அபூர்வ அக்னி சாளக்கிராம லிங்க தரிசனம்!
அருள்மிகு அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரா,சிமோகா,கர்நாடக மாநிலம்.
காண்போர் வியக்கும் பளபளப்பான தூண்கள்,சிற்ப வேலைகள் கூடிய இத்திருக்கோயிலில் ,சிவப்பரம்பொருள் நேப்பாளத்தில் கெண்டகி ஆற்றில் கிடைக்கும் மிகவும் அபூர்வமான அக்னி சாளக்கிராம மூர்த்தியில் அமிர்தேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.அன்னை உமாதேவி ,சாரதாம்பிகை என்னும் திருப்பெயர் தாங்கி அருள்பாலிக்கிறார்.
இக்கோயில், ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் தளகர்த்தராகிய அமிர்தேஸ்வர தண்டநாயகரால் கட்டப்பட்டது. துங்கபத்திரை ஆற்றாங்கரையில் ௧௧௯௬ [ 1196 ] ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.
தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது.
இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. திறந்த மண்டபம் ௨௯ [ 29 ] தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் ௯ [ 9 ] தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது.
கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் அமைந்துள்ளது.
இக்கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும்.
மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் ௧௪௦ [ 140 ] சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன.
இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன.
தென் புறச் சுவரில் காணப்படும் ௭௦ ] 70 ]கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில். ௨25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
சிக்கமங்களூரிலிருந்து எழுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமிர்தபுரா கர்நாடகத்தில் ஒரு முக்கியமான ஆலயம்.
தமிழகத்தில், திருக்கடையூரில் உள்ள அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், அறுபதாண்டு நிறைவுக்கும் எண்பதாண்டு நிறைவுக்கும் சென்று வழிபடுகிறார்களல்வா அதைப்போன்ற ஒரு திருக்கோயில் தான் அமிர்தேஸ்வரர் திருக்கோயில்.
திரிகுடாச்சல வடிவமுடைய கோயிலில், இப்போது ஒரு கோபுரமே உள்ளது.
ஹொய்ச்சாள பாணி கோயில்களின் வழக்கப்படி,மொத்தக் கோயிலும் ஒரு பெரிய நகை போல ஒவ்வொரு சிறு பகுதியும் நுணுக்கமான சிற்பங்கள் அடர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
இந்த ஆலயம். சிற்பக்குவியல். சிற்பம் பூத்த மரம். பிற ஆலயங்களிலிருந்து உடனடியாக மாறுபட்டுத் தோன்றுகிறது,இதன் அடித்தளம்.காரணம், முழுக்க கோபுரங்கள் செறிந்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தமைதான்.
நூற்றுக்கணக்கான கோபுரங்களால் வானில் தாங்கி நிறுத்தப்படும் ஓர் ஆலயம் போல் அது தோன்றியது. சிற்பக் கோபுரங்கள், நாகர திராவிட பாணி அமைப்பைச் சார்ந்தவை.
இவ்வாலயத்தின் சுற்றுச் சுவரில் மகாபாரதமும் இராமாயணமும் நுணுக்கமான சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே கண்டோம்.
அறுபதுகளில் புகழ்பெற்ற படக்கதை நூலைப்படிப்பது போல, ஓவியங்களில் நுணுக்ங்களைப் பயன்படுத்தியிருப்பதைப் போல,சிறிய பகுதியை விடாமல்,அவர்கள் சிற்பங்களைச் செதுக்கியிருக்கும் நுட்பம் வியப்பினை ஊட்டுகின்றது.
எந்த இடமும் வீணடிக்கப்படாமல் உருவங்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகப்பட்டு ஒரு படலமாக ஆக்கப்பட்டிருந்தது.
ஆனால் ,அத்தனை சிற்பங்களிலும் உயிரசைவு ததும்பிக் கொண்டிருக்கிறது!
புகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
பலகைச் சிற்பங்ளில் உள்ள உருவங்களின் முகபாவனைகள் மிகக்கூரியவையாக அமைந்திருக்கின்றன.
இராவணனின் கம்பீரமும், அனுமனின் விரைவும், இராமனின் நிதானமும் இத்தனை சிறிய அளவுக்குள் எழுந்து வருவதென்பது சிற்பக்கலையில் ஓர் அற்புதமே என்று கூறலாம். .
