ஜாய்ஸ் அரவாமுதன்
கிரீம் செண்ட்டரில் நாகராஜனை எதேச்சையாகப் பார்த்தேன். கூடவே ஒரு பதினேழு வயது பெண். நாகாராஜனும் அவன் பெண்ணும் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் மனைவி கண்ணில் படவில்லை. அசௌகரியம் போலும், குழந்தை அழகாக இருந்தாள். நாகராஜின் மனைவி சாயலாக இருக்கவேண்டும். கொஞ்சம் மூக்கில், கொஞ்சம் மோவாயில் மட்டும் நாகராஜ். அவனைப்பார்த்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.
நாங்கள் ஒன்பதாவது படிக்கும்போது நாகராஜ் எங்கள் கிளாசில் சேர்ந்தான். நாங்கள் கேள்விப்பட்டிராத ஏதோ பெசன்ட் நகர் என்றான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெசன்ட் ஸ்கூல், அப்புறம் வீட்டில் தனியா அனுப்பவே அனுப்பாத எலியட்ஸ் பீச். "அங்கே தினோம் கொலை நடக்குண்டா" என்ற ரீதியில் தமிழ்வாணன் மற்றும் சங்கர்லால் பாதிப்பில் பேசிக்கொள்வோம்.
அங்கே வீடெல்லாம் வந்துடுத்தா என்ற ஆச்சரியத்தோடு மட்டுமின்றி “டேய்! நீ தினம் பீச்சுக்கு போலாம் இல்ல" என்று பொறாமைப்பட்ட நாகராஜ்.
அவனை விவரிப்பது இந்த கதைக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவது இல்லையென்றாலும் விவரிப்போம்:
மெல்லிசாக இருப்பான். கை, காலெல்லாம் மெல்லிசாகக இருக்கும். கொஞ்ச நளினத்தொடுதான் நடப்பான். முகத்தில் அதீத எக்ஸ்பிரஷன்கள் கொடுத்துப்பேசுவான். அப்போது வெளி வந்திருந்த "மாதமோ ஆவணி" பாட்டு அவனுக்கு ரொம்பவும் ஃபேவரைட். “நன்றாகப்பாடுவேன்” என்று அவனே சொல்லிக்கொண்டு சிலரை டெஸ்கின் மேல் குவித்துக்கொண்டு சன்னமான குரலில் யாருக்கும் கேட்காதபடி பாடுவான். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்கிறவரைக்கும் கேட்டுத்தீர்த்துவிடுவான்.
இங்கே பாட்டு நடந்து கொண்டிருக்கும்போது பெண்டுகள் பக்கம் குறும்புச்சிரிப்பும், கேலிப்பார்வையும் சர்வ சாதாரணமாகத் தென்படுவது ஏனோ எங்களில் சிலருக்கு வெட்கமாக இருக்கும்.
இந்த நாகராஜன் வில்லியம் எடித் சொல்லும் ”கவனத்தைக்கவர விரும்பும்” எக்ஸ்ட்ராவெர்ட் என்றுதான் சொல்லவேண்டும்.
சட்டென்று ஒட்டிக்கொள்ளும் சாதுரியம் அவனுக்கு இருந்தது. நாங்களெல்லாம் பேசவே வியர்த்து விறுவிறுக்கும் பெண்களிடம் சர்வ சாதாரணமாக போய் பேசிவிட்டு ஒரு வெற்றிச்சிரிப்புடன் எங்களை நோக்கி சிவாஜி கணேசன் நடை நடந்து வருவான். வசுந்தரா, ராஜி போன்ற சுந்தரவடிவுடைய பெண்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லைஎன்றாலும், சந்திரிகா, கீதா போன்ற நோஞ்சான்கள் மத்தியில் நாகராஜனுக்கு ஒரு காரிஸ்மாடிக் மரியாதை இருந்த விஷயத்தை எப்போதும் போல ஈயம் தான் கண்டு சொன்னான்.
