சில I phone நண்பர்களுக்கு
இந்த கதைமிகவும் பிடித்து இருக்கின்றது.
முடிவு பகுதி சரியாக தெரியவில்லை எனக்கேட்டதனால் மீண்டும் பதிவிடுகின்றேன்,திரு.கல்பாக்கம்விஸ்வனாதன் அவர்களுக்காக. நன்றி 🙏
கொல்லாதே யாரும் பார்த்தால்....... சிறுகதை
ராம் ஸ்ரீதர்
விவேக் குமார் காலையில் கண் விழித்தபோது இன்னும் அரை மணிநேரத்தில் தான் கைது செய்யப்படப் போகிறோம் என்று நிச்சயமாக நினைக்கவில்லை.
காஃபி குடித்தவாறே அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையை மேய்ந்து கொண்டிருந்த போது வாசல் மணி அழைத்து.கதவைத்திறந்து, "எஸ்" என்றார் கேள்விக்குறியுடன்.
உள்ளே இருவர் நுழைந்தனர்; ஒரு ஆண் (சுமார் 50 வயதிருக்கலாம்), ஒரு பெண்மணி (சுமார் 40 வயதிருக்கலாம்). விவேக் குமாரிடம் எதுவுமே கேட்காமல் சுவாதீனமாக இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர்.விவேக் குமாருக்குப் புரியவில்லை.
உள்ளே நுழைந்த அந்த ஆண், தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "விவேக், உங்களை அரெஸ்ட் செய்கிறோம். வாருங்கள்," என்றார்.
அந்தப் பெண்மணி தன் கையிலிருந்த காகித்தை விவேக் குமார் முன் நீட்ட, அது அவரை அரெஸ்ட் செய்வதற்கான வாரண்ட் என்று தெரிந்து கொண்டார்.
நீதிமன்றத்துக்குச் செல்லும்முன், அவருடைய தம்பி மகனை அலைபேசியில் அழைத்து, " விக்ரம், டீடைலா இப்போ பேசமுடியாது. ஒரு நல்ல வக்கீல் பார்க்கணும்," என்று சொல்லி சுருக்கமாக விவரித்து முடித்து, வந்தவர்களுடன் கிளம்பினார்.
எக்மோர் கோர்ட்டுக்கு போகும் வழியில், காவல்நிலையத்தில் நிறுத்தி மேலும் சில சீருடை அணிந்த காவலர்கள் ஏறிக்கொள்ள வண்டி சடுதியில் சென்றது.கோர்ட் வளாகத்தில் நுழைந்து,
விவேக் குமார் வண்டியிலிருந்து இறங்கும் போது எதிரே வந்த வஸந்த், "விவேக் குமார், ஐ'ம் வஸந்த், உங்க லாயர். என்னோட சீனியர் கணேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவார்," என்றான்.
விவேக் குமாருக்கு ஆச்சயமாக இருந்தது. இது தான் செய்யாத / செய்யவில்லை என நிரூபிக்கக் கடினமான கேஸ் என்று அவருக்குத் தெரியும்.
விக்ரம் இவ்வளவு வேகமாகச் செயல்பட்டு, கணேஷ் / வஸந்த் ஆகியோர் கூட இருக்கப்போகிறார்கள் என்ற செய்தியே தெம்பாக இருந்தது.
கோர்ட் கூடி முதல் கேஸாகவே விவேக் குமாரின் விசாரணை வந்த போது, ஜட்ஜ் மணிவாசகம் கணேஷைப் பார்த்து, "கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுடுங்க, அடுத்து ஒரு ரேப் இருக்கு" என்றார், கிண்டலாகப் புன்னகைத்துக் கொண்டே.
கணேஷ், தொண்டையைச் செருமிக்கொண்டு, "இறந்த சேதுபதி மேல் விவேக் குமாருக்கு முன் விரோதம் இருந்தது உண்மை. ஆனால், அவர்தான் சேதுபதியைக் கொன்றார் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, பாலிஸ்டிக்ஸ் (ballistics) ரிப்போர்ட் படி, சேதுபதியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 6 தோட்டாக்களும் விவேக் குமார் வசம் இருந்த பிஸ்டலில் இருந்து எப்படி வந்தது என்பதைக் கொஞ்சம் ஆராய வேண்டும். அதற்கு எங்களுக்கு ஒரு பத்து நாள் அவகாசம் வேண்டும்," என்றான்.
மணிவாசகம் அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, "என்ன, பிபி, இதுக்கு ஏதாவது உங்க தரப்பில் அப்ஜெக்ஷன் இருக்கிறதா?" என்று கேட்டார்.
பிபி தலையை இடம் வலமாக ஆட்டிவிட்டு, "யுவர் ஆனர், எங்களுக்கு இதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், இது ஒரு ஓப்பன் & ஷட் கேஸ் என்பது கணேஷுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு வாரத்திற்கு மேல் இதைத் தள்ளிப் போடவேண்டாம்," என்றார்.
கணேஷ் எதுவும் பேசும் முன், ஜட்ஜ், "ஓகே, அப்போ இந்தக் கேஸ் மறு விசாரணைக்கு வரும் திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால், அது வரை விவேக் குமாரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்யும் படி பரிந்துரைக்கிறேன்" என்று உடனடியாக ஒத்திவைத்துவிட்டார்.
அன்று மதியமே, விவேக் குமாரைச் சந்தித்த போது, கணேஷ் கேட்ட முதல் கேள்வி,
"அது எப்படி சார் உங்க பிஸ்டலை யூஸ் பண்ணி சேதுபதியைக் கொன்னிருக்காங்க, அதுவும், உங்களுக்குத் தெரியாம?" என்று கேட்டான்.
விவேக் குமார் சில வினாடிகள் மௌனமாக இருந்துவிட்டு, "உண்மையில எனக்கும் அது ஆச்சரியமா இருக்கு. தினமும் தூங்கும் போது பிஸ்டல் என் தலைமாட்டுல இருக்கிற பிறையில் தான் இருக்கும், உள்ளே தாள் போட்டுட்டுத் தான் தூங்குவேன், அன்னைக்கும் அதேமாதிரிதான்.
ஆனால், உள்ளே யாரோ நுழைஞ்சு, நான் தூங்கும் போது என் பிஸ்டலை எடுத்து சேதுபதியைக் கொன்னுட்டு திரும்பவும் வந்து என் தலைமாட்டுலேயே பிஸ்டலை வச்சுட்டுப் போயிருக்காங்க, சிம்ப்லி பிரில்லியண்ட்," என்றார்.
கணேஷ், "வஸந்த் ?" என்றான்
வஸந்த், இடம் வலமாகத் தலையை ஆட்டிவிட்டு, "சுத்தமா கதை வசனம் புரியலை, பாஸ். ஆனா, நல்லா க்ளெவரா வேலை பார்த்திருக்காங்கன்னு தெரியுது. கண்டுபிடிச்சிடலாம்" என்றான்.
கணேஷும், வஸந்தும் அங்கிருந்து சிறிது நேரத்தில் கிளம்பினார்கள்.
====================
தம்புச்செட்டி தெருவில் உள்ள அலுவலகலத்தை அடைந்து, கணேஷ் தன்னிடம் இருந்த விக்ரம் கொடுத்த பேப்பர்களில் மூழ்கினான்.
பக்கத்துக் கடையில் காஃபியும், சமோசாவும் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்த வஸந்த், கணேஷிடம்,
"உங்களுக்கென்ன பாஸ், விவேக் குமார் பத்தி அந்த விக்ரம் குடுத்த பேப்பர்ஸ் இருக்கு படிக்க. நம்ம எல் & டி பத்மஜாவை ஒரு மாதிரி கரெக்ட் பண்ணி, இன்னைக்கு ' கூட்டமில்லாத தியேட்டருக்குக் கூட்டிகிட்டுப் போலாமுன்னு நெனச்சேன். இப்போ, காரியமே கெட்டது." என்றான்.
