Sunday, February 21, 2021

இதழ் காலம் (1960 to 1975)

 இதழ் காலம் (1960 to 1975)

தொப்பென்று வாசலில் பேப்பரோடு வியாழக்கிழமை தோறும் ஆனந்த விகடன் பத்திரிகை வந்து விழும். இப்போது வரும் பெரிய சைஸில் விகடன் அப்போது இல்லை. குமுதம் பத்திரிகையின் சைசில்தான் இருக்கும். அது விழுந்ததும் வீட்டில் யுத்தகளம் தொடங்கும். நான் நீ என்று பத்திரிகையைப் பிடுங்கி கிழித்த காலங்கள் அவை.

மொத்தமே நான்கு பத்திரிகைதான் அப்போ எல்லாம் பிரபலம். விகடன், கல்கி, குமுதம்,  கலைமகள். சின்னப் பசங்களுக்கு என்று கண்ணன், அம்புலிமாமா போன்ற பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. பெரிய அளவில் கண்ணனுக்கு சர்குலேஷன் இல்லை. என்பதால் அபூர்வமாக நண்பர்கள் வீட்டில் கண்ணன் இருந்தால் ஆவலாகப் படிப்போம். அம்புலிமாமா மாறாத ஸ்டாண்டர்ட் பத்திரிகை. சமீபத்தில் இறந்த ஓவியர் சங்கரின் அற்புத வண்ண ஓவியங்கள் ரம்மியமாக இருக்கும். பாப்பின்ஸ் ஞாபகம் இருக்கா உங்களுக்கு ? பச்சை சிகப்பு மஞ்சள் நீலம் என்ற வர்ணங்களில் அந்த மிட்டாய் மீது மோகத்தை ஏற்படுத்த அதற்கு அம்புலிமாமாவின் பின்னால் வரும் ஓவியங்களுடன் கூடிய விளம்பரம் மறக்கவே முடியாது. சித்ராங்கன், விக்கிரம சேனன், மணிமாறன், குணசேகர் போன்ற பெயர்கள் எல்லாம் பொதுவாகப் படிக்கக் கிடைக்கும் பெயர்கள்.அப்புறம் அந்த வேதாளத்தை முதுகில் சுமந்து ஒரு கையில் வாளேந்திச் சென்ற விக்கிரமாதித்தினை எப்படி மறக்க முடியும் ? பொதுவாக தினத்தந்தியில் தொடராக வந்த கன்னித்தீவை முடிவேயில்லாத தொடர் என்பார்கள். பாவம் இந்த விக்கிரமாதித்தனும் அம்புலிமாமாவில் இறந்த உடலைச் சுமந்து  சுமந்து கொண்டு எத்தனை வருடங்கள் நடந்து போயிருக்கிறான்?

விகடனில் பின்னட்டையில் எப்போதும் லக்ஸ் அழகு சோப்பின் நட்சத்திரம் ஜொலிப்பது வழக்கம். காஞ்சனா அப்போது ரொம்ப பாப்புலராக இருந்திருக்க வேண்டும். அந்தக் கால காளையரின் கனவுக் கன்னி. கழுத்தில் ஒரு முத்துமாலை அணிந்து “என் மேனி எழிலுக்குக் காரணம் லக்ஸ்”என்று காஞ்சனா சிரித்துக் கொண்டிருக்கும் படம் மறக்கவே இல்லை.

ஆனந்த விகடனோடு நினைவுகளுக்கு ஒரு முடிவே இருக்காது என்று தோன்றுகிறது. இது என்னுடைய பள்ளிப் பருவம் முழுவதிலும் தொடர்ந்தது. சேவற்கொடியோனின் “உன் கண்ணில் நீர் வழிந்தால் “ என்ற தொடர் நான் படிக்கும் காலத்தில் வந்ததா இல்லை பின்னால் அதன் அத்தியாயம் வந்த இதழ்களைத் தொகுத்துப் படித்த ஞாபகமா எதுவென்று தெரியவில்லை அந்தத் தொடர் பெண்கள் மத்தியில்  பயங்கர பாப்புலர் தொடர்கதை. சங்கர் பாத்திரத்திற்கு எந்த நடிகரைப் போடலாம், நளினி பாத்திரத்திற்கு எந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்று பயங்கர டிஸ்கஷன் நடைபெறும்.. அப்புறம் இந்த கதைகளை ஒவ்வொரு வாரமும் பத்திரமாகப் பாதுகாத்து அவற்றின் பின்களை அகற்றி தேவையான பக்கங்களை எடுத்து சேகரிப்பதும், பிறகு தொடர் முடிந்ததும் அவற்றை பைண்ட் செய்யக் கொடுத்து வாங்குவதும் ஒரு கலையாகவே தமிழகத்தில் இருந்திருக்கிறது. நான் கூட என்னுடைய எழுத்து ஆர்வம் மிகைப்பட்ட காலங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தெற்கு கோபுரம் அருகில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் ஒருவித கிறக்கத்துடன் பத்திரிகை பைண்ட் புத்தகங்களை வாங்கி மயங்கியிருக்கிறேன். மணியனின் உன்னை ஒன்று கேட்பேன் என்ற தொடர் விகடனில் காலேஜ் கோயிங் கர்ல்ஸ் நடுவில் மிகப் பிரபலம். மாயா சன்னமான சேலை சன்னமான ஜாக்கெட் அதில் ஊடுருவித் தெரியும் ப்ராவின் ஸ்ட்ராப் என்று பட்டையைக் கிளப்பும் ஓவியங்களுடன் படங்கள் வரைவார். மணியனின் இதயவீணை கதைக்குக் கூட எந்த நடிகர் நடிகைகளை நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று மத்தியதர பெண்கள் பேசிக் கொண்டிருக்க வாத்தியார் மஞ்சுளாவுடன் நடித்து வெறுப்பேற்றினார்.

