பெரியவா சரணம்
பெரியவா ஒரு முறை மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார்.. அவரைத் தரிசிப்பதற்காக
கி. வா. ஜ அவர்களின் மருமகள் திரிபுரசுந்தரி சென்றார்..
அங்கே பக்தர்களின் வரிசை மிக நீண்டு காணப்பட்டது.. திரிபுரசுந்தரியும் வரிசையில் காத்திருந்தார்...
வரிசை மெல்ல மெல்ல ஊர்ந்தது.. ஒரு வழியாக அவர் மகானின் சந்நிதியை அடைந்தார்..
தான் கொண்டு வந்த பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை மூங்கில் தட்டில் வைத்து காணிக்கையாக்கி நமஸ்கரித்தார் அந்தப் பெண்மணி.. அருகில் இருந்தவர்கள் பெரியவாளிடம் அறிமுகம் செய்து வைத்தனர்..
திரிபுரசுந்தரியை ஆசிர்வதித்த பெரியவா, "மெட்ராஸில் எங்கே தங்கியிருக்கிறாய்?" என்று கேட்டார்..
"மயிலாப்பூரில் தங்கி இருக்கிறேன் சுவாமி" என்று அவர் பதிலளித்தார்..
"அங்கே கோயிலுக்குப் போகிற பழக்கமெல்லாம் உண்டா"? என்று கேட்டார்..
"ஆமாம் சுவாமி.. அதிலும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி போவதுண்டு... கற்பகாம்பாள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. " என்றார் திரிபுரசுந்தரி உற்சாகமாக..
" அப்படியா! கற்பகாம்பாளிடம் என்ன வேண்டிக் கொள்வாய்?" என்று கேட்டார் பரமாச்சார்யா..
" எப்போதும் உலக நலனுக்காகவே வேண்டிக் கொள்வேன்.. கடவுளிடம் நமக்கென்று எதுவும் வேண்டிக் கொள்ளக் கூடாது என்று என் மாமனார் சொல்லிக் கொடுத்துள்ளார்" என்றார் அடக்கமாக..
" பலே.. பலே " என்று பாராட்டிய பெரியவா, "நான் ஒன்று சொல்றேன்.. நன்னா கேட்டுக்கோ.. உன்னுடைய போன பிறவியில் நீ செய்த புண்ணியத்தால் தான் இப்போது மயிலாப்பூரில் வசிக்கும் பாக்யம் கிடைத்திருக்கிறது.. இங்கே இருக்கிற கற்பகாம்பாள் யார் தெரியுமா?
கற்பக விருட்சம்!
தேவ லோகத்தில் கற்பக விருட்சம் என்று ஒரு மரம் இருக்கிறது.. அதனடியில் நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் உடனே கொடுத்து விடும்... அது போல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்பாக நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் அம்பாள் கொடுத்துடுவா " என்று பெரியவா கூறினார்..
இதைக் கேட்டு திரிபுரசுந்தரி உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பரவசத்தில் புல்லரித்துப் போயினர்..
மீண்டும் தொடர்ந்து பேசிய பெரியவா," எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மயிலாப்பூரிலேயே பிறக்க வேண்டும் என்று அம்பாளைத் தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும்..
கற்பகாம்பாளின் பார்வையில் யாரும் பசியோடு இருக்கவே முடியாது.. மயிலாப்பூரில் இருக்கிற பிச்சைகாரர்கள், நாய்கள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் அம்பாள் தான் சாப்பாடு போடுறா.. " என்றார்..
இதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போன திரிபுரசுந்தரி மீண்டும் ஒரு முறை பெரியவாளை வணங்கிச் சென்றார்..
No comments:
Post a Comment