படித்துக்கொண்டிருந்த கணேஷ் நிமிர்ந்து, "புலம்பாதே வஸந்த், அந்த பத்மஜாவும் எங்கேயும் போகமாட்டா, தியேட்டரும் எங்கேயும் போகாது, இப்போ நம்ம வேலையைப் பார்ப்போம்," என்றான்.
கணேஷ் பக்கமிருந்த பேப்பர்களில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்ட வஸந்த்,
"புரியல பாஸ், பிஸ்டல் இவர் தலைமாட்டுலேயே இருக்கு, வீட்டு கதவு உள்பக்கமா பூட்டு போட்டிருக்கு. விவேக் குமாருக்குத் தெரியாம அப்படி யார் சத்தமே போடாம உள்ள வந்து, விவேக் தலைமட்டுல இருந்த பிஸ்டலை எடுத்துக்கிட்டு, வெளியே போய் - விவேக் குமார் வீடு இருக்கிறது பெசன்ட் நகர்ல, சேதுபதி செத்துக்கிடந்தது எக்மோர்ல - சேதிபதியை 6 தடவை சுட்டுட்டு வந்து திரும்பவும் சத்தமே இல்லாம பிஸ்டலை விவேக் தலைமாட்டுல வச்சுட்டு, வீட்டுக் கதவை பூட்டிக்கிட்டு போகமுடியும்?
இவ்வளவு நடந்திருக்கு இந்த விவேக் குமார் முழிச்சுக்கவே இல்லையாம். அந்தாளு என்ன கும்பகர்ணப் பரம்பரையா?" என்றான்.
கணேஷ் அவன் பேசுவதை யோசனையுடன் கேட்டுவிட்டு, "பாலிஸ்டிக்ஸ் ரிப்போர்ட் ரொம்பத் தெளிவா இருக்கு, வஸந்த். விவேக் குமார் பிஸ்டல்ல இருந்துதான் அந்த 6 குண்டும் சேதுபதி ஒடம்புல போயிருக்கு. டௌட் இல்ல. ஆனா எப்படிங்கிறதுதான் இப்போ மில்லியன் டாலர் கேள்வி," என்றான்.
"அந்த மூணாவது ஆள் யாருன்னு தெரியல பாஸ். விவேக் குமார் / சேதுபதி இரண்டு பேர் மேலையும் எரிச்சல்ல இருக்கிற ஆளா இருக்கணும். இல்ல, சேதுபதி பத்தி ஃபுல்லா தெரிஞ்ச ஆளா இருக்கணும். அந்த சேதுபதிக்கும், நம்ம விவேக் குமாருக்கும் இடையே எப்பவோ இருந்த பகையை தெரிந்து வச்சுக்கிட்டு, விவேக் குமாரை பலிகடா ஆக்கிட்டான்," என்றான் வஸந்த்.
"விவேக் குமார் சர்வீஸ்ல இருந்து வெளியே வந்து 6 வருஷம் ஆச்சு. தினமும் அவர்பாட்டுக்கு, பெசன்ட் நகர் பீச்ல ஜாகிங், அப்புறம் வீட்டுப் பக்கத்தில இருக்கிற ஹெர்குலஸ் ஜிம்ல எக்சர்சைஸ், பிறகு டிவி சீரியல்னு ஒரு மாதிரி நிம்மதியான வாழ்க்கை, இதுல எங்க அந்த மூணாவது ஆள் திடீர்னு வந்தான் தெரியல." என்றான் கணேஷ்.
"வஸந்த், நான் கேட்ட விஷயம் 3 -4 பாக்கி இருக்கு, அதை முடிச்சிட்டு வா, அப்புறம் பேசலாம்,"
வஸந்த் வாசலில் இருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியேறிய போது, உள்ளே நுழைந்த ஆள், கணேஷைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு,
"பிரபாகர் ஐயா அனுப்பிச்சாருங்க. இந்த பலாப்பழம் உங்க கிட்ட குடுக்கச் சொன்னாரு," என்று சொல்லி ஒரு பெரிய சைஸ் பழத்தை, சோஃபாவின் கீழே வைத்தான்.
பிரபாகர் என்றது அடையாறில் இருக்கும் ஒரு பிரபல டாக்டர். கணேஷின் பழைய கிளையண்ட்.
கணேஷ் தலையாட்டிவிட்டு, "இவ்வளவு பெரிய பழம் இங்க யாருப்பா சாப்பிடப்போறா?"என்றான்.
பழத்தைக் கொண்டு வந்த ஆள் அவன் பையிலிருந்த அலைபேசியைக் கையில் எடுத்து, பிரபாகரை அழைத்தான்.
"கணேஷ், எப்பிடி இருக்கீங்க? கும்பகோணம் போயிட்டு வர்ற வழியில பண்ருட்டி கிட்ட ஒரு பலாப்பழம் வாங்கிட்டு வரமுடியுமானு வஸந்த் கேட்டாரு. சரி நம்ம கணேஷ் / வஸந்த்க்கு இல்லாததான்னு வாங்கிட்டு வந்தேன். என்னாச்சு, கணேஷ் ? ஏதாவது பிராபளமா? என்றார் பிரபாகர்.
"ஓ, ஃபைன் டாக்டர், வஸந்த் கேட்டது எனக்குத் தெரியாது. நோ இஷ்யூ" என்றான் கணேஷ்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வஸந்தை அலைபேசியில் அழைத்து, "வஸந்த், எதுக்கு இந்த வெட்டி வேலை? டாக்டர் பிரபாகர் கிட்ட பலாப்பழம் கேட்டியா?" என்றான்.
ஒரு சில செகண்டுகள் இடைவெளிவிட்டு வஸந்த் சிரித்து, "ஓ, அதுவா? நம்ம செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ் காஞ்சனமாலா கேட்டாங்க, அதுதான்.....," என்று இழுத்தான்.
"ஏண்டா, ஜட்ஜ் கிட்டலாம் கொஞ்சிகிட்டு ?? உன்னை என்ன சொல்றதுன்னு தெரியல" என்று கணேஷ் சிரித்தான்.
"செம மாலு பாஸ், தப்பா எடை போடாதீங்க. கண்ணாலேயே பத்து பேரை சாச்சுடுவாங்க" என்றான் வஸந்த்.
கணேஷ் தலையை இடம் வலமாக ஆட்டிவிட்டு, "உன்னைக் கண்டிப்பா திருத்தவே முடியாதுடா" என்றான்.
========================
"ஸாரி கணேஷ், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்" என்றார். விவேக் குமார்.
கணேஷ் அவரைப் பாத்து சிரித்துவிட்டு, " ஏதாவது நல்ல விஷயமா, உங்களை இந்தக் கேஸிலிருந்து காப்பாத்தற விஷயமா இருந்தா நல்லா இருக்கும்,: என்றான்.
கோர்ட்டில் ஒரு ஹியரிங் வந்ததை வஸந்த் வசம் தள்ளிவிட்டுவிட்டு கணேஷ் மட்டுமே அவரைப் பார்க்க வந்திருந்தான்.
"இது அவ்வளவு பெரிய விஷயமா எனக்குத் தெரியல. நான் ஒரு வாரத்துல மூணு முறை ஒரு ஷூட்டிங் ரேஞ்சுக்குப் போய் ப்ராக்டிஸ் பண்றேன். என்கிட்டே லைசன்ஸ் இருக்கு அப்புறம், ஒரு எக்ஸ்-போலீஸ் ஆஃபிசர் பிராக்டிஸ் இல்லாம இருக்கிறது கிரிமினல் வேஸ்ட் அப்டிங்கிறதால கீழ்பாக்ல இருக்கிற அட்லாஸ் ஷூட்டிங் ரேஞ்சுக்கு ரெகுலரா போவேன்," என்றார்.
சிந்தனையுடன்."சென்னையில ஷூட்டிங் ரேஞ்சா, ஆச்சரியமா இருக்கு," என்றான் கணேஷ்.
"இந்த ஷூட்டிங் ரேஞ்சை ஆரம்பித்த போது - என் நண்பர் பிரசன்னா, தனியாக செய்த முயற்சி- நல்ல வரவேற்பிருக்கும் என்ற எண்ணத்தினால்தான், நிறைய செலவு செய்து ஆரம்பித்தார். இதை ஆரம்பித்து ஒரு ஆறு மாதம் ஆன பிறகே அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தலைதூக்க, இப்போது, என்னைப் போன்று கிட்டத்தட்ட 25 -30 எக்ஸ் சர்வீஸ்மென் மட்டுமே இது நடக்கக் கொஞ்சம் உதவுகிறோம்.
பிரசன்னாவும் என்னைப்போலவே ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன் மற்றும் , கொஞ்சம் வசதியுள்ள ஆசாமி என்பதால் ஏதோ சமாளிக்கிறார்,: என்று சொல்லி முடித்தார்.
கணேஷ் அவர் சொல்வதை கவனமாகக் கேட்டுவிட்டு, "நீங்கள் சர்வீஸில் இருக்கும்போது, பாதியிலேயே வாலண்டரியாக வேலையை விடக் காரணமே அந்த சேதுபதி கொடுத்த தொந்தரவு என்று கேள்விப்பட்டேன். அதுபற்றி ஏதாவது....?"
அவன் முடிக்குமுன் விவேக் குமார் குறுக்கிட்டார்.
"கணேஷ் நீங்கள் சொல்வது கிட்டத்தட்ட சரி. என்னைப் போன்ற சிலர் லஞ்சம் வாங்கக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும், அரசியல்வாதிகளுக்கு வரம்பு மீறி கூஜா தூக்கக்கூடாது போன்ற சில விஷயங்களில் கவனமாக இருந்தது ஒரு முக்கிய காரணம்.
இதே சேதுபதி, அவனுக்கிருந்த செல்வாக்கினால், பிரசன்னாவுடன் பார்ட்னராகச் சேர்ந்து கொண்டு, அந்த பிசினஸை ஒரு லீகல் ஃப்ரெண்ட்டாக (front) வைத்துக்கொண்டு, அதன் மூலம் சில நிழலான காரியங்களை செய்யலாம் என நினைத்தான்.
பிரசன்னா மூலம் இந்த விஷயம் எனக்குத் தெரியவர நான் சேதுபதியிடம் நேராகப் பேசி அவன் எண்ணம் ஈடேறாது என ரொம்பவே க்ளியராக சொன்னேன். அதில்தான் என் பிரச்சனைகள் ஆரம்பித்தன" என்றார்.
மேலும் சில விஷயங்களை இருவரும் பேசிவிட்டு, கணேஷ் கிளம்பினான்.
===================
"பாஸ், சேதுபதியோட ஆடாப்ஸி ரிப்போர்ட் காப்பி கேட்டீங்களே, இந்தாங்க." ஒரு பழுப்பு நிற உறையை கணேஷ் கையில் கொடுத்தான் வஸந்த்.
"பலாப்பழம் பத்தி கவலைப்படாதீங்க, பாஸ். அதை ஜட்ஜ் காஞ்சனமாலாவோட டிரைவர் கிட்ட கொடுத்தாச்சு," என்றான்
மேலும்.கணேஷின் மொபைலில் டாக்டர் பிரபாகர் வர, "யெஸ், டாக்டர்," என்றான் கணேஷ்.
டாக்டர் தொண்டையைச் செருமிக்கொண்டார், "கணேஷ், என் ஃபிரெண்ட் விவேக் குமார் கேஸ்ல நீங்கதான் லாயர்னு கேள்விப்பட்டேன். ப்ளீஸ் டூ சம்திங் அண்ட் ஸேவ் ஹிம்," என்றார்.
"நிச்சயமா, வி வில் டூ அவர் பெஸ்ட்," என்று துண்டித்தான் கணேஷ்.
"இன்னைக்கு பீட்ஸா நைட் பாஸ், சொல்லிட்டேன்," என்று சிரித்தான் வஸந்த்.
மேஜை மேலிருந்த டாக்டர் பிரபாகரின் படத்தைப் பார்த்து விட்டு, "இது எங்க, இங்க?" என்றான்.
"அந்த டிரைவர் பலாப்பழம் கொண்டு வந்து வைக்கும் போது கீழே கறை ஆயிடும்னு ஒரு பேப்பர் வச்சு அது மேல வைக்கச் சொன்னேன். காருல தேடி இந்த கவரை எடுத்து, அதுமேல பழத்தை வச்சுட்டுப் போய்ட்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்தக் கவருக்குள்ள ஏதாவது இருக்கானு ஏதேச்சையா தேடின போது இந்த படம் ஆப்ட்டது," என்றான்
கணேஷ்.கதவு மணி ஒலிக்கவே வஸந்த் கதவைத் திறந்து, பீட்ஸாவை வாங்கி வைத்துவிட்டு பணம் தேடினான்.
டெலிவரி செய்த இளைஞன் மேஜை மேலிருந்த பிரபாகர் படத்தை பார்த்துவிட்டு, "சார், தப்பா எடுத்துக்காதிங்க. இவரு உங்களுக்கு வேண்டியவாரா?" என்று கேட்டான்.
கணேஷ் அவன் எதை கேட்கிறான் என்று திரும்பிப் பார்த்து விட்டு, "ஆமாம்பா, தெரிஞ்சவர் படம், ஏன் கேக்கற?" என்றான்.
பீட்ஸா டெலிவரி கொடுக்க வந்தோமா, காசு வாங்க்கிக்கொண்டு போக வேண்டும், இந்த மாதிரி அனாவசியக் கேள்வியெல்லாம் கூடாது என்கிற எரிச்சல் த்வனி கணேஷ் குரலில் இருந்தது.
"இல்ல சார், இப்போ ரீஸண்டா எனக்கும் இவருக்கும் கீழ்பாக்கில்ல பெரிய தகராறு ஆயிடுச்சு சார், அதுதான் கேட்டேன்," என்றான்.
"இவரா, கீழ்ப்பாக்கா? எந்த இடம் சொல்லு," என்று கேட்ட கணேஷின் குரலில் ஆர்வம் இருந்ததை வஸந்த் கவனித்தான்.
"ஆமா சார், அங்க இந்த பணக்காரங்க வந்து சுட்டு விளையாடுவாங்களே அட்லஸ்னு ஏதோ பேர் வரும். அங்கிருந்து வெளிய இவர் காரை ரிவர்ஸில் எடுத்தார் சார், இருட்டு வேற, கொஞ்சம் வேகமா வந்து, என் வண்டி மேல இடிச்சுட்டார், சார்.
அதுக்கு எதுத்தாப்புல ஒரு அபார்ட்மெண்ட்ல நான் டெலிவரி கொடுத்துட்டு வெளியே வரும்போது இடிச்ச சத்தம் கேட்டு ஓடினேன்.
கொஞ்சம் கூட கவலை இல்லாம, "தம்பி, அவசரம் வண்டி மேல இடிச்சுட்டேன், இந்தா" ன்னு நாலு 500 ரூபாய் நோட்டை விசிறி எறிஞ்சுட்டு கிளம்பப் பாத்தாரு,. நான் சத்தம் போட்டேன்,
கீழ இறங்கி வந்து ஒரு அறை அறைஞ்சுட்டு, திரும்பக் கார்ல ஏறிகிட்டு போய்ட்டாரு சார்," என்றான்.
வஸந்த் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினான். "வஸந்த், சேதுபதியோட பொணம் எங்க கிடைச்சுதுன்னு போலீஸ்ல சொன்னாங்க?" என்று கேட்டான் கணேஷ்.
பீட்ஸா டப்பாவை பிரித்துக் கொண்டிருந்த வஸந்த், "சேதுபதி வீட்டுப் பக்கத்துல, கீழ்பாக்" என்றான்.
மேஜை மேலிருந்த சேதுபதியின் ஆடாப்ஸி ரிப்போர்ட்டை எடுத்து சிறிது நேரம் புரட்டினான் கணேஷ். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பிணத்தின் படத்தையும் பார்த்தான்.
6 குண்டு வரிசையாக சுட்ட அடையாளங்கள். எல்லாமே நெஞ்சின் நடுவே."வஸந்த், நாம ஒரு நடை அந்த அட்லாஸ் ஷூட்டிங் ரேன்ஜ் வரைக்கும் போயிட்டு வரலாமா?" என்று கேட்டான்.
"பீட்ஸா ஆறிப்போயிடும் பாஸ், சாப்ட்டுட்டு..." என்ற வஸந்திடம்,
"இல்ல, இப்பவே. திரும்ப வந்து அவன்ல சுடப்பண்ணிக்கலாம்" என்றான் கணேஷ்.
அவன் குரலில் இருந்த தீர்மானம் வஸந்தை எதுவும் பேசவிடவில்லை.
இருவரும் அட்லாஸ் ஷூட்டிங் ரேன்ஜ் சென்று விட்டு, அங்கிருந்து வெளியே வந்து, விவேக் குமாரைப் பார்க்க அனுமதி பெற்று உள்ளே நுழைந்து அமர்ந்தனர்.
தன்னுடைய செல்லில் இருந்து வெளியே வந்த விவேக் குமார்," வாங்க கணேஷ், சர்ப்ரைஸ் !" என்றார்.
"உங்க கேஸ் முடிஞ்சது, விவேக்," என்றான் கணேஷ்.
"பிரில்லியண்ட், கணேஷ், சுட்டது யாரு ?" என்றார் விவேக் குமார்.
"நீங்கதான்," என்றான் கணேஷ்.
======================
மறு நாள் கோர்ட்டில்:"கணேஷ், என்ன இது தடாலடி வேலை? பத்து நாள் அவகாசம் கேட்டிங்க, இப்போ உடனே கேஸை எடுத்துக்கச் சொல்றிங்க," என்ற ஜட்ஜ் மணிவாசகத்தின் குரலில் ஆச்சரியம் இருந்தது.
"ஸாரி யுவர் ஆனர், எனக்கு ஒரு அரை மணி அவகாசம் கொடுந்திங்க என்றால், ஐ கேன் எக்ஸ்பிளைன்," என்றான் கணேஷ்.
"ப்ளீஸ், கோ அஹெட்," என்றார் மணிவாசகம்.
"யுவர் ஆனர், இது வெளிப்படையா பார்த்தா, நம்ம பிபி சொன்ன மாதிரி 'ஒரு ஓப்பன் & ஷட் கேஸ்' ஆனா, ஒரு சின்ன பிரேக் கெடச்சது அதுதான்," என்றான்
கணேஷ்."இது என்னன்னு கொஞ்சம் டீடைல்ஸ் வேணும்," என்றார் மணிவாசகம்.
கணேஷ் வஸந்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு,
"டாக்டர் பிரபாகர், விவேக் குமாரோட ரொம்ப வருடத்திய நண்பர். சேதுபதி, தன்னால் அட்லாஸ் ரேன்ஜல பார்ட்னராக முடியவில்லை, அதை விவேக் குமார் அப்போஸ் பண்ணுவதால் பிரசன்னா ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என்ற ஆதங்கத்தில், காமன் ஃபிரெண்டான டாக்டர் பிரபாகரை நாடுகிறார்.
அவருக்கு சில முக்கிய சலுகைகளையும் செய்து தர முடியும் என்ற வாக்குறுதி கொடுத்தபின், பிரபாகரும் அதற்கு முயற்சிக்க, விவேக் குமார் பிடிவாதமாக முடியாது என்று சொல்லவே, கோபத்தில் பிரபாகர் ரொம்ப புத்திசாலித்தனமாக செயல்பட்டு, சேதுபதிக்கு ஒரு ஊசியைப் போடுகிறார்.
சேதுபதியிடம் அது அவருடைய சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த என்று ஒரு பொய்யைச் சொல்லுகிறார்"."அது 'அட்ராகுரியம் பேஸிலேட்' (atracurium besylate) என்ற ஒரு மஸில் ரிலாக்ஸண்ட் (muscle relaxant).
டாக்டர்கள் அதை மிக்க கவனத்தோடு, ஒரு அனஸ்தெடிஸ்ட் உதவியோடுதான் கையாளுவார்கள். ஏனென்றால், அது உள்ளே சென்று ரத்தத்தோடு கலந்துவிட்டால், உடலில் முக்கிய உறுப்புக்கள் எல்லாமே ரிலாக்ஸ் ஆகி தளர்ந்து விடும், நுரையீரல் உட்பட.. சரியாகக் கையாளாவிட்டால், ஊசி போட்டுக்கொண்டவர் மரணமடைய வாய்ப்புண்டு. வலியில்லாத சாவு.
சேதுபதி இறந்தவுடன், கால தாமதம் இல்லாமல், பிரசன்னாவிடம் தகவல் சொல்லி, அவரிடம் சாம, தான, பேத, தண்டம் எல்லாம் உபயோகித்து, அவரைச் சம்மதிக்க வைத்து, சேதுபதியின் உடலை அட்லாஸ் ரேன்ஜுக்குக் கொண்டு வந்து, சுட வருவோர் பிராக்டிஸ் செய்யும் அரினாவில் (arena), டார்கெட் பிராக்டிஸ் செய்யும் பலகைக்கு பின்னால் சேதுபதியின் உடலை நிறுத்திவிடுகிறார், டாக்டர்.
எப்போதும் போல ப்ராக்டிஸுக்கு வரும் விவேக் குமார் அந்த அரினாவில் எங்கே நின்று சுட வேண்டும் என்ற பிரசன்னாவின் வேண்டுகோளைத் தட்டாதவர். அதே போல அன்றும் அவர் சொன்ன இடத்தில் நின்று சுட்டு பிராக்டிஸ் செய்கிறார். ஆறு குண்டுகள். ஆறும், டார்கெட் பேப்பர் ஒட்டப்பட்ட மெல்லிய பலகையின் பின்னால் இருக்கும் சேதுபதி உடலில் பாய்கின்றன.
சேதுபதியின் உடலைக் காரில் வைத்து வெளியே ரிவர்ஸில் வரும் போது, டாக்டர் தெரியாமல் பீட்ஸா டெலிவரி இளைஞனின் பைக்கில் மோதி விடுகிறார்.
அதற்குண்டான பணத்தைக் கொஞ்சம் பதிவிசாகக் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம், ஆனால், அவருக்கிருந்த பதட்டத்தில், அந்த இளைஞனை அறைந்து விடுகிறார் டாக்டர்.
இந்த ஒரு விஷயம் தவிர, ஆடாப்ஸி ரிப்போர்ட்டில் சேதுபதி உடலில் சுட்ட இடத்தில் மிக லேசான மரத்துகள்கள் (minute traces of wooden husk) என்ற ஒரு வார்த்தை இருந்தது, என் இன்னொரு டாக்டர் நண்பர் சுப்ரமணியத்திடமும் இது பற்றிய விவரம் கேட்டேன்," என்று முடித்தான்.
"வெரி நைஸ் இன்வெஸ்டிகேஷன் கணேஷ், இப்போ நான் செய்ய வேண்டிய சில வேலைகள் இருக்கு," என்றார் மணிவாசகம்.
கணேஷ் வஸந்தைத் திரும்பிப் பார்க்க அவன் கண்கள் சொருகுவது போல பாவனை செய்து, "கலக்கிட்டீங்க, பாஸ்" என்றான்.
No comments:
Post a Comment