#தெளிவு
"அம்மா நாக்கு செத்து போயிருக்கு வத்தக்குழம்பும் மிளகு ரசமும் வெச்சுடு" என்று சொல்லி குளிக்க போகும் மகன் ஆனந்தை பார்த்து கல்யாணியின் வயிறு பிசைந்தது. "எப்படி இருக்க வேண்டிய பையன்..இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்து நிற்கிறானே" என்ற ஆற்றாமையால் மனதுக்குள் குமைந்தாள்.
"அம்மா அவள் என்னை விட்டு வேறு ஒருவருடன் போய் விட்டாள்...கல்யாணம் ஆனதில் இருந்து இரண்டு பேருக்கும் ஒத்து வரவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை. குடும்பம்தானே..இதெல்லாம் சகஜம் என்று அட்ஜஸ்ட் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள்..ஒரு வருடம் நரக வாழ்க்கைதான்" என்று புலம்பிய மகனை கவலையுடன் நோக்கினாள்.
"தலை தலையா அடிச்சிண்டேன்...கேட்டானா? நம்முடைய தூரத்து சொந்தம் மாலினி இருக்கிறாள். அவர்கள் வீட்டிலும் சம்மதம்...அவளுக்கும் சந்தோஷம்...நல்ல பெண்...டிகிரி வரைக்கும் படித்தவள்..கல்யாணம் முடித்து அவளையும் உன்னோட அழைத்து போ" என்று சொல்லியும் கேட்கவில்லை.
"அம்மா என்னோட ஸ்டேடஸ்க்கு நல்ல தைரியமான, அமெரிக்கா நாகரீகம் தெரிந்த பெண்ணாக வேண்டும்...இவள் அதற்கு சரிப்படமாட்டாள்"
"இவளும் படித்தவள்தானே..குடும்பம் நடத்த நல்ல குணம் இருந்தால் போதும்.."
"இல்லை அம்மா இவளுக்கு நுனி நாக்கு ஆங்கிலம் வராது..இவள் எனக்கு வேண்டாம்" என்று அதற்கு முற்று புள்ளி வைத்து விட்டான்.
அதற்குப் பிறகு அவன் ஒரு வருடம் வரவில்லை. ஒரு அமெரிக்க பெண்ணை காண்பித்து இவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லி கல்யாணமும் செய்து கொண்டு. விட்டான்.
சொந்தத்தில் பெண் வேண்டாம் என்று சொல்லி விட்டதாக மாலினி வீட்டில் கூறி விட்டாள்.
இப்போது தான் கல்யாணம் செய்து கொண்டவள் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறி வந்து நிற்கிறான். அவளைச் சொல்லி என்ன பயன்? அவள் வளர்ந்த விதம், அவர்களின் பண்பாடு, நாகரீகம் அப்படி என்று எண்ணி ஆயாசம் அடைந்தாள்.
நல்ல படித்த, வேலையில் உள்ள பையன்களுக்கே இப்போது பெண் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இப்போது இவனுக்கு கிடைக்குமா என்ற கவலையும் எழுந்தது. அதற்காக பெண் பார்க்காமல் இருக்க முடியுமா என்று எண்ணி மேட்ரிமோனியல் நிலையத்தில் பதிவு செய்து வைத்தாள்.
மாலினிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற செய்தி கிடைத்து அவள் வீட்டுக்கு சென்று விஷயம் எல்லாவற்றையும் சொல்லி பெண் கேட்டாள். மாலினியின் பெற்றோருக்கு சம்மதம்தான். ஆனால் மாலினியோ
" அம்மா, உங்கள் மகனின் படிப்பும், மிக உயர்ந்த பதவியும், வெளிநாடும் என் பெற்றோர்களை கவர்ந்துள்ளது..அதற்காக சம்மதம் என்று சொல்கிறார்கள்..ஆனால் என் மனதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.. அவரை திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன் என்பது உண்மைதான். அவரையே நினைத்திருந்தேன் என்பதும் உண்மை..ஆனால் எப்போது அவர் சொந்தத்தில் வேண்டாம் என்று என்னை ஒதுக்கினாரோ அப்போதே அவர் மீது இருந்த ஆசை போய் விட்டது. இப்போது திருமணம் செய்தால் அமெரிக்க நாகரீகமும், நுனி நாக்கு ஆங்கிலமும் எனக்கு வந்து விடுமா? சொந்தம் இல்லை என்றாகி விடுமா?
அவருக்கு தெளிவான முடிவு எடுக்கத் தெரியவில்லை...எத்தனை படித்து என்ன பயன்? மேலும் ஏற்கனவே திருமணம் ஆனவரை நான் திருமணம் செய்து கொள்வதாக எண்ணம் இல்லை. என்னை மன்னியுங்கள்" என்றாள் மிகத் தெளிவாக.
No comments:
Post a Comment