வானரங்கள் தாண்டும் கடல் நான்கு கணு அகலமே கொண்ட ஒரு பட்டையாக செதுக்கப்பட்டிருக்கும் கற்பனை. அதில் முதலைகளும் மீன்களும் நாவாய்களும் நீந்திக்கொண்டிருக்கின்றன.என்னே ஒர் அழகு!
அமிர்தேஸ்வரா ஆலயத்தில் பிரம்மாவின் சன்னிதி மிகவும் முக்கியமானதாக சேவார்த்திகளால் மதிக்கப்படுகிறது.
அங்குதான், அறுபதாண்டு நிறைவுக்கும் எண்பதாண்டு நிறைவுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. சரஸ்வதி தேவியின் சந்நிதி மிகுந்த புகழ்பெற்றது;காரணம் அன்னையின் தோற்றத்தான்.
கருவறையில் அமர்ந்திருக்கும் அன்னை கரிய பளபளப்புடன் தோன்றினாள். வழக்கமான சரஸ்வதி சிற்பங்களில் இருக்கும் நளினமும் மென்மையும் இதில் இல்லை. துர்க்கைக்குரிய கம்பீரமும் நிமிர்வும் கொண்ட தோற்றம். அமுதகலசமும் எழுத்தாணியும் படைக்கலங்களும் ஏந்திய கைகள். கலை இந்த நிமிர்வுடன் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. குழையும் கலை உலகை வளைத்து அள்ள முடியாது. நிமிர்ந்து வெல்லும் கலையே காலத்தைத் துளியென காலடியில் உணரும் ஆற்றல் கொண்டது.
கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி என்னும் ஊரில் உள்ள வீரநாராயணர் திருக்கோயிலை நினைவுறுத்துவது அமிர்தபுரியின் ஆலயம்.
பெலவாடியின் தனிச்சிறப்பே அதில் உள்ள அழகிய தூண்களின் பளபளப்புதான். ஹொய்ச்சாள கட்டிடக்கலை ஐந்து சிறப்பம்சங்களைக் கொண்டதென்று சொல்லலாம்.
சோப்புக்கல்லில் செதுக்கப்பட்ட நுண்சிற்பங்கள்.
இடவெளியின்றிச் செறிந்த புறக்கட்டுமானம்.
வட்ட வடிவமான உட்குடைவுக் கூரை கவிழ்ந்த முகமண்டபங்கள்.
உருளையிலிட்டுச் சுழற்றி உருவாக்கப்பட்ட அடுக்கடுக்கான வட்டங்களால் ஆன பளபளக்கும் தூண்கள்.
திரிகுடாச்சலம் என்னும் மூன்று கோபுர அமைப்பு கொண்ட கருவறை
உயரமற்ற மேலே குடத்தில் சென்று முடியும் தட்சிண-நாகர என்று சொல்லப்படும் பணியிலான கோபுரங்கள்.
இவற்றில் விழிகளில் என்றும் தங்கி நிற்பது இத்தூண்களே.
கல்லில் நீரை கொண்டு வந்திருக்கும் வித்தை என்று இவற்றைச் சொல்லலாம். கரிய சலவைக் கல் உருட்டி வழுவழுப்பாக்கப்பட்டு,( ) கண்ணாடிக்கு நிகரான ஒளியேற்றப்பட்டு உருவான தூண்கள் இவை . அடுக்கடுக்காக குளிரொளியுடன் நிறைந்த தூண்களின் நடுவே நின்றிருக்கையில் குளிர்ந்த நீர்ச்சுனை ஒன்றுக்குள் புகுந்துவிட்ட உணர்வை ஊட்டுகின்றன.
நன்றி=
கர்நாடக சுற்றுலாத் துறை,கர்நாடக தொல்லியல் துறை.
புகைப்படங்கள்===
.௧.,௨.,௩.. அருள்மிகு அமிர்தேஸ்வரர்,அபூர்வ அக்னி சாளக்கிராம லிங்க தரிசனம்!
.,௪.௫ ,.அருள்மிகு சாரதாம்பிகை.
மற்ற புகைப்படங்கள்==மினுமினுப்பான தூண்கள்,குழிந்த மாடங்கள்,சிற்ப அற்புதம்,திருக்கோயில் அழகுத் தோற்றங்கள்.இறுதியாக செல்லும் வழி .
No comments:
Post a Comment