குமுதம் கொஞ்சம் சாப்ட் போர்னோ அளவில் வாசகர்களை அள்ளியது என்றுதான் கூற வேண்டும். ஆனால் எனது நினைவுகளில் இருந்த குமுதம் வேறு மாதிரியானது. எஸ்.ஏ.பி , ரா.கி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி போன்றவர்களால் கோலோச்சி வந்த காலம். நைலான் கயிறு ( நினைவிருக்கா அதற்கு எஸ்.பாலுவின் ஓவியங்கள் ) தொடர் மூலம் சுஜாதா அதிர்வலைகளை உண்டாக்கினார். அன்று தொடங்கிய அவரது எழுத்தின் சாம்ராஜ்ஜியம் நாற்பது வருடங்கள் கொடி கட்டிப் பறந்தது. ரா.கி.ரங்கராஜன் எழுதிய ஒளிவதற்கு இடமில்லை, மறுபடியும் தேவகி இவை எல்லாமே என்னுடைய பள்ளி பருவத்தின்போது வெளிவந்த தொடர்கள். அப்போது சாண்டில்யன் பக்கமே போக மாட்டேன். அம்மாவுக்குச் சரித்திர கதைகள் சுத்தமாகப் பிடிக்காது. வெந்தயத்தேவன் என்றுதான் வந்தியத்தேவனைக் கேலி செய்வாள். எனவே கன்னித்தீவு போல நிற்காமல் வந்து கொண்டிருந்த யவனராணி, கடல்புறா போன்றவற்றை கல்பனாவின் படங்களை மட்டும் பார்த்து விட்டு நகர்த்தி விடுவேன். ஒன்று நிச்சயம் குறிப்பிட்டே  ஆக வேண்டும்,  ஜெ... படங்கள் ஏற்படுத்திய கிளுகிளுப்பை வேறு எந்த படங்களும் ஏற்படுத்தியதில்லை.

நியூவேவ் ஒன்று அப்போது அடிக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்கெல்லாம் முன்பாகவே ஜெயகாந்தன் தனது அக்னிபிரவேசம் சிறுகதை மூலம் அந்த அலையை ஓங்கி எழச் செய்து விட்டார். ஆனால் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி என்பதால் ஒரு தவறு அதற்கான தீர்வு இரண்டையும் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். ஆனால் பத்திரிகைகள் அந்தத் தவறை மட்டும் கையில் எடுத்துக் கொண்டன. வடக்கில் வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகைகளான இல்லஸ்ட்ரேடட் வீக்லி இந்தப் புதிய அலையில் முக்கிய பங்கு வகித்தது. எல்லோராலும் ப்ளே பாய் டெபோனேர் பத்திரிகைகளை நடு ஹாலில் வைத்துப் படிக்க முடியாது என்பதற்காக சில கிளர்ச்சியூட்டும் கதைகள், உண்மைச் சம்பவங்கள் என்ற பெயரில் நியூ வேவ் விஷயங்களை பகிரத் தொடங்கின. அந்தப் புதிய அலை இங்கேயும் அடித்தது. டபிள்யு.ஆர்.ஸ்வர்ணலதா, ராஜேந்திர குமார், மணியன் ( குறிப்பாக மோகம் முப்பது வருஷம் – அத்தியாய ஆரம்பத்தில் வாத்ஸ்யாயனரின் குறிப்புகளும், கஜூரா ஓவியங்களும் எத்தனை சின்னப் பசங்களால் திருட்டுத் தனமாகப் படிக்கப் பட்டதோ ?), தாமரை மணாளன், அபர்ணா நாயுடு, புஷ்பா தங்கதுரை என்று அந்த நியூ வேவில் முங்கி முத்தேடுத்தனர். இவர்களோடு ஜெ.... வரைந்த ஓவியங்கள் உச்சம் தொட்டன.

குமுதத்தில் கலாதரின் ( இவர் தனது மனைவியின் பெயரில் எழுதிய நாவலும்,  மறந்து போகுமோ ஆசை முகம் இரண்டும்தான் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் அடுத்தடுத்து வந்தன) தொடருக்கு மாருதியின் படங்கள் கொஞ்சம் எல்லை மீறவே அம்மா எங்கள் எல்லோரையும் கூப்பிட்டு குமுதம் பத்திரிகையைப் படிக்கக் கூடாது என்று கூறி விட்டாள். மரண அடி மல்லப்பா, குவாக் சுந்தரம் ( செல்லம் சித்திரங்களோடு) , ரெட்டைவால் ரெங்குடு போன்ற சிறுவர் தொடர் வந்து கொண்டிருந்த சமயம்.

அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு பத்திரிகை வாங்குவார்கள். புதிதாக வேலைக்குப் போகும் பிரம்மச்சாரிகள் கண்டிப்பாக குமுதம் வாங்குவார்கள். எனக்குத் தெரிந்து ஒருவர் குமுதம் வந்தவுடன் தனிச் சுற்றில் தொலைந்து போகாமல் இருக்க அதன் மேல் பாலு என்று தனது கையெழுத்தைப் பெரிதாகப் போட்டு விடுவார்.

படு ஆசாரமான கல்கி பத்திரிகை குறித்து இங்கே குறிப்பிடவில்லை என்றால் நான் பெரும் பிழை செய்தவன் ஆவேன். என்னைப் பொறுத்தவரை கல்கி பத்திரிகை என் சிறுவயதில் கவனம் பெறாமல் போனதற்கு முக்கிய காரணம் எப்போது திருப்பினாலும் கல்கி என்ற பெயரும் , மணியனின் ஓவியமும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். அப்புறம் ராஜாஜியின் பெயர், வினுவின் வினோதமான ஓவியங்களுடன் வரும் ஜெகசிற்பியன் நாவல் போன்றவை காரணமாக இருக்கலாம். ராஜாஜியின் முகத்தை ஒரு குறியீட்டுப் படமாக மாற்றியதற்குக் கல்கி பெரும் பங்கு வகித்தது எனலாம். அதே கல்கிதான் பின்னாளில் ராஜேந்திரன் காலங்களில் முழுக்க முழுக்க திமுக அபிமான பத்திரிகையானது காலத்தின் விசித்திரங்களில் ஒன்று. கி.ராஜேந்திரனின் சாருலதா , கௌசிகனின் சுழிக் காற்று போன்ற தொடர்கதைகள் நான் படிக்கும் காலத்தில் வந்தவை. சுழிக் காற்று விஜயாவின் ஒவியங்களுடன் வந்தது. 

சில ஓவியர்களை சில பத்திரிகைகளுடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். வர்ணம் என்றால் குமுதம்,  லதா என்றால்  கல்கி, கோபுலு என்றால் விகடன். கல்கியில் அடுத்தவாரம் எப்போது வரும் என்று காக்க வைத்து வந்த ஒரே கதை கௌசிகனின் சுழிக் காற்று மட்டும்தான் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதை அமரர் கல்கி சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்று வெளிவந்தபோது நான் பி.யூ.சி படித்துக் கொண்டிருந்தேன்.

இத்தனைக்கும் நடுவில் தினத்தந்தி நிறுவனத்திலிருந்து வெளிவந்த ராணி பத்திரிகை (ஏழைகளின் டெபோனேர்) பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். 

சினிமாவுக்கு என்று இரண்டு பத்திரிகைகள் நடுத்தர வர்க்கத்தினரிடம் பாப்புலர். ஒன்று சக்கரபாணியின் பொம்மை. இன்னொன்று பேசும் படம். எனக்குப் பேசும் படம் பெரும் கிளுகிளுப்பை ஏற்படுத்திய சினிமா பத்திரிகை. இப்போது எனக்கு ஒரு இதழ் கூட படிக்க கிடைக்கவில்லை என்றாலும் அதன் கவரும் எழுத்து நடை புகைப்படங்கள் காரணமாக இருக்கலாம். அல்லது ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் சினிமா வசனமாக இருக்கலாம். பத்திரிகைகள் மெல்ல பெருகத் தொடங்கிய வேளைகளில் சைக்கிளில் லெண்டிங் லைப்ரரி நடத்துவோரின் எண்ணிக்கை அதிகமானது. ஒரு வாரப் பத்திரிகையை இரண்டு நாட்களுக்குள் படித்துத் திருப்பித் தர வேண்டும் என்பது வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

இதயம் பேசுகிறது, குங்குமம், சாவி போன்ற பத்திரிகைகள் சந்தைக்குள் நுழையும்போது எனது காக்கி டவுசர் காக்கி பேண்டாகி விட்டது.

No comments:

Post a Comment