🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 76 🌹🌹🌹
16008 சாளக்கிராம கற்களை இணைத்து, கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் செய்யப்பட்ட பெருமாளின் திருமேனியை நாம் இன்று தரிசனம் செய்யும் அற்புதமான திவ்யதேசம்.
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்:-
திருவட்டாறு.
தாயார்: மரகதவல்லி நாச்சியார்
உற்சவர்: ஆதிகேசவப் பெருமாள்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: அட்டாச்சர விமானம்
தீர்த்தம்: கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ
ஊர்: திருவட்டாறு
🌺🌺 தலவரலாறு:-
ஒருமுறை பிரம்மா ஒரு யாகம் நடத்திய போது தவறு ஏற்பட்டது. யாகம் செய்யும் பொழுது முழு மனதுடனும், பயபக்தியுடனும், பொறுமையாக மந்திரங்களை உச்சரித்து நடத்த வேண்டுமல்லவா?? ஆனால் பிரம்மா யாகம் செய்யும் போது சில தவறினைச் செய்து விட்டார்.
இதன் காரணமாக யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அடக்கி அவன் மீது சயனம் கொண்டார். ஆதிசேஷன் மீது சயனிப்பவர், கேசன் மீது சயனித்ததால், இத்தல இறைவனுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்பது திருநாமம்.
மேலும், இத்தலத்தை மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார், "மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்", என்று பாடியுள்ளதையும் நம்மால் அறியமுடிகிறது.
🌺🌺 திருவட்டாறு:-
கேசனின் மனைவி அசூரி என்கிற கேசி வந்தவர் பெருமாள் என்பதை அறியாமல் பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கை மற்றும் தாமிரபரணி நதியையும், துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.
இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அப்போது உண்மையை அறிந்த அவர்கள், "திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓடியதாகவும், இதனால் இத்தலம் "திருவட்டாறு" என அழைக்கப்படுகிறது.
கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் "கேசவப் பெருமாள்" என்றழைக்கப்படுகிறார்.
🌺🌺 12 சிவாலயங்கள் :-
கேசியின் மீது பெருமாள் சயனித்த போது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சித்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார்.
இவையே திருவட்டாரைச் சுற்றியுள்ள 12 சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமானையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
🌺🌺 மறுபிறவி இல்லாத தலம்:-
பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. எனவே இத்தல பெருமாளை வணங்கினால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
🌺🌺 பெருமாள் தரிசனம்:-
இங்குள்ள பெருமாளின் திருமேனி "கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல்) இணைத்து உருவானது.
இத்தல பெருமாளை மூன்று வாசல் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். நடுவாசலில் உற்சவர் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி, பூமி தேவி தாயாருடன் அருள்கிறார்.
கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.
🌺🌺 சூரிய ஒளிக்கதிர்கள்:-
ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமனக் கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
🌺🌺 சிறப்பான தரிசனத்திற்கு:-
108 திவ்யதேசங்களைத் தரிசிப்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரைத் தரிசனம் செய்வதற்கு முன்பு, ஆதிகேசவப் பெருமாளைத் தரிசிப்பது என்பது சிறப்பானதாகும்.
🌺🌺 நீளமான சிலை:-
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில் மிகப் பெரிய அளவில் காட்சி தந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார். 22 நீளமுடைய பெருமாள் இவர்.
இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி தரிசனம் அருள்கிறார். மேற்கு பார்த்த பெருமாளைத் தரிசிப்பது மிகச் சிறப்பு.
இடது கையைத் தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.
இத்தகைய கோலத்தைக் காண்பது மிகவும் அரிதான ஒன்று.
அப்பேற்பட்ட அற்புதமானத் திருக்கோலத்தை நாமெல்லாம் தரிசனம் பெற்று பிறவிப் பெருங் கடலைக் கடக்க வேண்டும் என்று எம்பெருமான் இத்தலத்தில் காட்சி தந்து அருளை வாரி வழங்குகிறார்.
🌺🌺 தொன்மையான தலம்:-
பிரம்மாண்ட புராணம், கருட புராணம், போன்றவற்றில் ஆதி அனந்தபுரம் என்று குறிப்பிட்டுள்ளதால் இத்தலம் காலத்தால் தொன்மையானது என்பதை நம்மால் அறிய முடிகிறது.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கேட்டாயே மட நெஞ்சே
கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி
பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே!!!"
- நம்மாழ்வார்.
🌺🌺 சிறப்புகள்:-
திவ்யதேசங்களில் திருவெஃகா தலத்தைப் போலவே மாறிக் கிடந்த திருக்கோலம்.
திருமகள் பிராட்டி மரகதவல்லி தாயார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
நம்மாழ்வார் பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம்:-
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிருந்து 30 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
🌺🌺 நாளைய பதிவில்:-
மலைநாட்டின் கடைசி திவ்யதேசமான அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில் - திருவண்பரிசாரம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment