Sunday, February 21, 2021

காகம் கொத்திய கதை.....சுஜாதா

 காகம் கொத்திய கதை.....சுஜாதா

கற்றதும் பெற்றதும் (26 ஜனவரி, 2003)

====================

காக்கைகள் பற்றி  திரு. Sarathy Venugopalan அவர்கள் எழுதிய நல்லதொரு பதிவைப் படித்த போது, வாத்தியார் காகங்கள் பற்றி "கற்றதும் பெற்றதும்" பகுதியில் எழுதிய  ஒரு மிகச் சுவையான கட்டுரையைப் பதியாமல் இருக்க முடியவில்லை. 

===================

மறுபடி மெரீனாவில் மாலையில் வாக்கிங் போகிறேன். முன்னளவுக்கு இல்லையெனினும் அதில் முக்கால்வாசி நடக்க இயலுவதே மருத்துவ விந்தை. மெரீனாவின் நடைபாதையில் இருக்கும், முதுகுக்கு விரோதமான சிமெண்ட் பெஞ்சுகள் ஒன்றில் கொஞ்சம் இளைப்பாறுகிறேன்.

தினம் மாலை ஒரு கனவான் (ஜைன மதத்தினர் போலும்) தன் மனைவி, குடும்பத்துடன் வருகிறார். நிறைய டபுள் ரொட்டி கொண்டுவருகிறார். பிய்த்துப் பிய்த்துப் புல்வெளியில் காக்கைகளுக்கு இறைக்கிறார். முழு ஸ்லைஸ்களை கிரிக்கெட் விளையாடும் குப்பத்துப் பையன்களுக்கும் கட்சி ஊர்வலம், பிரியாணி அழைப்புகளுக்குக் காத்திருக்கும் வேலையற்ற பிரகிருதிகளுக்கும் தருகிறார்.

உடன்வீற்றிருப்பவர்களுக்கு மேரி பிஸ்கட், ரஸ்க் போன்றவை 'பிரஷாத்' என்ற பெயரில் விநியோகிக்கிறார். சில நாள் டீ, இளநீர். கையில் கொண்டு வந்ததைக் காலி பண்ணாமல் போகிறதில்லை!

அந்தக் காக்கைகள் என்னை வசீகரிக்கின்றன. ஐந்து மணிக்கு அவர் வருகிறார். 4.55 வரை யாதொரு காகமும் இல்லை. அவர் தலை தெரிந்ததுமே காக்காலேண்டில் செய்தி போய், அனைத்து அண்மைக் காகங்களும் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. முதலில் அவரைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்கின்றன. மெள்ளத் தைரியம் பெற்று, பக்கவாட்டில் தத்தித் தத்தி, அவரின் கையிலிருந்து பிடுங்கும் அளவுக்கு முன்னேறிவிடுகின்றன.

மெள்ள காக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து, தேமேயென்று வீற்றிருக்கும் என்னைச் சுற்றிக் கறுப்புச் சிறகுகள் காதருகில் விர்ர, எனக்கு Mad பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் ஞாபகம் வரும்.

ஒருவன் பார்க் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, பறவைகளுக்கு ஆகாரம் போடுவான். முதல் படத்தில் ஒரு காக்கை வந்து பெறும். அடுத்த படத்தில் பத்து காக்கைகள். அதற்கடுத்த படத்தில் அம்பது. அடுத்ததில் ஒரு கரும் பட்டாளமே அவனைச் சூழ்ந்து கொள்ள, மெள்ள மெள்ளக் காக்கைகள் பறந்து செல்ல... அந்த ஆளையே காணோம்!

இந்தக் கதி எனக்கு நேராமலிருக்க, பெஞ்சை மாற்ற உத்தேசித்துள்ளேன். சிறுவயதில் தித்திக்கும் செம்பூக்களுக்காக கோயம்புத்தூரில் ஒரு மரத்தின் ('ஃப்ளேம் ஆப் தி ஃபாரஸ்ட்' என்று நினைக்கிறேன்) மேலே ஏறலாமா என்று யோசித்தபோது, அப்போதுதான் குஞ்சு பொரித்திருந்த காக்கை ஒன்று கோபத்தில் ஃபைட்டர் விமானம் போலத் தாழ்வாகப் பறந்து, என்னை Strafe செய்து, மண்டையின் நடுசென்டரில் கொத்திவிட்டுப் போய், தொட்டுப் பார்த்தால், ரத்த ஞாபகம் எனக்கு இன்னும் பசுமையாக, ஸாரி... சிவப்பாக உள்ளது.

அன்றிலிருந்து மரத்தடியில் நடக்கையில், மேலே ஏதாவது காக்கை நடமாட்டம் தெரிந்தால், கையில் உள்ள டயலெக்ட்டிக் புத்தகத்தைத் தலை மேல் வைத்துக்கொண்டு விரைவாக நடப்பேன்.

ஆழ்வார்பேட்டை வீட்டில், பக்கத்து ஃப்ளாட் டிரைவர் எப்போதும் தலையில் தொப்பி அணிந்திருப்பார்.

''நிறைய முடி இருக்கிறதே... தொப்பி ஏன், எதற்கு, எப்படி?'' என்று கேட்டதற்கு, ''அதை ஏன் கேக்கறீங்க? செங்கல்பட்டுல ஒரு முறை காக்கா குஞ்சைக் கையில் எடுக்கப்போய், கொத்திச்சு பாருங்க... இப்பக்கூட அந்த இடம் சொட்டையா இருக்குது!'' என்று பிரித்துக்காட்டிவிட்டு, மறுபடி அணிந்தார்.

''செங்கல்பட்டுலதானே கொத்திச்சு?''

''உங்களுக்குத் தெரியாதுங்க... சிந்தாதிரிப்பேட்டையில ஒரு முறை போயிருந்தப்ப, காரணமே இல்லாம வந்து கொத்திருச்சுங்க...''

''அதே காக்காயா?!''

''அதே காக்காயோ, அதும் மச்சானோ, மாமனோ... எப்படியோ மெசேஜ் போயிருக்கணும். இல்லைங்க... அதே காக்காதான்... எனக்கு மறக்கவே மறக்காது!''

''எப்படி?''

''சாஞ்ச பார்வை... குரல் ஒரு மாதிரி!''

''குரலா?!''

'ஹர்ர்' என்று கரைந்து காட்டினார்.

நவயுகத்தில்தான் காக்கைகள் இத்தனை விரோதமாக இருக்கின்றன. சென்ற நூற்றாண்டில் மார்க்ட்வெய்ன் (Mark Twain) இந்தியக் காகங்களைப் பற்றி ஓர் அருமையான குறிப்பு எழுதியிருக்கிறார் (Following the Equator).

ஆழ்வார் காலத்தில் காக்கைகள் குழந்தைக்குக் கோல் கொண்டுவந்து கொடுத்தன ('சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநல் அங்கமுடையதோர் கோல் கொண்டுவா'), தலைவாரிவிட்டிருக்கின்றன என்பது தெரிகிறது. 'காயமலர்வண்ணன் கண்ணன் கருங்குழல் தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்' என்று பெரியாழ்வார் பாடியிருக்கிறார்.

கேபிள் டி.வி-யும் வந்ததில் இளைப்பாற டெலிவிஷன் ஆன்ட்டெனாக்கள் குறைந்துபோய், மரங்களுமற்றுப் போய், எலெக்ட்ரிக் கம்பங்களின் அபாயத்தால் டென்ஷனாகிப் போய் காகங்கள் விரோத சுபாவத்தை வளர்த்துக் கொண்டுவிட்டன என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment