Sunday, February 21, 2021

ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர்

 தினம் ஒரு திருத்தலம்


ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர், நங்கநல்லூர், சென்னை.

* இந்தக் கோயில் நங்கநல்லூரில் உள்ள ராம் நகரில் உள்ளது.

* இத்தலத்தில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக  உள்ளார் என்பது சிறப்பு. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர்  ஆலயத்தில் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோயில் கட்டிடம்  கட்டப்பட்டது.  அதற்குப் பிறகு இம்மாதிரி கட்டப்பட்ட முதல் கோயில் இது தான் என்று  கருதப்படுகிறது.  தொண்ணூறிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால்  செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது.  ஆகம சாஸ்திரப்படி கோயில் கட்டபட்டது.   ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.

*   இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகச் சிறப்புடையது.  இந்த வடை மாலைக்கு ஆறாயிரம் வடைகள் தயார் செய்யப்பட்டு மாலையாக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

* 1974 ல் மயிலாப்பூரில் வசித்து வந்த ரமணி அண்ணா என்ற பள்ளி ஆசிரியரின் கனவில் இந்த நங்கநல்லூர் ஷேத்திரத்துக்கான வித்து தோன்றியது.

* ரமணி அண்ணாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஸ்ரீ மாருதி பக்த ஸமாஜம் என்ற டிரஸ்ட் ஏற்படுத்தி அடுத்த 10 ஆண்டுகளில் அத்திமரத்திலான எட்டு அடி உயர அனுமார் சிலை செய்து அனுமத் ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினர்.

* கனவில் தோன்றிய ஆணையை பூர்த்தி செய்ய முயற்சிகள் பல செய்த "மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்" காஞ்சி ஸ்ரீ பரமாசார்யாரின் முடிவுப்படி நங்க நல்லூரில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர். நங்க நல்லூரில் குறைந்தது 16 புகழ்பெற்ற ஆலயங்கள் தோன்றும் என்று காஞ்சி ஸ்ரீ பரமாசார்யார் எடுத்துரைத்தார்.

* சிலைவடிப்பதற்கான கருங்கல் தேடும் படலம் பல இன்னல்களைக் கொண்டதாக இருந்தது. பல முயற்சிகளுக்குப் பின் வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாருதி பக்த ஸமாஜ குழு கல்லை வெளியே எடுக்கும் சிரமம் பாராமல், கல்லில் ஒரு சிறிய பாகத்தை வெட்டி எடுத்து காஞ்சி எடுத்துச் சென்றது. மௌன விரதத்தில் ஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனத்தினால், இந்தக் கல் சரியானதே என்று ஆசி கூறினார்.

* அதன் பின் பல சிரமங்களுக்கு பிறகு இன்று நாம் காணும் 32 அடி உயர சிலை உருவானது. 1995 ல் முழுமையான கோயிலாக கட்டப்பட்டு அன்று முதல் செயல்பட்டு வருகிறது. 

* இந்த ஆஞ்சனேயர் (துன்பமும் நோயும் தீர்க்கும் ஆதிவியாதிஹர பக்த ஆஞ்சனேயர்) மிகுந்த வரப்பிரசாதியாகப் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார். பிரும்மாண்டமான கர்பக் கிரக வாயில் அகண்டும் இருப்பதால், ஆஞ்சனேயரைக் கண்குளிரத் தொலைவில் நின்றும் தரிசிக்கலாம்.

* இவ்வளவு உயரமாக இருந்தாலும் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். நாம் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று உரைப்பதாக உள்ளது.

நாமும் இந்த ஆஞ்சநேயரை வணங்கி அருள் பெறுவோம்.

இனிய காலை வணக்கம் 🙏



No comments:

Post a Comment