Monday, February 15, 2021

ஏக தண்டம்

 101. ஏக தண்டம் (சிசீ 7) #ganeshamarkalam

தல்லாகுளம் காமராஜ் நகர்லேந்து கிளம்பி வேகமா போரம். கிளம்பரப்போவே மணி 4. 5 மணிக்கு நகர் பிரவேசம்னு தகவல். போரம்னா? யார் எங்கே, என்ன பிரவேசம்? தெரிஞ்ச்சுக்க ஆசையோ? சொல்ரேன்.

நானும் எங்கம்மாவும். கூட எதுத்தாத்து துரையம்மா, விசாலம் மாமி. நீ எதுக்குன்னா! நல்ல காரியத்துக்கு 3பேராவா கிளம்புவா? அப்பரம் மூணு பொம்மனாட்டிகள் போரச்சே ஆண் துணை வேண்டாமோ! எனக்கு 6 வயசு. நோய்ஸ் இங்க்ளீஷ் ஸ்கூலில் 1ஸ்ட் ஸ்டாண்டர்ட். நல்ல ஆண் துணைன்னு சிரிக்கப் பிடாது. சாண் பிள்ளையானாலும்…

ஸ்கூலுக்கே ரிக்ஷாலதான் அனுப்புவா. கோகலே ரோடில் இருக்கும் மரியம் பீபி என் பக்கத்தில் உக்காந்துண்டு வருவள். அவாத்து வழீயாத்தான் ரிக்ஷா வரும். மொதல்ல ஏறிண்டு அவள் பக்கத்தில் யாரையும் உக்கார விடாம இடம் போட்டுப் பாத்துப்பள். எதுக்குச் சொல்ரேன்னா இப்போ வலது மணிக்கட்டை பிடிச்சு தரதரன்னு நடக்க வச்சு இழுத்துண்டே அம்மா நடக்கரா. விசாலம் மாமி “கணேஷை என்னண்டை கொடுங்கோ நான் இடுப்பில் தூக்கிக்கரேன்!”. “சித்தே நடக்கட்டும்.”. அப்பரம் என்ன நினைச்சாளோ ஜிவ்வுன்னு தன் இடுப்புலேயே ஏத்திண்டா.

சங்கராச்சாரியார் நகர் பிரவேஸம். வேகமாப் போனா மேலூர் ரோட்டில் வண்டியூர் ஏரிக்கு எதுத்தாப்போல் ஒருத்தர் ஆத்தில் நிக்கப்போரர், வரப்போவே பாத்துடணும்னு. 40நா இருப்பராம் அது எங்கேன்னு தெரிஞ்சுண்டு அப்பரமாவும் போணம்னு இவா பிளான். அப்பெல்லாம் ரோட்டில் தள்ளீத் தள்ளி கட்டடங்களும் சின்னச் சின்ன வீடுகளும். தூரக்கே யானைமலை தெரியும். போரப் போவே ஏரிக்கரை ஓரமா வழிநெடூக விஷயம் தெரிஞ்சு வரிசையா காத்துண்டிருக்கா. நாங்களும் நின்னுக்க ஒரு 30பேர் இருக்கும் நடந்து வரா. “எல்லாருக்கும் மின்னாடி பாரு உம்மாச்சி வரார்” அம்மா காமிக்க கன்னத்தில் போட்டுக்கரேன். எல்லாரையும் முந்திண்டு வேகமா, அவருக்கு ஈடு கொடுக்கமுடியாம மூச்சிரைக்க சொச்சப்பேர் பின்னாடி. 

கிட்டக்க வந்ததும் எல்லாரையும் அத்தனை அன்பா பாத்துண்டே. அன்னைக்கு இந்த சின்னப் பையனுக்கு தான் பாத்தது பிற்காலத்தில் எல்லாரும் ஈஸ்வர ஸ்வரூபமாக வழிபட்ட மஹாபெரியவான்னு தெரியலை.

திரும்பி வரப்போவும் வேகமாத்தான் நடந்தா. என்ன அவசரம்னா எங்கப்பா நிச்சயம் அம்மாவ திட்டுவர். சங்கராச்சாரியாரை பாக்க ஏன் போனாய்னு இல்லை. சின்னக் குழந்தையை ஏன் இழுத்துண்டு போனாய்னு. அப்பா அபீஸ்லேந்து வரத்துக்குள் போயிடன்னு. துரையம்மா, விசாலம் அவாத்திலும் கண்டிப்புகள் உண்டு. ஆத்துக்கு வந்ததும் கேட்டேன் “உம்மாச்சி கையில் ஒருகுச்சி வச்சிருந்தாரேம்மா அது என்ன? எதுக்கு அதை தூக்கிண்டு போரர்?” “அது சன்னியாசியோட தண்டம்டா, வச்சிண்டிருப்பா”. “அதான் எதுக்கு வச்சுக்கணும்னு கேக்கரேன்”. “உங்கப்பா வந்ததும் கேளு”. “அப்பாகிட்டே கேட்டா நீ எங்கே பார்த்தாய்னு கேப்பர். அழைச்சிண்டு போனதை சொல்லிடட்டுமா?” “சொல்லிக்கோ. இப்போ உங்கப்பாவுக்கு டிப்பன் பண்ணனும் தொணதொணன்னு பேசாதே. போய்க்கோ கேட்டியா?”. துரையம்மாவோட பழகி மீனாக்ஷிக்கும் பாலக்காட்டு பாஷை தொத்திண்டிருக்கு.

அப்பா டிப்பன் சாப்டதும் கிட்டக்கே உக்காந்துண்டு கேக்கரேன். அந்த தண்டத்தின் அர்த்தம். அவர் சொன்னது இன்னும் நினைவில். “அதுவாடா செல்லம். சன்னியாசியோன்னோ, காடு மலைன்னு சுத்துவா, ஊர் ஊராப் போவா, தரையில் படுத்துப்பா. பூச்சிபொட்டு வந்தா விரட்டரத்துக்கு”. “ஓ! சரி”. 

அன்னைக்கு ராத்திரி நான் தூங்கிட்டேன்னு நினைச்சு அம்மாவும் அப்பாவும் பேசிக்கரா. “குழந்தைக்கு சொன்னேளே அதுக்குத்தான் தண்டம் வச்சுப்பாளா?” “இல்லைடீ, ஆனா அதுக்குமேல் குழந்தைக்கு என்ன சொல்ல? விளங்காதே! அவனுக்கு இந்தப் பிராயத்தில் என்ன சொன்னா புரியுமோ அதை மட்டும் சொன்னேன். வளர வளர அந்த ஏகதண்டத்தின் தாத்பர்யம் அவனே புரிஞ்சிப்பான்”. “எனக்குச் சொல்லுங்கோளேன்!” “சொல்லிப் புரியாது. தானா தெரிஞ்சுக்கும் விஷயம். மொள்ளத்தான் புரியும். முழுசா புரிஞ்சிண்டாத்தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இப்போ தூங்கு”. என்காதில் விழுந்ததை யோசிக்கத் தோணலை.

PUC படிக்கரச்சேதான் பூணல் போட்டா. அக்கா கல்யாணத்தோட. அப்பாக்கு ரெண்டு மணைலேயும் வேலை. திருவையாத்துப் பெரியப்பா “பாணிக்ரஹ வாத்தியாரை நான் பாத்துக்கரேன் எங்கிட்டே விட்டுடுங்கோ” அப்பாவை ரிலீஸ் செஞ்சுட்டர். எங்கப்பா “எம்புள்ளைக்கு அர்த்தம் சொல்லிண்டே மந்திரம் சொல்லணும்”னு பூணல் வாத்தியாரை கேட்டுக்க அத்தனை புகைமூட்டத்துக்கும் நடூல நிறைய விஷயங்கள் தெளிவாச்சு. உபநயனம்னா என்ன, பிரம்மோபதேசம்னா என்ன இப்படி. 

“பிரம்மத்தை உனக்கு அறிமுகப்படுத்தரம், புரிஞ்சிண்டதை மறந்துடாம இருக்க நீ ஆசாரமா அனுஷ்டானங்களை செய்யணும், இதோ பாரு அரசு, ஆல், புரசு, ப்லக்ஷம், அத்தி, வன்னி, நாயுருவி, கருங்காலி, தர்பை எங்கிர 9 வகை சமித்துக்களை பிரம்மத்தோட சேர்த்து புரிஞ்சுக்கணும்” மந்திரத்தினூடே அழகா சொன்னர். “இதெல்லாம் குச்சிதானேன்னு நினக்கப் பிடாது. பூணப் போடரச்சே  இதை கையில் கொடுத்து சித்த நாழியாவது வச்சுக்கராய். இவைகளில் துணையோடவே நீ பிரம்மச்சர்யம் மற்றும் அப்பரம் வரப்போகும் கிரஹஸ்த்தம், வனபிரஸ்த்தம், சன்னியாசம் எங்கிற நாலு நிலைகளையும் கடந்து செல்வாய்னும் இவைகள் அந்தந்த பருவங்களுக்கு உறுதுணையா இருக்கும்னும் சொல்லித் தரவே”. 