முக்கியமாக வசுந்தராவுக்கு அவனைக்கண்டால் ஆகாது. ஏனென்றால் ஒரு முறை கிளாஸ் பெண்கள் பார்க்கும்படி நாங்கள் கிரிகெட் விளையாடும்போது நாகராஜன் போட்ட முதல் பந்திலேயே சுந்தர் அவுட் ஆகிவிட்டதுதான்! சுந்தர் அவுட் ஆனால் வசுந்தரா ஏன் அப்ஸெட் ஆகவேண்டும் என்று கேட்கும் அப்பாவி இல்லை நீங்கள் என்று நம்புகிறேன்! நாகராஜ் பாட ஆரம்பித்தாலே வசுந்தரா குரலை உசத்தி ஏதானும் சொல்வாள்.
ஒரு முறை காந்தி நகர் மூணாவது மெயின் ரோடில் நாகராஜனுக்கும் சுந்தருக்கும் சின்ன கை கலப்பு ஏற்பட்டுவிட்டது என்று பராபரியாக செய்தி வந்தும் இருவரும் அதை கன்ஃபர்ம் செய்யவே இல்லை.
கதை கொஞ்சம் அலை பாய்வதால் ஜேம்ஸ் அரவாமுதனைப்பற்றி சொல்லிவிடுகிறேன்.
இந்த ஜேம்ஸ் நாகராஜின் பெசன்ட் நகர் நண்பன். எங்களுக்கு அவனைத்தெரியவே தெரியாது, அந்த கிரிகெட் மாட்ச் நடைபெறும் வரை. அவன் பெசன்ட் ஸ்கூலில் படிக்கிறான் என்ற விஷயம் மட்டும் நாகராஜ் சொல்லி தெரியும். இப்போது இந்த விவரம் போதும். ஏனெனில் இவன்தான் இந்தக்கதையில் பிற்பாடு ஒரு திருப்பத்தை உண்டு பண்ணப்போகிறான்..
ஜாய்ஸ் பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் இல்லை? சரி, சொல்கிறேன்.
அவள் ஜேம்ஸ் அரவாமுதனின் அழகான தங்கை. பாவாடை தாவணியுடன் பெசன்ட் ஸ்கூலுக்கும், மத்தியான வேளைகளில் பைஜாமா தாவணியுடன் சாரதா ஹாப்மன் என்னும் பெரிய சாரதா டீச்சரிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள கலாக்ஷேத்ராவுக்கும் போய் வருவாள். நாங்கள் யாரும் அவளைப்பார்த்ததே இல்லை. விவரங்கள் எல்லாம் நாகராஜ் உபயம். இது விஷயமாக ஈயம் ஒன்றும் உபயோகமாக இல்லை என்பது ஆச்சரியம். ஈயத்தை தனியாக மடக்கி விசாரித்தபோது, " டேய்! அவளெல்லாம் வெளி ஏரியா. அங்கெல்லாம் போய் கேட்கக்கூடாது" என்று Non Compete ரேஞ்சுக்கு பதில் சொல்லி ஒதுங்கிக்கொண்டான்.
சென்ற மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈயத்தை பெசன்ட் நகரில் பார்த்ததாகவும் அவன் கையில் ரத்தக்கறையுடன் நொண்டி நொண்டி நடந்து சைக்கிளில் எறிச்சென்றதாகவும் ஒன்பதாம் கிளாஸ் வெண்டைக்காய் என்னும் குமார் சொன்னதற்கும், ஈயம் ரெண்டு மூணு நாள் முழங்கையில் ப்ளாஸ்திரியுடன் வந்ததும் ஒப்பிட்டுப்பார்த்தபோது ஏதோ புரிகிற மாதிரி இருந்தது. "அடுத்த முறை எங்க எரியா பக்கம் வந்தே அந்தரங்கமான இடத்தைப்பிசைஞ்சுருவோம்" என்று மிரட்டப்பட்டதாகவும் ஒரு வதந்தி உலாவியது.
