பொன்மணிக்கு பிடிக்காத விஷயங்கள் இரண்டு. பொங்கல், கூச்சல் . ஆனால் இந்த இரண்டுமே அவள் வாழ்க்கையில் இன்றியமையாததாக ஆகி விட்டிருந்தது. வருடா வருடம் பொங்கல் திருநாளுக்கு பொன்னத்தூர் கிராமத்திற்கு போயே ஆக வேண்டும். மிலிட்டரி அப்பாவின் ரூல். அதை மீறவே முடியாது. வருடம் முழுவதும் விறைப்பான யூனிஃபார்ம் அணிந்துகொண்டு தேச சேவை செய்வதால் வருட ஆரம்பத்தில் குதூகலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.
அதனால் புது வருஷ ஆரம்பத்தை எப்போதும் தைப்பொங்கலோடு துவங்கினால் தான் அவருக்கு மகிழ்ச்சி. அதுவும் பொன்னத்தூர் கிராமத்திற்குச் சென்று உறவினர்களோடு ஆனந்தமாக கொண்டாடினால் தான் திருப்தி.
பொன்மணியின் தந்தை கதிர்வேலுவும் தாய் காமாட்சியும் இந்த பொங்கல் திருநாளுக்காகவே வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பார்கள். பொன்னத்தூர் கிராமம் ஒரு அழகிய சிற்றூர். வருடத்தில் 4. 5 திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். சித்திரை மாதத்தில் எல்லைச்சாமி திருவிழா, ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழா, புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருக்கும் திருவிழா, தை மாதத்தில் பொங்கல் திருவிழா.
சித்திரை ஆடி மாத திருவிழாக்களில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது.
எல்லைச்சாமி திருவிழாவில் கிராமத்தின் எல்லை தெய்வம் சீனி சாமிக்கு படையல் இடுவர். திருப்பதி சீனிவாச பெருமாளே சீனி சாமியாக வந்து இருப்பதாக ஒரு நம்பிக்கை அந்த ஊர் ஜனங்களுக்கு. அதனால் நிறைய வகைவகையான பழங்கள், தேங்காய் சாதம், எள்ளு சாதம், புளி சாதம், லெமன் ரைஸ் போன்றவைதான் படையலில் வைப்பார்கள். ஆடு கோழி போன்றவை வெட்டுவது அதெல்லாம் கிடையாது. ஏதாவது நேர்த்திக்கடன் அல்லது வேண்டுதல் இருந்தால்தான் அவை இருக்கும். அதனால் சீனி சாமி எப்போதும் சாதுவான சாமியாகவே விளங்கினார்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். பெண்கள் விரதமிருந்து மணிக்கட்டில் காப்புக்கயிறு அணிந்து அம்மனுக்கு உகந்த மஞ்சள் சேலை உடுத்திக்கொண்டு அதிகாலையில் எழுந்திருந்து கூழ் காய்ச்சுவார்கள்.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் திருமணமான நடுத்தர வயது பெண்கள் பங்கு கொள்வார்கள். அதிகாலையில் எழுந்திருந்து தலைக்கு குளித்துவிட்டு பிறகு அடுப்பை நன்கு சாணத்தால் மெழுகி கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு மங்களகரமாக தினம் ஒரு புது பானையில் கூழ் காய்ச்சுவார்கள். அம்மன் பாடல்களை பாடியபடி பெண்மணிகள் கூழ் காய்ச்சுவது மிகவும் அழகாக இருக்கும். கூழ் காய்ச்சி முடித்தபிறகு வெற்றிலை பாக்கு பழங்கள் சந்தனம் மஞ்சள் குங்குமம் வைத்து அம்மனுக்கு கூழ் படையல் இடுவார்கள். பிறகு அதை குழந்தைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு அந்தக் கூழை அருந்துவார்கள். நவதானியங்களில் இஞ்சி கருவேப்பிலை மிளகு சீரகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட அந்த கூழ் மிகவும் ருசியாக இருக்கும். விரதம் இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் கூழ் அருந்துவார்கள். வேறு எதுவும் சாப்பிட மாட்டார்கள். தரையில் பாயோ படுக்கையோ விரித்து படுக்க மாட்டார்கள். இன்னொரு மஞ்சள் ஆடைதான் விரித்துப் படுப்பதற்கு. நிறைய குடும்பங்கள் புலம் பெயர்ந்து விட்டதால் இப்போது இந்த விரதம் இருப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டனர். ஓரிருவர் தான் , அவர்களுக்கும் வயதாகிவிட்டதால் கொஞ்சம் சலுகை எடுத்துக்கொண்டு மூன்று நாட்களில் விரதத்தை முடித்து விடுகின்றனர்.
புரட்டாசி மாத திருவிழா பெருமாளுக்கு நோன்பிருப்பது. அதை ஆண்களும் பெண்களும் பின்பற்ற வேண்டும். புரட்டாசி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்திருந்து குளித்துவிட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட பிறகுதான் மற்ற வேலைகள் செய்ய வேண்டும். மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடக்கூடாது. ஆனால் காலப்போக்கில் இவை வெகுவாக குறைந்து விட்டன.
ஆனால் பொங்கல் திருவிழாவின் கோலாகலம் இன்றுவரை குறையவில்லை. ஐந்து நாட்கள் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டு ஆனந்தக் களிப்பின் உச்சத்திலிருக்கும். அக்கம் பக்கத்து கிராமத்து மக்களும் வந்து இந்த விழாவில் பங்கு கொள்வர். மக்கள் எல்லோரும் கூடிக் கூடி குலவையிட்டு கொண்டு பொங்கல் வைப்பதும் , சூரிய பூஜை செய்வதும் , மஞ்சுவிரட்டும் ஏறுதழுவுதலும் கொள்ளை கொள்ளையாக இந்த கிராமத்தின் அழகை காணக்கண் கோடி வேண்டும்.
வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்ட ஆண்கள், திருமணமாகி சென்று விட்ட பெண்கள் இவர்களால் பொன்னத்தூர் கிராமத்தின் ஜனத்தொகை வெகுவாக குறைந்துவிட்டது. சொந்தவீடு வைத்திருப்பவர்களும் நிலத்தில் விவசாயம் செய்பவர்களும் தான் பொன்னத்தூர் கிராமத்தில் தற்போது வசித்து வந்தனர். அதில் கதிர்வேலின் உறவினர்கள் தான் அதிகம். விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவர்கள் யாருமே கிராமத்தை விட்டு வெளியேறவில்லை.
கதிர்வேல் ஒருவர்தான் தப்பித்தவறி மிலிட்டரியில் போய் சேர்ந்தவர். இளவயதில் ஏதோ ஒரு வேகத்தில் போய் மிலிட்டரியில் சேர்ந்துவிட்டார். ஏதாவது வடக்கத்தி பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடப் போகிறாரே என்று பயந்து கதிர்வேலின் தந்தை பொன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். அதனால்தான் காமாட்சிக்கும் தன் கிராமத்து திருவிழாக்களில் அவ்வளவு ஆர்வம். ஆனால் கணவரின் மிலிட்டரி உத்தியோகம் காரணமாக பல ஊர்களில் வசிக்க நேர்ந்தது அவர்களுக்கு. மகள் பொன்மணியும் வடக்கே பிறந்து வடக்கே தான் வளர்ந்தாள்.
எங்கிருந்தாலும் காமாட்சியும் கதிர்வேலும் குழந்தையுடன் பொன்னத்தூர்
கிராமத்திற்கு பொங்கல் திருவிழாவிற்கு வருகை தர மறக்கமாட்டார்கள். ஏழெட்டு வயது வரை பொன்மணியும் கிராமத்துக்கு செல்வதை மிகவும் குதூகலத்துடன் அனுபவித்தாள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு போரடிக்க ஆரம்பித்தது. ஆங்கில வழிக் கல்வியும் நவநாகரீகமும் அவளை கிராமத்து வாழ்க்கையில் ஒரு சலிப்பை பார்க்கத் தூண்டியது. வெள்ளந்தியாய் வெகுளியாய் பழகும் கிராமத்து மக்கள் பொன்மணிக்கு மட்டும் அறிவற்றவர்கள் போல் தோன்றினர்.
கிராமத்திற்கு போனால் அவள் விருப்பப்படி ஆடை அணிய முடியாது. பாவாடை சட்டை தான். அதுவும் வயதுக்கு வந்த பிறகு பாவாடை தாவணிதான்.
"வா புள்ள போ புள்ள " என்று கிராமத்து மக்கள் பேசுவதும் அவளுக்கு துளிக்கூட பிடிக்கவில்லை. ஆனால் அப்பாவை ஒரு நாளும் மீற முடியாது.
தை மாதம் என்றால் பொங்கல் திருவிழா தான் , பொங்கல் திருவிழா என்றால் பொன்னத்தூர் தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அப்பா, சரியான டெரர், அவருடைய கன்னங்கரேலென்ற உருவமும் முறுக்கு மீசையும், அவருடைய முரட்டு விழி பார்வைக்கு ஒரு கிராமமே அடங்கிவிடும் என்னும்போது பொன்மணி எம்மாத்திரம்.
இத்தனைக்கும் மகள் பொன்மணியை அவர் ஒருமுறை கூட ஒரு வார்த்தை கூட கடிந்து சொன்னதில்லை. ஒரே மகளாக இருந்தாலும் ரொம்ப செல்லமும் கொடுத்ததில்லை ஆனால் அவள் விருப்பங்களுக்கு குறுக்கே நின்றதில்லை அவர். பொன்மணி தான் விரும்பிய படிப்பை படித்தாள். ஜர்னலிசம், பத்திரிகை துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற அவா அவளுக்குள் மிகச் சிறு வயதிலிருந்தே வேறூன்றி இருந்தது. பொன்னத்தூர் கிராமத்தில் அவளுடைய அறிவுக்கு தீனி இருக்கும் அல்லது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லாததால் அங்கு போவதையே அவள் விரும்பவில்லை. பொன்னத்தூர் கிராமம் எவ்வளவு அழகாக இருந்தாலும் , எழில் கொஞ்சினாலும் பொன்மணியை பொறுத்தவரை அது ஒரு கச்சடா, குப்பை. தன் நண்பர் நண்பிகளிடம் அப்படித்தான் அவள் சொல்லி வைத்திருந்தாள்.
அதனால் பொன்மணியின் தோழர்களும் தோழிகளும் அவள் பொன்னத்தூர் போகப் போகிறாள் என்றாலே கிண்டலும் கலாட்டாவும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். "கோரி தேரா காவ்ன் படா பியாரா" என்ற பிரபலமான ஹிந்தி பாட்டை பாடி அவளுக்கு வெறுப்பை ஏற்றுவார்கள்.
வருடாவருடம் நடக்கும் இந்தக் "கொடுமை"யில் இருந்து எப்படி விடுபடுவது என்று தான் அவளுக்கு தெரியவில்லை. கிராமத்தின் அழகுக்கும் அமைதிக்கும் எவ்வளவு பேர் ஏங்குகிறார்கள் என்பது பொன்மணிக்கு தெரிய வாய்ப்பில்லை. கிராமம் என்றாலே போர் என்ற எண்ணம் பொன்மணியின் மனதில் ஆழமாக பதிந்து இருந்ததே காரணம்.
எதிரியின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த கதிர்வேலுக்கு மகளின் மன ஓட்டமா புரியாது? புரிந்ததை புரியாதது போல் காட்டிக் கொள்வதில் வல்லவர் அவர். மனைவி காமாட்சியிடமும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி கூறி வைத்திருந்தார். நிச்சயம் ஒரு நாள் பொன்மணியின் மனம் மாறும், கிராமத்து வாழ்க்கையையும் ரசிக்க தொடங்குவாள் அவள் என்று திண்ணமாக நம்பினார் கதிர்வேல். அதற்கான வாய்ப்பு நெருங்குகிறது என்பதை அவர் இம்முறை அறியவில்லை. இந்த வருட தைப்பொங்கல் திருநாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
பதினைந்து நாட்களுக்கு முன்பே கிளம்புவதற்கான முஸ்தீபுகளை செய்ய தொடங்கிவிட்டனர் காமாட்சியும் கதிர்வேலுவும்.
பொன்மணி மட்டும் எரிச்சலின் உச்சகட்டத்தில் இருந்தாள். இப்போது அவள் சிறுமி அல்ல. எழில் ஓவியமாய் வளர்ந்து நிற்கும் நவநாகரீக யுவதி. ஹிந்தியும் ஆங்கிலமும் அவள் நுனி நாக்கில் விளையாடியது. இன்னும் பஞ்சாபி குஜராத்தி போன்ற மொழிகளையும் கற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் அவள். பத்திரிகை இயல் படிப்பிற்கு பல மொழிகள் கற்பதும், பேசுவதும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பினாள் அவள். அது உண்மைதான். பலதரப்பட்ட மக்களை பார்ப்பதும் செய்திகளை சேகரிப்பதும் பொன்மணியின் படிப்பில் ஒருபகுதியாக விளங்கியதால் பல மொழிகளை கற்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாள் பொன்மணி.
தந்தை தன்னை துளிக்கூட புரிந்து கொள்ளவில்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தாள் பொன்மணி.
ஊடகத்துறையின் நுணுக்கங்களையும் ஆனால் அதே சமயம் அதிலுள்ள ஆபத்துக்களையும் நன்றாக அறிந்தவர் தான் கதிர்வேல். மகள் பொன்மணியின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் அவர்.
பட்டத்தின் நூலை விட்டுப் பிடிப்பது போல் , பொன்மணியை அவள் போக்கில் விட்டாலும் அவளைத் தகுந்த முறையில் கண்காணித்துக் கொண்டும் இருந்தார் கதிர்வேல். ஒரே மகள் அல்லவா !? பொன்மணி அவர் கண்ணின் மணி. காமாட்சியும் தன் கணவனின் மனக்குறிப்பை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வாள்.
"எல்லாம் ரெடி பண்ணிட்டியா பொன்னுமணி ? " என்று மகளை வினவினார்.
"பண்ணிட்டேன் டாடி " என்று உற்சாகமின்றி பதில் உரைத்தாள் பொன்மணி.
பொன்மணியின் உற்சாகமின்மையை கண்டு கொள்ளாதவாறு மனைவியிடம் பேசத்தொடங்கினார் கதிர்வேல். "பேக்கரில மூணு கிலோ பிஸ்கட் ஆர்டர் கொடுத்து இருந்தோமே, வந்துடுச்சா காமாக்ஷி?" என்று கேட்டார்.
"நேத்தே கொடுத்துட்டாங்க, எல்லாத்தையும் நீட்டா பேக் பண்ணிட்டேன்"
"சரி சொந்தக்காரங்க எல்லாத்துக்கும் துணிமணி எடுத்தோமே அதெல்லாம் பேக் பண்ணியாச்சா? "
"எல்லாம் ரெடிங்க, மாமா " காமாக்ஷி குதுகலத்துடன் ஒரு சிறுமியை போல் பதில் கூறினாள்.
இதுதான் முதல் கோபம் பொன்மணிக்கு. காமாட்சி தன் கணவரை மாமா என்று அழைப்பதும் வாங்க போங்க என்று மரியாதையுடன் பேசுவதும் விளிப்பதும் துளிக்கூட பிடிக்கவில்லை அவளுக்கு. அவளுடைய தோழிகள் வீட்டில் எல்லாம் 50 வயது பெண்மணிகள் கூட கணவரை பெயர் சொல்லி அழைத்து ஒருமையில் தான் பேசிக் கொண்டிருந்தனர். ஹிந்தியில் அது பாந்தமாக இருந்தது. மேலும் மனைவி எந்தப் பெயரால் தன் கணவனை அழைக்கிறாளோ அந்தப் பெயரால் மற்றவர்கள் அவரை அழைக்க மாட்டார்கள். இது புரியவில்லை பொன்மணிக்கு .நிறைய வேண்டாத எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வைத்திருந்தாள் பொன்மணி. பொன்னத்தூர் கிராமத்திற்கு போனாலும் அங்குள்ளவர்கள்" அத்தை, மாமா, மயினி, சித்தப்பு, அப்பத்தா, அம்மாச்சி என்ற உறவுமுறைச் சொற்கள் எல்லாம் அவளுக்கு மிகவும் அநாகரீகமாக தோன்றியது. "ஆன்ட்டி அங்கிள் " இந்த இரண்டு வார்த்தை போதாதா அழைப்பதற்கு என்று நினைப்பாள் பொன்மணி. பொன்மணி இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வார் கதிர்வேல். "எல்லாம் சகவாச தோஷம்" என்று எண்ணிக் கொள்வார்.
வரப்போகும் நல்ல காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது அவர் மனம்.
பொன்மணியின் அடுத்த கோபம் பொங்கல் மீது. பொங்கலும் ஒரு உணவா என்பது அவள் கேள்வி. சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல் இரண்டுமே பேத்தல் என்ற எண்ணம் பொன்மணிக்கு தீர்மானமாக இருந்தது.
சர்க்கரை பொங்கலில் வெறும் அரிசி நெய் வெல்லம் முந்திரிப்பருப்பு அவ்வளவுதானே ? என்பாள் அவள். கார்போஹைட்ரேட் கொழுப்பு சுகர் இதை தவிர வேறு என்ன இருக்கிறது என்பது அவள் வாதம்.
வெண்பொங்கல் மட்டும் என்ன வாழ்கிறது ? கொஞ்சமே பாசிப்பருப்பு மிளகு சீரகம் நிறைய நெய். இவைதானே ?
அதை செய்பவர்களின் கைப்பக்குவமும், உறவுகளை மதிக்கும் மனமும், அன்பும், பிரியமும், அக்கறையும் புரியவில்லை பொன்மணிக்கு.
இப்படிப்பட்ட கொழுப்புச்சத்து நிறைந்த பொங்கலை பானை நிறைய செய்து வைத்துக்கொண்டு சாமி கும்பிட்ட பின்னர் அத்தை மாமா சித்தப்பா பெரியப்பா இன்னும் நிறைய கிழம் கட்டைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு இலையில் அள்ளி வைத்து நெய் ஒழுக சாப்பிடுவது கண்றாவியாக இருக்கும் பொன்மணிக்கு.
"பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்று கூச்சல் வேறு காதைப் பிளக்கும்.
"பொன்னுத்தாயி நீயும் எடுத்துக்க, சாப்பிடு இந்தா" என்று மூக்குறிஞ்சு மாமா கைநிறைய பொங்கலை அள்ளி இவள் வாயில் ஊட்டி விட வரும் போது குமட்டிக் கொண்டு வரும் பொன்மணிக்கு. எப்போது பார்த்தாலும் மூக்கை உறிஞ்சி கொண்டே இருப்பதனால் முத்து மாமாவின் பெயர் மூக்கு உறிஞ்சி மாமா என்று ஆகிவிட்டது.
பொன்மணிக்கு அவர் தன் மூக்கை துடைத்துவிட்டு அந்த கையாலேயே பொங்கலை கொடுக்கிறாரோ என்று சந்தேகம் பாடாய்படுத்தும். யாரிடமும் சொல்லவும் முடியாது. முத்து மாமாவின் வயது 70. கர்ணனுக்கு இருந்த கவசமும் குண்டலமும் போல் இவருக்கும் கழுத்தில் மஃப்ளரும், முழுக்கை ஸ்வெட்டரும் இணைபிரியா அணிகலன்கள். ஆஸ்துமா நோயாளி. பால் வடியும் முகம் அந்த கோகுலத்து கண்ணனுக்கு. முத்து மாமாவிற்கோ நீர்வடியும் மூக்கு எப்போதும்.
அவர் பொன்னுத்தாயி என்று பொன்மணியை கூப்பிடுவது வேறு அவளுக்கு பிடிக்கவில்லை.
"என் பேரு பொன்மணி, கிழவியை கூப்பிடுற மாதிரி பொன்னுத்தாயின்னு கூப்பிட்டா எனக்கு பிடிக்கலை, எத்தினி வாட்டி சொல்லுறது? "என்று கடுகடுப்பாள்.
"கிராமத்துக்கு வந்தாலே இப்படித்தான், மம்மியும் டாடியும் என்னை கண்டுக்கறதே இல்லை " என்று உள்ளுக்குள் குமைவாள். எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்று தவித்துப் போவாள் பொன்மணி. கிராமத்தில் செல்போன் டவரும் பாதி சமயம் கிடைக்காது. பிரெண்ட்ஸ்களுடன் நிறைய பேச வேண்டியிருந்தது பொன்மணிக்கு.
இம்முறையும் அதே கதைதான். பொன்மணிக்கு காலேஜ் ப்ராஜெக்ட் வொர்க் நிறைய இருந்தது. மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு சர்வே எடுக்க வேண்டி இருந்தது. வாசித்தல் வாழ்க்கைக்கு எவ்வளவு உபயோகமானது என்பதை பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வதை ஒரு நோக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள் பொன்மணி.
"நம்ம கிராமத்துலயும் அதை நீ செய்யலாம், பொன்மணி " என்றாள் காமாட்சி. "எல்லாரும் நம்ம சொந்தகாரங்க நான் சொல்றதெல்லாம் ஒருத்தரும் கேட்க மாட்டாங்க " என்று பதில் கூறினாள் பொன்மணி.
"அதுக்குத்தான் இந்த தடவை மட்டும் நான் வரல அப்படின்னு மட்டும் சொல்லி பார்த்தேன் நீங்க எங்க விட்டீங்க? "
காலேஜ் ப்ராஜெக்ட் வொர்க்கை
ஒரு சாக்காக வைத்துக்கொண்டு கிராமத்து பிரயாணத்தை தவிர்க்க நினைத்திருந்தாள் பொன்மணி. ஆனால் கதிர்வேல் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார்.
"அம்மாக்கு என்னைக்குமே அப்பா வழிதான் சரியான வழி " பொன்மணியால் மறுத்துக் கூற முடியவில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பெற்றோருடன் கிளம்பி பொன்னத்தூர் கிராமம் சென்றாள் .
இவர்களைப் பார்த்ததும் சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் ஒரே குதூகலம். "வாங்க வாங்க,
வா பொன்னுமணி " என்று வாயார அழைத்தனர்.
"ஏலே எப்பலே கல்யாணம் சாப்பாடு போட போறே? மிலிட்டரி மாப்பிள்ளையா? " என்று மாமா விசாரித்தார்.
பொன்மணி பல்லைக் கடித்தாள்.
"நான் பிஎச்டி பண்ணனும் அப்புறம் தான் ஷாதி " என்றாள்.
"நம்ம சாதி பையனாவே பாருப்பா" என்றார் மாமா பதிலுக்கு.
எரிச்சல் மேலோங்கியது பொன்மணிக்கு.
"மம்மி, டாடி எனக்கு தூக்கம் வருது ரெஸ்ட் எடுக்கணும்" என்றாள் குரலில் கோபத்தை காட்டி.
"எதுக்கு அம்மி, தாடி எல்லாம் சொல்லுது இந்த புள்ள " என்று அதிசயித்தாள் சொந்தக்கார கிழவி ஒருத்தி.
பொன்மணியின் அருகில் வந்து காவிப்பல் தெரிய சிரித்து அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்.
பொன்மணியின் பொறுமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது.
"பொறுமை பொறுமை" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
அப்போது முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு இளைஞன் அங்கே வந்து "ஐயா மருந்து சாப்பிடுங்க "என்று மாமாவிடம் மருந்தை கையில் எடுத்துக் கொடுத்து தண்ணீரும் கொடுத்தான். "முத்தாயி போனப்புறம் இந்த தம்பி தான் என்னை நல்லா பார்த்துக்கிடுது. வேளாவேளைக்கு பார்த்து பார்த்து எனக்கு மருந்தை கொண்டு வந்து கொடுக்கும். சாப்பாடு என்ன சாப்பிடணும் எப்படி சாப்பிடணும்னு கரெக்ட்டா சொல்லும் " என்றவாரே மருந்தை விழுங்கினார் முத்து மாமா.
சிறிது நேரத்தில் அந்த இளைஞன் அந்த கும்பலில் இருந்த இன்னும் பல முதியவர்களுக்கு அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்துகளை எடுத்துக் கொடுத்தான். அவர்கள் அருகில் அமர்ந்து அன்புடன் அக்கறையுடன் மருந்தை அவன் கொடுத்த விதம் பொன்மணிக்கு வியப்பை ஏற்படுத்தியது. "பரவாயில்லையே! வேலை இல்லா திண்டாட்டத்தை கெட்டிக்காரத்தனமாக சமாளிக்கிறானே இந்த ஆளு, பிழைப்பதற்கு நல்ல வழியை செலக்ட் பண்ணி இருக்கானே. ஏதோ இப்படியாவது நேர்மையா வேலை செஞ்சு சம்பாதிக்கட்டும்" என்று எண்ணினாள் பொன்மணி. "கிராமத்தில் நமக்கு பிடித்த மாதிரி ஏதோ ஒரு விஷயமாவது இருக்கிறதே" என்று ஒரு சிறிய நிம்மதி ஏற்பட்டது பொன்மணிக்கு. "எக்ஸ்க்யூஸ் மீ " என்று அந்த இளைஞனுடன் பேச நெருங்கும் பொழுது அமுதா பெரியம்மா பொன்மணியின் அருகில் வந்தாள். "பொன்மணி வா உனக்கு பிடிச்ச வெஜிடபிள் சூப் வச்சிருக்கேன்" என்று அன்புடன் அழைத்து போனாள்.
"ஹை பெரியம்மா, இதெல்லாம் எப்ப கத்துக்கிட்டீங்க? " என்று வியப்புடன் கேட்டவாறே அவளை பின் தொடர்ந்தாள் பொன்மணி.
இம்முறை பொன்னத்தூர் கிராமம் பொன்மணிக்கு ஒரு புதிய அத்தியாயமாய் திகழப்போகிறது. பொன்மணியின் மனதிலும் கலவையான உணர்ச்சிகள் தோன்றின. முண்டாசு இளைஞனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு பெரியம்மாவுடன் சென்றாள் பொன்மணி.
காலிஃப்ளவர் பேபிகார்ன் போன்ற காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் மிகச் சுவையாக இருந்தது.
"எப்படி பெரியம்மா இவ்வளவு டேஸ்டியாய் செஞ்சி இருக்கீங்க? இந்தக் காய் எல்லாம் கூட இங்கே கிராமத்தில் கிடைக்குதா? " என்று ஆச்சரியமாக கேட்டாள் பொன்மணி.
"அந்தப் பிரகாஷ் தம்பி தான் இதெல்லாம் சொல்லிக்கொடுத்தது. பக்கத்து டவுனுக்கு போயி நல்ல காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரும். "
"ஆச்சரியமா இருக்கே "
"ஆமா சமைக்கிற படிப்புதான் படிச்சிருக்கிறது அது."
"கேட்டரிங் படிச்சுட்டு இங்க என்ன பண்றாரு? இந்த ஊரைச் சேர்ந்தவரா? அவங்க அம்மா அப்பா எல்லாம் இங்க இருக்காங்களா? " கேள்வி மேல் கேள்வி கேட்டாள் பொன்மணி.
"இல்ல பொன்னுமணி, இந்தத் தம்பி மட்டும் இல்லை , இன்னும் அஞ்சாறு பேர் இவங்க கூட இருக்காங்க. எல்லாருமே வேற வேற படிப்பெல்லாம் படிச்சிருக்காங்க போல, சுத்தி இருக்கிற மற்ற கிராமங்களுக்கு எல்லாம் போய் ஏதோ சொல்லிக் கொடுக்கிறாங்களாம், என்னமோ ஏற்படுத்தறாங்களாமே, ஏதோ ஒரு வார்த்தை சொன்னாங்க " என்றாள் அமுதா பெரியம்மா.
"விழிப்புணர்வா?" என்று பொன்மணி கேட்டாள்.
"ஆமாம் அதே தான் " என்றாள் பெரியம்மா.
பிரமித்து வியப்பின் எல்லைக்கே போய் விட்டாள் பொன்மணி. இளைஞர் குழு ஒன்று கிராமத்தில் சேவை புரிய வந்திருக்கிறது என்பதை நொடியில் புரிந்து கொண்டாள் பொன்மணி.
இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குள் எழுந்தது. கிராமத்தையும் கிராமத்து மக்களையும் பற்றிய தன்னுடைய கண்ணோட்டம் தவறானது என்று லேசாக புரிய தொடங்கியது பொன்மணிக்கு.
மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்து கொண்டாள் பொன்மணி . பொன்னத்தூர் வந்தால் வெளியில் வராமல் எப்போதும் அறையிலேயே அடைந்து கிடக்கும் மகள் , இன்று அலங்கரித்துக்கொண்டு காலையிலேயே எழுந்து வந்ததைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டனர் கதிர்வேலுவும் காமாட்சியும். மகளிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
"அப்பா நான் முத்து மாமாவைப் பார்த்துவிட்டு வருகிறேன் " என்று பொன்மணி கூறியவுடன் அதிர்ச்சியில் இருவரும் மயக்கம் போட்டு விழாத குறை தான். முத்து மாமாவின் வீட்டை நோக்கி நடந்தாள் பொன்மணி.
"என்ன மாமா காலைல காபி குடிக்கிறீங்களா? உங்களுக்கு போட்டு தரலாம் என்று தான் சீக்கிரமா எழுந்து வந்தேன். " என்று கூறிய பொன்மணியை அதிசயமாக பார்த்தார் முத்து மாமா ..
"காப்பி வெச்சு கொடு புள்ள, உன் கையால குடிச்சு எம்புட்டு நாளாகுது."
"யாரு தினம் காலைல காபி வைச்சு கொடுப்பாங்க? " என்று கேட்டுக்கொண்டே கேஸ் அடுப்பை பற்ற வைத்தாள்.
"ராக்காயி வந்து வெச்சு கொடுக்கும் சில நாள், இல்லாட்டி டீ கடையில போய் குடிச்சி கிடுவேன். ஒவ்வொரு நாள் நானே போட்டு குடித்து விடுவேன். ஆமா இன்னிக்கு என்ன வெள்ளன எழுந்திருச்சு வந்துட்ட. " என்று கேட்டார் முத்து மாமா. "உங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு தான் வந்தேன் மாமா " என்றாள் பொன்மணி .
"படிப்ப முடிச்சிட்டயாடா? " என்று மிகவும் வாஞ்சையுடன் வினவினார் முத்து மாமா.
"படிப்புக்கு முடிவேது மாமா ? ஆராய்ச்சி படிப்பு படிக்கணும்னு ஆசையா இருக்கு மாமா. "
"படிச்சிகிட்டே இருந்தா எப்ப கல்யாணம் கட்டுறது? "
"படிப்புல நான் நிறைய அச்சீவ் பண்ணனும் மாமா. உங்களுக்கு அதெல்லாம் புரியாது. " என்றாள் பொன்மணி .
"ஆமா எழுபது வயசுக்கு எனக்கு ஒன்னும் புரியாது , முளைச்சு மூணு இலை விடல உனக்கு தான் எல்லாம் புரிஞ்சுதோ?" என்றார் மாமா கோபமாக.
"கோச்சுக்காதீங்க மாமா, எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்ல மாமா "
அப்போது "அய்யா" என்ற குரல் வாசலில் கேட்டது. நேற்று பார்த்த அதே முண்டாசு இளைஞன். "வாங்க" என்றாள் பொன்மணி அவனைப் பார்த்து.
"ஹலோ வணக்கம்" என்றாள் மீண்டும்.
"ஹாய் நான் பிரகாஷ் " என்றான் அவன்.
"நைஸ் டு மீட் யு, நான் பொன்மணி ஜர்னலிசம் படிக்கிறேன் பொங்கல் திருவிழாவுக்காக டெல்லியிலிருந்து வந்திருக்கேன்" என்று கூறினாள் பொன்மணி. " நீங்களும் இன்னும் அஞ்சாறு பேர் ஃபிரெண்ட்ஸ் இருக்கிறதா எங்க பெரியம்மா சொன்னாங்க.உங்க நேச்சர் ஆப் வொர்க் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? " என்று வினவினாள் பொன்மணி.
" யா, ஷ்யூர். எங்க குரூப்ல நாங்க ஒரு இருபது பேர் இருக்கோம். இங்க பொன்னத்தூருக்கும் மத்த சுற்றி இருக்கிற கிராமங்களுக்கும் சர்வீஸ் பண்றதுக்கு ஆறு பேர் வந்து இருக்கோம். நான், ஹரி, காமேஷ், ரகு, சிவா, பத்ரி. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஃபேக்கல்டில மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கி இருக்கோம். கிராம மக்களுக்கு சுகாதாரம் மட்டுமில்லை, உணவு பழக்கவழக்கங்கள், ஹெல்த் கேர் எல்லாத்தையுமே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி விடுகிறோம். கவனிக்கப்படாமல் இருக்கிற கோயிலில் சீரமைப்பு பணிகள் செய்வது, பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வரலேன்னா அதற்கு வேண்டியன செய்து டீச்சரை வரவழைப்பது, இப்படி எல்லாமே செய்கிறோம். பக்கத்து கிராமத்தில் ஸ்கூலில் டீச்சர் வராததினால் இரண்டு வருஷமா அந்த ஊர் குழந்தைகள் படிக்கவே இல்லைன்னு சொன்னாங்க. உடனடியா அதற்கு ஒரு டீச்சர் நியமனம் செய்தோம். நாங்க எல்லோருமே ஐடி கம்பெனிகளில் பொறுப்பான வேலையில இருக்கிறவங்கதான். மாதா மாதம் லீவு போட்டுவிட்டு வந்து இந்த வேலைகளை செய்கிறோம். அதற்கு எங்க கம்பெனியும் ஒத்துழைப்பு தருது. எங்க குரூப்ல பெண்களும் இருக்காங்க. ஆனால் நாங்க அவங்களை களப்பணி செய்வதற்கு அதிகம் கூப்பிடுவதில்லை. அவர்களாக விரும்பி வந்தால் தடுப்பதும் இல்லை. நீங்க ஜர்னலிஸம் படிப்பதாக சொன்னிங்க. உங்க கருத்த சொல்லுங்க "
மூச்சுவிடாமல் பேசி நிறுத்தினான் பிரகாஷ்.
"நீங்க ரொம்ப பெரிய சர்வீஸ் பண்றீங்க பிரகாஷ். கிராமத்தைப் பத்தின என்னுடைய எண்ணங்களே வேற மாதிரி இருந்தது. நகர வாழ்க்கை தான் பெஸ்ட் அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா எந்திரத்தனமான நரக வாழ்க்கையை அது அப்படிங்கறது புரிஞ்சுது இப்போ. சிடியை விட கிராமத்துக்கு தான் நம்முடைய சேவை இப்போது தேவை. எனக்கும் ஒரு ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. வாசிப்பை என்கரேஜ் பண்ணனும். புத்தகங்களோட மகத்துவத்தை மக்களுக்கு எளிதாக புரிய வைக்கணும். புத்தகங்கள் படிக்க படிக்க அதனால மனசு எவ்வளவு விசாலமா ஆகுது அப்படிங்கறத மக்கள் அவர்களாகவே புரிஞ்சுக்கணும். நகரத்துல படித்தவர்களுக்கு மத்தியிலே இது ரொம்ப சுலபம். ஆனால் கிராம மக்களுக்கு தான் இது தேவை. என்னுடைய பிராஜக்ட் வொர்க்க மிக நல்ல முறையில் சிறப்பாக செய்வதற்கு நீங்க ஒரு வழிகாட்டியாக அமைந்து
விட்டீர்கள் பிரகாஷ் " முத்து மாமா இருவர் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். முன்னேறத் துடிக்கும் இந்தப் பெண்ணை, கிராம மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்க போகும் இந்தப் பெண்ணை, திருமணம் எனும் ஒரு பந்தத்தில் இப்பொழுதே ஆட்படுத்தக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார் அவர். ஒரு நல்ல சிநேகமும் புரிதலும் பூத்தது அங்கே. பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டாள் பொன்மணி. மகிழ்ச்சி வெள்ளம் எங்கும் பொங்கி வழிந்தது.
No comments:
Post a Comment