Sunday, February 21, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 74 பாம்பணையப்பன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 74 🌹🌹🌹


எம்பெருமானாம் ஸ்ரீமந் நாராயணனே நாரதருக்கு ஞானத்தை உபதேசித்த தலம். தான் இறைவனிடம் பெற்ற ஞானத்தால் "நாரதீய புராணம்" நாரதர் பாடிய அற்புதமான திருத்தலம்.


நகுலன் புதுப்பித்த தலம் எனவும், நகுலனே உண்டாக்கிய தலம் எனவும் போற்றப்படும் அருமையான திவ்யதேசம். அதுமட்டுமல்ல வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் மகிமை வாய்ந்த புண்ணியத்தலம். இத்தகைய புண்ணியம் பெற்ற இறைவனின் கருணையை நாம் பெறுவோமா?


அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோவில் :-
திருவண்வண்டூர்.
மூலவர்: பாம்பணையப்பன், கமலநாதன்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
உற்சவர்: கமலநாதன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: வேதாலய விமானம்
தீர்த்தம்: பம்பா தீர்த்தம், பாபநாச தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ பாம்பணையப்பன் ஸ்வாமிநே நமஹ
ஊர்: திருவண்வண்டூர்


🌺🌺 தலவரலாறு:-

திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள இறைவன் நாராயணன், பாம்பணையப்பன் என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருளும் அற்புதத் திருத்தலம்.

ஒருமுறை நாரதருக்கும் அவரது தந்தையான பிரம்மாவிற்கும் வாக்குவாதம் உண்டாகிறது. இதனால் பிரம்மா நாரதரைச் சபித்து விடுகிறார். இதனால் வருத்தமடைந்த நாரதர் பிரம்மனை விட்டுப் பிரிந்து இத்தலம் வந்து பெருமாளை நோக்கி கடும்தவம் புரிந்து, சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு போதிக்க வேண்டுமென வேண்டுகிறார்.

இவரது தவத்தால் மகிழ்ந்த பெருமாள் நாரதர் வேண்டிய வரம் தந்தருளினார். எனவே பெருமாளே அனைத்துமாக இருப்பவர் என்றும், அவரை வழிபடும் முறை துதிப்பாடல்கள் அடங்கியதாக நாலாயிரம் அடிகளைக் கொண்ட 'நாரதீய புராணம்' என்ற நூலை அருளியுள்ளார்.

இறைவனே நாரதருக்கு ஞான உபதேசம் செய்ததாகவும், அந்த ஞானத்தைப் பெற்ற நாரதர் "நாரதீய புராணம்" என்ற நூலைப் பாடியருளியதாக தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 நகுலன் உண்டாக்கிய தலம் :-

பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது இக்கோவில் சிதிலமடைந்ததைக் கண்டு நகுலன் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இத்தலத்தை நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

🌺🌺 தலபெருமை:-

இவ்வூரில் பூமியைத் தோண்டும் போது புதிய பெருமாள் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதை இக்கோவிலுக்கு கொண்டு வந்து புதிய சன்னதிகளும் கட்டப்பட்டன. இக்கோவில் வட்ட வடிவமான கருவறையுடன் அமைந்திருப்பதும், பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிப்பதும் மிகவும் சிறப்பு.

இக்கோவிலில் மேற்கு புற வாசலில் நுழையும் போது வாசலின் மேல், காலிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் ஆடுவது போல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு வாய்ந்தது.

அந்த கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டுபுறமும் தசாவதாரக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தல பெருமாளை நாரதர், மார்க்கண்டேயர், நகுலன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.


🌺🌺 மங்களாசாசனம் :-

"இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்
விடலில் வேதவொலி
முழங்கும் தண்திருவண் வண்டூர் கடலின் மேனிப் பிரான் கண்ணனை
நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே!!!"

- நம்மாழ்வார்.

இத்தலத்தில் நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியருளியுள்ளார். கேரளாவின் புகழ் பெற்ற பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. "தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்" என நம்மாழ்வார் பாடியுள்ளார்.

🌺🌺 வழித்தடம்:-

ஆலப்புழா மாவட்டம், செங்கணூர் - கோட்டயம் பேருந்து மார்க்கத்தில் உள்ள மழுக்கீர் என்ற கிராமத்துக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. இதைத்தவிர செங்கணூருக்கும், திருவல்லாவிற்கும் இடையே எரிமேலிக்கரை செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருவமுண்டூர் என்று கேட்டால் மட்டுமே இங்குள்ளோருக்கு புரியும்.

அருள்மிகு பாம்பணையப்பன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

மூலவர் மூன்று வாயில் வழியாகக் காட்சி தரும் அற்புதத் திவ்யதேசமான அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோவில் - திருவனந்தபுரம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment