Sunday, February 21, 2021

காகங்கள்

 என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்                                     < 48 / 2021 > 

                                                                    காகங்கள் ! 

ரொம்ப நாட்கள் கழித்து இப்படி ஒரு காட்சியைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. கடைசியாக எப்பொழுது பார்த்திருப்பேன். குறைந்தது ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும். எதனால் பார்க்கவில்லை? அப்படி ஒரு காட்சி அமையவில்லையா ? அல்லது என் கண்களில் படவில்லையா ?

பட்டிருக்காது. வேலை , பணம் , மருத்துவம் , பிள்ளை , பெண் , பேரன் , பேத்தி இப்படி அலைந்து கொண்டிருந்த வாழ்வில் என் கவனம் இதில் பதிந்து இருங்க வாய்ப்பில்லை.

இன்று எதேச்சையாக பால்கணியில் அமர்ந்து எந்த நோக்கமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது எதிர் வீட்டு மாடியில் இருந்த ஒரு மின்விளக்கின் கேள்விக்குறி போன்ற வடிவத்துடன் அமைந்து இருந்த கம்பியில் ஒரு காகம் அமர்ந்து இருக்க , அதன் கீழே அமைந்து இருந்த ஓடுகள் மீது பல காகங்கள் வரிசையாக அமர்ந்து இருந்தன. அதைப் பார்க்கும் பொழுது மேடையில் பேசும் தலைவர் உரையினைக் கேட்கும் தொண்டர்கள் அமர்ந்து இருப்பது போல தோன்றியது.  

நினைவுகள் காகங்களை சுற்றி சென்றது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற காட்சிகளை பல முறை பார்த்து இருக்கின்றேன். 

அப்போதெல்லாம் இதை காக்கைகள் பள்ளிகூடம் என்று சொல்வோம். ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலும் மின்விளக்கின் ஷேடில் ஒரு காக்கை அமர்ந்து இருக்க , கீழே மாணவ , மாணவி காக்கைகள். சூரியன் அஸ்தமனமாக சில நிமிடங்களுக்கு முன்னர் , பள்ளிக்கூடம் முடிந்து காகங்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விடும். 

காகங்கள் விவசாயிகளின் தோட்டி என்று சொல்லிக் கொடுத்த அதே டீச்சர் காக்காய் வடையைத் 

திருடிச் சென்று நரியிடம் ஏமாந்த கதையையும் சொல்லிக் கொடுத்தார். ஆனால் எல்லா காகங்களும் முட்டாள்கள் அல்ல என்பதை பானையில் பொடிகற்களைப் போட்டு , ஆழத்தில் இருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்துக் கொண்ட கதையை அடுத்த வகுப்பில் தெரிந்து கொண்டேன். 

காகம் கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.

என்று திருவள்ளுவர் காகம் தனக்கு கிடைத்த எதையும் தான் மட்டுமே உண்ணாமல் மற்ற் காகங்களையும் அழைத்து பகிர்ந்துண்ணும் பழக்கம் மனிதர்களுக்கும் வேண்டும் என்று சொல்கின்றார். 

அனால் எல்லா காகங்களும் அப்படி இல்லை என்பதை நான் அனுபவ பூர்வமாக பார்த்திருக்கின்றேன்.சேலத்தில் நாங்கள் தினமும் வைக்கும் ஒரு பிடி சோற்றுக்காக ஒரு காக்கை காத்திருக்கும். அம்மா வைத்துவிட்டு நகர்ந்ததும் அது பறந்து வந்து அலகால் கொத்தி சென்று தனியாகவே சாப்பிடும். இடையில் வேறு எந்த போட்டியும் இல்லையே என்றும் சுற்றும் முற்றும் பார்த்து உறுதி செய்து கொள்ளும். 

முன்பெல்லாம் புகை வண்டியில் செல்லும் பொழுது வழி நெடுக தந்தி கம்பங்களிலும் மின் கம்பங்களிலும் அமர்ந்து இருக்கும். மின் கம்பத்தில் மின்சாரம் தாக்காமல் அமர்ந்து கொண்டிருக்க அது எந்த பள்ளிகூடத்தில் படித்திருக்கும். ? ஒருவேளை இப்பொழுது நான் பார்த்த காகங்களின் பள்ளியில் அதைத்தான் கற்றுக் கொண்டிருக்குமோ.? 

காக்கைகளுக்கு சாமர்த்தியம் சற்று மட்டுதான். இல்லை என்றால் குயில்களின் முட்டையை தன் முட்டை என்று அடை காக்குமா ? குயில் சாமர்த்தியமாக காகத்தின் முட்டை ஒன்றை கீழே தள்ளிவிட்டு

தன் முட்டையை வைக்குமாம். காகம் அடைகாத்து குஞ்சு பொறிக்குமாம். 

காகத்தை உதாரணம் காட்டி வீட்டில் பெரியவர்கள் நமக்கு புத்தி சொல்வார்கள். காகம் அதிகாலையில் எழுந்திருக்கும். அந்த விடியற்காலையிலும் தண்ணீரைப் பார்த்ததும் தலையை அமிழ்ந்து குளிக்கும். ஆனால் அவை எச்சமிடுவது மிகச்சரியாக நம்முடய நல்ல சட்டை மீதாகவே இருக்கும்.