ஈயத்தின் ஆப்தனான மனோகருக்கு A 1 பபிள்கம் வாங்கிக்கொடுத்து கேட்டதில், நாகராஜன் தான் ஈயத்தை பெசன்ட் நகர் பக்கம் வரவழைத்து ஆள் வைத்து அடித்து விட்டான் என்ற உண்மை வெளியே வந்தது. ஈயமும் நாகராஜனும் பேசாமல் இருந்ததற்கான காரணம் விளங்கிவிட்டதால் நாங்கள் அந்நாளைய தர்மப்படி அது பற்றி கேள்வி கேட்காமல் மௌனம் காத்தோம். மொத்தத்தில் ஜாய்ஸ் பற்றி நாகராஜ் சொல்வதுதான் கடைசி வார்த்தை என்றாகி விட்டது. நாங்களும் கண்ணில் காணாத அவளை விட்டுவிட்டு அருகாமை பெண்டுகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.
நாகராஜின் பர்சனாலிட்டி ஒரு மாதிரி சுவாரஸ்யமாக விரிய ஆரம்பித்தது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.
அவன் ஒரு Fixer என்ற ரேஞ்சில் உலா வர ஆரம்பித்தான். நாகராஜன் தான் சொன்னான் என்று ஒரே விஷயம் பலப்பல வெர்ஷன்களில் சுற்றுவது கொஞ்சம் வசீகரமாகவே இருந்தது என்று சொல்லவேண்டும். ஹரிகிருஷ்ணன் கோதைநாயகி, சுந்தர் வசுந்தரா, சந்திரிகா, மனோகர் என்று எல்லா மாட்டர்களிலும் நாகராஜன் கைங்கரியம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒன்றிரண்டு சமயம் நாகராஜ் வழக்கத்துக்கு விரோதமாய் தலை குனிந்து அமைதியாக இருக்க, விசாரித்தால், "நல்லது பண்ணப்போன, என்னையே மாட்டிவிடறாண்டா" என்று அரைகுறையாய் ஏதானும் சொல்லுவான். சுரேந்திரனும் ராஜேந்திரனும் பழி சண்டை போட்ட போது அதை முழுக்க முழுக்க ஊதி விட்டது நாகராஜ்தான் என்று பேச்சு நிலவியது.
எங்களின் அதீத கிரிக்கெட் வெறியால் ஸ்கூல் விட்ட பிறகும் கிரிக்கெட் சாகசத்தை தொடரவேண்டும் என்று எங்கள் கஸ்தூரிபாய் நகரில் டைமண்ட் கிரிகெட் சங்கம் என்று ஆரம்பித்து தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டை ஸ்டம்ப் அடித்து சாயங்காலங்களில் விளையாடுவோம்.
சனி, ஞாயிறுகளில், பக்தவத்சலம் நகர், அல்லது வேங்கடரத்தினம் நகர் டீமுடன் மாட்ச்சும் உண்டு.
எங்களில் யாராவது அவ்வப்போது ஜகா வாங்கிவிடுவதால் டீம் தொத்தலாகி, வேறு ஏரியாவிலிருந்து கடன் வாங்கிக்கொள்வோம்.
இந்த டீமில் தான் ஆடலாமா என்று நாகராஜ் தூது விட்டிருந்தான். நாங்கள் எங்களுடைய இல்லாத பை லாவை உத்தேசித்து, "அதெப்படி, அவன் நம்ம பேட்டையே இல்லியே என்று அனுமதி மறுத்து விட்டோம். ஆனால் நாகராஜ் வெளியே, " இந்த டைமன்ட் டீம் பசங்க எங்க டீமுக்கு வான்னு கெஞ்சினாங்க. எப்படிடா முடியும், நா பெசன்ட் நகர் ஆச்சே ன்னு முடியாதுன்னுட்டேன்" என்று சொல்லிகொள்ளுவான்.
மறுபடி கிரீம் செண்ட்டர். பில் கொடுத்துவிட்டு நான் எழுந்தபோது, நாகராஜும் எழுந்து விட்டதை கவனித்தேன். வாசலுக்கு வந்தோம். கூடவே அவன் பெண்ணும். சீட் எப்போ காலியாகும் என்று ஒரு கோஷ்டியே வாசலில் காத்திருந்தது.
"இப்போ எங்கே இருக்கே" என்று நாகராஜனைக்கேட்டேன்.
"Chief Arbitratorஆ இருக்கேண்டா ஹைகோர்ட்டில்தான் என்னோட ஆபீஸ்"
" நீ பாரத் பாங்கில இருந்தியே?"
"ஆமா, அது ஆச்சு, விட்டு பன்னண்டு வருஷம். law படிச்சேன். அட்வகேட்டா கோர்ட்டுல ஆர்க்யு பண்ணறதைவிட இந்த மாதிரி சமரசம் பண்ணி வெக்கற வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு".
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சமரசம் பண்ணிவெக்கற வேலை , அதுவும் நாகராஜனுக்கு!
இப்போ அந்த சரித்திரப்ரசித்தி பெற்ற கிரிக்கெட் மாட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
நாகராஜ்தான் ஆரம்பித்தான்.
"எங்க பெசன்ட் நகர் டீமோட மாட்ச் ஆட வரீங்களா?"
மிகுந்த ஆலோசனைகளுக்குப்பிறகு ஒரு ஞாயித்துக்கிழமை மூணிலிருந்து ஆறு வரை என்று தீர்மானிக்கப்பட்டது. இடம் பெசன்ட் நகர் கிரௌண்ட். இப்போது பஸ் டெர்மினஸ் இருக்கும் இடம்தான் எங்கள் மாட்ச் நடைபெற்ற இடம் என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். எதிரே கம்யுனிட்டி ஹால் பாதி கட்டிக்கொண்டிருந்தது எங்களுக்கு பெவிலியன் போல சௌகரியமாக இருந்தது.
நாகராஜ்தான் எங்களுக்கும் அந்த டீமுக்கும் இடையே போக்குவரத்து நடத்திக்கொண்டிருந்தான். அது மிக நல்ல டீம் என்று நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். நாள் நெருங்க நெருங்க நாகராஜ் ஏனோ எங்களுக்கு சாதகமாக பேச ஆரம்பித்தான். நிச்சயம் உதை வாங்கிடுவோம் என்று பரிதாப்பட்டான் போலும்.
"ஜேம்ஸ் ரொம்ப நல்ல பாட்ஸ்மன். ஆப் சைடுல பயங்கர ஸ்ட்ராங்."
" சிட்னா செம்ம ஃபாஸ்டா போடுவான்"
"எஸ் மோகன் சுமாரான ஸ்பின்னர்தான். அவம்போலிங்லதான் நீங்க செமத்தியா அடிக்கமுடியும்'
இந்த ரீதியில் டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தான்.
"நா விளையாட மாட்டேண்டா உங்களுக்கு எதிரே நா எப்பிடிடா. அதனால அம்பயரா இருப்பேன். கவலயே படாதீங்க. நா நம்ம சப்போர்ட்டுதான்!".
வெளிப்படையா மறுத்தாலும் உள்ளுக்குள் இந்த மாதிரி உதவி இருந்தா நல்லதுதான் என்று தோன்றியது.
"டேய்! அந்த ஜேம்ஸ் சரியான முரடன். போங்கு வேற அடிப்பான். அவன் கிட்ட நீங்க ஜாக்கிரதையா இருந்துடுங்க" என்று வேறு எச்சரிக்கை செய்து இருந்தான்.
மாட்ச் நடந்து முடிந்தது. எதிர்பார்த்தது போல நாங்கள் 30 ரன்களில் தோற்றோம். சில ஆச்சரியமான நிகழ்வுகள் மட்டும் சொல்ல வேண்டும்.
நாகராஜ் ஆடவும் இல்லை, அம்பயராகவும் இல்லை! மாட்ச் அன்று ஏதோ எங்களை புதிதாகப்பார்ப்பவன் போல நடந்து கொண்டான்! எங்களுடைய ஒவ்வொரு அவுட்டுக்கும் மிகையாக ஆர்ப்பரித்தான்.
ஜேம்ஸ் தான் அடி அடி என்று அடித்து ஜெயித்துக்கொடுத்தான்.
அவன் ஆடும்போது நாகராஜ், ஜெமி! கிழிடா! நாஸ்தி பண்ணுடா! தொத்தல் போலிங், காஜி அடி!" போன்ற அந்தககால கிரிக்கெட் பிரயோகங்களை வீசிக்கத்திக்கொண்டிருந்தது எங்களுக்கு வெறுப்பாக இருந்தது. வின்னிங் ஷாட் அடித்ததும் அந்த சைடு பையன்கள் குதித்து டான்ஸ் ஆட, நாகராஜன் அதீதமாக சத்தம் போட்டு கொண்டாடினான்.
தோல்வியின் அவமானத்திலும் நகராஜின் துரோகச்செயலிலும் நொந்துபோய் நாங்கள் கிளம்பும்போது ஆச்சரியமாக ஜேம்ஸ் எங்களிடம் வந்து பேசினான்.
"நல்லாத்தான் ஆடினீங்க. இது உங்களுக்கு புது க்ரௌண்டு இல்ல. அதான். பசங்கள ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க. நா கண்ட்ரோல் பண்ணறேன்! அடுத்த மாட்ச் வேணா உங்க க்ரௌண்டுல வெச்சுக்கலாம். Let us be friends!
அருகில் வந்து கைகொடுத்தபடி சன்னமாகச் சொன்னான்.
"நாகராஜை ரொம்ப நம்பாதீங்க!”
அதற்கப்புறம் நாகராஜனுக்கு கிளாசில் மவுசு குறைந்து, ரொம்பவுமே தனிமைப்பட்டு அமைதியாகி விட்டான். அவசியம் தவிர யாரும் அவனுடன் அதிகம் வைத்துக்கொள்ளவில்லை. ஈயம்தான் கொஞ்ச நாள் அவனை வாயால் புரட்டிகொண்டிருந்தான். பிறகு அவனுமே வேறு கவலைகளுக்கு நகர்ந்து விட்டான்.
பல வருஷங்களுக்கு பிறகு நான் ஒருமுறை தாதர் எக்ஸ்ப்ரெஸில் அவனைப்பார்த்தேன். பாரத் பாங்கில் இருப்பதாகச்சொன்னான். எங்களில் யாருக்குமே அவன் கல்யாண பத்திரிகை அனுப்பவில்லை..
அதோடு மறக்கப்பட்டுவிட்டு, அப்புறம் இப்போதுதான் கிரீம் சென்டரில்..
கார் எடுத்து வரப்போன வாலெட் இன்னும் வரவில்லை.
"என்ன நாகராஜ், ஒய்ஃப் வரலியா?"
அந்தப்பெண் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, நாகராஜ் தடுமாறினான்.
"ஒ! உனக்கு தெரியாதில்ல. இவ பொறந்தவுடனேயே வி வேர் டிவர்ஸ்ட். இவ அவங்கம்மாவோட வளரணும்னுதான் ஜட்ஜ்மென்ட். வாராவாரம் சனிக்கிழமை மட்டும் என்னோட!"
நான் கொஞ்சம் அசௌகரியமாக நெளிந்து, பின் சமாளித்து, அந்தப்பெண்ணிடம் வாத்சல்யத்துடன் பேசினேன்.
” வாட் இ்்ஸ யுவர் நேம்?”
மெல்லிய நாகராஜத்தனமான குரலில் பதில் வந்தது
"ஆலிஸ் அரவாமுதன் அங்கிள்!"
(2013 இல் எழுதின கதை)
No comments:
Post a Comment