாம் அல்லவா?" என்றான்.
"ஏர்ஹோஸ்டிடம் காஃபி வேண்டும் என்று கேட்டு, பேசிப்பார்க்கிறேன்" என்றார் அருகிலிருந்தவர்.
தன்னை டாக்டர் கோதண்டராமன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஏர்ஹோஸ்டஸை அழைக்க தலைக்கு மேலிருந்த பொத்தானை அமுக்கினார்.
சிறிது நேரத்தில், அருகே வந்த ஏர்ஹோஸ்டஸ் அழகாக, இளமையாக இருந்தாள் . அவர்கள் ஸீட்டிற்கு மேலிருந்த பொத்தானை அணைத்துவிட்டு "என்ன வேண்டும் உங்களுக்கு?' என்று கேட்க,
டாக்டர் கோதண்ட ராமன் "காஃபி - வித்தவுட் ஷுகர்" என்று சொல்ல,
டீ - பிளாக், வித் ஷுகர்" என்றான் வஸந்த்.அவள் புன்னகைத்துவிட்டு மறைந்தாள்
சில நிமிடங்களில் ட்ரேயில் காஃபி மற்றும் டீ சகிதம் வந்தவளை மடக்கி, "மிஸ், காக்பிட்டிற்குள் மூன்றாவதாக ஒரு ஆண் சென்றதை ஸார் பார்த்திருக்கிறார். அது யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வம். இப்படி எல்லாம் காக்பிட்டிற்குள் ஆளை அனுமதிப்பீர்களா என்ன?" என்று வஸந்த் ஏர்ஹோஸ்டஸிடம் கேட்ட அடுத்த விநாடி,
பின்னாலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது,
"அதேதான் நானும் கேட்கிறேன். பைலட் என்னுடைய ஃபியான்ஸே, என்னை அனுமதிக்க மறுக்கும் இவர் எப்படி யாரோ ஒருவரை அனுமதிக்கலாம்?" என்று அந்தப் பெண் குரல் படபடத்தவுடன், வஸந்த் நன்றாகத் திரும்பிப் பார்த்தான்.
பேசிய பெண்ணிற்கு 23 - 24 வயதிருக்கலாம்.
Make Love ; Not War என்று எழுதியிருந்த வெளிர் மஞ்சள் நிற டிஷர்ட் அணிந்து, கீழே ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
மடியில் அலக்ஸ் ஹேலியின் ரூட்ஸ் என்ற தலையணை சைஸ் புத்தகம் வைத்திருந்தாள்.
நெற்றியில் மைக்ரோ சைஸில் போட்டு வைத்திருந்தாள்.
வஸந்த் மீண்டும் பார்க்கத்தூண்டும் வண்ணம் கவர்ச்சியாக, கண்ணைக் கவரும் விதமாக வஸந்தை நோக்கிப் புன்னகைத்தாள்.
வஸந்த் அந்தப் பளீரென்ற பற்களின் அழகிலும், அந்தப் பெண்மணியின் நளினமான தோற்றத்திலும் உடனே மயங்கி, "நல்ல ஐடியா தான், ஆனா, யாரு கேக்கறாங்க?" என்றான் கவலையுடன்.
அந்தப் பெண் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, "ஸாரி, புரியல, என்ன சொல்றீங்க?' என்றாள்.
"உங்க டி-ஷர்ட் வாசகம், அதைப் பத்திச் சொன்னேன்" என்றான்.
அவள் அகலமாக சிரித்து, "ஹௌ நைஸ், யூ மஸ்ட் பி வஸந்த்" என்றாள்
அவள் அருகிலிருந்த தாட்டியான அம்மாள், தோள்களைக் குலுக்கிக் கொண்டு, "ட்ராவலர்ஸ் மானிஃபெஸ்ட் பார்த்தோம்" என்றார்.
வஸந்த் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு, "எஸ், ஐ'ம் வஸந்த். அண்ட் யூ ஆர்....?' என்றவுடன்
"கோதை" என்றாள் அந்தப் பெண்.
"ஸ்ரீவில்லிபுத்தூரா, ஸ்ரீரங்கமா?" என்ற வஸந்தின் கேள்விக்கு,
"ஆழ்வார் திருநகரி" என்றாள் அந்தப் பெண் புன்னகையுடன்.
மேலும் புன்னகைத்துவிட்டு, "பைலட் ஜெரால்டு செல்வராஜ் என்னுடைய ஃபியான்ஸே, அவரைப் பார்க்கத்தான் இந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டேன்" என்று சொன்னவுடன், வஸந்தின் எதிர்ப்பார்ப்பு புஸ்ஸென்று காற்று இறங்கிய பலூன் போலானது.
"இன்னும் கொஞ்ச நேரத்தில் விமானம் சென்னையில் இறங்கிவிடும், அப்புறம் கொஞ்சலாமே" என்றவன், "ஸாரி, பேசலாமே?" என்றான்.
இவர்களிடையே நடக்கும் பேச்சைக் கவனிக்க அந்த ஏர்ஹோஸ்டஸ் அங்கு காத்திருக்கவில்லை. எப்போதோ காணாமல் போயிருந்தாள்.
===============================
விமானம் பறக்கத் துவங்கி, சிறிது நேரத்தில் வெளியிடும் வழக்கமான அறிவிப்பை பைலட் சொல்லிமுடித்த போது, காக்பிட் ஏஸியைத் தாண்டி வேர்த்திருந்தான்.
"நாம் கிளம்பி, ஒரு மணி ஆகப்போகிறது. உன்னுடைய கோரிக்கை என்னவென்று கிரௌண்ட் கண்ட்ரோல் ஆசாமிகளிடம் பேசிப்பார்க்கலாமே?" என்றான் பின்னால் நின்றிருந்த இளைஞனிடம்.
" தேவையில்லை.இந்த விமானம் தரையில் மோதிச் சுக்குநூறாக உடைய வேண்டும்" என்றான் அந்த இளைஞன், தீவிரமான குரலில்.
அருகிலிருந்த கோ-பைலட் மஞ்சுநாத், அந்த இளைஞனைப் பார்த்து, "பி ரீஸனபிள். உனக்கு எவ்விதக் கெடுதலும் செய்யாத இந்தப் பயணிகளை ஏன் கொல்ல வேண்டும்? இவ்வளவு விலையுயர்ந்த விமானத்தை எதற்கு நாசம் செய்யவேண்டும்? உன் சார்பாக, நான் வேண்டுமானால் பேசட்டுமா?" என்றான்.
அந்த இளைஞன் கோ-பைலட்டைப் பார்த்துவிட்டு, "உன் வேலையை மட்டும் பார்.இங்கு பேச்சு எனக்கும் பைலட்டிற்கும் மட்டும்தான்" என்று சீறினான்.
காக்பிட்டிற்குள் உள்ளே தலையை நுழைத்த ஏர்ஹோஸ்டஸ், "ஸாரி ஸார். ஒரு பெண் உங்கள் ஃபியான்ஸே என்கிறாள். உங்களுடன் இரண்டு நிமிடமாவது பேச வேண்டுமாம். நான் முதலில் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால், இவர் நுழைந்ததைப் பார்த்துவிட்டு, தான் மட்டும் ஏன் அனுமதிக்கப் படக்கூடாது என்று கேள்வி கேட்கிறார். ப்ளீஸ் டூ சம்திங்" என்றாள் கெஞ்சும் குரலில்.
அந்த இளைஞன் தலையாட்டினான். "சரி, நான் வெளியே போகிறேன். அந்தப் பெண்ணை வரச் சொல். இரண்டே நிமிடம் தான். ஜெரால்ட், சொன்னதை நினைவில், வைத்துக்கொள். நான் இங்கு இல்லாதபோது, கிரௌண்ட் கண்ட்ரோலிடம் ஏதாவது சொல்ல நினைத்தால்....." கையிலிருந்த சிறிய கறுப்பு நிற ரிமோட்டைக் காட்டி....."அழுத்திவிடுவேன். எல்லோரும் உடனடியாக எரிந்து சாம்பாலாகிவிடுவோம்" என்றான்.
ஜெரால்ட் அவனை நோக்கி சங்கடத்துடன் புன்னகைத்துவிட்டு, "இல்லை அப்படி எதுவும் செய்யமாட்டேன். நீ அவசரப்படாதே" என்றான்.
=========================================
அந்த இளைஞன் காக்பிட்டிலிருந்து வெளியே வருவதை வஸந்த் கவனித்தான். கோதையும் கவனித்தாள்.
அவளருகே வந்த ஏர்ஹோஸ்டஸ், "மிஸ் கோ அஹெட். இரண்டு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளாதீர்கள்" என்றாள்.
எழுந்திருந்த வஸந்தைப் பார்த்து, "ஸாரி ஸார். ப்ளீஸ் ஸிட்" என்றாள்.
"நான் டாய்லெட் செல்கிறேன்" என்ற வஸந்திடம் "மன்னிக்கவும். இப்போது போக முடியாது. சிறிது நேரம் கழித்து அறிவிப்பு வரும் அப்போது போகலாம்" என்றாள்.
வஸந்த் வேறு வழியில்லாமல் உட்கார வேண்டியதாயிற்று.
====================================
பைலட்டின் எல்லோருக்கும் ஜூஸ் வழங்கப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட, வஸந்தும், டாக்டர் கோதண்டராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வேண்டாம் என்று சொன்னவர்களுக்குக் கூட பைலட்டின் பிறந்த தினம் என்று கூறி வலுக்கட்டாயமாக ஒவ்வொருவரின் முன்பும் ஜூஸ் வைக்கப்படுவதை வஸந்த் பார்க்கும் அதே சமயம், காக்பிட்டிலிருந்து கோதை வெளிவருவதையும், அவளுக்குக் காக்பிட் கதவைத் திறந்துவிட்ட அந்த சிவப்பு இளைஞன் உள்ளே நுழைவதையும் பார்த்தான்.
தன் சீட்டருகே வரும் கோதையின் முகம் மிகவும் டல்லாகி இருந்ததை வஸந்த் பார்க்க முடிந்தது. அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் தன் சீட்டுக்குச் சென்று அமர்ந்து, ஒரு சிறு துண்டுப் பேப்பரில் சரசரவென கிறுக்கி, வஸந்த் கையில் திணித்துவிட்டு, மீண்டும் அவள் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.
துண்டுசீட்டை வஸந்த் புரியாமல் பார்த்தபோது, அதில் ஆங்கிலத்தில், "ஆபத்து. விமானத்திற்கு காக்பிட்டில் உள்ள இளைஞனால் ஆபத்து" அவ்வளவுதான்.
=======================================
உள்ளே நுழைந்த இளைஞன், அடுத்த வினாடியே ஜெரால்ட் கன்னத்தில் சுள்ளென அறைந்தான்.
"ஜெரால்ட், எதற்கு அந்த ஜூஸ்? உண்மையிலேயே இன்று உனக்குப் பிறந்த நாளா?" என்றான்.
"இல்லை. விமானம் தரையில் மோதும் போது, பயணிகள் சுயநினைவுடன் இருக்க வேண்டாம் என்று என் வருங்கால மனைவி சொன்ன ஐடியாதான் அது" ஈன்றான் ஜெரால்ட் அடிபட்ட கன்னத்தைத் தடவிக்கொடுத்தபடி.