வயல்களில் பறவைகளை விரட்ட ஒரு பொம்மை வைத்து இருப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு பறவைகள் பயந்து விலக வேண்டும். ஆனால் அநேகமாக அந்த பொம்மையின் விரித்த கரங்களில் காகம் உட்கார்ந்து இருக்கும். 

வீட்டில் வடகம் போடும் நாட்களில் காகங்களை விரட்ட அமர்த்தப்படும் வாண்டுகளால் ஏற்படும் சேதம் காகங்களால் ஏற்படும் சேதத்தை விட குறைவு. நன்றாக தோய்த்து , கொடிகளில் உலர்த்தப்பட்ட துணிகள்தான் அவைகளுக்கு பிடித்த ஆசனம். என் அம்மாவும் அப்பாவும் பதட்டத்துடன் உஷ் , உஷ் என்று விரட்டுவார்கள். காகம் என்னையா விரட்டினீர்கள் என்று முறைத்துப் பார்த்து விட்டு திதி, அமாவசை நாட்களில் கா, கா என்று கதறினாலும் வராமலும் , வந்தாலும் நாம் வைத்த பிண்டத்தை லட்சியம் செய்யாமல் அமர்த்தலாக அமர்ந்திருக்கும். காகத்தை தன் முன்னோர்களாகவே நம்பும் அப்பாவுக்கு காகம் வந்து சாப்பிட்ட செய்தியை சொன்னவுடந்தான் சாப்பிட உட்காருவர்.

காகம் ஒரு சகுனப்பறவையாக அறியப்படும். காகம் விடாது கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்றும் ,பயணத்தின் போது காகம் இடமிருந்து வலம் போவது லாபத்தையும் , வலமிருந்து இடம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும் . பயணிப்பவரை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் பயணத்தினை தவிர்த்துவிட வேண்டும் என்றும் பயணத்தின் பொழுது அவருடய குடை , காலணி அவரது உடல் அல்லது நிழல் இவற்றை காகம் தீண்டினால் பயணத்தின் பொழுது அவருக்கு அகால மரணம் ஏற்படும் என்றும் காக்கைப் பாடினியார் என்ற பெண்பால் புலவர் பாடியுள்ளாராம்.

சீதையிடத்தே அனுமன் தான் ராமதூதன் என்று அடையாளம் காட்ட காக்கை வடிவில் இந்திரன் மகன் செய்த தொல்லையை ராமன் விலக்கிய வரலாற்றை 


சித்திர கூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட 
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓட 
வித்தகனே! இராமாவோ !  நின் அபயம் என்று அழைப்ப 
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஒரு அடையாளம்

என்று காகத்தை ஒரு ஆழ்வார் கொடிய பறவையாக சித்தரிக்க 

“ ஏறார் முயல் இருக்க காகம் பின் செல்வரோ “ என்று சிறிய திருமடலில் காக்கை மாமிசத்தை இழிவு செய்ய “ காக்கை  குருவி எங்கள் ஜாதி “ காக்கைச் சிறகினிலே நந்தலாலா “ அதன் மீது பாசத்தைப் பொழிகின்றார் பாரதியார்.

காக்காவை பிடிக்கின்றதோ இல்லையோ காக்கா பிடிக்க எல்லோருக்கும் பிடிக்கும். ( முதலாளி வந்ததும் கையபிடிச்சு , காலப்டிச்சு , கா , காக்கா பிடிச்சு அன்பேவா நாகேஷ் ) 

காகம் பொதுவாக கொஞ்சம் ரிலாக்சா இருக்க இரண்டு இடங்கள் . ஒன்று குட்டையில் அமிழ்ந்து இருக்கும் எருமையின் முதுகு. இரண்டாவது தலைவர்களின் சிலை. ( தான் உட்கார்ந்து இருப்பது காந்தியின் சிலை என்று அதற்கு தெரியாது. தெரிந்திருதால் அது அங்கு உட்கார்ந்திருக்காது - புன்னகை பட வசனம்.) 

காகம் கொஞ்சம் வஞ்சம் தீர்க்கும் பறவையே என்று தோன்றுகின்றது. சேலத்தில் ஒருவர் ஒரு

காகத்துக்கு எதோ தீங்கு செய்துவிட காகங்கள் அவரை மட்டும் குறி வைத்து தொடர்ந்து தாக்கியதாகவும் அதற்கு பயந்து அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும் சொல்வார்கள்.

ஹிட்சாக்கின் பேர்ட்ஸ் பார்த்த பின்னர் நம்பாமல் இருக்க முடியவில்லை.

இப்படி எத்தனை நேரம் இருந்தேனோ தெரியவில்லை. அதிலிருந்து மீண்ட போது காக்கையின் பள்ளைக்கூடம் இல்லை. 

ஒருவேளை ஆன் லைன் வகுப்போ என்னவோ !


சாரதி

18/02 /2021.

No comments:

Post a Comment