Monday, February 15, 2021

ஒப்பிலியப்பன் கோவில்

 அனைவருக்கும் அன்பான இனிமையான காலை வணக்கம் நண்பர்களே 

இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ..!!

அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவில் (அ) ஒப்பிலியப்பன் கோவில்

திருநாகேஸ்வரம், கும்பகோணம்

அமைவிடம் :

கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்து உள்ளது. 

கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது. காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும்ஒப்பிலியப்பன்கோவில்அமைந்துள்ளது 

ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. 

அருகில் அமைந்த கோயில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் 

மூலவர்: ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்

உற்சவர்: பொன்னப்பன்

தாயார்: பூமாதேவி (பூமிநாச்சியார் எனும் திருநாமம்)

தீர்த்தம்: அகோராத்ர புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல் 24 மணி நேரமும் நீராடலாம் என்பதால் அஹோராத்ர தீர்த்தமாயிற்று) மற்றும்

ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம்.

தலவிருட்சம் : துளசி

பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், நாச்சியார் வடக்கு நோக்கிஅமர்ந்த கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர்.

பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார்.

விமானம் :

சுத்தானந்த விமானம் (தரிசிப்பவருக்கு ஆனந்தம் தருவது) விஷ்ணு விமானம் என்றும் பெயர்.

ப்ரத்யக்ஷம் :

மார்க்கண்டேயர், காவேரி, கருடன்.

ஆகமம்/பூஜை: வைகானஸம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

பெயர்: திருவிண்ணகர் உப்பிலியப்பன் / ஒப்பிலியப்பன் திருக்கோயில்

புராண பெயர்: திருவிண்ணகர் 

ஊர்: திருநாகேஸ்வரம்

மாவட்டம்: தஞ்சாவூர் மாநிலம்: தமிழ்நாடு.

காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இராவ்வு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

மங்களாசாசனம் பாடியவர்கள் :

1. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், 

இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம்,

திருமங்கையாழ்வார் 34 பாக்கள், ஒரு பாசுரத்தில் பொய்கை யாழ்வாரும், 2 பாசுரங்களில் பேயாழ்வாருமாக மொத்தம் 48 பாசுரங் களில் பாடி அருளியுள்ளனர். 

பிள்ளைப் பெருமாளய்யங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்,

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.
(2342) மூன்றாந் திருவந்தாதி – 61

முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால், அடியார்கட்கு அருள்புரியும் பொருட்டு திருவேங்கடம் திருப்பாற்கடல், அழகிய புஷ்பங்களில் வண்டுகள் கிளரக்கூடிய திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய

தேசங்களில் இளமை குன்றாது திகழ்கின்றான் என்று பேயாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்டது இந்த திருவிண்ணகர்

உலகம் போற்றும் 108 திருப்பதிகளில், `விண்ணகரம்' என்று சிறப்பிக்கப்படும் வைணவத் தலங்கள் - 6. அவற்றில் ஒன்று ஒப்பிலியப்பன் கோயில். மற்றவை: சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுரம் விண்ணகரம், பரமேச்சுர விண்ணகரம்.

தலச்சிறப்பு : 

108 திவ்ய தேசங்களில் இது 13வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசம் வைகுந்தம் “தென்திருப்பதி” என அழைக்கப்படும் சிறப்புப்பெற்றது. இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார். அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம். 

திருத்துழாய்காட்டில் பூமாதேவி இங்கு அவதரித்ததால் துளசி வனம் என்ற பெயரும் உண்டு. தாயார் அவதரித்த தலம். இத்தலத்தில் திருக்கல்யாணம், திருமஞ்சனம், பிராத்தனை, கருட சேவை, தங்கரத உலா போன்றவைகளை நிகழ்த்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். 

ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

இப்பெருமான் திருவீதிப் புறப்பாட்டின் போது தனியாக செல்வது இல்லை. தாயாருடன் சேர்ந்து செல்வார். 

தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. 

