ஓ...அமெரிக்கா - 14
Flagstaff
எங்கள் அடுத்த நிறுத்தம் ஃப்ளாக்ஸ்டாஃப். Flagstaff பாலைவனமான அரிசோனாவின் குளிரும் பனிப்பொழிவும் உள்ள இயற்கை அதிசயம். பார்க்க நம் ஊர் கொடைக்கானல் அல்லது ஊட்டிபோலத் தோன்றுகிறது. கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 2106 மீ. உயரத்தில் இருக்கும் இந்த நகரம், சுற்றி இருக்கும் இடங்களின் வெப்பத்தைத் தாங்க முடியாதவர்களுக்கு இதம் அளிக்கிறது.
Flagstaff மலைகள், பாலைவனம் மற்றும் பாண்டரோஸா பைன் மரக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. சான் ப்ஃரான்ஸிஸ்கோ மலைச் சிகரங்களுக்கு நுழைவாயிலாகவும், Humphrey's Peak என்கிற அரிசோனாவின் மிக உயரமான மலையையும், அரிசோனா ஸ்னோபௌல் ஸ்கீ ரிசார்ட்டையும் கொண்டு டூரிஸ்டுகளைக் கவர்ந்து இழுக்கிறது. அதை ஒட்டிய Wupatki National Monument ம், Walnut Canyon National Monument ம் ப்யூப்லோ பழங்குடியினரின் குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.
இங்கிருக்கும் வீடுகள் எல்லாமே சாதாரணமான கல், சிமென்ட், கான்க்ரீட்டில் கட்டப்படாமல் மரத்தால் கட்டப்படும் 'கேபின்' என்று சொல்லப்படுகிற வகை வீடுகள். ஓரளவு வசதியானவர்கள் எல்லோருமே தங்களுக்கென்று ஒரு வீடு வாங்கியபின், அருகிலிருக்கும் ஏதாவது ஒரு குளிர்ப் பிரதேசத்தில் ஒரு கேபின் வாங்கிக்கொண்டு வாரக்கடைசியில் போய் வெயிலின் கடுமையிலிருந்து ஆசுவாசம் செய்துகொள்கிறார்கள். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்துக்கு ஒரு கேபினாவது இருப்பது வழக்கமாக இருக்கிறது.
கேபின்கள் பெரும்பாலும் தரை மட்டத்திலிருந்து ஏற்றிக் கட்டப்பட்டு பல படிகள் ஏறிச்செல்வதுபோல அமைக்கப்படுகின்றன, வெள்ளத்திலிருந்தும், பூச்சிகளிடமிருந்தும் தப்பிக்க. மரத்தாலான வீடுகள் இயற்கையாகவும், சூழலுக்கு மாசு விளைவிக்காததாகவும், வெளியில் இருக்கும் கடுமையான தட்பவெப்பநிலையைத் தாங்கக்கூடியதாகவும், வெளியே வெயிலின்போது தண்மையையும், குளிரின்போது வெப்பத்தையும் வீட்டுக்குள்ளே தரக்கூடிய, வெளித் தட்பவெப்பநிலையை உள்ளே கடத்தாத insulating effect கொண்டதாகவும் இருப்பதால் அந்த சூழ்நிலைக்குப் பொருந்துகிறது.
வீடுகள் பெரும்பாலும் அருகில், எளிதில் கிடைக்கும், விலை அதிகமில்லாத பைன், செடார் மரங்களால் கட்டப்படுகின்றன. மர வீடுகள் கல் வீடுகள்போல அல்லாமல் மண் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற இயற்கைக் காரணிகளைத் தாங்கியும் நிற்கின்றன. அநேகமாக gated community வகை வீடுகளாகவே இருப்பதால் காம்பவுண்டு சுவர் இல்லாமல் எல்லைகளைக் குறிக்கும் கற்களோடு மட்டுமே இருக்கின்றன.
ஓங்கி உயர்ந்த பைன் மரங்கள் அகலமான அடி மரங்களுடன் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும் உயரத்துடன், நம் சவுக்கு மரங்கள்போன்ற மலைப் பிரதேசங்களுக்கே உரிய ஊசி இலைகளுடன் பிரம்மாண்டமாக நிற்கின்றன. அங்கிருந்து ட்ரெக்கிங் செல்லப் பல வழிகள் இருந்ததில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தோம். வழியெங்கும் அம்புக்குறிகளோடு நாம் எங்கே இருக்கிறோம், போய்ச் சேர இன்னும் எத்தனை மைல்கள், எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதுபோன்ற போர்டுகள் மாட்டப்பட்டிருந்தன.