"பைத்தியக்காரா, உன் வருங்கால மனைவியிடம் எதற்காகச் சொன்னாய்? அறிவில்லையா? அவள் யாரிடமாவது சென்று உதவி கேட்டால்?" என்றான் அந்த இளைஞன்.
"இல்லை, பயப்படும்படி அப்படி யாரும் பயணிகள் மத்தியில் இல்லை. எனவே நீ தைரியமாக இருக்கலாம். இரண்டாவது, நான் ஆரஞ்ச் ஜூஸ்ஸில் கலந்து கொடுத்தது வேகமாக மயக்கம் வரச் செய்யும் மருந்து. நல்ல வேலையாக என் வருங்கால மனைவி ஒரு டாக்டர் என்பதால் அவளிடம் யதேச்சையாக அந்த மருந்து இருந்தது. இறக்கும்போதாவது இந்த அப்பாவிப் பயணிகள் நினைவில்லாமல் இருக்கட்டும்" என்றான்.
சிறிது நேரத்தில், திடீரென காக்பிட் கதவு உதைக்கப்பட்டுத் திறந்தது.
அந்த சின்ன வழியே சரேலென நுழைந்தனர் கோதையும், வஸந்தும். பைலட் பின்னால் நின்றிருந்த அந்த இளைஞன் கைகளைப் பின்புறமாக முறுக்கி, கோதை கழுத்திலிருந்து எடுத்துக் கொடுத்த ஒரு பிளாஸ்டிக் மாலையால் இறுக்கமாகக் கட்டினான் வஸந்த்.
அந்த மாலை பார்க்கச் சிறிதாக இருந்தாலும், வலுவான பிளாஸ்டிக் கயிறால் கட்டப்பட்டிருந்ததால், அந்த இளைஞனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்திருந்தது.
ஒரு செகண்ட் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜெரால்ட் அருகேயிருந்த கோ-பைலட்டிடம், "இன்னும் இருக்கும் கொஞ்ச தூரத்திற்கு விமானத்தைத் தனியாக உன்னால் இயக்க முடியும்தானே?" என்றான் வஸந்த்.
அந்த இளைஞன் புன்னகைத்து, "அது ஏற்கனவே ஆட்டோ-பைலட் மோடில்தான் உள்ளது. என்னால் நிச்சயம் சமாளிக்க முடியும்" என்று சொல்லவும், ஜெரால்டிற்கு என்ன நடக்கிறது என்று புரியும் முன், வஸந்த், கோதைக்குக் கண்ணைக் காட்ட, அவள் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து, "ஸாரி" என்று சொல்லி, ஜெரால்டின் பின் மண்டையில் ஓங்கி அடிக்க அவன் கரபூம் என்று அவனுடைய ஸீட்டில் சரிந்தான்.
=================================
சென்னை ஏர்போர்ட்டில் மும்பையிலிருந்து வரும் PNA - 04 விமானம் இன்னும் சிறிது நேரத்தில் தரையிறங்கும் என்ற அறிவிப்பு வந்தது.
விமானம் தரையிறங்கியது. மெதுவே நகர்ந்து, ஊர்ந்து நின்றது.
பயணிகள் அனைவரும் இறங்கி, அவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் வரும் வரை காத்திருந்துவிட்டு, போலீஸ் துணையுடன், ஜெரால்ட் மற்றும் தன்னைப் பாகிஸ்தானி என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அந்த இளைஞனையும் அடைகாத்து விமான நிலைய காவல் படை அழைத்துச் செல்ல, பின்னால் வந்த வண்டியில் கோதை, வஸந்த் மற்றும் கோ-பைலட் மஞ்சுநாத் மூவரும் ஏறிக்கொள்ள, அதிக மக்கள் கவனத்தைக் கவரும் முன் அந்த இரு வண்டிகளும் சரேலெனக் கிளம்பிச்சென்றன.
=================================
மயக்கம் தெளிந்த ஜெரால்ட் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்க்கும்போது முன்னாள் ஆகிருதியாக நின்றிருந்த மனோஜ் மாளவியாவைப் பார்த்து திடுக்கிட்டான். 'இந்த ஆள் இங்கே எப்படி?'
மனோஜ் மாளவியா அவனைக் கேவலமாகப் பார்த்துவிட்டு, "பாஸ்டர்ட் ஜெரால்ட், நீ முட்டாள்தனமாகத் திட்டமிட்ட இந்த நாடகத்தால் என்னென்ன பிரச்சினைகள் தெரியுமா?" என்றார்.
அருகே கைகளில் விலங்குடன் அமர்ந்திருந்த அந்த இளைஞன் எதுவும் பேசாது தலை குனிந்திருந்தான்.
"நிச்சயம், இதை வெகு சுலபமாக மோப்பம் பிடித்த வஸந்த் மற்றும் கோதைக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். கோ-பைலட், மஞ்சுநாத், வெல்டன் மை பாய்" என்றார் மனோஜ் மாளவியா புன்னகையுடன். பிறகு, வஸந்தைப் பார்த்துவிட்டு,
"வஸந்த், என்ன நடந்தது என்பதை இந்த இரு மடையர்களுக்கு, என்னுடைய மற்ற நிர்வாக நண்பர்களுக்கும் சொல்ல முடியுமா? உங்கள் பாஸ் கணேஷுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல ஏற்பாடு செய்துவிட்டேன்" என்றார் அந்த மாளவியா.
வஸந்த், கோதையைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, "கோதை செய்த ஒரு செயல்தான் இதில் அதிமுக்கியமான திருப்புமுனை" என்றான். ஒரு சில வினாடிகள் இடைவெளிவிட்டு,
"மிஸ்டர். மாளவியா, உங்களுக்குத் தெரியாததல்ல. சமீப காலமாக கமர்ஷியல் (வணிக ரீதியான) விமானத் துறையில் பணி புரிபவர்கள் மிகவும் அல்லலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தியாவில் புதிதாக பைலட்டாக சேரும் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஆரம்ப மாதச் சம்பளம் ஒரு லட்சம் என்றுள்ளது. இதைத் தவிர ஏராளமான PERKS எனப்படும் இதர சலுகைகள் உள்ளன.
ஒரு பைலட் தனது 30 வயதிற்குள் மாதம் ரூ. ஐந்து லட்சம் சம்பளத்தை எட்டிவிடுகிறார்.
கேப்டன் என்ற பதவி உயர்வு கிடைத்துவிட்டாலோ, மாதம் குறைந்த பட்சம் ரூ. பத்து லட்சம் சம்பளம் வருவது நிச்சயம். ஆனால், இன்றைய நிலையில் இந்தியாவில் நடப்பது என்ன? பெரும்பாலான விமான நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் போல ஆகிவிடக்கூடாது என்று, கூடியமட்டும் பைலட் வேலை செய்வோருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் முழு சம்பளத்தைக் கொடுப்பதில்லை. கொடுக்கும் அரைகுறை சம்பளத்தையும் மிக, மிகத் தாமதமாகக் கொடுக்கிறார்கள்.
ஒருவர் பைலட் ஆனவுடன், அவருக்குத் தேவையான / தேவையற்ற செலவினங்கள் அதிகரித்து விடுகின்றன. அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறிவிடுகிறது. ஒரு டிபிகல் பைலட்டின் வாழ்க்கை அதிகாலை வீட்டிலிருந்து கிளம்பி, ஏர்போர்ட்டுக்கு வந்து, பயணத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, விமானம் செலுத்த வேண்டும்.
சராசரியாக ஒரு பைலட், ஒரு மாதத்திற்கு 70 மணி நேரம் விமானத்தை இயக்குவது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால், நிஜத்தில், பெரும்பாலான பைலட்கள் ஒரு மாதத்தில் 80 - 120 மணி நேரம் பறக்கிறார்கள். ஆனால், விமான நிறுவனங்கள், பைலட்கள் சோர்வடைந்தாலும் விடுவதில்லை. சக்கையாக வேலை வாங்குகின்றன. அந்த நிறுவனங்களுக்குள்ள பேராசையே இதற்கு முக்கியக் காரணம். குறைந்த எண்ணிக்கையில் பைலட்களை வேலைக்கு அமர்த்திவிட்டு, அவர்களிடமிருந்து அதிகபட்ச வேலையைக் கசக்கிப் பிழிந்து வாங்கிவிடுகிறார்கள். நிறுவனங்களுக்குள்ள பேராசை பைலட்களின் சோர்வை அலட்சியம் செய்து, ஓரமாகத் தூக்கி வைத்துவிடுகிறது.
சிறுவயதில், இதெல்லாம் பெரிதாகத் தெரியாது. வயது ஏற, ஏற பெரும்பாலான பைலட்கள் மிகவும் சோர்ந்துவிடுகிறார்கள். ஒரு ஏழெட்டு வருடங்கள் இப்படிப் பணி புரிந்தாலே போதும், அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாக மனதிலும், உடலிலும் நிரந்தரமான ஒரு சோர்வு நிலை ஏற்பட்டுவிடுகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள், பைலட்களை வேலைக்கு அமர்த்தும்போது, அவர்கள் 11 வாரங்கள் (கிட்டத்தட்ட 77 - 78 நாட்கள்) வேலை செய்தால், இரண்டு வாரங்கள் (14 - 15 நாட்கள்) விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்கிறார்கள். அதாவது, சராசரியாக, 12 மாதங்கள் வேலை செய்தால், அவர்கள் (கிட்டத்தட்ட) 70 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், உண்மையில் நடப்பது என்னவென்றால் 12 மாதங்கள் வேலை செய்தால் 22 நாட்கள் மட்டுமே விடுப்பு தரப்படுகிறது. இதைத் தவிர பல நிறுவனங்கள் பைலட் வேலைக்குச் சேர ரூ. ஒரு கோடி மற்றும் 10 வருடங்கள் வேலை என பிணயத் தொகையாக bond தயாரித்து விடுகிறது. ஒரு வேளை, பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட வேறு நல்ல வேலை கிடைத்தால் அதற்கு உடனே போய்விட முடியாது. ஏனென்றால், bond இல் குறிப்பிட்டபடி வேலை செய்யாமல் ஒரு நாள் குறைந்தாலும், பிணையத்தொகையான ஒரு கோடி ரூபாயை மிரட்டி வாங்கிவிடுகின்றன இந்த நிறுவனங்கள்.
கூடுதல் நேரம் வேலை என்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டபடியால், பைலட்கள் நிறையவே விவாகரத்து என்ற மனா உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேலை செய்து, மிக அதிக மன உளைச்சலுக்கு ஆளான ஜெரால்ட், தீர்மானம் செய்கிறான். தன்னுடைய நண்பன் ஒருவனைத் தீவிரவாதி போல நடிக்க, நிறையப் பணம் கொடுத்து சம்மதிக்க வைக்கிறான். அவர்கள் திட்டம் மிகவும் தீவிரமானது. மன உளைச்சலை அதிகமாகத் தரும் நிறுவனத்திற்கு அதிர்ச்சி தரும் விதமாக, எந்த விதமான தகவலும் தராமல் இருந்துவிட்டு, சென்னைக்கு அருகே வரும்போது, விமானம் தீவிரவாதியின் பிடியில் இருக்கிறது. குறிப்பிட்ட தொகை தராவிட்டால், விமானமும், அதிலுள்ள அனைவரும் இறப்பார்கள். என்று ஒரு அதிர்வைக் கிளப்பிவிட்டு, வேறெந்த அதிரடி நடவடிக்கைக்கும் அவகாசம் தராமல் இருந்து, பணம் கறந்துவிடுவது.
