Thursday, February 25, 2021

பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்

 "பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்"

ஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி)

( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு. அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம்  தேசங்கள்  இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?")

 சொன்னவர்-எஸ்.மீனாட்சிசுந்தரம்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1971-கார்வேட்-சித்தூர் மாவட்ட காம்ப்

எங்கள் வீட்டில் பெரியவாளைத் தங்கும்படி  நான் வேண்டியவுடன்  பெரியவர்கள் சொன்னார்கள்;

"இந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வராமல் இருக்கும் வீடு ஏதாவது இருந்தால் சொல்லு. அங்கு நான் தங்கிக் கொள்கிறேன்."

உடனே என் நண்பர் முதலியாரின் வீடு ஞாபகத்துக்கு வந்தது.(வீட்டிற்குப் பின்னால்)"இருக்கிறது"

"நான் அங்கேயே தங்குகிறேன்," - பெரியவா.

முதலியார் அவர்கள் மகாபெரியவாள் மீது வைத்திருந்த அத்தியந்த பக்தி அந்த மகானை  அவருடைடைய   வீட்டுக்கே  அழைத்து வந்துவிட்டது.

முதலியார் புளகாங்கிதமடைந்தார்.

சுவாமிகள் புது வீட்டுக்கு வந்து,அறையில் வைக்கோல் பரப்பச்செய்து அதில் சிரமபரிகாரம் செய்யத் தொடங்கினார்.

ஊர்மக்கள் வெகு ஆவலுடன் பெரியவாளைப் பார்க்க திரண்டனர்.பெரியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆரவாரமின்றி வரிசையாக மக்களை நிற்க வைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார், அப்பகுதி எம்.எல்.ஏ.ஸ்ரீ தியாகராஜன் அவர்கள்.

அடுத்தநாள் விடியற்காலை நாலு மணி இருக்கும்.   கிணற்றடியில் சத்தம் கேட்டது.எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள கிணற்றில் மகாபெரியவாள் தன்னுடைய மரத்திலான பாத்திரத்தைக் கொண்டு தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

உடனே நான் அருகில் சென்றேன்.

"இதோ பார்த்தாயா...இந்த மரச்செம்பு  உடைந்திருக்கிறது கையைக் கிழிக்கிறது.."  குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

பின் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

"கிழக்கு வங்காள ரேடியோவில் தினமும்  பகவத்கீதை  வைக்கிறாளாமே...உனக்குத் தெரியுமோ?"

நான் சொன்னேன், "இந்துக்களுக்குப் பாதுகாப்புக்  குறைவாக இருக்கிறது. மற்ற மதங்கள்,முக்கியமாக  இஸ்லாமும்,கிறிஸ்துவமும் உலகம் பூரா  பரவியிருக்கிறது.  அவர்களுக்கு ஒரு நாட்டில் கஷ்டம் என்றால் மற்ற நாட்டிலுள்ளவர்கள் உதவ முன் வருகிறார்கள்.இந்துக்கள் மாத்திரம் பயந்து கொண்டே தான் வாழ வேண்டியிருக்கிறது"

"அப்படியா? இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை  முஸ்லீம் தேசங்கள்   இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?"

நான் பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டேன்.   ஆசிரியரான எனக்கு,இவ்வளவு துல்லியமான பூகோள ஞானம் கிடையாது என்பதை வெட்கத்தோடு  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மகா பெரியவாளின் பரந்த அறிவையும் மனோ  தைரியத்தையும் வியந்து என் அறியாமையை  நினைத்து வெட்கப்பட்டேன்.

காலையில் ஓர் உதவி ஆசிரியரை திருப்பதிக்கு அனுப்பி புதிதாகக் கமண்டலு முதலிய மரப்பாத்திரங்களை வாங்கிவரச் செய்தேன்.

அன்று மாலை புதுப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, " என்ன வழவழப்பாக இருக்கிறது..." என்று ஒரு குழந்தை எவ்வாறு புது விளையாட்டு பொம்மையை  வாங்கி ஆனந்தமடையுமோ  அந்த ஆனந்தத்தை   வெளிப்படுத்திக் காட்டினார்.  மகா பாக்கியம்!🙏🙏🙏🙏

No comments:

Post a Comment