வெயில் சுட்டெரிக்கும் அரிசோனாவிலிருந்து ஏறக்குறைய இரண்டரை மணிநேரப் பயணத்தில் 250 கி. மீ. தூரத்தில் இருக்கும் ஃப்ளாக்ஸ்டாஃபில் அந்த ஜூலை மாதத்திலும் குளிர்காற்று நடுக்கியது. போட்டிருந்த உடை, அதன்மேல் ஜாக்கெட், ஸ்வெட்டர் எல்லாவற்றையும் தாண்டி என் பற்கள் கிடுகிடுத்தன. நடக்க நடக்க கீழே விழுந்து கிடந்த பெரிய பைன் கோன்களை சேகரித்துக்கொண்டே நடந்தேன்.
கடைசியாக ஒரு சிறிய குளத்திற்கு வந்து சேர்ந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டோம். வெயில் முழுவதுமாக மறைவதற்குள் அங்கிருந்து மீண்டும் கிளம்பி நடந்து கேபின் வந்து சேர்ந்தோம். நுழைந்ததும் குளிருக்கு இதமாக வெளியில் போட்டு வைத்திருக்கும் மரக்கட்டைகளை எடுத்து வந்து தீ அடுப்பில் (Fire place) தீ மூட்டிக் குளிர் காய்ந்ததும் ஒரு அனுபவமே. சூடாக ஒரு டீ குடித்ததும் இன்னும் தெம்பு வந்தது. அது என் மருமகனின் பாட்டியின் கேபின் என்பதால் இரண்டு நாட்கள் தங்கி, பின் ஒரு மாலையில் டெம்ப்பிக்குத் திரும்பக் கிளம்பினோம்.
பாதி தூரத்தில் இருட்டில் என் மகள் காரைப் பக்கவாட்டில் நிறுத்தி இறங்கினாள். நான் அவளைப் புரியாமல் பார்க்க, அவள் என் பக்கக் கதவைத் திறந்து "இறங்குங்கம்மா" என்று சிரித்தபடி சொன்னாள். "ஏன்? என்னாச்சு?" என்று வரிசையாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இறங்கிய என்னை "மேலே வானத்தைப் பாருங்க" என்றாள். நான் இப்பொழுதும் புரியாமல் வானத்தைப் பார்க்க, அங்கே ஒரு அதிசயத்தைக் கண்டேன்.
கருத்த, தெளிவான வானத்துக்குப் பெயர் போன அரிஸோனாவின் வானமெங்கும் அள்ளித் தெளித்ததுபோல நெருக்கமாக நட்சத்திரங்கள். Star gazing என்பது அமெரிக்கர்களின் விருப்பப் பொழுதுபோக்கு. அதற்கேற்றதுபோல வானம் இங்கேவிட அங்கே மிக அருகில் இருப்பதுபோல, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகங்கள் எல்லாமே நம் ஊரில் இருப்பதைவிடப் பல மடங்கு பெரிதாகத் தெரிவதற்கு அறிவியல் பூர்வமாக ஏதாவது காரணம் இருக்கவேண்டும்.
அதிலும் சந்திரோதயத்தில் முழு சந்திரன் நாம் இங்கே பார்க்கும் சந்திரனைப்போலக் குறைந்தது நான்கு மடங்கு பெரிதாக, ஏதோ கைகளை இன்னும் கொஞ்சம் நீட்டினால் தொட்டுவிடலாம்போலப் பக்கத்தில் தெரிவதுபோல இருக்கும். நான் சில சமயங்களில் காரில் போகும்போது என் மகள் சொல்லும் விஷயங்களுக்கு வெறுமனே 'உம்' கொட்டிக்கொண்டு வெளியில் தெரியும் பெரிய சந்திரனால் வசியம் செய்யப்பட்டவள்போலப் பார்த்துக்கொண்டு செல்வதுண்டு.
வானவியலில் அளவுகடந்த ஆர்வம் கொண்ட என் மகள் என்னிடம் "அதோ பாருங்கள் டாரஸ், இதோ மில்க்கிவே. அதோ அங்கே ரெட் ஸ்டார்போலத் தெரியறது மார்ஸ் கிரகம், அதோ ஒரு எரி நட்சத்திரம்" என்றெல்லாம் உற்சாகத்துடன் சொல்ல எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் கண் முன்னால், கருப்புப் பின்னணியில், இருட்டாக்கப்பட்ட சூழலில் ப்ளானட்டேரியத்தில் கூரை பூராவும் தெரியும் பெரிய நட்சத்திர வடிவங்களுக்கு இணையாகப் பெரிதாகத் தெரிந்த நட்சத்திரக் கூட்டங்கள் எனக்குத் திகைப்பைத் தந்தன.
சிறிது நேரம் அதை ரசித்துப் பார்த்தபின் வீடு திரும்பினோம்.
Ancila Fernando
No comments:
Post a Comment