பூணல் போட்டுண்டதுக்கு பிரம்மத்தை அறியணும்னா இயற்கையோட வாழக் கத்துக்கணும்னு சிம்பிளா புரிஞ்சதுன்னு வச்சுக்கலாம். அப்போ இன்னும் கேட்டிருக்கணும். கேக்கலை. பிரம்மச்சர்ய பருவம் கல்விப் பருவம்னு தெரிஞ்சும் சரியா பயன்படுத்திக்காம வளர்ந்து நின்னேன். நன்னா படிச்சு ஃபர்ஸ்ட் ரேங்க்கில் பாஸ் செஞ்சதைச் சொல்லலை. நிஜமான சமாச்சாரங்களை கத்துக்காம விட்டதை சொல்ரேன்.

“கணேசு நல்ல வேலையில் இருக்கான், கல்யாணத்த பண்ணி வச்சுட்டா நல்லது” 10 வருஷம் கழிச்சு. அப்பாவண்டை அம்மா சொன்னா. பேச்சை எப்படா எடுப்பான்னு நானும் பாத்துண்டே இருக்கேன். அப்பா பதிலே சொல்லலை வேலைய சட்டுன்னு ஆரம்பிச்சர். “விவாஹ மந்திரார்த்தங்கள்” புஸ்தகம் ஒண்ணு வாங்கித் தந்து “படீ”ன்னர். அதில் மீண்டும் இயற்கை சார்ந்த விஷயங்கள்  ஹிந்து கல்யாணங்களில் வைதீகத்தில் மூங்கில் குச்சி வச்ச பல சமாச்சாரங்கள் பிரசித்தம். இப்பவும் நான்-ப்ராம்ணா ஹிந்து கல்யாணங்களில் இளம் மூங்கில் குச்சி ஓட்டையில்லாததை இலையோட நடரா. நாமளும் பந்தக்காலில் நடுவதுண்டு இப்போ விட்டுட்டோம். என் கல்யாணத்தில் சிலது பார்த்தேன் சிலது காணல. திருவையாத்துப் பெரியப்பா சொன்னர், “கிரஹஸ்தனுக்கு மூங்கில் குச்சியே பிரதானம்”. “ஏன் பெரியப்பா?” சொன்னார்.

“விட்டா 500 வருஷம் உசரமா வளரும் தாவரம். அடர்த்தியா பல மரங்களா, கிரஹஸ்தனும் உறவுகளை பெருக்கிண்டு அடர்த்தியான கூட்டுக் குடும்பமா வாழணும்னு மூங்கில கையில் பிடிச்சுக்க கொடுப்பா. குச்சியா. பிற்காலத்தில் மூங்கில் விசிறியா மாறி இப்போ என்னென்னவோ. அன்பளிப்புகள், ப்ரஸாதங்கள், பழம் பூல்லாம் மூங்கில் தட்டுகள்ளேயோ கூடைகளிலோ வைக்கணும்னு நியதி. காணாமப் போயாச்சு. ராஜா மஹாராஜாக் காலத்துலே அரசாணிக்கால் வழக்கம் - அரச அனுமதியுடன் அவன் தந்த மூங்கில் வந்துடுவதா ஐதீகம்”.

சாயங்காலம் கூப்டு வச்சு ஆத்துக்காரிகிட்டே எப்படி நடந்துக்கணும்னு அப்பா சொல்லித் தந்தர். “பலசமயம் என்னால் அம்மாகிட்டே முழுசா உனக்குச் சொல்லித் தாந்தாப்போல நடந்துக்க முடிஞ்சதான்னா இல்லை. என்னை உதாரணமா எடுத்துக்கப் பிடாது” அறிவுரை. கன்ஃபெஷனோ! உனக்கு வனப்பிரஸ்தம் வரைக்கும் கூட வரப்போர ஒரே உறவுடா கணேஷ்!”. அப்பத்தான் கேட்டேன் “எப்போ வனப்பிரஸ்தம் ஆரம்பிக்க?” “அட! சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா! இப்போ அந்த சிந்தனை வேண்டாம்”. “சொல்லுங்கோப்பா தெரிஞ்சுக்கணும்னு ஆசை!”

“வனபிரஸ்தம்னா இல்லர வாழ்க்கையில் எல்லாக் கடமையும் முடிச்சுண்டப்பரம் ஆத்துக்காரியோட காட்டுக்கு போய் தவ வாழ்க்கை ஆரம்பிப்பது. 60 டு 75ன்னு வச்சுக்கோ. இப்போ யோசிக்கேண்டாம்னு அதுக்குத்தான் சொன்னேன். இன்னும் 30 வருஷம் நன்னா ஆண்டு அனுபவி. பூணல் போட்டுக்கப்போ அறிமுகப்படுத்தின பிரம்மத்தை மறந்துடாமலே கிரஹஸ்த்தனா வாழ்ந்துட்டு பிராம்ணனா உனக்கு சொல்லப்பட்ட அனுஷ்டானங்களை விடாம செஞ்சுட்டு அப்பரம் அந்த பிரம்மத்தை ஆராதிக்கவே வனப்பிரஸ்தம். காட்டுக்கு போனாத்தான் அது சாத்தியம்னும் அங்கே போரப்போ வேற ட்யூடீஸ் மிச்சம் பிடாதுன்னும். இருந்துட்டாலும் அதை உன் சந்ததியினருக்குத் தந்துட்டு கிளம்பிடணும். எல்லாத்தையும் துறக்க ஆரம்பிக்கணும்னு அதுக்கும் சிம்பாலிக்கா மூங்கில் குச்சிய எடுத்துக்கணும்”.

அப்படிச் சொன்னதும் சங்கராச்சாரியர் கையில் வச்சிண்ட தண்டம் பத்தின சிந்தனை வந்ததது. “சன்னியாசியும் குச்சி வச்சிண்டிருக்காளே அதே குச்சியாப்பா?” சட்டுன்னு சிரிச்சுட்டர். “அப்போ சின்னக் குழந்தை உனக்கு ஞாபகம் இருக்காது, மின்னமே இதைக் கேட்டாய்”. அப்போ கேட்டதையும் அவர் சொன்ன விளக்கத்தையும் சொன்னர். “அது விளக்கமில்லை குழந்தை உனக்கு அதுவே புரியும்னு சொன்னது. கிரஹஸ்தாளுக்கும் வனப்பிரஸ்தத்துக்கு தயாராரவாளுக்கும் மூங்கில் குச்சிதான். முதலாவது ஓட்டை இல்லாம செழிப்பா வளர்ந்தது. இரண்டாவது முத்திப்போன மூங்கில் ஆங்காங்கே சின்னதா ஓட்டை இருக்கலாம். அதாவது மூங்கில்குச்சிய வாங்கிக்க நீ தயாராகிட்டாய்னும் பந்தங்களை விட நீ தயாராகிட்டாய்னு கொடுப்பது. ஓட்டை இருந்தாலும் மூங்கில் ஸ்ட்ராங்க், காட்டில் ஒத்தாசையா இருக்கும். புதர்களை விலக்கிண்டு ஈஸியா நடக்கலாம், பூச்சி பொட்டு அண்டாம பாத்துக்கலாம். உனக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானங்களை செஞ்சுண்டே பரப்பிரம்ம ஸ்வரூபத்தை தேடலாம். இப்போ சாந்தி முஹூர்த்தத்துக்கு நாழியாச்சு. போய்க்கோ”.

2 குழந்தைகளுக்கு தகப்பனாகி அவாளுக்கு செய்ய வேண்டியதை செஞ்சு தந்து சித்தே ஆராம்ஸே இருக்கக் கத்துக்கரத்துக்குள்; வயசு 65 ஆச்சு. “வனப்பிரஸ்த்தம் போலாமா?” மாமிகிட்டே மொள்ள பேச்செடுத்தேன். “சும்மா கிடங்கோ, கோபத்தை கிளறவேண்டாம் கேட்டேளா?” எங்கம்மாகிட்டேந்து அந்த பாலக்காட்டு பாஷை. “எனக்கு திருவண்ணாமலை ரமணர் குகைக்குப் போய் உக்காந்துட்டு வரணும். வரியா?” “நீங்க போயிட்டு வாங்கோ. நான் வரலை.” பஸ் ஏறி வந்தாச்சு. டிசெம்பர் மாசம், வெய்யலில்லை. கார்த்தாலே 11. ஆஷ்ரமத்துக்கு பின்னாடி பாதை ஏறிபோரச்சே சித்தர் மாதிரி ஒருத்தர் திருப்பத்தில் உக்காந்திருக்கர். அவரண்டை போய் நானும் உக்காந்துக்கரேன்.

மௌனமா இருந்தவர் சட்டூன்னு “தனியா வந்திருக்காய்! சாமியாரா போப்போரியா?” “இல்லை ரமணர் குகை பாக்கணும். உங்ககிட்டே ஒண்ணு கேக்கலாமா?” ஆர்வமா என்ன கேப்பேன்னு பாக்கரர். “சன்னியாசிகள் தண்டம்னு ஒண்ணு பிடிச்சுக்கராளே அது என்ன, எதுக்கு?” “தெரிஞ்சிண்டு என்ன செய்யப் போராய்?” “தெரிஞ்சுக்கணூமா பிடாதா?” “தெரிஞ்சுக்கோ, தெரிஞ்சிண்டா செயல்படுத்தணும், சரீன்னா சொல்ரேன்.” “செய்யரேன்”. 

“சன்னியாஸ்ரமத்தில் மூங்கில் வகையைச் சேர்ந்த ஒரு குச்சி. தண்டம்னு சொல்லுவம். ஓட்டை கிடையாது. இது ஏக தண்டம் (சங்கரர் மற்றும் மத்வர்), த்ரிதண்டம் (வைஷ்ணவ சம்பிரதாயம் - மூன்று தண்டங்களை ஒருசேர கட்டி வைத்து). சன்னியாசி வச்சிண்டா ஞான தண்டம், கிரஹஸ்தான்னா இருந்துட்டு வனப்பிரஸ்தம் போரப்போ யோக தண்டம். தண்டத்தின் மேல்பக்கம் மடித்துக் கட்டியிருக்கும் துணி "பரசு" (கோடாலி). ஞான பரசு, ஞான அங்குசம்னும் சொல்லுவா.. அறியாமையை உடைப்பது. சுத்தின கயிறு நம்மைச் சுத்திண்ட பந்தத்தின் அளவைக் குறிக்க”.

“அதுக்கு என்ன அர்த்தம்?” “ஞான பரசு அறியாமையை உடைத்துப்போடும், பந்தங்கள்ளேந்து விடுபட உதவும். அதான் தாத்பர்யம். மேலே போய்க்கோ. ரமணர் குகையில் உக்காந்துண்டு சொச்சத்தை யோசிச்சு நீயே கண்டுபிடி.” ஏறிப் போரேன். ஒரு முகட்டில் குகைக் கிட்டே போனதும் கீழே அத்தனை பிரம்மாண்டமா அண்ணாமலையார் திருக்கோவில். நான் பாதி மலை உசரத்துக்கு வந்துட்டேனோ? 

அத்தனை பெரீய கோவில். 24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், எல்லாத்துக்கும் நடூல இருக்கும் எனக்கு இது போதும்னு லிங்கோத்பவர். எப்படிப் பட்ட தத்துவம்!

சின்ன வயசுலேயே நமக்காக சன்னியாசம் பூண்டுட்டு நமக்காகவே பிரார்த்தனை செஞ்சுண்டு வாழ்ந்த ஈஸ்வர ஸ்வரூபமான பரமாச்சார்யா பூரணத்துவமான ஞான குரு. அம்பாள் ஸ்வரூபம். லோகத்தில் ஜனித்துள்ள, ஜனிக்கப்போர ஒவ்வொரு ஜீவனும் பூரணம் பெற தியானித்துண்டு நம்மளையும் வழிநடத்திண்டு. எல்லாத்தையும் துறந்து ஞானஸ்வரூபமா நமக்கு காட்சி அளிக்கும் பெரியவாளுக்கு அந்த தண்டத்தை ஏன் பிடிச்சுக்கணும்னு தேவை வந்ததுன்னு தெரியலை. குகைக்குள் உக்காந்துண்டு அந்த நிசப்தமான இடத்தில் கண்ணை இறுக்க மூடிண்டு அந்தகாரத்தில் யோசிக்கரேன்.

சட்டுன்னு அர்த்தம் பிடிபட்டது. ஏகதண்டம் அவா கையில் வச்சிண்டிருப்பது அவாளுக்கில்லை, நம்பளுக்காகன்னு. அவாள தரிசிக்கப் போரவாளுக்கு அதை காமிச்சிண்டு ஞான மார்க்கத்தை தேர்ந்தெடுத்து உண்மையான பரப்பிரம்மத்தை சீக்கிரம் புரிஞ்சுக்க வா, அதுக்கு உன்னைச் சுத்தி கட்டிப்போட்டு வச்சிருக்கும் பற்றைத் தூர வீசிட்டு என்னிடம் சரணாகதி அடைஞ்சுடுன்னு நமக்குச் சொல்ல அந்த ஏகதண்டம்னு சட்டுன்னு இந்த கிரஹஸ்தனுக்கு புரிஞ்சது.

No comments:

Post a Comment