இதில் ஜெரால்ட் திட்டமிட்டபடி கேட்க நினைத்த பணயத் தொகை 100 கோடி ரூபாய். ஒரு விமானத்தின் விலையையும், மதிப்பிடமுடியாத பயணிகளின் உயிர்களையும் ஒப்பிடும்போது, இந்தத் தொகை மிகச் சாதாரணமானதுதான்.
இந்த நாடகத்தில் முதல் படியாக, உடனிருக்கும் கோ-பைலட், மற்ற ஏர்ஹோஸ்டஸ்கள் நம்ப வேண்டுமென நம் 'தீவிரவாதி' இளைஞர் எடுத்த எடுப்பிலேயே, ஜெரால்ட் சொல்லிக் கொடுத்த படி, அதிரடியாக விமானத்தைத் தரையில் மோதி, அனைவரையும் சாகடிக்க வேண்டும் என்று சொல்லிவிட, கோ-பைலட் மற்றும் ஹோஸ்டஸ்களுக்கு மரண கிலி ஏற்பட்டுவிட்டது.
இதில், ஜெரால்ட் எதிர்பார்க்காதது, தன்னுடைய வருங்கால மனைவி கோதையும் இதே விமானத்தில் பயணம் செய்வது. கோதை, கடைசி நிமிடத்தில், இன்று காதலர் தினம் (14th Feb) என்பதால், இந்த விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்து, தன்னுடைய காதலர் / எதிர்காலக் கணவருக்கு ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறார்.
இரண்டாவது, இவர் ஒரு புத்திசாலி டாக்டர் என்பதால், காக்பிட்டில் நுழைந்து, மயக்க மருந்து ஐடியாவைக் கொடுத்துவிட்டு, இது என்ன விபரீதம் என்ற எண்ணத்திலேயே வெளியே வருகிறார், வெளியே வருபவருக்கு எதிரே வரும் இந்தத் 'தீவிரவாதி' இளைஞர், காக்பிட்டின் கதவை நன்றாகத் திறந்து, கோதை வெளியே வர உதவி வருகிறார். விமானம் ஒரு பாகிஸ்தானியத் தீவிரவாதி கையில் என்று சற்றுமுன்னர் ஜெரால்ட் சொல்லக் கேட்டவர், கதவைத் திறந்து, வெளியே வர உதவி செய்யும் தீவிரவாதியின் மோதிர விரலில் சமஸ்க்ருத ஓம் குறியுடன் ஒரு மோதிரம் !!
முதலில் புரியவில்லை என்றாலும், இருக்கைக்கு வருபவர், வஸந்துக்கு ஒரு உதவிச் சீட்டு அனுப்புகிறார். அதே நேரம், காக்பிட்டிலிருந்து வெளியே வரும் கோ-பைலட் மஞ்சுநாத், உள்ளே பைலட் மற்றும் 'தீவிரவாதி' இருவரும் தமிழில் பேசுவதைக் கேட்கிறார். அவருக்கு ஏற்கனவே, கோதையையும், அவளுக்கு, ஜெரால்ட் மீதிருக்கும் காதலும் தெரிவதால், டாய்லெட்டில் உள்ள பேப்பர் ரோலில் தனது சந்தேகத்தை எழுதிவிட்டு, வெளியே வந்து, டாய்லெட் செல்லுபடி கோதைக்கு ஜாடை காட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
கோ-பைலட் மஞ்சுநாத் குறிப்பிட்ட அந்த டாய்லெட்டில் குறிப்பு எதாவது இருக்கலாம் என்று கோதை சொன்னதையடுத்து, நான் அங்கு சென்று மஞ்சுநாத் டாய்லெட் ரோலில் எழுதிச் சென்றுள்ளதைக் கவனித்து, படித்து, பின் கிழித்து உடனே டாய்லெட்டில் ஃப்லெஷ் செய்துவிட்டுத் திரும்பினேன்.
இதன் பின்னர், கோதையுடன் இரு நிமிடம் பேசிவிட்டு, செயலில் இறங்கத் தீர்மானித்தோம். ஜெரால்ட் மற்றும் அந்தத் தீவிரவாதி இருவரும் தமிழில் பேசியதால், இதன் பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது. எனவே, காக்பிட் உள்ளே இருவருமே ரிஸ்க் எடுத்து அதிரடியாக நுழைந்தோம். தீவிரவாதியாகவே இருந்தாலும் அவன் ஒருவன்தான், அவனுக்கு உதவ யாருமில்லை, மேலும் இருவரும் தமிழில் பேசியதால் அந்த இளைஞன் தீவிரவாதியாக இருக்க வாய்ப்பு இருக்க முடியாது என்பதே எங்களிருவரின் எண்ணம்.
இன்னொரு முக்கிய விஷயம், ஜெரால்ட் பைலட் என்பதால், செக்யூரிட்டியை சுலபமாக ஏமாற்றிவிட்டு, ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து வந்துவிடுகிறான். அவன் கெட்ட நேரம் அது பொம்மைத் துப்பாக்கி என்றாலும், கனமான உலோகத் துப்பாக்கி.
இதில் எனக்குப் பெரும்பாலான விஷயங்களை தீவிரவாதியாக நடித்த ஹரீஷ், பிளேனிலிருந்து இங்கு வரும் நேரத்தில் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டான். இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பது உங்களுக்கும், போலீசுக்கும் வெளிச்சம். என்னை விட்டால் நான் கிளம்பி விடுவேன்" என்றான் வஸந்த் பெருமூச்சுடன்.
அவனருகே வந்த கோதை, "கம் வஸந்த் ஐ வில் டிராப் யூ" என்றாள்.
மாளவியா வஸந்தைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, 'எஸ், நீங்கள் இருவரும் போகலாம். உங்களிடம் இருக்கும் மீதமுள்ள சில FORMALITIES களைப் பிறகு போலீஸ் நிறைவேற்றும்" என்றவர்,
"அண்ட் வஸந்த், உங்கள் இருவருக்கும் பெரிய நன்றி" என்று கை கூப்பினார்.
கோதையுடன் கார் பார்க்கிங்கை நோக்கி நடக்கும்போது, வஸந்தின் மொபைல் அடித்தது. புன்னகையுடன் எடுத்த, "சொல்லுங்க பாஸ்" என்றான்.
"வஸந்த் எல்லாம் மாளவியா பி ஏ மூலம் கேள்விப்பட்டேன். இன்னைக்கு கோபால் செட்டியார் கேஸ்ல ஹியரிங். இன்னும் 45 மினிட்ஸ் தான் இருக்கு. சீக்கிரம் நேரா கோர்ட்டுக்கு வா, ஓகே" என்று சொல்லித் துண்டிக்க,
"உங்க கார் எங்கேயிருக்கு. கோதை?" என்றான் வஸந்த்.
காரில் விரையும் போது,"இப்போ, ஜெரால்ட் அரெஸ்ட் ஆயிட்டா அப்புறம் உங்க கல்யாணம்?" என்றான்.
காரை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்த கோதை சிரித்தாள், "விடுங்க, வஸந்த். எவ்வளவு எலிஜிபிள் பாச்சிலர்ஸ் இருக்காங்க...உங்களையும் சேர்த்து..." என்றாள்.
வஸந்த் சிரித்து, "தட்'ஸ் மை கேர்ள். எங்கேயாவது சின்னதா டிஃபன் சாப்பிடலாமா?" என்றான்.
'உங்க ஹியரிங் ?' என்ற கோதையைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு,
'அது பாஸ் பார்த்துப்பார்" என்றான் வஸந்த்.
No comments:
Post a Comment