Wednesday, February 24, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 77 திருவாழ்மார்பன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 77 🌹🌹🌹

நம்மாழ்வார் அவர்களின் அவதாரத் தலம் இந்த திருப்பதிசாரம். சப்தரிஷியான ஏழு முனிவர்களுக்குக் காட்சி தந்த பெருமாள் அருள்புரியும் மகிமை வாய்ந்த திவ்யதேசம்.

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில் :-

திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
மூலவர்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
உற்சவர்: திருவாழ்மார்பன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: இந்திர கல்யாண விமானம்
தீர்த்தம்: லக்ஷ்மீ தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: திருப்பதிசாரம்

🌺🌺 தலவரலாறு :-

பரமபத நாதனாம் இறைவன் நாராயணன் மீது பக்தி கொண்ட சப்தரிஷிகள் என்று போற்றப்படும், ஏழு முனிவர்களும் இறைவனைக் காண வேண்டி சுசீந்திரம் என்ற இடத்தில் தவமியற்றினர்.

சுசீந்திரம் அப்போது ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. இறைவன் அவர்களுக்கு சிவன் வடிவில் காட்சி தந்தார். முனிவர்கள் தங்களது பெருமாளின் திருவுருத்தைக் காண வேண்டும் என்று கேட்க பெருமாள் "சோம தீர்த்தக் கட்டம்" என்ற இடத்தில் தவமியற்றினால் தான் அவ்வுருவில் காட்சி தருவதாகச் சொன்னார்.

அதைக் கேட்டதும் சப்தரிஷிகள், சோம தீர்த்தக் கரையான இத்தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து நீண்ட நாட்களாக தவமியற்றினர்.

அவர்களது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் திருமாலின் வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருளினார். அந்த உருவத்திலேயே இந்த திருத்தலத்தில் தங்கி அருள்புரிய வேண்டும் என்று முனிவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட பெருமாள் முனிவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற ""திருமால், சப்த ரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக அமர்ந்து அருள்புரிகிறார்".

அக்காட்சியையே இன்றளவில் நாம் தரிசிப்பதாகத் தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 நம்மாழ்வார் பிறந்ததலம் :-

திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உண்டானது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள "திருக்குறுங்குடி" சென்று, அதன் வழியிலே ஓடும் நதியில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளாகிய நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர்.

பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கு மனமிரங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். ""யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காத கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்) திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்"" என்று கூறி மறைந்தார்.

சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவைண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துப் பொற் தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர்.

குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளிய மரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளியிருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது.

இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் திருஅவதாரத் தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற திருத்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.

🌺🌺 மூலவர் தரிசனம் :-

மூலவரின் ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்" என்ற கலவையினால் செய்யப்பட்டது. கல்லும், சுண்ணாம்பும் செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு "கடுசர்க்கரை யோகம்" என்பது பெயர். இதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

மூலவரின் திருநாமம் திருவாழ்மார்பன். இங்குள்ள தாயாருக்குத் தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம்.

பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.

இந்த மூலவர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

🌺🌺 திருவண்பரிசாரம் :-

திருமார்பில் திருமகள் தாயார் காணப்படுவதால் இத்தல இறைவனுக்கு திருவாழ்மார்பன் என்பது திருநாமம். திருமகளுக்கு தன் நெஞ்சத்தையே பரிசாகத் தந்த இறைவன் காட்சி தரும் தலமாதலால் இத்தலத்திற்கு "திருவண்பரிசாரம்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்தலத்தை நம்மாழ்வார் 1 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

"வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என்

திருவாழ் மார்வற்கு என்திறம்
சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம்
சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே!!!"

- நம்மாழ்வார்.

🌺🌺 சிறப்புகள் :-

திருமகள் தனி சன்னதி இல்லாமல் திருமாலின் திருமார்பில் வாழும் திருத்தலம்.

திருமகள் பிராட்டி கமலவல்லி நாச்சியார் என்னும் திருநாமத்தில் இறைவனது திருமார்பில் காட்சி தரும் திவ்யதேசம்.

நம்மாழ்வார் 1 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

நாகர்கோவில் - திருநெல்வேலி பேருந்து மார்க்கத்தில் சுமார் 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பதிசாரம் என்றால் மட்டுமே இங்குள்ளோருக்குத் தெரிகிறது.

அருள்மிகு திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

இன்றைய பதிவுடன் மலைநாட்டுத் திவ்யதேசங்கள் 13 நிறைவடைகிறது.

🌺🌺 நாளைய பதிவில் :-

பாண்டிய நாட்டின் முதல் திவ்யதேசமான அருள்மிகு அழகிய நம்பி திருக்கோவில் - திருக்குறுங்குடி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment