Sunday, February 21, 2021

ஆந்திரா, ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம்... பகுதி 1

 ஆந்திரா, ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம்...

பகுதி 1

2012 பிப்ரவரி....

என் அக்கா, தான் வழக்கமாக போகும் டூர் ஆபரேட்டர் திருவல்லிக்கேணி வாசுதேவன் மாமா ஆந்திரா ,வழியாக பூரிவரை ஒரு வாரம் டூர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் வருகிறாயா என்றும் கேட்கிறாள்..நான் ஏற்கனவே ஒரு சில  ஊர்களை பார்த்து இருந்தாலும், ரெடிமேடாக சாப்பாடு,தங்குமிட கவலை இன்றி ஒரு டூராவது போய் வருவோமென சம்மதிக்கிறேன்..

10/2/12 மாலை திருவல்லிக்கேணி யில் பஸ் புறப்படுவதால் மாலை ஆறு மணிக்கே ஆஜர்..

அக்கா ஏற்கனவே வாசு தேவன் மாமா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவர்..சொன்ன டயத்துக்கு சொன்ன இடத்துல வரணும்..சாப்பாடு அருமையா எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்..ஆனா ஒரு பருக்கை கூட மீதி வைக்கக்கூடாது...என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தி இருந்தாள்..

அதற்கேற்ற மாதிரி தேரடியில் பஸ் நின்று இருந்தாலும் அதில் யாரும் ஏறக்கூடாதென்று அவர் அசிஸ்டெண்டுகள் பஸ் டோர் திறக்க வில்லை. கொஞ்சநேரம் கோயில் ஓட்டல் என்று அலைந்து விட்டு வாசு மாமாவுக்காக வெய்ட்டிங்..

சரியாக ஏழு மணிக்கு மாமா ஆஜர்..எல்லோரையும்  பெயர் சொல்லி கூப்பிட்டு அவர் சொல்லும் இடத்தில்தான் அமர வேண்டுமென்றும், ஆனால் அந்த இடம் நிலையில்லை என்றும் தினமும் ஒவ்வொரு சீட் முன்னேறி முன் சீட் ஆசாமிகள் பின்னேற வேண்டுமென்றும் அனைவரின் தட்டு டம்ளர்களை செக் செய்து அமர சொல்கிறார்..

கடைசியாக பணம் கட்டியதால் எங்களுக்கு பின் சீட் என்றாலும் தினமும் முன்னேறும் வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி...

பஸ் ஒரு வழியாக கிளம்பி இரண்டு மணி நேரத்தில் எதோ ஒரு ஊர் அனுமார் கோயிலில் நிற்கிறது..

அனைவரையும் அங்குள்ள ஹாலில் ஆஜர் செய்து டூர் குறித்த சின்ன மீட்டிங்..பின்னர் தயிர் சாதம் தக்காளி தொக்குக்கு வரிசையாக எடுத்து வந்து தட்டேந்தி நின்று

வாங்க வேண்டும்..

பக்கத்தில் பெட்ரோல் பங்கில் பாத்ரூமிற்கு போக சொல்கிறார்...

பஸ் மீண்டும் கிளம்பி இருட்டில் விரைகிறது...

 இரவு பன்னிரண்டு மணிக்கு மறுபடி பாத்ரூம் போக எதோ ஒரு பொட்டல் காட்டில் நிற்கிறது..வாசு மாமா பொம்மனாட்டிகள் முன் பக்கமும் புருஷாள் பின்பக்கமும் போக சொல்லி எதோ வயல் வெளியில் சிறுநீர்ப்பாசனம் செய்ய சொல்கிறார்...

பஸ்ஸின் தூக்கிப்போடல்களுக்கிடையில் உறக்கம் தழுவ விடியலினூடே பஸ் விஜயவாடாவில் நுழைவதை க்ருஷ்ணா நதி சொல்கிறது..

பஸ் சீதாநகரம் அனுமார் கோயில் போவதாகவும் ,அங்கு காலைக்கடன்களுக்கும் பின் நீராடவும், க்ருஷ்ணா நதி அருகில் ஒரு சத்திரம் ஏற்பாடு செய்திருப்பதாகவும்  சொல்கிறார்..

பரிசாரகர்கள் சுறுசுறுப்பாக இறங்கி  காபி தயார் செய்ய நாங்கள் பல் விளக்கி நதியின் அழகை ரசிக்கிறோம்..தமிழ் நாட்டில் இவ்வளவு ப்ரபாவமாக நதியை கண்டதில்லை.

            தொடர்வோம்




No comments:

Post a Comment