ஒவ்வொரு மாதமும் சிரவனத்தன்று சிரவண தீபம் எடுத்து வலம் வரும் பொழுது பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்படுகிறது. 

108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாளுக்கு உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகிறது. 

இங்கு திருமணங்கள் நிறைய நடக்கின்றன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 

திருப்பதி போக இயலாதவர்கள் வேங்கடேசனுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனைகளை இங்கேயும் செலுத்தலாம்

தல வரலாறு :

இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. 

நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன். 

முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார். திருமணவயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. 

திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். 

செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார். மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. 

இன்றும் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.

மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், “”எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,” என்று கேட்டாள். 

மகாவிஷ்ணு அவளிடம், “”நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,” என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். 

லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். 

திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், “”சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,” என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். 

தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். 

துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். 

இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

தல பெருமை :

திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. 

இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் “உதயகருடசேவை’ அருள்கிறார். பின், “தெட்சிண கங்கை’ என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

பஞ்சகோல சுவாமி : 

இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, “மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு “என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்று பொருள். நம்மாழ்வார் இவரை “யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்’ என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார். 

அவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.

இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. 

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு “பகலிராப்பொய்கை’ என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.

மனைவியை பிரியாத பெருமாள்: 

பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

அருள் வாக்குச் சொல்லும் வழக்கம் பெருமாள் தீபத்தின் முன் நடைபெறும்.

சிறப்புக்கள் :

1. திருப்பதி போக இயலாதவர்கள் வேங்கடேசனுக்குச் செய்து

கொண்ட பிரார்த்தனைகளை இங்கேயும் செலுத்தலாம். திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையனார் என்கிற ஐதீகம்.

2. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம்.

3. சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்)

4. திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.

5. நம்மாழ்வார் இருந்த இடத்திலேயே இருக்க பல ஸ்தலங்களில் இருக்கும் பெருமாள்கள் அவருக்கு காட்சி கொடுக்க அவர் ஆனந்தித்து பாடியதாக ஐதீஹம். இத்தலத்துப் பெருமான் தானே

மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார். அவையாவன. பொன்னப்பன், மணியப்பன்,

முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், இவ்வைந்து பெயரிட்டு,

என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்ப் 
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய் 
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

-என்பது திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்

6. வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள்கூறுகின்றன. வைகுண்டத்தில் ஓடக்கூடிய விரஜா நதியே நாட்டாரு (தட்சிண கங்கை) என்ற பெயரில் இங்கு ஓடுவதாக ஐதீஹம்.

7. புரட்டாசி,ஐப்பசி,பங்குனியில்பிரம்மோற்ஸவம்.

8. தேவசிற்பி விஸ்வகர்மாவால் எழுப்பப்பட்ட தாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், சுத்தானந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார் ஒப்பிலியப்பன். அருகில் நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்திலும் மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து, கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் காட்சி தருகின்றனர். ஒப்பாக எவரும் இல்லாதவர் ஆதலால், ஒப்பிலியப்பன் என்று பெயர்.

9. உற்சவம் :

ஆண்டு தோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆடியில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி திருவோணத்தில் பவித்திர உற்சவம், புரட்டாசியில்

பிரம்மோற்சவம், மார்கழியில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம், தை மாதம் தெப்போற்சவம் நடைபெறும்.

10. பிரார்த்தனை :

இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை. 

11. இங்கு சந்தான கிருஷ்ணனை மடியில் எழச் செய்யும் சேவை தினமும் காலை 8:30 மணி வரை நடைபெறும். குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள பகலிராப் பொய்கையில் நீராடி, நோன்பிருந்து அங்கப் பிரதட்சணம் செய்து சந்தான

கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்து பெருமாளை சேவித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

நேர்த்திக்கடன் :

12. சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

13. ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார்

14. சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடு கிறார்கள். 

15. ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர்

16. புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.




No comments:

Post a Comment